Episode-17
சிவா அவசர அவசரமாக வீட்டுக்குள் நுழைந்தவன் அரக்கப் பரக்க தயாராகினான். “இன்னும் என்ன பண்றா? உமையாஆஆ!” எனக் கத்திக்கொண்டே கை சட்டைக்கு பட்டன் போட்டுக்கொண்டு திரும்பினான். இதோ வந்துவிட்டாள்.“என்னங்க நான் ரெடி!” என ஒற்றை ப்ளீட்ஸ்சை சரி செய்துகொண்டே அவன் முன் வந்து நின்றாள் அவனின் பாதி! உண்மைதானே? (சிவனின் பாதி உமையாள்). வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் இமைக்க மறந்தான்.
“என்னங்க? என்னாச்சு?” எனக் கேட்டுக்கொண்டே வந்தவள், “இந்த சட்டை நல்லால்லை! வேற போட்டுக்கோங்க. உங்களுக்காக எடுத்து வச்சிருக்கேன்,” என கிரே ஷர்ட்டும் அதற்கு பிளாக் பேண்டும் எடுத்து அவனிடம் நீட்டினாள்.“நான் எவ்வளவு கருப்பா இருக்கேன். இது எனக்கு செட் ஆகாது உமையா! இதுலயாவது நான் பார்க்கிற மாதிரி இருப்பேன். வேணாம்டி,” என்றான் விடாப்பிடியாக.“யாரு சொன்னது நீங்க அழகில்லை, கருப்புன்னு?” என மூக்கு புடைத்தது அவளுக்கு.“அப்படியா? என்னை பாரு, என்னோட முகத்தில் தழும்பிருக்கு. நான் அவ்வளவு கருப்பு. உன் கையை கொடு,” என அருகில் அவளின் கையோடு கை ஜோடி சேர்த்தான் சிவா.“ஐயோ, அப்படி எல்லாம் இல்லை. முதன் முதலில் கருவறைக்குள் இருக்கும் குழந்தை இந்த இருட்டான உலகத்தைத்தான் முதலில் பார்க்கும். உலகத்திலேயே பாதுகாப்பான ஒரு இடம் கருவறைதான். அது கோவிலானாலும் சரி, அம்மாவானாலும் சரி, அந்த இடத்தில் கருப்புதான் ஆட்சி செய்யுது. சோ, நீங்க திராவிட நிறம், இப்படி பேசாதீங்க,” என்றாள் முறைப்புடன்.“அடேங்கப்பா, இதுக்கு இத்தனை எக்ஸ்பிளனேஷனா? இருக்கட்டும் இருக்கட்டும். இப்போ நான் என்ன பண்ணனும் மேடம்?” என்றான் சிவா.“அது!” என்றவள், “இந்த ஷர்ட் அண்ட் இந்த பாட்டம் போட்டுட்டு வாங்க,” என நீட்டினாள்.
அவன் சொன்னது போலவே வாங்கிக் கொண்டவன், நேராகப் படுக்கையறை பக்கம் சென்றான். தன்னையே மிகவும் ரசிக்கப்படும் அந்த உடையைப் போட்டான். அந்தக் காலரை முகர்ந்து பார்க்க, அவளின் வாசனை அதில் வீசியது.
அவளின் கை பட்டாலே… ஒரு ராஜ போதை. காமம் என ஒரு வார்த்தையில் அடக்கிவிட முடியாது. அதையும் தாண்டி. தன்னைத்தானே ரசிப்பது இயல்பு, ஆனால் ரசிக்கப்படுவது? யார் அந்த எதிரில் இருக்கும் நபர் என்பதைப் பொறுத்து அமையும். ‘ரசித்தல்’ என்ற இடத்தில் ‘காதல்’ என்னும் வார்த்தையைச் சேர்த்தால்? அது அவளின் பார்வையில், ‘ஐயோ!’ என உதட்டைக் கடித்து கண்களை மூடி ஆனந்த இன்பத்தில் லயத்துப் போனான். காதல்! அவள் தன்னை ரசித்து காதலித்திருக்கிறாள். அப்படி தன்னிடம் என்ன இருக்கிறது? எனப் பார்த்தான்.வெளியில் இருந்து மாங்குயிலின் குரல், “என்னங்க, லேட் ஆகலையா?” எனச் சொல்லிக்கொண்டே அவள் காத்திருந்தாள். மீண்டும் தன்னை ஒருமுறை ரசித்துக்கொண்டவன் வெளியில் வந்தான்.
