எபிசோட் -1
சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் நேரம் நகர்ந்ததை உணர்த்த, இமையாள் கோபத்துடன் அமர்ந்திருந்தாள். “இந்தக் கல்யாணத்துக்கு என்னால் சம்மதிக்க முடியாது! நானும் அவளும் ஒரே வயதுதானே? அப்படியானால் அரை மணி நேரம்தான் வித்தியாசம். அவளை முதலில் கட்டிக்கச் சொல்லுங்க!”மாதவி படபடப்புடன் அங்கும் இங்கும் நடந்தாள். “இப்படி கடைசி நிமிஷத்தில் ஏன்டி மாற்றிப் பேசுற? படிக்கப் போகும்போது கல்யாணத்துக்கு ஓகேன்னு சொல்லிட்டுப் போன? ஆனால் திரும்பி வந்ததும் இப்படி மாற்றிப் பேசுற! மாப்பிள்ளை வீட்டில் இதுக்கு எப்படி ஒத்துக்கொள்வார்கள்? அதைவிட, உமையாள் இதுக்குச் சம்மதம் சொல்லவே மாட்டாள்!”அக்கா ரெடியா? தாவணி பாவாடையில் அழகிய ஓவியம்போல் வந்து நின்றாள் உமையாள். மாதவி சோகமாக நிற்பதைக் கண்ட உமையாள், தன் அம்மாவின் அருகில் சென்று “என்னம்மா!” என்று கேட்க, அவர்கள் சொன்ன விஷயத்தைக் கேட்டதும் கொஞ்சம் அதிர்ச்சியுடன் தன் அக்காவைப் பார்த்தாள்.“அட இன்னும் என்ன பண்றீங்க? சீக்கிரம் வாங்க, அங்கே நிச்சயப் புடவை வாங்க பொண்ணை வரச் சொல்றாங்க! காலையில் கல்யாணம், இன்னும் என்ன தாமதம்!” என்று கேட்டுக்கொண்டே வந்தார் சந்திரன்.மாதவி கண்கள் கலங்கி அமர்ந்திருக்க, இமையாளோ எந்த சலனமும் இல்லாமல் கால் மேல் கால் போட்டுக்கொண்டு போனை நோண்டிக்கொண்டிருந்தாள்.“இமையா என்ன பண்ற? உமையாள், சீக்கிரம் அக்காவைக் கூட்டி வா!” என்று சந்திரன் சொல்ல, “அப்பா, அக்காவுக்கு இந்தக் கல்யாணத்தில் சம்மதம் இல்லையாம்!” என்றாள் உமையாள்.சந்திரன் கோபத்துடன் அருகில் வந்து, “இப்போ கிளம்பி வந்து புடவையை வாங்குற இல்ல, நடப்பதே வேற! மாதவி, அப்போவே தலை பாடா அடித்துக்கொண்டேன். இப்போ இவளைப் படிக்க அனுப்பி என் மானத்தை வாங்க வந்துவிட்டாள். என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ, இப்போ உடனே அவள் வந்தாகணும்!” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.இமையாள் எழுந்துகொண்டு, “என்னால் ஒத்துக்க முடியாது. அதையும் மீறி எதுவும் செய்தால், நான் மணமேடையில் ஏறி அந்த மாப்பிள்ளையை வேண்டாம் எனச் சொல்வேன்!” என்று அவர்களைப் பார்த்தாள்.உமையாள் ஒரு ஓரமாக நின்று கொண்டிருக்க, மாதவி தன் பெண்ணின் அருகில் சென்றார். “உமையா! மணமேடை வரைக்கும் வந்த கல்யாணத்தை நிறுத்தினால் நம் குடும்ப மானம் போய்விடும். அதைவிட மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் சாபம் நம்மைச் சும்மா விடாது. நீ கட்டிக்கப் போகும் தங்கம் சிவா மாப்பிள்ளை ரொம்ப நல்ல பையன்!”