பெண்மையை வென்றவன் புயலானவன்..

by Pradhanya kuzhali
441 views

Epi -16

“என்னை பத்தி எல்லாத்தையும் சொல்லிட்டியா?” என்று பதட்டத்துடன் கேட்டான் தேவ்.

ஆத்மன் புன்னகையுடன், “உன்னோட wife! உன் பாடு.. நான் எதுக்கு உன்னை பத்தி சொல்ல போறேன்? பெரிய இவன்… உனக்கு ரெண்டு கேட்குதா? அனுபவி ராஜா…”

“ப்ச்… ஆத்மா! நீயும் ஏன்டா இப்படி பேசுற? நீ கூட என்னை புரிஞ்சுக்கலையா?” என விரக்தியின் விளிம்பில் பேசினான் தேவ்.

“ஓகே, உன் பொண்டாட்டி வருவா; சமாளிச்சுக்கோ,” என்று விட்டு லம்போர்கினியில் கிளம்பி இருந்தான் ஆத்மன்.

இங்கே வீட்டுக்கு உற்சாகமாக வந்து சேர்ந்தான் விஜய். ‘எப்படியும் இந்நேரம் ஜெயிலில் கம்பி எண்ணிட்டு இருப்பா அந்த தேவ் பொண்டாட்டி. இது போதுமே அவங்க ரெண்டு பேரையும் வீட்டை விட்டு துரத்த! முதல்ல இந்த சந்தோஷமான விடயத்தை சுகாகிட்ட சொல்லணும்,’ என நினைத்துக்கொண்டே காரில் இருந்து இறங்கினான் விஜய்.

ஆம், முருகப்பா சில்க்ஸ் உரிமையாளர் சண்முகம் கூறிய விடயத்தை சிவதாசனிடம் விஜய் கூறவில்லை. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்தான்.

“அண்ணா, எவ்ளோ ஆச்சு?” என அன்பு கேட்க, “இல்ல வேணாம்மா, அவரு காசு கொடுத்திட்டார்,” என கூறிவிட்டு ஆட்டோவை திருப்பினார் ஓட்டுனர்.

விஜய் சட்டென திரும்பிப் பார்க்க, அன்பு வந்து கொண்டிருந்தாள். ஒன்றுமே புரியவில்லை அவனுக்கு. ‘இவள் எப்படி?’ என தீவிரமாக யோசித்தவன் முகம் சடுதியில் மாறிப்போக, அரக்கப்பரக்க வீட்டுக்குள் நுழைந்தான், “அப்பா!” என அழைத்துக்கொண்டு.

இந்தப்பக்கம் அன்பு விரக்தியான மனநிலையில் வீடு வந்து சேர்ந்தாள். அவள் செருப்பை விடும் சத்தம் கேட்டதும் சட்டென திரும்பிப் பார்த்தான் தேவ் தாஸ். அவனது கண்கள் கோபத்தில் மின்ன, புருவம் சுருக்கியபடி அவளைப் பார்த்தான்.

அவளோ வீட்டுக்குள் அப்பொழுதுதான் நுழைந்திருந்தாள்.

“அன்பு!!” என்றழைத்தான் உரத்த குரலில்.

“சொல்லுங்க,” என்று சுரத்தே இல்லாத குரலில் பார்த்தாள்.

அவளின் முன்னால் வந்தவன் போனை நீட்டி, “இது என்னன்னு தெரியுதா?” என கேட்டான்.

“இது என்ன?” என அன்பு திரும்பக் கேட்டாள். 

தலையை இறுக்கிப் பிடித்துக்கொண்டான்; கண்களில் கோபம் மின்னியது. அன்பு அவனை சோர்வுடன் பார்த்தாள்.

தேவ் பற்களை கடித்துக்கொண்டவன், “உனக்காகத்தான் வாங்கி வச்சிட்டு போனேன். ஏதாவது உனக்கு தேவைப்பட்டால் என்கிட்ட கேட்கணும் அப்படின்றதுக்காகத்தான் இந்த போனை வச்சிட்டு போனேன். ஏன் நீ எடுத்திட்டு போகல? அப்போ என்கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணவே இல்ல, அப்படித்தானே?”