ஏனோ சிவனுக்கு வெட்கம் வந்தது உமையவள் பார்வையில். அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வந்தவன், “ம்ம், போகலாம்,” என்றான்.உமையாள் அவனை ஆழ நோக்கியவள், “எப்படி? என்னோட செலக்சன் எப்பவும் சூப்பராதான் இருக்கும். யாழினினா கொக்கா?” எனச் சொல்லிக்கொண்டாள்.“அது ஆபீஸில் தான் யாழினி! அந்தப் பேர் அவ்வளவு யுனிக்கா இல்ல. எப்பவும் உமையாள் தான் கேட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கு,” என்றவன் முன்னால் நடந்தான். அவளும் சிரித்துக் கொண்டே அவனுடன் சேர்ந்தவள், “என்னைய யாரும் உமையா அப்டின்னு கூப்பிட்டதே இல்ல தெரியுமா?” என்றாள்.“அப்படியே இருக்கட்டுமே, அது எனக்கு மட்டும் ஸ்பெஷல்!” என்றான் சிவா. “ஓகே,” என்றவள் அவனுடன் காரில் ஏறிக் கொண்டாள்.“உமையா!!”“ம்ம் சொல்லுங்க!”“நானும் டெய்லி கேட்கிறேன். இது வரைக்கும் நீ என்கிட்ட சொல்லவே இல்லை.
எப்போ சொல்லப் போற?”“என்ன சொல்லணும்?”“பாத்தியா பாத்தியா! இந்தக் காமெடிதான் எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு,” என்றவன், “என்னை எப்படி லவ் பண்ண? உனக்கு எப்படி என்னை பிடிச்சது? முதன்முதல்ல எங்கே பார்த்த?” என எப்பொழுதும் கேட்கும் கேள்வியை மீண்டும் கேட்டான்.அவ்வளவுதான், வழக்கம் போல அடிவயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்தது. ஒரு சில நாட்களாக மறந்துவிட்டான் போல.
இல்லை உமையாளுக்கு நைட் ஷிஃப்ட். அதனால் தொந்தரவு செய்யவில்லை. ஆனால் இப்போது மீண்டும் ஆரம்பித்தது அந்தக் கேள்விகள். உள்ளுக்குள் பூகம்பம் ஏற்பட்டது.அதை மறைக்க வெளியில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். “உமையாள்!!” என மீண்டும் அழைத்தான் சிவா.“அது வந்து, நானா சொல்றேனே! அதுவரைக்கும் காத்திருக்க மாட்டேளா?” எனக் கேட்டாள்.“ஓகே ஓகே மாமி, இனி நான் இதைப்பத்தி பேசவே மாட்டேன்,” என்றான். ஆனால் அது உண்மை இல்லையே, எப்படியும் இதைப்பற்றிக் கேட்டுவிடுவான். ‘தான் காதலிக்கப்பட்டிருக்கிறோம். ஒரு தங்கப் பதுமையின் மனதில் தான்.’ அந்தக் கியூரியாசிட்டிதான் வேறொன்றும் இல்லை.உமையாள் மனதில் புயலே வீசியது. ‘எப்போ சொல்லப்போகிறோம்.
சொன்னால் இந்த இயல்பில் தன்னுடன் பேசுவாரா?’ என உள்ளுக்குள் தோன்ற, ‘இல்லை, அப்படி இருக்காது. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும், சொல்லிப்போம்,’ எனத் தள்ளிப் போட்டாள்.பார்ட்டியில் ஒரு புதிய சந்திப்புஅவர்கள் பார்ட்டிக்கு வந்து சேர்ந்தார்கள். உமையாள் அப்படியே அமர்ந்திருக்க, சிவா மறுபக்கம் வந்து கதவைத் திறந்துவிட்டான். “மேடம், என்ன யோசனையில் இருக்கீங்க?” என சிவா கேட்க, “அது ஒண்ணும் இல்லை, சும்மா வாங்க போவோம்,” என அவனுடன் சென்றாள். அனைவரின் பார்வையிலும் சிவா மற்றும் உமையாள் ரசனையுடன் தெரிந்தார்கள்.சிவா சுற்றிலும் தேடினான். “யாரை தேடுறீங்க?” என உமையாள் கேட்க, “அது என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் யாரையும் ஆளையே காணோம், அதான்,” என்றான். அதற்குள் மீனா வந்துவிட்டாள். “ஹே சிவா! இதுதான் சார் வர்ற நேரமா?” எனக் கேட்டுக்கொண்டே மிரட்டினாள்.
