பெண்மையை வென்றவன் புயலானவன்

by Pradhanya kuzhali
238 views

Epi -6 

அன்புவின் கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு உள்ளே நுழைந்தான் தேவ்.

இடதுபுறமாகத் திரும்பி ஒவ்வொரு சன்னதிகளாக வழிபட்டு வந்தார்கள்.

ஆதிசேஷனின் சன்னதியில் வேண்டிக்கொண்டு, கயிறு கட்டிக்கொண்டிருந்தார்கள். அன்பு அவனை ஏறிட்டுப் பார்க்க… “என்ன, என்னை பார்க்குற?” எனத் தேவ் புருவம் சுருக்கி வினவினான்.

“அம்மாச்சி உங்களைக் கயிறு கட்டிக்கச் சொன்னாங்க…”

“இந்தக் கயிற்றுல என்ன இருக்கு?” எனத் தேவ் ஏளனமாகப் பேச வர, சட்டென அவனது வாயை மூடினாள் அன்பு!

கோவிலுக்கு மக்கள் அனைவரும் வந்து போய்க்கொண்டிருக்க, அவர்களுக்கு நடுவில் அவனது வாயை அழுத்திப் பிடித்திருந்தாள் அன்பு. தேவ் அதிர்ந்த முகத்துடன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான். “அய்யயோ!” என மனதுக்குள் நினைத்தவள், வேகமாய் அவன் முகத்திலிருந்து கையை எடுத்தாள்.

தேவ் பேச வருவதற்குள் அன்பு முந்திக்கொண்டாள். “இன்னைக்கு நம்ம இங்கே இருக்கக் காரணமே கடவுள்தான். நாம விருப்பப்பட்டு கோவிலுக்கு வர்றது இல்லை; கடவுள் விரும்பணும்! கடவுள் நம்மைப் பார்க்க நினைச்சா மட்டும்தான் நாம இங்கே வர முடியும். என்னோட கால் சுளுக்கி இருந்தும் நான் இங்கே வந்திருக்கேன்னா, அதுக்கு அவரோட உத்தரவுதான் காரணம். இது நமக்கும் மேலான சக்தி… அதோட நிறுத்திப்போம். நீங்க வெளியே என்ன வேணாலும் பேசிக்கோங்க, ஆனா இங்கே எதையும் பேச வேணாம்!” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்தாள்.

போகும் அவளைப் புருவம் உயர்த்திப் பார்த்தவன், ஒரு இடத்தில் அமர்ந்துகொண்டான். அன்புவின் மனதில் ஒரே ஒரு விஷயம்தான் ஓடிக்கொண்டிருந்தது. ‘இதற்குப் பிறகு என்னோட வாழ்க்கை எப்படி இருக்கும்? நீ… உன் கையில்தான் சாமி என்னோட வாழ்க்கை இருக்கு…’ என வேண்டியபடி இரண்டு மணி நேரம் சாமி கும்பிட்டாள்.

அவள் அர்த்தநாரீஸ்வரர் சன்னதிக்குள் நுழைந்த நேரத்தில் தான் தேவ்விற்கு அந்த ஞாபகம் வந்தது. சாமிக்குக் கொடுக்கச் சொல்லி ராசாத்தி கொடுத்த பணம்! அவள் எங்கே இருக்கிறாள் எனத் தேடிக்கொண்டு கருவறைப் பக்கம் வந்தான். சிவனும் சக்தியும் சரிபாதியாகக் காட்சி கொடுத்துக்கொண்டிருக்க, அங்கிருந்த ஒருவர், “ஏன் சாமி, இங்கே கல்யாணம் ஆனவங்க அதிகமா வர்றாங்க? இதுக்கு ஏதாவது விசேஷம் இருக்கா?” என்று கேட்டார்.

அங்கிருந்த பெரியவர் சிரித்தபடி, “ஆணும் பெண்ணும் சமம் என்பதை உணர்த்துவதுதான் இந்தக் கோவிலின் சிறப்பு. சிவன் பாதி, சக்தி பாதி. அதாவது, திருமணமான ஆணும் பெண்ணும் வாழ்க்கைப் பயணத்தில் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாகவும், ஆறுதலாகவும், அன்பாகவும் இருக்கணும். ஆற்றில் போகும் படகு போல, இருவரும் சமமாக வாழ்க்கை என்னும் கடலில் பயணிக்க வேண்டும் என்பதை உணர்த்தத்தான் இந்தத் தலம். அதனால்தான் இங்கே புதுமணத் தம்பதிகள் வர்றாங்க. திருமண பந்தத்தில் சுக துக்கங்களை ஒண்ணாச் சேர்ந்து பகிர்ந்துக்கணும்,” என்றார்.

