Episode -2
“இந்த காலத்தில் போஸ்ட்டா? எதாவது கிரெடிட் கார்ட் போஸ்ட்டா இருக்கும்” என மெல்ல எழுந்து வெளியே சென்றாள் வேத நாயகி.
காலை எழுந்ததும் பிரியாவுக்கு நிற்க நேரமில்லாத குறை, ஆம் காலையில் எழுந்ததும் வீட்டு வேலைக்காரியை விட வேலை செய்ய வேண்டும். ஹரிக்கு பிடித்த அனைத்து உணவுகள், அவன் ஆபிஸ் செல்ல உடை, ஹீட்டர் போடுவது, இந்த பக்கம் வேதநாயகிக்கு குடிக்க கசாயம், காலை உணவு அவருக்கு தனியாக மண்ணுக்கு அடியில் வரும் கிழங்கு வகைகள் ஒத்துக்கொள்ளாது அதற்கு ஏற்ப காய்களை தேர்வு செய்து சமைக்க வேண்டும் அதற்கு எதிற்பதமாக ஹரிக்கு உணவுகள், இதற்கிடையில் வாசிங் மிசனில் துணி, வெளியே வாசல் கூட்டி கோலம் போடுவது, இது அத்தனையும் செய்வதற்கு முன் ஒரு முறை குளிக்கவேண்டும் செய்தபின் ஒருமுறை குளிக்கவேண்டும் என பம்பரமாக சுழன்று கொண்டிருந்தாள்.
“ஹே பிரியா! ஹேய் பிரியா காதென்ன செவிடா?” என்று கத்தினார் இரண்டு வீதிக்கு கேட்பது போல..
“அத்தை!!” என அரக்க பறக்க ஓடிவந்தாள் பிரியா.
“இந்த போஸ்ட்மேன் என்னமோ சொல்றான்? அதென்னன்னு கேட்டு அனுப்பி வை! உனக்கு எதோ கவர்மென்ட் வேலை கிடைச்சிருக்குனனு சொல்றாப்ல! இந்த காலத்தில் தண்டசோரு தின்னுட்டு இருக்க உனக்கு எப்டி இந்த வேலைன்னு எனக்கு ஒன்னும் பிடிபடல. வயித்தில் புழு பூச்சி கூட இல்ல இதுல வேலை ஒன்னுதான் கேடு போல! சீக்கிரம் என்னன்னு கேட்டு அனுப்பி வை” என கொக்கரித்துகொண்டே உள்ளே சென்றார்.
போஸ்ட் மேன் அவளை பாவமாக பார்த்தவர். “கடவுள் உனக்கு நல்வழி தான்மா விட்டுறுக்காரு! என் கிட்டயே இந்தம்மா கொத்து சேவல் மாதிரி சண்டை போடுதே! நீ எப்டி மா பிழைப்பு நடத்துற!” என கையெழுத்து வாங்கினார்.
அவருக்கு மவுனத்தை மட்டுமே பதிலாக கொடுத்தவள். அந்த லெட்டரை திறந்து படித்தாள். காலேஜ் படிக்கும்போது தவறிபோன அவளின் தந்தையின் அரசுவேலை எட்டு வருடங்களுக்கு பிறகு அவளுக்கு கிடைக்கிறது. கண்களில் கண்ணீருடன் நின்றிருந்தாள்.
ஆம் மதுப்ரியாவின் தந்தை கனகராஜ் தாலுக்கா அலுவலகத்தில் கிளார்க் போஸ்டில் பணியிலேயே மாரடைப்பு வந்து இயற்கை எய்தினார். அம்மா ரமணியம்மாலுக்கு பென்ஷன் வருகிறது. ஆனாலும் வீடு லோனில் கட்டியிருந்ததால் பாதி பணம் கடனில் கழிந்தது. அந்த நேரத்தில் தான் திடீரென வந்திறங்கியது ஹரிணியின் குடும்பம். பிரியாவை பெண் கேட்டு..