உமையாள் திரும்பிப் பார்க்க, மீனா அவளையும் சிவாவையும் பார்த்துக்கொண்டே நின்றாள். “ஹே எங்கேடி நம்ம படையைக் காணோம்?” என அவளைப் பார்த்தான். “அவங்க எப்பவோ கிளம்பிட்டாங்க,” என மீனாவின் பார்வை உமையாள் மீது படிய, “ஹே மீனு, இதுதான் என்னோட பொண்டாட்டி உமையாள்,” என்றவன் கர்வத்துடன் அவளை தோளோடு கை போட்ட படி நின்றான்.உமையாள் சிரித்தபடி “ஹாய் அக்கா!” என கைகளை நீட்டினாள்.
மீனா சிரித்துக்கொண்டே, “ஹாய், நீங்க மீனா சொல்லுங்க! உமையா அக்கா சொன்னால் எனக்கு வயசு அதிகமான ஃபீல் இருக்கும். உன் புருஷனுக்கும் எனக்கும் ஒரே வயசுதான். அது…” என உமையாள் சிவாவைப் பார்க்க, “சரி கூப்பிடு, மீனுதான் ஆசைப்பட்டு கேட்கிறாளே,” என்றான்.“ஓ, இந்தச் சிடுமூஞ்சி சின்னப்ப தாஸ் அதிகமா பேசுற ரகசியம் உமையாள்தான் போலயே!” என்றாள் அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டே. “ஹே போதும் போதும், கிண்டல் பண்ணாதே,” என அவர்கள் பேசிக்கொண்டிருக்கவே ராம் வந்து சேர்ந்தான்.
சிவாவைப் பார்த்ததும் ராமுக்கு எரிச்சலாக இருந்தது. ‘யார் இந்தப் பியூட்டி குயின்?’ என முணுமுணுத்தபடி ராம் உமையாளை பார்வையில் மேய, “ராம், அது இது வந்து சிவா மனைவி பேரு உமையாள். அண்ட் இவர் தான் என்னோட கணவர்,” என மீனா அறிமுகம் செய்து வைக்க, “ஹாய் அண்ணா! எப்படி இருக்கீங்க?” என உரிமையுடன் அழைத்துவிட்டாள் உமையாள். ‘அண்ணா’ என்ற வார்த்தையில் கடுப்பான ராம், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் “ஹாய்மா!” என ஒற்றை வார்த்தையுடன் முடித்துக்கொண்டான். சிவா மற்றும் மீனா இருவரும் கொஞ்சம் எட்டச் சென்று பேச, மூக்கு வியர்த்தது ராமுக்கு. உடனே வேகமாக மனைவியின் அருகில் சென்று ஒட்டிக்கொண்டான்.உமையாள் அந்த இடத்தை சுற்றி வேடிக்கை பார்த்துக்கொண்டே சிவா அருகில் போய் நின்றாள்.
ராம் மீனாவை அணைத்தபடி, “அவங்க சாப்பிட போகட்டுமே! சிவா அண்ட் உமையாள், போங்க போய் எனி ட்ரிங்க்ஸ் அண்ட் ஃபுட் ட்ரை பண்ணுங்க,” என அனுப்பி வைத்தான். “இருங்க நான் கூட்டி போறேன்,” என மீனா பிரிய… ராம் அப்பட்டமாக அதே இடத்தில் முறைத்தான்.
சிவா அவர்களை உற்றுப் பார்க்க, உடனே உமையாள் உதட்டுக்குள் சிரித்துக்கொண்டு தன் கணவனை தனியாக அழைத்து வந்தாள்.சிவா பார்வை மீனாவின் மீது இருக்க, “என்னங்க, என்ன அங்கே பார்வை? அவங்க ரெண்டு பேரும் புதுசா கல்யாணம் ஆனவங்க போல, அதான். நம்ம டிஸ்டர்ப் பண்ணக் கூடாது,” என அவனுக்கு உணவை எடுத்து வைத்தாள்.“அப்போ நம்ம?” என சிவா கேட்க…உமையாள்…?
தொடரும்.