உமையாள் அதிர்ச்சியாகி, “என்னம்மா!” என்று தன் அம்மாவைத் தனியாக அழைத்து வந்தாள். “அம்மா, உனக்குத் தெரியாதா! நான்… என்னோட மனசுல ஏற்கனவே அபினந்தன் இருக்காரே, உங்களுக்குத் தெரியும் தானே! அவருக்காகத்தானே காத்திருக்கேன். நீதானே எங்க கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்னு சொன்ன? இப்போ என்னம்மா இப்படிப் பேசுற? மனசுல ஒருத்தரை வச்சுக்கிட்டு நான் எப்படி சிவா மாமாவைக் கட்டிக்க முடியும்? ப்ளீஸ் அம்மா! என்னால் முடியாது.”மாதவி தன் பெண்ணின் கையைப் பிடித்துக்கொண்டு, “ப்ளீஸ்டா தங்கம், நான் என்ன பண்ணுவேன்! வேற வழி தெரியலை… சிவாதான் உன்னோட அண்ணன் உயிரைக் காப்பாற்றி, உன் அப்பாவுக்கு வேலையும் வாங்கி கொடுத்து, அந்தக் கடங்காரியைப் படிக்க அனுப்பி இருக்கான். இப்போ நாமளே வழியப் போய்த்தானே உன்னோட அக்காவுக்கு மாப்பிள்ளை கேட்டோம்! நாளைக்கு கட்டி வச்சதுக்கப்புறம் பிரச்னை வந்து அவரோட வாழ்க்கை வீணாகிப் போனால், அந்தப் பாவம் நம்மளைச் சும்மா விடாதுடா!” என்று அழுதுகொண்டே கூறினார்.உமையாள் கலங்கிக்கொண்டே, “அம்மா, முடியாதும்மா! என்னோட அபி நாளைக்கு வந்தால் நான் என்ன பதில் சொல்வேன்!” என்று அப்படியே அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.மாதவி கண்ணைத் துடைத்துக்கொண்டே, “சரி, இதுல உனக்கு என்ன சம்பந்தம்! இந்தக் கல்யாணத்தை ஏதாவது ஒரு விதத்தில் நிறுத்தணும். அதுக்குக் காரணமா நானாகவே இருந்திட்டுப் போறேன்,” என்று வெளியே சென்றார்.இமையாள் அங்கு நடப்பதைப் வேடிக்கை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள். உமையாள் வேகமாக அங்கிருந்து பாத்ரூம் சென்று அழத் தொடங்கினாள். கன்னமெல்லாம் சிவந்து வீங்கிப் போனது. அவள் கண்ணை மூடியதும் மாதவி சொன்னது நினைவுக்கு வர, வேகமாக அவரைத் தேடிச் சென்றாள்.அங்கே மாதவி செய்யும் காரியத்தைப் பார்த்து உமையாள் அவருடைய காலைக் கட்டிக்கொண்டு, “அம்மா, என்னம்மா பண்ற? எதுக்கும்மா சுருக்குப் போடப் போறீங்க?” என்று நடுங்கிக்கொண்டே பார்த்தாள்.மாதவி ஜடம்போல, “எனக்கு உன்னோட வாழ்க்கை முக்கியம் பொண்ணு! தரணியையும் உன் அப்பாவையும் ரெண்டு பேரையும் நல்லாப் பார்த்துக்க,” என்று சொல்லிக்கொண்டே அவர் புடவையை கழுத்தைச் சுற்றிப் போட்டுக்கொள்ள…உமையாள் துக்கம் தொண்டையை அடைக்க, “எனக்குச் சம்மதம்! எனக்கு இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதம்!” என்று தேம்பிக்கொண்டே கூறினாள். அடுத்த நாள் காலை அங்கு கூடியிருக்கும் அனைத்து உறவுகளும் ஒருவருக்கொருவர் மணமேடையைப் பார்த்துப் பேசிக்கொள்ள, அருகில் இருப்பவளைப் பார்க்கப் பார்க்க பற்றியெரிந்தது.சந்திரனும் தரணியும் என்ன செய்வது என்று தெரியாமல் கொஞ்சம் தர்மசங்கடத்துடன் நின்று கொண்டிருக்க, தன் வீட்டு மரியாதையைக் காப்பாற்றிய மகளின் வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டு நின்றார்.