Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
426
"என்னாச்சு உன்னோட பேச்சு ஒன்னும் சரி இல்லையே?" என விஜயா கேட்க..

"அது வந்து மா ஒன்னுமில்லை" என மீண்டும் சமாளித்தாள் சீதா.

"விசயம் என்னன்னு சொல்லு சீதா! தேவையில்லாம பிரச்னை பண்ணாத!!" என்றார் விஜயா கடுகடுப்புடன்.

"எனக்கும் அவருக்கும்?"

விஜயா பதட்டத்துடன் "என்னாச்சு மாப்பிள்ளை கிட்ட சண்டை போட்டியா?" என்றார்.

"மா சண்டையெல்லாம் இல்ல மா! சின்னதா கோபம் வேற எதுவும் இல்ல."

"ஹே உண்மைய சொல்லு!" என விஜயா சிடுசிடுத்தார்.

மா அது என பெரு மூச்சை விட்ட சீதா, "என்னை என்ன பண்ண சொல்ற நீ? நான் வேற வழியே இல்லாம தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என்னை விட அவர் 8 வயதுக்கு பெரியவர். என்னோட கணவர் நல்லா படிச்சிருக்கணும் ஒரு ஐடி ல இருக்கணும். அப்படி இப்படின்னு ஏகப்பட்ட ஆசை வச்சிருந்தேன். ஆனால் இப்போ என்னோட வாழ்க்கை? எப்டி இருக்கு? எனக்கு சுத்தமா பிடிக்கல எனக்கு வெறுப்பா இருக்கு" என்றாள்.

விஜயா சாதாரண தொனியில், "உன்னோட அப்பாவுக்கும் எனக்கும் பத்து வருஷ வித்தியாசம்! காட்டு வேலைக்கு போயிட்டு இருந்த என்னை கட்டிக்கிட்டு வந்தார் எனக்கு 16 வயசுலயே கல்யாணம் ஆகிடுச்சு. சோத்துக்கே வழி இல்லாம கஷ்ட பட்டிருக்கேன். நான் தான் எங்க வீட்ல கடைசி! எனக்கும் உன்னோட பெறிமா இருக்காங்களே சாந்தா, பத்மா, பூங்கொடி இவங்களுக்கு எல்லாம் நாலு வருசம் வித்தியாசம் ஒவ்வொருத்தருக்கும்." என்றார்.

"நீ பொய் சொல்ற!" என சீதா கூற..

"உன் கிட்ட பொய் சொல்லி நான் என்ன பண்ண போறேன் சொல்லு. என்னோட புருசன் என்னை கட்டிட்டு கூட்டிட்டு வந்து தான் எல்லாத்தையும் நம்ம சம்பாதிச்சு இந்த நிலைமைக்கு வந்தோம். ஒருத்தரை ஏமாத்தினது இல்ல. ஆனால் உன்னோட புருசன் உன்னை கட்டிக்கவே லட்ச கணக்கில் செலவு பண்ணி நம்ம மானத்தை காப்பாத்தி, முக்கியமா உங்க அப்பாவோட உயிரை காப்பாத்தி இருக்கார். இல்லன்னா நம்ம தூக்குல தான் தொங்கி இருக்கணும்" என்றார் விஜயா.

சீதா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க.. "உங்க ரெண்டு பேருக்கும் மனஸ்தாபம்ன்னு நீ சொல்லி தான் எனக்கு தெரியும்."

சீதா புரியாமல் "என்ன சொல்ற மா?"என கேட்க..

"நீ கூட டெய்லி போன் பண்ண மாட்ட! ஆனால் மாப்பிள்ளை டெய்லி போன் பண்ணி பேசுவார் அப்பா கிட்ட.. கௌதம் கிட்ட பேசுவார் ஒரு ரெண்டு வார்த்தை.. நீ தான் பிரச்னைன்னு சொல்ற! அவர் தங்கமான குணம்" என்றார் விஜயா.

சீதாவின் கண்கள் அகல விரிந்தது. விஜயாவின் குரல் சட்டென மாறி "சீதா நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ! உன்னால இத்தனை பொறுமையா சாந்தமான குணம் கொண்ட ரகுவரன் மாப்பிள்ளை கூட வாழ முடியலன்னு வச்சுக்கோ! வேற எவன் கூடயும் வாழ முடியாது. ஏன்னா நீ கொட்டுகாலி மாதிரி கோபம் ஆத்திரம் அகங்காரம் எல்லாம் உனக்கு ஜாஸ்தி! உன்னோட குணத்தை மாத்திகிட்டு வாழ பாரு! அவ்ளோ தான் சொல்லிட்டேன். இதுக்கு மேலே உன்கிட்ட பேச எதுவும் இல்ல" என்று விட்டு போனை வைத்தார்.