“உங்களுக்கும் எனக்கும் நடுவில் என்ன இருக்கு எடுத்திட்டு போக?” என்றவளின் குரல் தழுதலுக்க, கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.

தேவ் அவளைக் கோபமாகப் பார்த்து, “நீதானே நான் கட்டின தாலிய கழட்டி வீசின?”

“ஹான், நான் தான் வீசினேன். உங்களைப் பத்தி எல்லாம் எனக்கு தெரிஞ்சு போச்சு,” என்றாள்.

தேவின் முகம் சடுதியில் பதட்டமாகிட, “என்ன தெரியும்? என்னை பத்தி என்ன தெரியும்? சொல்லுடி!” என்றான் கோபமாக.

“டியா? ஆமா, நான் டி தான்… உங்களுக்கு ஒரு ‘டி’ இருக்கிறது எனக்கு தெரிஞ்சு போச்சு. நீங்க இஷ்டமே இல்லாமதான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க அப்படின்னும் எனக்கு தெரிஞ்சு போச்சு. நீங்க ஒரு பொண்ணு கூட தொடர்பில் இருக்கீங்கன்னு கூட எனக்கு தெரிஞ்சு போச்சு,” என்று விசும்பிக்கொண்டே பேசினாள்.

தேவ் அதில் பதட்டமாகி, “ஹே! நீ நினைக்கிற மாதிரி எனக்கு எந்த பொண்ணு கூடவும் தொடர்பு இல்ல. சத்தியமா இதுதான் உண்மை…”

“இல்லையே! நேத்திக்கு நீங்க ஒரு பொண்ணுகூட ‘டி’ போட்டு பேசினதை நான் கேட்டேன். அப்பவே உங்களைப் பத்தி எல்லாமே தெரிஞ்சு போச்சு,” என உடைந்து முகத்தை மூடி அழுதாள் அன்பு.

‘அய்யயோ! எப்போ பேசினேன்? எனக்கு நியாபகமே இல்லையே?’ என தீவிரமாக யோசித்தான். ‘இரவு பார்வதியிடமிருந்து அழைப்பு வந்ததே? அதைச் சொல்றா போல,’ என தலையில் அடித்துக்கொண்டான்.

“தேவ்!” என வெளியில் குரல் கேட்க, அன்பு அழுதபடி கதவைப் பார்த்தாள்.

தேவ் அவளைப் பார்த்தவன், “ஹே இங்கே பாரு… அழாத, கண்ணைத் தொட. நம்ம பிரச்சனையை அப்புறம் பார்த்துக்கலாம்,” என கூற…

“நம்ம பிரச்சனையா? நமக்குள்ள என்ன இருக்கு பிரச்சனைக்கு? அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே? உங்களுக்கு எப்படா நான் வீட்டை விட்டு போவேன்னு தானே வெயிட் பண்றீங்க? கூடிய சீக்கிரத்தில் போயிடுவேன்,” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்க, வேகமாக அவளின் வாயைப் பொத்தினான் தேவ்.

“ஹாங்… விடுடா!” என அவள் அதிர்ச்சியுடன் பார்க்க, “வாயை மூடு இம்சை… சத்தம் வந்துது? தூக்கி மேலே வீசிடுவேன்!” என மிரட்டினான்.

“ஹா…” என அவள் அழ, “ஹே வாய மூடு! வாய் மேலே விரல் வை,” என மிரட்டினான் தேவ். சட்டென வாயை மூடிக்கொண்டாள்.

“சத்தம் போடுவியா இனி?” என அவன் கர்ஜனையுடன் கேட்க, ‘இல்லை’ என்பது போல மண்டையை ஆட்டினாள்.

