Epi -2
அறைக்குள் வேகமாக வந்தவளை பின் தொடர்ந்து வந்தான் தேவ் தாஸ். அவனிடம் துளி கூட நிதானமில்லை. அந்த அளவுக்கு குடித்திருந்தான். இன்று மட்டும் குடித்தவன் போல தெரியவில்லை. அவனுக்கு போதை பழக்கப்பட்ட ஒன்று என்பதை அங்கிருக்கும் காலி மது பாட்டில்கள் கூறியது.
அன்புவின் கண்களில் நீர் கொட்ட, அவ்வளவு தானா தனது வாழ்க்கை என நினைத்த நேரம் அவளின் மிக நெருக்கத்தில் அவன். வேறு யார் தேவ் தாஸ் தான்.. அட்டை கூரை என்பதால் புழுங்கி தாக்கியது வியர்வை.. அவளது முகம் குப்பென வியர்க்க, மெல்லமாக பின்னால் திரும்பி பார்த்தாள். மிகவும் நெருக்கத்தில் தேவ் நின்றிருந்தான். மதுவின் வாடை நாசியில் சுரீர் என்று ஏறியது.
தேவ் எதையும் யோசிக்காமல் அவளின் கழுத்தில் தொங்கி கொண்டிருக்கும் தாலியை பற்றியவன். எதுக்கு என்னை கல்யாணம் பண்ண ஒத்துகிட்ட? மண்டபத்தில் இருந்து ஓடுடின்னு லெட்டர் எழுதி கொடுத்து விட்டேனே ஏண்டி ஓடல? என ஒவ்வொரு வார்த்தையாக விழுந்தது. அவனது திரு வாயில் இருந்து.
அன்பு கைகளை பிசைந்தபடி, அது அது வந்து என சொல்ல வர, இப்போ இதுக்கும் மேலே ஒன்னும் பண்ண முடியாது நீயாவே வந்து மாட்டிக்கிட்ட என வாய் விட்டு சிரித்தான் ராட்சனை போல..
என்ன சொல்கிறான் இவன்? என அவள் திடுக்கிட்டு பார்க்க.., தேவ் தாஸ் அவளை தலை முதல் கால் வரை கிறக்கத்துடன் பார்த்தான்.
அன்புவின் இதயம் வேகமாக துடித்தது. கண்களில் நீர் வழிய அதற்குள் அவளின் இடையை பற்றி இருந்தான் தேவ். உள்ளுக்குள் பூகம்பமே வெடித்தது. தேவ்வின் பார்வை அவளின் சிறிய மூக்கிலும், அவளின் குட்டி குடை காது ஜிமிக்கி மேலும் படிந்து கொஞ்சம் கொஞ்சமாக பார்வை எல்லை தாண்டி சரக்குக்கு சைட் டிஷ்சாக இவளையே எடுத்து கொள்ளடா என்று சதி மூளை கூற.. அவனது கைகள் அவளின் கன்னத்தை வருடி உதட்டுக்கு சென்றது.
ஹக் என அலறினாள். பெண்மை விழித்து கொண்டது. பிடிக்காத ஸ்பரிசம் என தோன்ற, வேகமாக அவனிடமிருந்து விலக போராடினாள்.
தேவ் அதற்கு விடவில்லையே! அவளை இழுத்து அணைத்தான். அன்புவின் கையில் இருந்த பாய் கீழே விழ, அப்படியே தலையணையின் மீது அவன் விழ அவன் மேல் அன்பு. முரட்டு உதடுகள் மென் உதட்டை கவ்வி கொள்ள.. பெண்ணவள் கண்களில் நீர் சரிந்தது.
ஹே இனி தினம் தினம் சித்ரவதை தாண்டி உனக்கு.. நான் இப்படி தான்!! இது தான் நான் என ஒவ்வொரு மூலையிலும் தேவ் தாசின் போதையான குரல் எதிரொலிக்க, அவளால் முடியவில்லை.. பாட்டி என்னை மொத்தமா இந்த அரக்கன் கிட்ட மாட்டி விட்டுட்டியே? என அவள் வாய் மொழியாக அழுகையுடன் சேர்ந்து பிதற்ற.. இனி ராத்திரி முழுக்க நீ என் பிடி தாண்டி!! என அவளின் நெஞ்சு குழியில் அச்சு பதிய எச்சில் படுத்தினான்.
பாட்டிஇஇஇஇ!! என கத்தியபடி எழுந்தாள் அன்பரசி.
எதிரில் சட்டை இல்லாத மார்புடன் கர்லா கட்டையை சுற்றியபடி அவனது வேலையில் கண்ணாக இருந்தான் ஒருவன்.
மூச்சு வாங்க கைகள் இரண்டையை X போல வைத்து கொண்டு மானத்தை காத்து கொள்வதை போல அமர்ந்திருந்த அன்பரசி. தேவ் தாசை வினோதமாக பார்த்தவள் தன்னை தானே ஒருமுறை பார்த்து கொண்டாள். அப்போ அப்போ எல்லாமே கனவா? அப்போ இவன் என்னை எதுவுமே பண்ணலையா? என தனக்கு தானே மனதுக்குள் பட்டிமன்றம் வைத்து கொண்டவள் ஒரு வழியாக நிம்மதி பெருமூச்சை விட்டிருந்தாள்.
