அத்தியாயம் 1:
முதல் அடியெடுத்து வைக்கும்போது…அங்கு நிலவிய அமைதி கூட படபடவென்று அதிர்ந்தது. சிலரின் முகத்தில் பதற்றம் ரேகை போலப் படிந்திருக்க, வேறு சிலர் நம்பிக்கையுடன் அந்த நேர்காணல் அறையை எதிர்கொள்ளக் காத்திருந்தனர்.”அடுத்து மிஸ் இளவேனில்!”அந்தப் பெயர் ஒலித்ததும், சுற்றியிருந்த அத்தனை கண்களும் அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்தன. இளவேனில் ஒருமுறை தன்னைச் சரிசெய்துகொண்டாள். “உன்னால முடியும்!” என்று மனதுக்குள் தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, தன் சான்றிதழ்கள் அடங்கிய கோப்பை எடுத்துக்கொண்டு, ஒரு புன்னகையுடன் உள்ளே அடியெடுத்து வைத்தாள்.கோயம்புத்தூரில் மிகவும் பிரபலமான ஒரு மருத்துவமனையில், மருந்தாளுநர், மக்கள் தொடர்பு, மற்றும் இன்னும் பல மருத்துவப் பணிகளுக்காக ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டுக் கொண்டிருந்த நேரம் அது. இது வெறும் வேலை வாய்ப்பு இல்லை; பலரின் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு திருப்புமுனை. இளவேனிலின் வாழ்க்கையில் அதுதான் நடக்கப் போகிறது என்பதை அப்போது அவள் அறிந்திருக்கவில்லை.”மேடம், உள்ளே வரலாமா?” என்று அனுமதி கேட்டபடி நின்றாள் இளவேனில்.அவளைக் கூர்ந்து கவனித்த அந்தப் பெண் அதிகாரி, “உள்ள வாங்க, உட்காருங்க” என்று சைகை காட்டினார். இளவேனில், “குட் மார்னிங் மேடம்” என்று சொல்லிவிட்டு அமர்ந்தாள்.அந்தப் பெண்மணி, ஒரு தேர்ந்த பார்வையுடன் அவளை அப்படியே அளவெடுத்தார். இளவேனிலின் கோப்புகளைப் புரட்டிப் பார்த்துக்கொண்டே, முதல் கேள்வியைக் கேட்டார்.”நீங்க நர்சிங் டிஸ்கண்டினியூ பண்ணக் காரணம் என்ன?”இளவேனில் ஒரு பெருமூச்சு விட்டாள். ஏதோ சொல்ல ஆரம்பிப்பதற்குள், அந்தப் பெண்மணி அடுத்த கேள்வியைக் கேட்டார்.”இப்போ B.Pharm படிச்சிருக்கீங்க… ஏன் இந்தத் துறை?”இளவேனில் பொறுமையாகப் பேச ஆரம்பித்தாள். “மேம், சின்ன வயசுல இருந்தே மருத்துவம் சம்பந்தப்பட்ட துறைக்குப் போகணும்ங்கிறது என்னோட நீண்ட நாள் கனவு. கனவுங்கிறதைவிட அது என்னோட லட்சியம்னு சொல்லலாம்! ஆனா, நர்சிங் படிச்ச முதல் வருஷமே எதிர்பாராதவிதமா… என் அப்பா, அம்மா ரெண்டு பேரும் ஒரு விபத்துல எங்களை விட்டுப் போயிட்டாங்க.”அவளது குரலில் சிறிதும் வருத்தமோ, சோகமோ இல்லை. நிமிர்ந்த பார்வையுடன் அவள் தொடர்ந்தாள். “அதுக்கப்புறம் என்னால படிப்பைத் தொடர முடியலை. சில காரணங்களால அந்தப் படிப்பு தடைபட்டுப் போச்சு. பிறகு, என் சித்தப்பாவோட ஆதரவுலதான் நான் B.Pharm படிச்சேன்.”இளவேனில் தன் துயரங்களைக்கூட ஒருவிதத் துடிப்புடன் சொல்லிய விதம் அந்தப் பெண்மணியைக் கவர்ந்தது. எழுத்துத் தேர்வு, குழு விவாதம் என எல்லாவற்றிலும் இளவேனிலின் செயல்திறனைப் பார்த்துவிட்டு, அவளிடம் பேச வரும்போது அவருக்கு ஒரு ஃபோன் வந்தது. அதுதான் அவளது வாழ்க்கையை முற்றிலும் புரட்டிப் போடப் போகிறது என்று அவளுக்குத் தெரியாது.”