உமையாள் ஒரு ஜடம்போல சிவாவின் அருகில் அமர்ந்திருந்தாள். ஐயர் மந்திரங்கள் ஓதி, “மாங்கல்யத்தைப் பூட்டுங்கோ! கெட்டி மேளம்! கெட்டி மேளம்!” என்று கூறிட… சிவா தாலியை அவளின் கழுத்தில் கட்டிக்கொண்டே, “என்னை பிளான் பண்ணி கட்டிக்கிட்ட உனக்கு இனி நரகம் அப்படின்னா என்னன்னு காட்டப்போறேன்,” என்று சொல்லிக்கொண்டே நேராக அமர்ந்தான்.எதிர்பாராத திருமணத்தில் இணைந்த சிவா – உமையாள் வாழ்க்கை பயணத்தை இந்த கதையில் காண்போம்!ஒரு மணி நேரத்துக்கு முன்புகல்யாண வேலைகள் ஒரு பக்கம் தடபுடலாக நடந்துகொண்டிருக்க, அவனுடைய செல்போன் அலறிக்கொண்டே இருந்தது. அதைக் கோபத்துடன் பார்த்தவன் பதில் பேசாமல் அவனுடைய தாடியை நீவிக்கொண்டே பட்டு வேட்டி சட்டையை நீவிக்கொண்டு தலையைக் கோதி கொடுத்தான்.“என்னடா சிவா, போன் விடாமல் அடிச்சுட்டு இருக்கு, எடுத்துப் பேசு!” என்று அவனுடைய தாய் சித்ரா சொல்லிக்கொண்டே போனை எடுத்தார்.“அம்மா, எடுக்காதீங்க! என்னை ஏமாத்திட்டான்.”“என்னடா சொல்ற?” என சித்ரா திடுக்கிட்டுப் பார்க்க…“கல்யாணத்துக்கு வரேன்னு சொன்ன அந்த நாய் கடைசியில் ஃப்ளைட் டிக்கெட் கிடைக்கலைன்னு டிமிக்கி கொடுத்திட்டு இப்போ போன் பண்ணி என்னை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்றான். நான் எடுக்க மாட்டேன்,” என்று கூறினான்.“அட, இதுதான் விஷயமா! நான் கூட பயந்துட்டேன்,” எனச் சிரித்துக்கொண்டே வெளியே சென்றவர், “சீக்கிரம் வாடா கண்ணா, அங்கே குருக்கள் கூப்பிடுறாங்க,” என்று சென்றார்.ஆறடி உயரத்தில், கொஞ்சம் கருப்பு, இல்லை கருப்பட்டி அழகனாக இருந்தாலும் லட்சண முகவெட்டு கொண்டவன். பார்த்தாலே ஆளை அசரடிக்கும் கம்பீரம், ஒட்டிய புருவம், நிதான பார்வை, சீரான மூச்சு, கூடவே அந்தக் கம்பீர மீசையுடன் ஒட்டிய தாடியில் அழகாக இரண்டு ஒட்டிய இதழ்கள், உடற்கட்டு மலைப்பாதை போல இருக்கும். “சிவா, சீக்கிரம் வாடா!” என்று அவருடைய தந்தை மூர்த்தி அழைக்க, கை இரண்டையும் உதறிக்கொண்டே தன்னுடைய பாதியானவளைக் கரம்கோர்க்க மணமேடைக்கு வந்துவிட்டான்.அனைத்தும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சீராகத்தான் போய்க்கொண்டிருந்தது. குருக்கள் சொல்லச் சொல்ல மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே ஆஜானுபாகுவாக அமர்ந்திருந்தான்.இங்கே இமையாள் தன் அம்மா முன்பும் பணக் கட்டுகளை வைத்தாள். “என்ன இது?” என மாதவி கேட்க…இமையாள் கால்மேல் கால் போட்டுக்கொண்டு கன்னத்தில் கை வைத்தபடி, “வெளிய மணமேடையில உட்கார்ந்துட்டு இருக்கானே அந்த ஆளு எனக்குப் படிக்கிறதுக்குச் செலவு பண்ண பணம், மொத்தமும் இதுல இருக்கு. இதைக் கொடுத்துட்டு கல்யாணத்தை நிறுத்திடுங்க. என்னால அவனை கட்டிக்க முடியாது.”அதைக் கேட்டதும் மாதவிக்கு தூக்கிவாரிப் போட்டது. “என்ன, இப்போ வந்து இப்படிப் பேசுற? இது மாப்பிள்ளை வீட்டு காதுக்குக் கேட்கப் போகுது. என்ன இமையா, என்ன உன் மனசுல நினைச்சுட்டு இருக்க?”