அதே நேரம் கருவறையில் தீபாராதனை ஆரம்பிக்க, அனைவரும் ஆழ்ந்த நிலையில் கடவுளைத் தரிசித்தார்கள். அன்பு ஒரு நொடி தன் கணவனைப் பார்த்தவள், அப்படியே பார்வையை அர்த்தநாரீஸ்வரர் பக்கம் திருப்பிக் கொண்டு மனமுருக வேண்டினாள். நெஞ்சில் அழுத்தி கொண்டிருந்த பாரம் இறங்கியது போன்றதொரு உணர்வு! தேவ் தாசின் நெற்றியில் திருநீற்றைப் பூசிவிட்டு நகர்ந்தார் குருக்கள்.

ராசாத்தி சொன்னபடியே, உண்டியலில் காணிக்கையைப் போட்டுவிட்டு வந்தான் தேவ்.

செங்கோட்டு வேட்டுவன் முருகன் சந்நிதானத்தின் வெளியே இருக்கும் மண்டபத்தில் அமர்ந்தாள் அன்பு. அவளுக்கு எதிரில் தேவ் வந்து அமர்ந்துகொண்டான். அந்த நேரம் ராசாத்தியிடமிருந்து அழைப்பு வந்தது.

“ஹலோ ஆத்தா, சொல்லுங்க?” எனத் தேவ் பதிலளிக்க…

“விஜய்யும் உன்ற அண்ணியும் கோவிலுக்கு வந்தாங்களா கண்ணு?” என வினவினார் ராசாத்தி.

“ஹான் ஆத்தா, நாங்க வரும்போதுதான் அவங்க சாமி கும்பிட்டு மலை இறங்கினாங்க,” என்றான் தேவ்.

என்ன சொல்கிறான் இவன்? அப்போ விஜய் தாசும், சுகாசினியும் கோவிலுக்கு வந்தார்களா? அவர்கள் இந்நேரம் சுகாசினி வீட்டுக்கே சென்றிருப்பார்கள். ஒருவேளை அன்பரசி சொன்னது போல இருக்குமோ? கடவுள் அவர்களைப் பார்க்க விரும்பவில்லையோ என்னவோ? ‘உண்மையான பக்தர்களைச் சோதிக்கும் கடவுள் கைவிட மாட்டார் என்பதும், கெட்டவர்களுக்கு அள்ளிக் கொடுத்துப் பறித்து விடுவார்’ என்பதும் இதுதானோ?

“சரி கண்ணு… தரிசனம் முடிஞ்சதா?”

“நல்லபடியா முடிஞ்சது. இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பிடுவோம்,” என்று கூறிப் போனை வைத்தவன் நிமிர்ந்து பார்க்க, எதிரில் அவள் இல்லை! தேவின் புருவம் சுருங்கியது. “அய்யோ, எங்கே போனா இந்த இம்சை?” என எழுந்தவன், அணைத்து இடங்களிலும் தேடினான். ‘இவள் பெயர் என்ன?’ என்று யோசித்தவனுக்கு, ராசாத்தி அவளை ‘அன்பு’ என அழைத்தது நினைவுக்கு வந்தது.

“அன்பு… ஹான் அன்பு!” எனத் தனக்குள் சொல்லிக்கொண்டவன், “அன்பு!” எனச் சத்தமாக அழைத்துக்கொண்டே தேடினான். “எங்கே போனாள்? இவள் அன்பு இல்ல, அடங்காதவ! வாயடிக்கிறா பாரு காது நீளத்துக்கு…” எனத் திட்டிக்கொண்டே திரும்ப, அங்கே நின்றிருந்தாள் அன்பரசி — கையில் ஒரு பச்சை கயிற்றுடன்!

அவளை வேக மூச்சுடன் பார்த்தவன், அங்கும் இங்கும் நடந்தபடி, “அறிவு இருக்கா இல்லையா உனக்கு? மடசாம்பிராணி! சொல்லிட்டுப் போகணும்னு தெரியாதா? இம்சை… இம்சை!” எனத் திட்டினான். அன்பரசி எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க, அவளை முறைத்தபடி முன்னால் நடந்தான் தேவ். அவள் மெல்லத் தொடர்ந்து வந்தாள். அடிவாரம் செல்லும் பேருந்தில் இருவரும் ஏறிக்கொண்டனர்.

வீடு வந்து சேர்ந்ததும் ராசாத்தி செய்திருந்த சைவ உணவைச் சேர்ந்து உண்டார்கள். இரவு, தேவ் பின்புறம் இருந்த கட்டிலில் படுத்திருக்க, அவன் பார்வை வானத்து நட்சத்திரங்கள் மீது படிந்திருந்தது. ராசாத்தியும் அன்புவும் கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்த சிரிப்புச் சத்தம் வெகுநேரம் கேட்டது.