“அதை வாயைத் திறந்த? அப்புறம் அட்டாளிதான்,” என்றான். அன்புவின் வாய் பசை போட்டு ஒட்டியது போல இருந்தது.

“தேவ் தாஸ்!” என சிவதாசனின் குரல் கேட்க, வேகமாக கதவைத் திறந்தான். அவனுக்கு பின்னால் அன்பு நின்றிருந்தாள்.

“என்ன சொல்லுங்க? என்ன வேணும்?” என அதட்டலுடன் கேட்டான் தேவ்.

“என்னாச்சுப்பா?” என சிவதாசனின் முகத்தில் அத்தனை பதட்டம் தெரிந்தது.

“என்ன கொஞ்சி கூப்பிடுறீங்க? நல்ல வேளை, இந்த திருட்டு சிறுக்கிய நான் பூ போட்டு வரவேற்று வீட்டுக்குள்ளார விடல. அப்படி மட்டும் நடந்திருந்தா கண்டிப்பா வீட்ல இருக்கிற எல்லாத்தையும் மொத்தமா திருடிட்டு போயிருப்பா! முதல்ல இந்த ரெண்டு திருட்டு ஜோடியையும் வீட்டில் இருந்து துரத்துங்க,” என சாந்தியின் குரல் ஒலித்தது.

“சாந்தி!” என கோபமாக சிவதாசன் கத்தினார். தேவ் தாஸ் அவரின் பேச்சைக் கண்டுகொள்ளாமல், “உங்களுக்கு என்ன வேணும்?” என கேட்டான்.

“என்னப்பா ஆச்சு? இப்போதான் விஜய் என்கிட்ட விடயத்தைச் சொன்னான்,” என்றவர் பார்வை அன்புவின் மீது தவிப்புடன் படிய, தேவ் நிதான பார்வையுடன், “அன்பு மேலே தப்பு இல்லன்னு போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லிட்டாங்க, அதனால் அவள் வெளியே வந்துட்டா! இனி உங்க கவுரவத்துக்கு எந்த களங்கமும் வராது. வேற எதுவும் கேட்கணுமா?” என்றான்.

சிவதாசன் உருக்கமாக, “நம்ம கடை இருக்கு; தேவையே இல்லாம மருமகள் எதுக்கு அங்கே வேலைக்கு போகணும்? அன்பு, நாளைல இருந்து நம்ம ஆபிசுக்கு வந்திடு மா!” என்றார்.

“ஹான்! திருடன் கையில கொத்துச் சாவியா?” என சாந்தி சத்தமாக கூற, அன்புவின் கண்களில் இருந்து நீர் கொட்டியது. அவள் உதடுகள் துடிக்க, “சத்தியமா நான் திருடல மாமா,” என்றாள் கண்ணீருடன்.

“சாந்தி, வாய மூடிட்டு போ!!” என சிவதாசன் கத்திட, விஜய் தனது சித்தியின் பக்கம் திரும்பி, “பிளீஸ் சித்தி, நீங்க உள்ளே போங்க,” என கூறியபடி அவன் சாந்தியின் பக்கம் சென்றான்.

“தேவ், நான்…” என சிவதாசன் ஆரம்பிக்க, “நீங்க எதுவும் சொல்ல வேணாம். எந்த பிரச்சனையும் இல்ல. கூடிய சீக்கிரத்தில் இதுக்கு யார் காரணம் அப்படின்னு நான் கண்டுபிடிக்கிறேன்,” என்றான்.

சிவதாசன் அதே இடத்தில் நிற்க, “நீங்க இங்கே நின்னு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க, போங்க…” என்றான் தேவ் திரும்பிக்கொண்டு.

“அன்பு அங்கே முருகப்பா சில்க்ஸ்க்கு வேலைக்கு போக வேணாமே?” என சிவதாசன் கூற…

“அவள் போக மாட்டாள். உங்களோட கவுரவத்துக்கு களங்கம் வராது, நீங்க போகலாம்,” என்று விட்டு கதவைச் சாத்தினான்.

