Episode-13
சித்ரவதைசிவா சொன்னதைக் கேட்டதும் உமையாளுக்கு உள்ளுக்குள் புயல் காற்று, மழை, சூறாவளி என வீசிக்கொண்டிருக்க, அந்தப் பதட்டத்தில் அப்படியே நின்றாள்.தன் தலையைக் கோதியவன், அவளை உறுத்துப் பார்த்து, “சரி, இந்த போன் கவர், லேப்டாப் பேக் ரெண்டையும் எடுத்து பேக் பண்ணு!” என்று சிவா சொல்லிவிட்டு, அருகில் இருக்கும் வாட்டர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்தான்.
உமையாள் அப்படியே நின்று கொண்டிருக்க, அவனே அனைத்தையும் பேக் செய்தான்.“இப்… இப்போ என்ன பண்றீங்க?” என உமையாள் பதட்டத்துடன் கேட்க, “என் கூட வா, தெரியும்,” என்று அனைத்தையும் எடுத்துக்கொண்டு அவன் முன்னால் செல்ல, உமையாள் அவனைப் பின்தொடர்ந்தாள்.காரில் ஏறியதும் வேகமாக சீறிப் பறந்தது, அவள் கேட்ஜெட்ஸ் வாங்கிய ஷோரூமை நோக்கி.“இங்கே எதுக்கு வந்திருக்கோம்?” எனக் கேட்டுக்கொண்டே உமையாள் இறங்க, “உள்ளே வா,” என அவளுக்கு கார் கதவைத் திறந்து விட்டவன் உள்ளே அழைத்துச் சென்றான்.
அந்த ஷோரூம் பணியாளருக்கு, இரண்டு நாட்களுக்கு முன் வந்து லேப்டாப் வாங்கிப் போன உமையாள் நன்கு அடையாளம் தெரிந்தது.“வாங்க மேடம்!” என அவர் வரவேற்க, சிவா அவர்கள் முன் இரண்டு பொருளையும் வைத்து, ஆளுமைக் குரலில், “ரெடி கேஷ் கொடுத்து ரெண்டையும் வாங்கிக்கிறோம். அண்ட் இதை விட அட்வான்ஸ்டு லேட்டஸ்ட் ஃபீச்சர் இருக்கிறது வேணும்!” எனக் கூறினான்.உமையாள் அவன் அருகில் வந்து, “வேணாம்! நான் வாங்கினதே இருக்கட்டுமே! எதுக்கு தேவையில்லாம இன்னொன்று! அது ரெண்டையும் நான் பார்த்துக்கிறேன்,” எனக் கூறி முடிக்க, சிவா அவளின் பேச்சில் ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்தான்.“நீ என்னோட மனைவி! இது கடமையைத் தாண்டி அதுக்கும் மேல உன்னோட ஆசை, அதாவது நீ நினைக்கிற வேலையைச் செய்ய ஒரு பொருள் வாங்குற? அது நான் தான் உனக்கு வாங்கி கொடுக்கணும்,” என்று கூறிக்கொண்டே அவளின் கையைப் பிடித்தான்.
உமையாள் அவனைப் பார்த்து, ‘எப்போ இருந்து எனக்கு மனைவி அப்படின்ற அங்கீகாரம் கொடுத்த?’ என முள் போல அவளுக்குக் குத்தியது. மனதில் நினைத்துக் கொண்டாள். அவனிடம் கேட்கவா முடியும்? அவனுடைய கைகள் ஒரு நிமிடம் கூட அவளின் விரல்களை விடவே இல்லை, பிடித்து வைத்திருந்தான். ஆனால் சிவாவின் பார்வை அந்த ஷோரூமில் நோட்டம் விட்டது.“நம்ம வீட்டில் இருந்து இங்கே எப்படி வந்த உமையா?” என்றான்.“அது நான் கேப்ல…”பதிலை மட்டும் கேட்டவன் அவனே தலையாட்டிக்கொண்டு, “உன்னோட தன்மானம் எனக்குப் பிடிச்சிருக்கு! I’m impressed…” எனக் கருப்பழகனின் பாராட்டு. அதை அந்த உமையாள் வெறுப்பாக உணர்ந்தாள்.இதுவே இந்த இடத்தில் அபி இருந்திருந்தால், இப்படி ஒரு நிலை தனக்கு வந்திருக்காது.