“அம்மா, நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன்.”மாதவி கோபத்துடன், “ஓ, ஃபாரினுக்கு படிக்கப் போயிட்டா உனக்கு அவ்வளவு கொழுப்பு திமிரு கூட சேர்ந்து வருமா என்ன?” என்று மிரட்ட…இமையாள் அது எதையும் கண்டுகொள்ளாமல், “என்னை எதுக்கு இப்போ முதல்ல கல்யாணம் பண்ணி வைக்கிறீங்க? நானும் உமையாளும் அரை மணி நேரம்தான் முன்ன பின்ன… அதனால அவளுக்குக் கட்டி வையுங்க. என்னால அவனை கட்டிக்க முடியாது. எனக்கு NRI மாப்பிள்ளைதான் வேணும். நான் ஆல்ரெடி பார்த்து வச்சுட்டேன். கூடிய சீக்கிரத்துல என்னோட கல்யாணம் நடக்கும்!” என்று கூறிவிட்டு அதே இடத்தில் அமர்ந்திருந்தாள்.அந்த நேரம் உமையாள் வர, அவளை மாதவி கெஞ்சி அழுது சம்மதிக்க வைத்து இப்போது உமையாள் திருமணக் கோலத்தில் அவளுடைய அறையில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள்.அந்த நேரம் தரணியும் சந்திரனும் பதட்டத்துடன் மூர்த்தியின் அருகில் வந்து ஏதோ சொல்ல, சிவாவின் பார்வை அவர்கள்மீது படிந்தது. மூர்த்தி வேகமாக உள்ளே சென்றார்.சிவா தன் தாய் சித்ராவைப் பார்த்து, “எழுந்து வரட்டுமா?” என்று கேட்க…“நீ அமைதியா உட்காருடா, நாங்க பார்த்துக்கிறோம்…” என அவர் மணமகள் அறைக்குச் சென்றார்.அங்கே சந்திரன் தன்னுடைய முதல் பெண்ணைக் குற்றம் சாட்டப்பட்டவளாகக் காட்டவில்லை. அவருக்கு இமையாள் என்றால் மிகவும் உயிர். அதனால்தான் சிவாவுக்குக் கட்டி வைக்கத் துணிந்தார். அதேபோல் உமையாளையும் அவருக்கு மிகவும் பிடிக்கும். இருந்தாலும் முதல் குழந்தை இமையாள் என்பதால் அவள் மேல் அதிகப் பாசம். அதேபோல் இப்பொழுது குடும்பப் பிரச்சனையை இவள் பணம் வைத்து இந்தக் கல்யாணத்தை நிறுத்துகிறாள் என்று சொன்னால் அவர்கள் நொந்துவிடுவார்கள். மணமேடை வரைக்கும் வந்து திருமணம் என்றால் அந்தக் குடும்பத்தையே கேவலமாகப் பேசும் என்று உணர்ந்த சந்திரன் வேறு வழியில்லாமல் உமையாள் மேல் காதல் குற்றத்தைச் சுமத்தினார்.மூர்த்தி, “என்ன பொண்ணு ரெடியாகாமல் இருக்கு? என்ன ஆச்சு? சம்மந்தி…”சந்திரன் கொஞ்சம் கனிவான முகத்துடன், “மாமா, என்னை மன்னிச்சிடுங்க! என்னோட இரண்டாவது பொண்ணு மாப்பிள்ளையை விரும்புது. அதான்.”அங்கு இருக்கும் அனைவருக்கும் தூக்கிவாரிப் போட, மாதவி தன் கணவனை அதிர்ச்சியுடன் பார்த்துவிட்டு உடனே “இல்லைங்க அண்ணா” என்று உண்மையை கூற வர…சந்திரன் மாதவியின் கைகளைப் பிடித்து, “ஒரு நிமிஷம் இரு, நான் பேசிடறேன்!” என்று சொல்ல…“உங்க மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?” என்று சித்ரா சண்டைக்கு வர…“மாமா, நான் சொல்றதைக் கேளுங்க,” என்று சந்திரன் பார்த்தார்.