நேற்று இரவு வந்த தேவ் தாஸ் வீட்டின் வாசற்படியிலேயே படுத்து கொண்டான். ஆம் அவன் முழு போதையில் இருந்தான். அன்பு செல்வி அட்டை வீட்டின் வியர்வையில் குளித்து இருந்ததால் எப்படி உறங்கினாள் என்றே தெரியவில்லை. உடையை மாற்றவும் பயமாக இருந்தது அவளுக்கு. ஒருவேளை தன் மேல் வந்து பாய்ந்தால் என்ன செய்வது? என தோன்றியது. அவளது திருமண வாழ்க்கையில் அவன் போட்டது என்னவோ மூன்று முடிச்சுகள் தான்.. ஆனால் அவனது வாழ்க்கையில் இருக்கும் முடிச்சிகளில் தெரியாமல் வந்து சிக்கி கொண்டாள் பெண்ணவள்.
அன்பு இவ்வாறாக சிந்தனையில் சுழன்று கொண்டே எதிரில் இருப்பவனை பார்த்தாள். ஆறடி ஆண்மகன் அவனது கைகள் தேக்கு கட்டையை போல இருந்தது. அவன் சுற்றி கொண்டிருக்கும் கர்லா கட்டைக்கும் கைக்கும் பெரிதாக வித்தியாசம் எதுவும் இல்லை. பழனி படிக்கட்டை போல அவனது உடற்கட்டில் அஞ்சு படிக்கட்டுகள் இருந்தது. அடர்த்தியான கேசம், அவனது கை முழங்கால் வரை நீண்டு இருந்தது. இது என்ன எல்லாருக்கும் இருக்கிற கை போல தானே? என்று நினைக்கலாம். அது தான் இல்லை. பொதுவாக ஒரு முழுமையான ஆடவனின் கை அவனது முழங்கால் வரை நீண்டு இருக்க வேண்டும். அவன் தான் புராணத்தில் சொல்லப்பட்ட அளவுகளில் இருப்பவன்.
அய்யோ ராட்சசனுக்கு கை ரொம்ப நீளம் என மனதில் நினைத்தாள். ஹே என்னடி பண்ணிட்டு இருக்க? என அவளின் மனம் கேள்வி கேட்க.. வேகமாக எழுந்து நின்றாள்.
தேவ் தாஸ் பச்சை முட்டையை குடித்து கொண்டிருந்தான்.
உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்? என அன்பரசி ஆரம்பிக்க..
நான் உன்கிட்ட முக்கியமா பேசணும்? என கம்பீர குரலில் சொல்லி கொண்டே அவளை பார்த்தான் தேவ்.
அன்பு ஒரு நொடி ஸ்தம்பித்து போனாள். அவனையே விதிர்விதித்து பார்த்தாள்.
ஒரு கையை இடையில் வைத்தவன். அவளை பார்க்காமல், எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட? எழுந்து ஓட வேண்டியது தானே என்றான் தேவ்.
ஹாங் என அன்பு அவனை திடுக்கிட்டு பார்க்க, அந்த நெருங்கிய புருவங்கள் இடுங்க அவளை பார்த்தவன். நீ இந்த வீட்டுக்கு வந்ததுமே தெரிஞ்சிருக்குமே? என்றான்.
அன்பரசி கண்களில் நீர் கோர்த்து கொண்டது. நான் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல.. என அவளை பார்த்தான். அன்பு அவனை அண்ணார்ந்து பார்த்தாள்.
தேவ் தெளிவாக, உன்னால என் கூட வாழ முடியாது. இந்த வீட்ல எனக்கு என்ன மரியாதை இருக்கு? நான் இருக்கிற இடம் என்ன? எல்லாமே உனக்கு தெரிந்திருக்கும். என் கூட வாழ்ந்தா நீ அனாதைய விட கஷ்டபடுவ என்றான் நெற்றி பொட்டில் அடித்தார் போல..
நான் குளிச்சிட்டு வரேன் நீ சொல்லு உன்னை உங்க வீட்ல கொண்டு போய் விடறேன் என சொல்லி விட்டு வெளியே சென்று விட்டான் தேவ்.
அன்பு அதே இடத்தில் நின்றாள். அவள் தான் எங்கே செல்வாள்? அவளுக்கு உறவு என இருந்ததே செல்லதாய் பாட்டி மட்டும் தான். திருமணம் முடிந்த கையோடு காசிக்கு புறப்பட்டார் செல்லத்தாய். தனது பேத்தியை ஒரு பத்திரமான இடத்தில் கைபிடித்து கொடுத்து விட்ட நிம்மதியில் அந்த வயதான கட்டை காசியை நோக்கி சென்றது.