மறுநாள் காலை… அழகு மயிலைத் தூக்கிக் கொண்டு மலை ஏறியதில் தேவின் கைகளில் ரத்தக் கட்டு ஏற்பட்டிருந்தது. ப்பா என்னமா கணம் கணக்குறா? இவள் bun butter இல்ல.. ரெண்டு சிப்பம் அரிசி மூட்டை.. என தனக்குள் சொல்லி கொண்டான் தேவ். 

வீட்டில் கறிக்குழம்பு வாசம் மணக்க, அன்பரசி சமையலில் உதவி செய்தாள். விருந்து பிரமாதமாக முடிந்தது. தேவ், “போதும் போதும்” என்று சொல்லியும் ராசாத்தி அவனுக்கு ஊட்டியே விட்டார்.

கிளம்பும் நேரம் வந்தது. ராசாத்தி அன்புவிடம் ஒரு தைலத்தைக் கொடுத்து, “கண்ணு, இதைக்காலுக்குப் போட்டுத் தேய்ச்சுக்கோ, சீக்கிரம் சரியாகிடும்,” என்றார்.

“சரிங்க அம்மாச்சி,” என அவரைக் கட்டிக்கொண்டவள், கண்ணீருடன் விடைபெற்றாள். தேவ் ஆத்தாவின் காலில் விழுந்தான். “சின்ன தாசு… இந்த குத்துச்சண்டையை விட்டுடு கண்ணு. ஆத்தாவுக்காகச் செய்ய மாட்டியா?” எனக் கேட்க… “கண்டிப்பா ஆத்தா, உங்களுக்காகச் செய்வேன்,” எனப் பொய் சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

பேருந்து நிறுத்தம் வந்தடைந்தனர். தேவ் பேருந்தில் ஏறிவிட்டுத் திரும்பிப் பார்க்க, அன்பரசி இன்னும் அதே இடத்தில் நின்றிருந்தாள். ஒரு பெருமூச்சுடன் கீழே இறங்கி அவளிடம் வந்தான். நேற்று மலையில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லை.

“என்னாச்சு உனக்கு? எதுக்கு இப்படி நிக்கிற? பஸ் கிளம்பிடும், வா போலாம்,” என அழைத்தான்.

அவள் தீவிரமாக யோசித்தபடி, தன் பர்ஸிலிருந்த பணத்தை எடுத்து நீட்டினாள்.

“எதுக்கு இது?”

“நீங்க என்னை நேத்து மலையில் இருந்து தூக்கிட்டு வந்ததுக்கு…” என்றாள் அன்பரசி.

தேவ் அவளை முறைத்தான். “இது ஆத்தா உனக்குக் கொடுத்த பணம் தானே?”

அவள் அமைதியாக இருக்க, தேவ் சட்டென அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டான். “அதுவும் சரிதான்… ரெண்டு மூட்டை அரிசியை மலை மேலே தூக்கிட்டுப் போயிருக்கேன், அதுக்கு 500 ரூபாய் கூலி பத்தாதுதான். இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்!” என்றான் கிண்டலாக.

அன்பரசியின் கண்களில் நீர் கோர்க்க, அதை மறைத்துக்கொண்டு வேறுபுறம் திரும்பினாள். “இப்போ எதுக்கு இங்கே நிக்கிறீங்க? நீங்க கிளம்புங்க…”

“நீ இல்லாம எப்படிப் போறது? வா…” என்றான் தேவ் இயல்பாக.

அவன் வார்த்தைகளில் சட்டென திரும்பியவள், “என்ன சொன்னான் இவன்? இப்போ என்ன சொன்னான்?” என்பது போலப் பார்த்தாள்.

தவறாகச் சொல்லிவிட்டோமோ எனப் பதறிய தேவ், “டேய் தேவா, என்னடா சொல்லி வச்சிருக்க?” எனத் தனக்குள் நினைத்தபடி, “நீ நினைக்கிற மாதிரி எதுவுமில்லை… வா போலாம்,” என்றான்.

“அதுதானே பார்த்தேன்…” என நினைத்த அன்பரசி, “வேண்டாம், நான் உங்க கூட வரல…” என்று சொல்ல வர…

“எனக்கு எல்லாமே தெரியும்!” என்று பட்டெனக் கூறிவிட்டான் தேவ்.

அன்பரசி அதிர்ந்து போனாள்.

– தொடரும்.

You may also like

Leave a Comment