மூர்த்தி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க…சந்திரன், “நம்ம சிவா மாப்பிள்ளையைப் பார்த்ததிலிருந்து உமையாளுக்கு ரொம்ப பிடிச்சுப் போயி இப்போ கல்யாணத்தில் வந்து சாகத் துணிந்துடுச்சு. எனக்கு மனசு கேட்கலை… என்ன பண்றதுன்னு தெரியலை…”சித்ராவுக்கும் மூர்த்திக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. “இதை முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல… அப்படியே பேசி கல்யாணம் பண்ணி இருக்கலாமே! இப்போ திடுதிப்புன்னு வந்து மாத்துறீங்க…”“இதை பெரியவங்ககிட்ட பேசின, அவ ஒத்துக்கிட்டா. அதனால சின்னவளையே கட்டிக்க நாங்க விரும்புகிறோம்! மாமா!… நீங்க என்ன சொல்றீங்க? உங்க முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம்,” என்று சந்திரன் கூறினார்.மாதவி பதட்டத்துடன் நின்று கொண்டிருக்க, மூர்த்தி அங்கிருக்கும் அனைவரின் முகத்தையும் பார்த்தார். சித்ராவிற்கு இதில் துளிகூட விருப்பமில்லை. “என்னங்க, இந்த சம்பந்தம் வேண்டாம்! இதோட விட்டுவிடலாம்,” என்று வெளியே செல்ல…மூர்த்தி மாதவியின் முகத்தைப் பார்த்து, “என்னுடைய மருமகள் எங்கே?”இதைக் கேட்டதும் அனைவருக்கும் கொஞ்சம் நிம்மதியாகிட, மாதவி கண்களைத் துடைத்துக்கொண்டு, “அந்த ரூம்ல இருக்கா?”மூர்த்தி நேராக அந்த அறைக்குச் சென்றார். சந்திரன், தரணி, மாதவி என அனைவரும் மூர்த்தியின் பின்னால் செல்ல…இமையாள், “அப்பா, ஒரு தொல்லை முடிஞ்சது,” என்று ஒய்யாரமாக அமர்ந்து போனை நோண்ட ஆரம்பித்தாள். அதற்குள் சிவாவுக்கு அனைத்து விஷயங்களும் தெரிந்து போனது.கதவு திறக்கப்பட, உமையாள் கண்களைத் துடைத்துக்கொண்டே எழுந்து நின்றாள்.மூர்த்தி நேராக அவளின் அருகில் சென்று, “உனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பமா? நீ என்னோட பையன கட்டிக்க சம்மதமா? அவனை உனக்கு பிடிச்சிருக்கா?” என்று கேட்டார்.உமையாளின் பார்வை மாதவியையும் தன் குடும்பத்தாரையும் பார்த்தது. அப்போழுதுகூட அங்கு இமையாள் வரவில்லை. ‘என்னோட வாழ்க்கை சீரழிவதற்கு என் கூடப் பிறந்தவளா காரணம்! நான் என்ன பாவம் செய்தேன்?’ என்று மனதில் நினைத்தவள் மருகிக்கொண்டே, “எனக்குச் சம்மதம்! நான் அவரை கட்டிக்க விருப்பம்…” என்று கூறினாள்.சித்ரா இதைக் கேட்டதும் அவளை முறைத்துப் பார்த்தார். ஏனென்றால் இந்த இரண்டு வருடமும் இமையாள்தான் தன் மருமகள் என்று அவளை நினைத்துக் கனவு கண்டுவிட்டார். இப்பொழுது உமையாள் வருவாள் என்று துளிகூட நினைக்கவில்லை. அதனால் உமையாளை சித்ராவுக்குப் பிடிக்கவில்லை. சித்ராவை இப்படி இருக்க சிவா எப்படி இருப்பானோ?“குருக்கள் இன்னும் எவ்வளவு நேரம் பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ!” என்று மூர்த்தி முன்னாள் நடக்க, பின்னால் உமையாளை மாதவி அழைத்து வந்தார்.
.