பிரியாவை தன் பெற்ற பெண்ணை போல பார்த்துக்கொள்கிறேன் என வேதநாயகி மற்றும் ராதா இருவரும் கூறி சம்மந்தம் செய்துவிட்டு போனார்கள். பிரியா படித்த பள்ளியில் ஹரி சீனியர் வகுப்பு மாணவன்.
“ஸ்கூலில் இருந்தே பிரியாவை என் தம்பிக்கு பிடிக்கும். நானும் அதே ஸ்கூலில் தான் படிச்சேன்! என்னை தெரியும் தான பிரியா” என ராதா கேட்க..
“நியாபகம் இல்ல ஆனால் ஹரி நினைப்பில் இருக்காரு” என்றாள் பிரியா.
ரமணி தயக்கத்துடன் “உங்களை பத்தி இப்போ தான் மா விசாரிச்சேன். சொந்தமா ஹாஸ்பிடல் வச்சிருக்கீங்க! உங்க தம்பி சொந்தமா பெரிய கம்பனி வச்சிருக்காரு. உங்களோட தகுதிக்கு பெரிய சம்மந்தம் வருமே! என் பொண்ணு உங்க குடும்பத்துக்கு?” என தயங்கினார்.
“நீங்க தான் அத்தை அப்படி பார்க்கறீங்க ஆனால் நாங்க அப்படி நினைக்கல யோசிச்சு சொல்லுங்க. பிரியாவோட குணமும் தன்மையும், அதே போல தங்கசிலை மாதிரி இருக்கா! என் தம்பி கட்டினால் இவளை தான் கட்டுவேன்னு ஒத்த காலில் நிக்கிறான். யோசிச்சு சொல்லுங்க” என கூறிவிட்டு பிரியாவின் தலையில் பூ சூடி விட்டு சென்றார்கள்.
கண்ணை கட்டி காட்டில் விட்டது போல மூன்று மாதத்தில் நிச்சயம் முடிந்தது. அப்படியே ஹரி அவளின் படிப்பு முடியும் வரை காத்திருந்தான். படிப்பு முடிந்த அடுத்தநாளே திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. தங்க சிலை மாதிரி இருக்கா. ஹரிக்கு இவ தான் பொருத்தமான ஜோடி என அனைவரும் பெருமையாக கூறினார்கள்.
பிரியாவும் தன் கணவனின் கைகளை கோர்த்து படத்தில் வரும் ஹீரோ ஹீரோயின் போல போஸ் கொடுத்தாள். இது மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்ற பழமொழிக்கு ஏற்ப.. அவள் வீட்டுக்கு வந்ததும் அனைத்தும் தலைகீழ் ஆகி போனது.
பிரியாவை புரட்டி போட்டார்கள். “தலைக்கு தண்ணி ஊத்திட்டியா?” என்ற வார்த்தையை அவளிடம் வேதநாயகி ஒவ்வொரு மாதமும் கேட்டு கேட்டு அவளுக்கு அந்த மூன்று நாட்களை நினைத்து நினைத்து பயம் வந்துவிட்டது. முதல் மாதம் தள்ளி சென்றது. அப்படியே இரண்டு மூன்று நான்கு என வரிசையாக தள்ளி செல்ல செல்ல அவள் மூலையில் தள்ளபட்டாள்.
ஹரி பெரிதாக எதையும் கண்டு கொள்ளமாட்டான். அம்மா பிள்ளை. அனைத்து வேலையும் பிரியாவின் தலையில் வந்து விடிந்தது. இன்பகடலில் ஆசையுடன் கூடியது அனைத்தும் கல்யாணம் முடிந்து ஒருவாரம் மட்டும் தான். அதன் பின் விலகல் அதிகமாக இருந்தது ஹரியிடம் இருந்து…
ஹாஸ்பிடல் செல்ல முடிவெடுத்து தன் முடிவை இரண்டாம் வருடத்தின் தொடக்கத்தில் வைத்தாள் பிரியா. அடுத்த நொடி ராதா மகப்பேறு மருத்துவமனைக்கு ஹரி அழைத்து சென்றான்.
