Episode -2
விதி செய்த சதிமணமேடையில் உமையாளைப் பார்த்ததும் சிவா வேகமாகக் கிளம்பினான். ஆனால், “உட்காரு, எழக் கூடாது” என்று மூர்த்தி தன் கண்களால் சைகை செய்து, வாய்மொழியாகவும் கூறினார். உமையாளோ அங்கிருந்தவர்களைப் பார்க்கக் கூட திராணியில்லாமல் தலை குனிந்தபடியே சிவாவின் அருகில் அமர்ந்தாள்.கோபத்துடன் “அப்பா! அம்மா!” என்று சிவா அழைத்தான்.“
இது என்னோட விருப்பம். நீ அவள் கழுத்தில் தாலி கட்டு. உன்னோட விருப்பத்துக்கு கூட நான் மதிப்பு கொடுக்கிறேன். இப்போவே கிளம்பிப் போயிடு. போகும்போது எனக்குக் கொல்லி வச்சிட்டுப் போ!” என்று மூர்த்தி சொல்லி நின்றார்.உமையாள் நடுங்கிக்கொண்டே அமர்ந்திருக்க, கெட்டி மேள சத்தம் கேட்க அவள் கழுத்தில் தாலி ஏறியது. நெருப்பிலிருந்து எடுத்த இரும்புக் கம்பி போல் சிவா கனன்று கொண்டிருந்தான்.குருக்கள், “பொண்ணுக்கு குங்குமம் வையுங்க,” என்றார்.அவளின் கையை அழுத்திப் பிடித்து நெற்றியில் வலிக்கும்படி குங்குமம் வைத்தவன், அந்தப் பிஞ்சு விரல்கள் உடையும் அளவுக்கு அவள் கைகளைப் பற்றிக்கொண்டு அக்னியை வலம் வந்தான். சிவா அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இருவரையும் மறுவீடு அழைத்துச் சென்று பால், பழம் கொடுத்துப் பெண்ணை மாப்பிள்ளை வீட்டில் விட்டுச் சென்றார்கள். கல்யாணத்தில் மணப்பெண் மாறியதால், மாப்பிள்ளை வீட்டில் இருந்த உறவினர்கள் அனைவரும் தொந்தரவு கொடுக்காமல் கிளம்பி விட்டார்கள்.
மூர்த்தியின் அக்கா சுதா, உமையாளை அலங்காரம் செய்து, சடங்கு சம்பிரதாயங்கள் செய்து, சாமி கும்பிட்டு விட்டு, இந்த நிலையில் சாந்தி முகூர்த்தம் வேண்டாம் என்று முடிவு செய்து உமையாளைத் தன்னுடன் தூங்க அழைத்துச் சென்றார்.கண்ணைக் குத்தினாலும் தூக்கம் வரவில்லை உமையாளுக்கு. அதையும் மீறி அவள் கண்ணை மூடியபோது, அவள் அண்ணன் தரணி ஒரு பெரிய கார் விபத்தில் சிக்கியதும், அவனை காப்பாற்றி கூடவே இருந்து ரத்தம் கொடுத்துக் காப்பாற்றியதும் நினைவுக்கு வந்தது. விசாரித்தபோது, சிவாவின் அம்மா சித்ராவின் உறவுக்காரப் பையன் எனத் தெரிய வந்தது. சந்திரன் சிவாவுக்கு நூறு கோடி முறை நன்றி சொல்லியிருப்பார்.இது இப்படியே இருக்க, சித்ராவின் அண்ணன்தான் அந்த ஊரில் பெரிய தலக்கட்டு. வட்டி தொழில் மற்றும் பெரிய பெரிய விவகாரங்களில் ஈடுபட்டு அந்த ஊரையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அங்கே சந்திரனும் உமையாள் படிப்புக்காகப் பணம் வாங்கியிருந்தார்.
உறவுக்காரர் என்று கூடப் பார்க்காமல் அனைவரின் முன்பும் சிவாவின் மாமா ராசு அவமானப்படுத்தி அனுப்பினார். பூர்வீகச் சொத்தில் பங்கு கேட்க வந்த சிவாவையும் சண்டை போட்டுத் துரத்தினார். சிவா வழக்கறிஞரைப் பார்த்து அனைத்துக்கும் சேர்த்து ராசுவிடம் நஷ்டஈடு வாங்கிக்கொண்டான்.அதேபோல், சந்திரனுக்கும் பண உதவி செய்தார். ராசு அப்போதும் விடாமல் தன் பெண்ணைக் கட்டிக்கொடுத்து சொத்தை மீண்டும் வளைக்க நினைக்க, சிவா முடியாது எனச் சொல்லிவிட்டான். அங்கேதான் சந்திரன் வந்து பேச வந்தான். ராசு சிவாவிடம், “நீ எப்படி கல்யாணம் செய்கிறாய் எனப் பார்க்கிறேன் டா!” என மிரட்டிவிட்டுச் செல்ல, அங்கே சந்திரன் தானாக முன்வந்து தன் முதல் பெண் இமையாளைக் கட்டிக்கேட்க, சித்ராவுக்கு மிகவும் சந்தோஷமாகிப் போனது. சிவா எதுவும் பேசாமல் இருக்க, அந்த நொடியே பெண்ணின் படத்தைப் பார்த்து சம்மதம் சொல்லி நிச்சயம் செய்துவிட்டார்கள். அவன் இமையாள் படத்தைப் பார்க்கப் பிடித்து இருந்ததால் எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டான்.
இங்கே சிவா அலங்கரிக்கப்பட்ட முதலிரவு அறையில், இந்த ஒருநாள் கூத்து ஆரம்பமான பிள்ளையார் சுழியை விட்டத்தைப் பார்த்துத் தேடிக்கொண்டிருந்தான். உமையாள் மீது வெறுப்பும் கோபமும் அதிகமானது.விடியலுக்காகக் காத்திருந்தான். இனி அவளைக் கஷ்டப்படுத்த வேண்டும். அவ்வளவே!ஆனால் இங்கே இமையாளுக்கு இத்தனை பிரச்சனை தன்னால் நடக்கிறது என்று துளிகூடக் கவலை இல்லை. ஏன் என்றால் NRI மாப்பிள்ளையை கட்டிக்கொண்டு பாரினில் செட்டில் ஆக வேண்டும் என்பதுதான் அவளுடைய கனவு. அதனால்தான் வழியில்லாமல் இப்போதைக்கு ஒத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.
இப்போது சிவாவை உமையாள் கட்டிக்கொண்டாள் என்று நிம்மதியாக உறக்கத்தைத் தொடர்ந்தாள்.இனி சிவா மற்றும் உமையாள் வாழ்க்கை எப்படி இருக்கும்? உமையாளின் எதிர்காலம் என்னவாகும்?