சீதாவுக்கு என்ன சொல்வது என தெரியவில்லை. தீவிரமாக யோசித்தாள். தேவி வகுப்புகளை கவனிக்க.. சீதா தான் பேயரைந்தது போல அமர்ந்திருந்தாள். காலையில் இருந்து யோசித்து மாலையே வந்தது. வகுப்பு விட்டதும் அனைவரும் புறப்பட்டார்கள்.

சீதா தன் தோழியை தேடி கொண்டே ஹே தேவி!! என்ன விட்டுட்டு போற!! என நெருங்கினாள்.

மேடம் தான் தீவிர யோசனையில் இருந்தீங்களே? வேற என்ன பண்ண முடியும்? அதான் வேற ஒன்னுமில்லை.

"தேவி எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல டி!"

எதை பத்தி சொல்ற சீதா? என புரியாமல் தன் நண்பியை பார்த்தாள் சீதா.

"அதான் சொன்னேனே? எனக்கும் அவருக்கும்!!"

தேவி சிரித்து கொண்டே "இதுல நான் சொல்ல என்ன இருக்கு? உன்னோட வாழ்க்கை நீ தான் டி முடிவு பண்ணனும். ஏன்னா நீ தான் அங்கே இருக்க போற! என்னோட ஒப்பீனியன் கேட்டு என்ன பண்ண போற சீதா?"

சீதா கோபத்துடன் தன் நண்பியை பார்த்தவள். "இதுக்கு மட்டும் பதில் சொல்லு! என்னோட இடத்தில் நீ இருந்தால் என்ன பண்ணுவ?" என தேவியை பார்த்தாள்.

தேவி கண்கள் விரிய, "ஒருத்தன் என்னையே சுத்தி சுத்தி வரான். எனக்காக உயிரை கொடுக்க ஐ மின் வயித்துல புள்ளை இல்ல. எனக்காக உயிரை கொடுக்க தயாரா இருக்கான். என்னை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாத்தி இருக்கான். இப்படி எல்லாம் இருக்கும் போது அவன் என்னை தீவிரமா லவ் பன்றான்னு தெரியும் போது அவனுக்காக நான் உயிரை கொடுப்பேன். ஐ மின் பாப்பாவை பெத்து கொடுப்பேன். அவனை போலவே!"

"என்ன டி சொல்ற?" என சீதா முறைக்க..

"உனக்காக உயிரையே கொடுக்கிறவன். கண்டிப்பா ரோட்டுல விட்டுட மாட்டான். ராணி மாதிரி பார்த்துக்குவான். இது போதுமே அவனோட காதல் இருக்கு பாதுகாப்பு இருக்கு இதுக்கு மேலே என்ன வேணும். வாழ்க்கை நல்லா போகும். எந்த பிரச்னையும் இல்லாம" என்றாள் தேவி.

"அவனுக்கு வயசு அதிகம் டி!"

"அப்படி பார்த்தால் இங்கே யாரும் வாழ முடியாது. வயசு வெறும் எண்கள் மட்டும் தான். அப்டின்னு நினைச்சு நீ போயி வாழ்ந்தா நல்லது. இல்லன்னா!! எனக்கு தெரியாது டி!!" என்று விட்டு தேவி நடையை தொடர்ந்தாள்.

சீதா ஒரு பெரு மூச்சை விட்டபடி நடக்க.. அந்த நேரம் பார்த்து சுபாவின் அழைப்பு தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

ஹலோ சுபா இதோ வந்துட்டேன் வெயிட் பண்ணு! என வேகமாக காருக்கு சென்றாள் சீதா.

இருவரும் ஏறி கொண்டார்கள். சீதா காரில் வேடிக்கை பார்த்தபடி தீவிரமாக யோசித்தாள். அவளின் எண்ணத்தில் விஜயா சொன்னதும் அதன் பின் தேவி சொன்னதும் சூழ்ந்து கொண்டது.

"அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பத்து வயசு வித்தியாசமா?" என யோசித்தவள். "எனக்கு இப்படி ஒரு பையன் கிடைச்சா நான் உயிரை கொடுப்பேன். அவரை மாதிரியே ஒன்னை பெத்து கையில கொடுப்பேன்" என தேவி சொன்னது தோன்ற.. இதையெல்லாம் நினைத்தபடி வீடு வந்து சேர்ந்தாள்.