“சுகர் கொஞ்சம் இருக்கு, வெயிட்ட குறை மா..” என மூன்று மாதம் இழுத்தார்கள்.
“ஹார்மோன் இம்பெலன்ஸ்” என மூன்று மாதம் இழுத்தார்கள்.
“நானெல்லாம் ரெண்டு பிள்ளை பெத்தென். உன் குடும்பம் என்ன பாவம் பண்ணுச்சோ என் பையனுக்கு உன்னை கட்டி வச்சு. இன்னும் ஒரு நல்ல செய்தி இல்ல. அதுக்கெல்லாம் கொடுப்பன இருக்கணும். கடவுள் அனுகிரகம் இருக்கணும்” என வேதநாயகி விஷநாயகியாக மாறி அவளை மொத்தமாக வதைத்தாள்.
ஒரு பக்கம் பிரியா தீவிர கடவுள் பக்தை ஆகி போனாள். சஸ்டி விரதம், வளர்பிறை , பிரதோஷம், நேர்த்தி கடன் வேண்டுதல், துலாபாரம் செய்கிறேன். எனக்கு குழந்தை பிறந்தால் எடைக்கு எடை பழம் வைக்கிறேன் கற்கண்டு வைக்கிறேன் முருகா, திருப்பதி வரேன். ஐயப்பா என சபரிமலை சாமிகளுக்கு அன்னதானம் கொடுத்தல் என அனைத்தையும் செய்தாள். ஆனால் பலன்?
“வெயிட் ரொம்ப கம்மியா இருக்கு. நீ ரொம்ப மனஅழுத்தத்தில் இருக்க ரெண்டு மாசம் கழிச்சு வா! இரத்தம் இப்போ ரொம்ப கம்மியா இருக்கு. உனக்கு ஹீட் உடம்பு. சினை முட்டை சரியான நேரம் வர மாட்டிக்குது.” என நான்கு வருடங்களும் அவளை மொத்தமாக ராதா மருத்துவமனை பாதி… வேத நாயகி மீதி, மொத்தமாக ஹரி பேசாமல் வதைத்தார்கள்.
இத்தனை பழி சொற்களை தாங்கிகொண்டு இருந்தவள் இனிமேல் என்ன செய்ய போகிறாள் என அவளுக்கே தெரியவில்லை.
இதோ அவளுக்கான நேரம் இனி தானோ! வேஷம் வெளுக்க போகிறதா! பூஜையறையில் கண்விழித்தவள். ஆர்டரை நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.
“ஹே என்ன டி பண்ற? போதும் பெரிய கலெக்டர் உத்தியோகம். வா வந்து மதியத்துக்கு சீரகம் அதிகமா போட்டு ரசம் வை” என கத்தினார் வேநாயகி.
அதை பத்திரப்படுத்தி விட்டு நேராக வீட்டு வேலை அனைத்தையும் செய்தவள் இரவுவரை காத்திருந்தாள். ஹரி வந்துவிட ராதாவுக்கு போன் செய்தாள்.
“சொல்லு பிரியா?” என இனிமையான கொஞ்சும் குரல்..
“அண்ணி உங்ககிட்ட ஒரு விடயம்!”
“பிரியா நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே மா! எங்க அம்மாவுக்கு உன் மேலே பாசம் அதிகம். அவங்க என் கிட்டயும் அப்படி தான் நடந்துப்பாங்க. நீ மனசை போட்டு குளப்பிக்காத மா! நான் இந்த வாரம் வரேன். முக்கியமான ஆப்ரேசனுக்கு இங்கே சென்னை வந்திருக்கேன்” என்றாள் ராதா.
“அது அண்ணி ஒன்னும் பிரச்னை இல்ல. எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் பண்ணுங்க கா!”
“என்ன பிரியா? நீ கேட்டு நான் இல்லன்னு சொல்லுவேனா?”