“அப்போ உங்களுக்கு எல்லாமே தெரியுமா?” என அன்பு அழுதபடி கேட்டாள்.

தேவ் தாஸ் மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியபடி, “தெரியும், எல்லாமே தெரியும். எனக்கு சண்முகம் போன் பண்ணி சொன்னாப்டி,” என்றான்.

அன்புவின் கண்களில் இன்னும் நீர் கோர்த்துக்கொள்ள, அவள் திரும்பினாள்.

“ஹே நில்லு!!” என அவளைத் தடுத்து நிறுத்தினான். “சொல்லுங்க,” என அழுதாள்.

“ஆத்மன் வந்தாரா?” என கேட்டான் தேவ். கண்களைத் துடைத்தபடி அவனைப் பார்த்தவளுக்கு எல்லாம் புரிந்து போனது. அவளிடத்தில் மௌனம் இருக்க, தேவ் தீர்க்கமான பார்வையுடன், “உனக்கும் என்னை பிடிக்கல, எனக்கும் உன்னை யாருன்னே தெரியாது. கல்யாணம் பண்ணி வச்ச உடனே கட்டிப் பிரண்டு மூணு மாசத்துல உன்னை கர்ப்பமாக்க விரும்பறியா? இல்ல அதுதான் உனக்கு வேணுமா?” என கேட்டான். 

அன்பு அதிர்ச்சியுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். தேவ் தலையை கோதி விட்டபடி, “உண்மையை மட்டும் சொல்லு… அன்னிக்கு கல்யாணம் ஆன ராத்திரி உன் பக்கத்தில நான் வந்தா விட்டு இருப்பியா?” என கேட்டு விட்டான்.

வேகமாக இல்லை என்பதைப் போல தலையாட்டினாள். தேவ் ஒரு பெருமூச்சுடன் அவ்விடத்தை விட்டு நகர, “யார் அந்த ஆத்மன்?” என கேட்டாள்.

‘அய்யயோ!’ என மனதுக்குள் கருக்கென இருந்தது அவனுக்கு. “அது… நான் வேலை செய்யிற ஓனர்.”

“என்ன வேலை செய்யிறீங்க?” என அவன் முன்னால் வந்தாள். “அது நான்…” என தயங்கியபடி நின்றான் தேவ்.

“என்ன வேலை செய்றீங்க? அவர் பெரிய பணக்காரர் போல தெரிஞ்சது,” என்றாள் அன்பு.

“நான் என்ன வேலை செஞ்சா உனக்கென்ன? அதான் தாலிய கழட்டி கொடுத்திட்டியே, அப்புறம் என்ன?” என தேவ் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டே பேசினான்.

அன்பு அவனைப் பார்க்காமல், “உங்களுக்கு ஈசியா இருக்கும்னுதான் தாலிய கழட்டி கொடுத்தேன். அதான் நீங்க யாரையோ லவ் பண்றீங்களே? அப்புறம் என்ன?” என கூறிவிட்டு நகர, சட்டென அவளின் கையைப் பற்றி இழுத்தான் தேவ் தாஸ்.

அன்பரசி அதிர்ச்சியுடன் பார்க்க, தேவ் அவளை ஊடுருவிப் பார்த்தவன், “நான் யாரையும் லவ் பண்ணல… புரிஞ்சுதா? உன்னோட முட்டாள்தனமான கற்பனைக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது. நீ மட்டும் என்னை பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி சீன் போடாத. வேற வழியே இல்லாம கல்யாணம் பண்ணிட்டு வந்து பேசுறா காது நீளத்துக்கு…” என்றான்.

“ஆமா, பிடிக்காமத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்! எனக்கு பிடிக்கல, போதுமா?” என அவள் சொல்லிக்கொண்டிருக்கவே, அவ்விடத்தை விட்டு நகர்ந்திருந்தான் தேவ்.

அன்பரசி…?

தொடரும்.

You may also like

Leave a Comment