அதேபோல அவள் எங்கு சென்றாலும் அதற்கு முன் அவன் அங்கு நிற்பான். அவனுடைய பாதுகாப்பில் ஒரு நொடி மெய்சிலிர்த்து அவன் மார்பில் தஞ்சம் கொள்வாள் யாழினி (உமையாள்).அவளுடைய காசில் வாங்கிய ஐபோனும், மேக் இரண்டும் இப்பொழுது பிடிக்கவில்லை. அந்தச் சிம்பல் போலக் கடித்து விட்டுத் தூக்கி எறியத் தோன்றியது உமையாளுக்கு.அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதைப் பார்த்து, சந்தோஷத்தில் பேச்சு வராமல் இருக்கிறாள் எனத் தவறாக நினைத்துக் கொண்டான் சிவன்.ஆனால் உமையாள் உண்மையில் என்ன நினைக்கிறாள்? ஹ்ம்ம்… ஒரு இடத்தில் போய் முட்டும், உடைவது அவனாக இருந்தாலும் மொத்த வலியும் அவளுக்குத்தான்! அவன் இல்லாமல் அவளால் இருக்க முடியாது. அவனுடைய காந்தக் காதலில் ஒட்டிக்கொள்வாளா? இல்லை உடைத்துக்கொண்டு பிரிவாளா?அங்கிருந்து மொத்த பணத்தையும் கட்டி இரண்டையும் வாங்கி கொடுத்தான். முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் வாங்கிக் கொண்டாள். அதற்கும் ஒரு பாராட்டு! அவனேதான். கிட்டத்தட்ட மூன்று லட்சம் செலவு செய்திருக்கிறான்.
எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஏற்றுக்கொண்ட அவளை இன்னும் பிடித்துப் போனது. அது அவனிடமிருந்து வந்ததால் என்னவோ, அவளுக்குப் பிடிக்கவில்லை போலும்.இதுவே அபி வாங்கி கொடுத்திருந்தால், தன்னுடைய காதல் கண்ணாளன் தனக்காக அவளின் கனவு மடிக்கணினி வாங்கி கொடுத்திருக்கிறான் என நெஞ்சில் சாய்ந்திருப்பாள். இது யாருக்குக் கொடுத்து வைக்கவில்லை?அங்கிருந்து ஒரு ஷோரூம், பெண்களுக்கு உண்டான துணிக்கடைக்கு அழைத்துச் சென்றான். அவளுக்குப் பிடித்ததை எடுத்து கொடுக்கவில்லை. மாறாக அவள் மேல் வைத்து அழகு பார்த்து வாங்கிக் கொடுத்தான்.
அதற்குப் பதில்! அவளுக்கு எதுவும் பிடிக்கவில்லை. ஆனால் முகத்தைச் சிரிப்பது போல வைத்துக்கொண்டாள்.கடையில் இருக்கும் பணியாளர்கள் சிவாவைத்தான் பார்த்தார்கள். அவனுடைய நேர்த்தியான தேர்வை கண்டு பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஆனால் அவளைப் பார்க்கும்போது மட்டுமே கண்களும், அந்த மீசைக்குள் மறைந்திருக்கும் தடித்த அதரங்களும் உயிர் பெற்று புன்னகையைக் கொடுத்தன.அங்கிருந்து நேராக ரெஸ்டாரன்ட்டுக்கு அழைத்துச் சென்று சாப்பிட வைத்தான். அவளுக்கு என்னென்ன பிடிக்கும் எனத் தெரிந்துகொண்டான். எப்படியோ அவர்கள் வீடு வந்து சேர இரவு 11 மணி ஆகிவிட்டது.
களைப்பில் வந்தவளுக்கு தூக்கம் கண்ணைக் கட்டிக்கொண்டு வர, “உமையா!”“என்னங்?” எனக் கண்களைத் தேய்த்துக் கொண்டே கேட்டாள்.“போய் குளிச்சிட்டு வா!”இந்த வரிகள் உள்ளுக்குள் ஒருவிதச் சலிப்பைக் கொடுத்தது. ‘இவனுடன் கூட வேண்டும் என்பதற்காகத்தான் உணவு, உடை, போன், லேப்டாப் என அனைத்தையும் வாங்கி கொடுத்திருக்கிறானா?’ என விக்கித்து அவள் அமர்ந்திருக்க, சிவா அவளின் முகத்தைப் பார்த்துவிட்டு, ‘இந்த பொண்ணு!’ எனப் பெருமூச்சை விட்டவன், முதலில் அவனே குளிக்கச் சென்றான்.அவளுக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை. வெறுப்பாக இருக்கிறது. ஏற்று வாழ முடியவில்லை. எது செய்தாலும் தானாக அவள் மனம் அபியுடன் ஒப்பீடு செய்கிறது. எவ்வளவுதான் மறக்க முயன்றாலும் முடியவில்லை.