“அது தான் கா உங்ககிட்ட கேட்கிறேன். எனக்கு எந்நேரமும் குழந்தை நினைப்பாவே இருக்கு. இப்போ எனக்கு அதுல இருந்து கவனத்த வேற விசயத்துல காட்ட முடியல. பிளீஸ் எனக்கு எங்க அப்பாவோட வேலை கிடைச்சிருக்கு. நான் அதுல சேர்ந்துக்க பார்க்கிறேன். நீங்க தான் அத்தை அப்புரம் உங்க தம்பிகிட்ட இதை பத்தி பேசி சம்மதம் வாங்கி கொடுக்கணும்” என்றாள் பிரியா.
“அவ்ளோ தானமா நான் கூப்பிடுறேன் டா” என சிறிது நேரம் கழித்து போன் செய்தார்.
“அண்ணி” என ஆர்பரிப்புடன் போன் எடுத்தாள் பிரியா.
“அது வந்து பிரியா! அம்மாவுக்கு இப்போ உடம்புக்கு முடியல! இந்த வேலைக்கு நீ போயே ஆகணுமா?” என கேட்டார் ராதா.
பிரியா ஒரு பெரு மூச்சைவிட்டு “சரிங்க அக்கா நான் பார்த்துக்கிறேன் வைங்க” என போனை வைத்தவள் குலுங்கி அழுது கொண்டிருக்க, அவளின் தோழி ராதிகா போன் செய்தாள்.
“சொல்லு கங்கா!” என பிரியா பேச..
“ஹே எனக்கு டிவின்ஸ் பிறந்திருக்கு.”
“வ.. வாழ்த்துக்கள் கங்கா” என தவிப்புடன் வாழ்த்துக்கள் கூறினாள் பிரியா.
“ஹே உன்னை குத்திகாட்ட போன் பண்ணுல மது. எனக்கும் ரெண்டு வருசம் தள்ளி போச்சு. ஆனால் IVF பண்ணி இப்போ ரெண்டு குழந்தை. அதனாலே நீயும் நாலு வருசமா ட்ரீட்மென்ட் பண்ற தானே உங்க நங்கையா ஹாஸ்பிடல் வச்சிருக்காங்க தானே நிறைய பேருக்கு நல்லது நடந்திருக்கு. நீங்க ஏன் IVF try பண்ண கூடாது” என கூறினாள்.
“ரொம்ப தேங்க்ஸ் டி! நானும் இதைபத்தி தான் யோய்ச்சிட்டு இருந்தேன்.” என கொஞ்சம் ஆறுதல் அடைந்தவள் உடனே ராதாவுக்கு போன் செய்தாள்.
“சாரி பிரியா அம்மா உடல்நிலை..” என ராதா ஆரம்பிக்க..
“அண்ணி நான் வேலைக்கு போகல! ஆனால் IVF பண்ணிக்க ஐடியா இருக்கு கா! அதை பத்தி பேசதான் கால் பண்ணேன்.” என்றாள் பிரியா.
“இரு பிரியா நான் கூப்பிடுறேன்” என்று வெடுக்கென கட் செய்த ராதா தீவிரமாக யோசித்தபடி, தன் அன்னைக்கு கால் செய்தவள் சில விசயங்களை பேசி முடித்தாள்.
“ஹே பிரியா!!” என சத்தமாக வேதநாயகி அழைக்க..
“அத்தை” என ஓடி வந்தாள் பிரியா.
“நீ வேலைக்கு போறதுல எனக்கு விருப்பமில்ல ஆனால் ராதா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போன்பண்ணி உனக்காக பேசினாள். ஹரிகிட்டயும் பேசிருக்கா. என்ன பண்றது?” என முகத்தை சுழித்தவர். “நீ வேலைக்கு போ!” என்றார்.
பிரியா…?
தொடரும்..
“அய்யோ புதுசா வந்த கிளார்க் மேடம் மது பிரியா நம்ம தாசில்தார் மேலே மயங்கி விழுந்துட்டாங்க”