ஹலோ!” என்று கம்பீரமான குரலில் அவர் பேசிக்கொண்டிருக்க, இளவேனில் அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தாள். “வாட்! இப்போதான் இதைச் சொல்றீங்களா!” என்று அதிர்ச்சியாகி, எதிர்முனையில் இருந்தவரைக் கோபமாக ஆங்கிலத்தில் வார்த்தைகளால் வறுத்து எடுத்தார். அவர் பேசியதிலிருந்து தனக்கு வேலை கிடைக்காது என்று இளவேனிலுக்கு உள்ளுக்குள் தோன்றியது. ‘சித்தி சொல்ற மாதிரி நான் அவ்வளவு துரதிர்ஷ்டம் பிடிச்ச பெண்ணா!’ என்று ஒரு இகழ்ச்சியான புன்னகை அவளது உதட்டோரம் தோன்றியது.அந்தப் பெண்மணி ஃபோனை வைத்துவிட்டு, “சாரி டூ சே திஸ், மிஸ் இளவேனில்…” என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்க, அவளை இடைமறித்து, “பரவாயில்லை மேடம்” என்று சொல்லிவிட்டு இளவேனில் எழுந்து நின்றாள்.அதே நேரம், அந்தப் பெண்மணி அவளைத் தடுத்து, “ஹலோ மேடம்… இப்போதைக்கு உங்களை நான் மக்கள் தொடர்புத் துறைக்கு அப்பாயின்மெண்ட் கொடுக்கச் சொல்லியிருக்கேன்.”இளவேனில் புரியாமல் பார்க்க, அவர் அவசரமாகத் தொடர்ந்தார். “அப்புறம், உங்க பூர்வீகம் ஈரோடுதானே? சோ… நம்ம நியூ கேம்பஸ் மெடிக்கல் காலேஜ் அங்க ஷிஃப்ட் ஆகப் போகுது. அப்போ நீங்க மறுபடியும் ஸ்ட்ரெயிட்டா பார்மசிஸ்ட்டா அங்கேயே ஜாயின் பண்ணிக்கலாம்” என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தார்.இதைக் கேட்டதும் இளவேனில் முகத்தில் ஒரு மின்னல் வெட்டியது போல நம்பிக்கை ஒளிர்ந்தது. ‘இளவேனில், உன்னால நிச்சயம் முடியும்! நீ துரதிர்ஷ்டம் இல்லை!’ என்று மனம் சொல்ல, புன்னகையுடன் “ரொம்ப நன்றி மேடம்” என்றாள்.”ஹ்ம்ம்… ஆபீஸ் ரூம் போங்க. உங்களுக்கு அப்பாயின்மெண்ட் ரெடியானதும் அதை வாங்கிட்டு இங்க வாங்க” என்று சொல்ல, இளவேனில் முதல்முறையாக, நிம்மதியான மனதுடன் வெளியே வந்தாள்.இந்த மருத்துவமனை ஒரு தேசிய அறக்கட்டளை மற்றும் நிதி உதவியுடன் செயல்படுகிறது. அரவிந்தர் மற்றும் அன்னை மீரா அவர்களின் கொள்கைகளைப் பின்பற்றி வந்த ஒரு தொழிலதிபர், இதை மக்களுக்குச் சேவை செய்யப் பயன்படுத்த வேண்டும் என்று மாற்றி அமைத்தார். இங்கே பெரும்பாலும் வட இந்தியர்கள் மற்றும் மலையாளிகள்தான் வேலை செய்கிறார்கள். சேலம், ஈரோடு, கரூர், கோவை, தருமபுரி மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா, ஜார்கண்ட், கொல்கத்தா, பீகார் என இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் இங்கு வந்து குணமாகிச் சென்றிருக்கிறார்கள்.இந்த மருத்துவமனை குறிப்பாக எலும்பு முறிவு, இரத்தம் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு, இதயம் என நான்கு துறைகளிலும் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. மற்ற துறைகள் சின்னச் சின்ன கிளினிக்குகள் போல, மொத்தம் 13 துறைகளைக் கொண்டுள்ளது. இங்குள்ள மருத்துவர்களில் பெரும்பாலானோர் வட இந்தியர்கள் மற்றும் மலையாளிகள். தமிழ்நாட்டில் இருந்து பெண்கள் மருத்துவர்கள் அதிக அளவில் உள்ளனர். ஆண் மருத்துவர்கள் அனைவரும் முதுநிலை மற்றும் ஆய்வுப் படிப்புகளை முடித்தவர்கள். கிட்டத்தட்ட 5,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இங்கே வேலை செய்கிறார்கள். பாதுகாவலர், நர்ஸ், டாக்டர், துப்புரவுப் பணியாளர், சமையல் பிரிவு, கணினி மற்றும் அலுவலக வேலைகள் என பகுதி நேரமாக வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள்.