இப்படியே அவள் நினைத்துக்கொண்டிருக்க அதற்குள் சிவா குளித்து முடித்து வந்திருந்தான்.“உமையா!” என அழைத்தான், உயிரில் கலந்தவளை. சட்டெனத் திரும்பினாள்.“போய் குளிமா! குளிச்சிட்டு இங்கே வா! ஹான்… உனக்காக நைட் டிரஸ் இன்னைக்கு வாங்கினோமே, அதை போட்டுக்க,” என அவனே எடுத்து நீட்ட, கஷ்டப்பட்டு எச்சிலை விழுங்கிக்கொண்டு உடையை வாங்கிக்கொண்டு குளிக்கச் சென்றாள். அந்த டிரஸ் நைட்டி… அவள் வெறுக்கும் உடைகளில் முதலில் இருப்பது அதுதான்.குளியலறை கதவைச் சாத்தியதும் கண்களில் நீர் துக்கத்துடன் மின்னியது. அடுத்த சிறிது நேரத்தில் குளித்து வந்தாள். ‘கடவுளே இந்த உயிரை எடுத்துவிடு!’ என்று கோரிக்கை வைத்துக்கொண்டே வந்தாள் உமையாள்.
மீனா – அபியின் உரையாடல்‘கடவுளே, எப்போதுதான் என் உயிரையே அவர் மேல் வைத்திருக்கிறேன் என்பதை என்னோட அபிக்கு நீ உணர்த்துவாய்?’ என்று படுக்கையில் சுருண்டு விழுந்து, தன் டைரியில் இருக்கும் குரூப் போட்டோவை எடுத்து அவனை வருடிப் பார்த்தாள் மீனா.நாயைவிட கேவலமாக அவன் பின்னால் சுற்றி இருக்கிறாள். அது சிவா, திவ்யா, கணேஷ், பிரகாஷ், வானதி என அனைவருக்கும் தெரியும்.
மீனா அவனை எவ்வளவுதான் வலிய வந்து நின்றாலும், அவளின் பணம், அழகு, அந்தஸ்து எதுவும் அபிக்குப் பிடிக்கவில்லை. மீனா என்றால் மூக்கைச் சுளிப்பான். அவளின் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில்தான் முடிந்தது. அசால்ட்டாக அவளைப் புறந்தள்ளிவிட்டுத் தன் காதலியைப் பார்க்கச் சென்றுவிடுவான் அபினந்தன்.மீனா கிட்டத்தட்ட அவனைப் பார்த்ததிலிருந்து, அபியின் எண்ணை அழைத்தாள். இப்போது கம்பெனியின் M.D என்ற முறையில். மீனாவைப் பார்க்கக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அபி உடனே ஆன்சைட் ஒத்துக்கொண்டு சென்றுவிட்டான்.“ஹலோ!”“மேடம்! குட் ஈவ்னிங்,” என்றான் வேண்டா வெறுப்பாக.“ம்ம்… இன்னும் ஒன்றரை மாசத்தில் உங்க ஆன்சைட் முடிவுக்கு வருது,” என ஆவலுடன் அவனைப் பார்க்கும் சந்தோஷத்தில் வார்த்தைகளைக் கொட்டினாள்.“எஸ் மேம், அதுகூடவே கம்பெனியில் நீங்க இப்போ ஒர்க் பண்ணிட்டு இருக்கிற இந்த கான்ட்ராக்ட் ஃபினிஷ் ஆகுது. இனி நான் கட்டாயம் அங்கே வேலை செய்யும் அவசியம் இல்லை. ஒன்ஸ் அகைன் தேங்க்ஸ் மேடம். உங்களுக்கு இப்போ ப்ராஜெக்ட்…” என அவன் ஆரம்பிக்க, “அபி!” என மீனாவின் குரல் தழுதழுத்தது.
“ப்ளீஸ்! ஆபீஸ் விஷயம் மட்டும் என்கிட்ட பேசுன்னு சொல்லி இருக்கேன். மற்றபடி நமக்குள் ஒண்ணும் இல்லை, புரியுதா! இன்னொரு முக்கியமான விஷயம். உன்கூட பி.ஜி. ஜாயின் பண்ணி படிக்கிறதுக்கு முன்னாடியே நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன்.
ஸ்டில் இப்போ நாங்க எங்க வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்குப் போகப்போறோம்,” என அபி சொல்ல, “பொய் சொல்லாத! என்னை அவாய்ட் பண்ண இன்னும் எவ்வளவு…” என அவள் அழ, “மீனா! நான் சொல்றதைக் கேளு! இது உண்மை, உன்கிட்ட இதைப்பத்தி நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன்?”“அப்படியா? அப்போ ஏன் இந்த விஷயம் உன்னோட உயிர் நட்பு சிவா கிட்ட சொல்லல?” என மீனா கேட்க, அபிக்கு நெஞ்சில் உரைத்தது. அவன் பதிலேதும் பேசவில்லை.
தொடரும்.