செல்லத்தாயும், தேவ் தாசின் தந்தை சிவதாசனின் அன்னை ராசாத்திம்மாளும் சிறு வயது தோழிகள். செல்லதாயின் மகள் சுஜாதா – மருமகன் கோவிந்தன் இருவரும் ஆக்சிடன்ட்டில் இறந்து விட அப்பொழுது அன்பரசி சிறு குழந்தை, அவளை தூக்கி கொண்டு மகன் வீட்டுக்கு சென்றார். அன்பரசி தனது மாமன் வீட்டில் பாசத்துக்காக ஏங்கி தவித்தாள் என்றே சொல்லலாம். அரசு பள்ளியில் படிப்பை முடித்தவளுக்கு ஒரே லட்சியம் தான் பாட்டியை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்று. அதற்குள் அவளின் மாமா கிரிதரன் இறந்து விட… அதன் பின் வீடே தலை கீழானது. செல்லத்தாய்இன் மருமகள் லலிதா மிகப்பெரிய நாடகம் நடத்தி அன்பரசியின் பூர்வீக வீட்டை ஏமாற்றி எழுதி வாங்கி கொண்டாள் மருமகள் லலிதா. வயதான கட்டை ஒன்று இளம் கட்டை இன்னொன்று என இரண்டு பெண்களும் வாழ்க்கையில் செய்வதறியாது நின்றார்கள்.
அப்பொழுது தான் ராசாத்தியை பார்த்த பாட்டி உடைந்து மொத்தமாக அழுது கரைந்தார். ராசாத்தி அப்பொழுதே சிவதாசனுக்கு அழைத்து விஜய் தாசுக்கு அன்பரசியை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்த, விஜய் தாசின் சுகாசினி காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிந்து போனது. ராசாத்திக்கு அடுத்த நொடியே மனதில் உதிர்த்தது தேவ் தாஸ் தான்.. கண்டிப்பாக அன்பரசி தேவ் தாசுக்கு தாய்க்கு தாயாக தாரமாக இருப்பாள் என முடிவெடுத்து திருமணத்தை நல்லபடியாக முடித்தும் வைத்தார்.
கைகளை பிசைந்தபடி அதே இடத்தில் நின்று கொண்டிருந்தவளை பார்த்தபடி உள்ளே நுழைந்தான் தேவ். அவனது தலையில் இருந்து நீர் சொட்டி கொண்டிருக்க, என்னாச்சு புறப்படு? உன்னை உங்க வீட்ல கொண்டு போய் விடுறேன்னு சொன்னேன்ல? என மிரட்டுதலாக முடித்திருந்தான்.
அவனது பேச்சில் உயிர் பெற்ற சிலையாக நிமிர்ந்து பார்த்தவள். எதுவும் பேசாமல் பையை எடுத்து கொண்டாள். எங்கே செல்வாள் என்ன செய்வாள் என ஒன்றும் புரியவில்லை. லலிதா அத்தை வீட்டுக்கும் அவளால் செல்ல முடியாது.
தேவ் பின்னால் திரும்பி பார்க்க, நேற்று கட்டியிருந்த பட்டு புடவையுடன் வெளியே வந்தாள். அது தான் கூரை பட்டும் கூட..
அவள் வருவதை பார்த்த தேவ் தனது பிடரியை வருடி விட்டபடி பெரிய வீட்டின் சந்து பக்கம் நடந்தான். வீட்டில் உறவினர்கள் அனைவருக்கும் கறி விருந்து தயாராகி கொண்டிருந்தது. புதுமண தம்பதிகள் இருவருக்கும் எண்ணெய் தேய்ப்பு உற்சாகமாக நடந்து கொண்டிருக்க, அன்பரசியின் பார்வை அவர்களின் மேல் ஒரு கணம் படிந்து மீண்டது.
கும் என தேவ் தாஸ் குரலை சிறும்ப, சாந்தி உற்சாகத்துடன், விஜய் தங்கம் கொஞ்சம் வச்சுக்கோ தலையில் உன்னோட தங்கச்சி முறைக்கு இங்கே யாரும் இல்லையே? ஹான் பார்கவி இருக்கா!! சிவதாசன் அதட்டலுடன் அவள் விமலா பொண்ணு , அப்போ அவனுக்கு அத்தை வேணும் டி! என்றார்.
பரவாயில்லை.. இப்போ என்ன கல்யாணமா நடக்க போகுது? பார்கவி உன்ற புருஷன் எப்போ வர்றார்? என கேட்டு கொண்டே கிண்ணத்தை நீட்டினார் சாந்தி.
சிவதாசன் எதேச்சையாக கேட்டின் பக்கம் திரும்ப ஆட்டோவை அழைத்திருந்தான் தேவ்.
ஆட்டோவில் ஏறு.. என தேவின் குரல் ஒலிக்க எதுவும் பேசாமல் ஏறி கொண்டாள் அன்பு.
போலாம் என விசிலடித்தபடி ஓட்டுனருக்கு அருகில் அமர்ந்து கொண்டான் தேவ் தாஸ்
தொடரும்..