இப்போது கதைக்கு வருவோம். இளவேனில், தன் பணி நியமன ஆணையை வாங்கி, மீண்டும் அந்தப் பெண்மணியைச் சந்தித்து, அவரது கையெழுத்தைப் பெற்றுக்கொண்டாள்.அந்தப் பெண்மணி சிரித்துக்கொண்டே, “எப்போ ஜாயின் பண்றீங்க?” என்று கேட்டார்.அவள் புன்னகையுடன், “ஒன்றே செய்… அதையும் இன்றே செய்னு சொல்லுவாங்க. அதுபோல நான் இன்னைக்கே ஜாயின் பண்றேன் மேடம்” என்றாள்.அந்தப் பெண்மணி சிரித்துக்கொண்டே, “அதை நன்றே செய் இளவேனில்!” என்றார். அவள் நாக்கைக் கடித்துக்கொண்டே, “ஹ்ம்ம்… நன்றி மேடம்” என்று சொல்லிவிட்டு உற்சாகமாக வெளியே வந்தாள்.வெளியே வந்து மணி பார்த்தாள், காலை பத்து மணி. அருகில் இருந்த செக்யூரிட்டியிடம், “ஹெமடாலஜி டிபார்ட்மெண்ட் எங்கே இருக்கு அண்ணா?” என்று அவள் கேட்க, அவர் வழி சொல்லிவிட்டு அவளை உள்ளே அனுப்பினார். அது ஆறாவது மாடியில் இருந்தது.வேலை கிடைத்த இந்த நல்ல செய்தியை முதலில் சித்தப்பா வெங்கடேசனுக்கு ஃபோன் செய்து சொன்னாள்.”ஹலோ! ஹ்ம்ம்… சொல்லுமா!””சித்தப்பா! ஒரு நல்ல விஷயம்… எனக்கு வேலை கிடைத்துவிட்டது!”இதைக் கேட்டதும் அவர் சந்தோஷத்துடன், “சரிமா… இப்போ அண்ணாவும் அண்ணியும் இருந்தா ரொம்ப நல்லா இருக்கும். இனிமே நமக்கு நல்ல காலம்தான் டா. நீ கவலைப்படாத. உங்க அம்மா அப்பா உன் கூடவே இருப்பாங்க. உனக்குத் துணையா நான் இருக்கேன்டா!” என்று சொல்லி வைக்க, அந்த வார்த்தைகள் அவளுக்குள் புதிய தெம்பைக் கொடுத்தன. துள்ளலுடன் அவள் நடந்தாள்.இன்று திங்கள்கிழமை என்பதால், புற நோயாளிகள் பிரிவு (OPD) முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. கிட்டத்தட்ட 1,500 நோயாளிகள் மருத்துவர்களைப் பார்க்க வந்திருந்தனர். லிஃப்டில் கூட்டம் அதிகமாக இருக்க, அவள் மாடிப் படிகளைப் பார்த்தாள். உடனே தனது தோழி ஹேமாவுக்கு அழைத்து விஷயத்தைச் சொன்னாள். ஹேமா உற்சாகம் அடைந்தாள், ஏனென்றால் அவளும் இதே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் ஸ்டாஃப் நர்ஸாக வேலை செய்கிறாள். இன்று விடுப்பு என்பதால், நாளை வந்து ட்ரீட் வைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டுப் பிறகு பேசுவதாக வைத்துவிட்டாள்.இளவேனில், அந்தப் படிக்கட்டுக்கு அருகில் சென்று, தன் அத்தை மகனின் எண்ணை எடுத்துப் பார்த்துக்கொண்டே படிக்கட்டுகளில் ஏறினாள். ஐந்தாவது மாடியில் இருந்த கார்டியாலஜி பிரிவைக் கடந்து செல்லும்போது, சரியாக அதே ஐந்தாவது மாடியில் இருந்து ஒருவன் படிக்கட்டில் நுழைந்தான்.அவன் இளவேனிலைக் கடந்து மேலே செல்ல, இளவேனில் அங்கேயே நின்று படபடக்கும் இதயத்துடன் அந்த எண்ணுக்கு அழைத்தாள். அதே நேரம், அந்த ஆடவனுக்கும் ஒரு அழைப்பு வந்தது. அவனும் அழைப்பை ஏற்றான்.இளவேனில்: “ஹலோ… தினேஷ் மாமா! நான் வேணி பேசுறேன்!”அந்த ஆடவன் அழைப்பை ஏற்று, மருத்துவரிடம்: “ஹலோ… ஐ’ம் மனோஜ் ஸ்பீக்கிங்!”இங்கே இளவேனில் பேசியதும் மறுமுனை என்ன பேசி இருக்கும்? அதை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்…தொடரும்…