சீதா! சீதா!! வீடு வந்திடுச்சு என சுபா உழுக்க..

அதுக்குள்ள வீடு வந்திடுச்சா? என தலையை குலுக்கி கொண்டவள் நேராக அவளது அறைக்கு சென்றாள் புத்தகங்களை புரட்டினாள். புத்தி அங்கு செல்ல வில்லை. சரி அசைன்மெண்ட் எழுதலாம் என எடுத்து வைத்தாள். சுத்தம் காற்றில் A4 sheet பறந்து போனது. அப்படியே எட்டு மணி ஆகிட.. சுபா உணவுடன் மேலே வந்தாள்.

சீதா! நேரமாச்சு சாப்பிடலாம் என சுபா உணவை எடுத்து வைக்க..

சுபாவை தயக்கத்துடன் பார்த்தாள் சீதா. அவளது பிறந்த வீட்டில் இருந்ததை விட சுக போக வாழ்க்கை. சாப்பிட்ட தட்டை கூட கழுவி வைப்பதில்லை சீதா. அந்த அளவுக்கு ரகுவரன் அவளை வைத்திருக்கிறான். ஆனால் ஏற்று கொள்ள தான் மனம் மறுக்கிறது.

சுபா அமைதியாக உணவை போட்டு கொடுத்து விட்டு சாப்பிட..

"சுபா அது வந்து உங்க அண்ணன் இன்னும் வீட்டுக்கு வரலையே யாரும் கேட்க மாட்டாங்களா?" என பேச்சு கொடுத்தாள் சீதா.

"ரகு அண்ணனை கேட்க இந்த வீட்ல யாருக்குமே தைரியம் இல்ல. அதே போல அப்பா கிட்ட சொல்லிட்டு தான் அண்ணன் வெளியே இருக்கும். ரெண்டு நாள் எங்க அண்ணனை பார்க்கலன்னா கூட எங்க அம்மாவுக்கு தூக்கம் வராது. ஆனால் இத்தனை நாள் எப்டி அம்மா இருக்குதுன்னு தெரியல!" என்றாள் சுபா.

சாதத்தை பிசைந்து கொண்டிருந்த சீதாவுக்கு சாப்பிடவே தோன்ற வில்லை. என்ன இவள் இப்படி சொல்கிறாள்? என தோன்றியது. ரகுவரனை கடைசியாக அன்று இரவு பார்த்ததுதான் அதன் பின் இன்று வரை பார்க்க வில்லை.

என்ன செய்ய என தீவிரமாக யோசித்தாள். போன் செய்ய எனோ தடுத்தது. வேறு என்ன ஈகோ தான். அவள் தான் அவனை வர வேண்டாம் என சொன்னாள். ஆனால் இப்பொழுது எப்படி அவளை கூப்பிட? தடுக்கிறது உணர்வுகள்.

இரவெல்லாம் தூக்கமில்லாமல் தவித்தாள். விடிய விடிய விழித்து இருந்தாள்.

காலையில் தாமதமாகத் தான் எழுந்தாள். கல்லூரிக்கு செல்லவே மனமில்லை.

சுபா புறப்பட்டு விட்டு அவளுக்காக காத்திருந்தாள். சீதா வராமல் போகவே நேராக அவளை பார்க்க வந்தாள். "சீதா நேரமாச்சு வரலயா? இன்னும் கிளம்பாமல் இருக்கீங்க?"

"அது வந்து இன்னிக்கி எனக்கு காலேஜுக்கு வர மோட் இல்ல. நீ போ சுபா!"

"என்னாச்சு காய்ச்சலா? எதுவும் தொந்தரவா?" என சுபா கேட்க..

"இல்ல சுபா இன்னிக்கி எனக்கு வர தோணல நீ போயிட்டு வா!"

"உனக்கு சாப்பாடு?' சுபா கேட்க..

"இல்ல சுபா நான் பார்த்துக்கிறேன் ஒன்னும் பிரச்னை இல்லை நீ போயிட்டு வா!" என சொல்லி அனுப்பி வைத்தாள் சீதா.

அறைக்குள் இருந்தாள் வெளியே வரவே இல்லை.

முகத்தை கழுவி கொண்டு வெளியே வந்தவளின் முன்னால் ரகுவரன் நின்றிருந்தான்.

அவனை பார்த்ததும் சீதாவின் முகத்தில் அதிர்ச்சி.

தொடரும்..
 

Revathipriya

Active member
Joined
Oct 14, 2024
Messages
136
Achoooo ippadi suspense vechiteengaley Sister😖😖😖🤗.
 
Top