Epi -3
“வீட்ல விசேஷமா சார்?” என ஆட்டோ ஓட்டுநர் கேட்க…
“யார் வீட்ல?” என கேட்டான் தேவ், புருவம் சுருக்கியபடி.
துக்கத்தை மீறி வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அன்புவின் கண்கள் ஒரு நொடி தேவின் மேல் பட்டது. ‘இவன் யார்? எந்த ஊரில் இருக்கிறான்? நிஜமாவே இவன் மனிதனா?’ என ஆயிரம் கேள்விகள் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
“சார், உங்க வீட்ல விசேஷமா அப்டின்னு கேட்டேன். பந்தல் போட்டிருந்ததே, கல்யாணமா?” என மீண்டும் கேட்டான்.
“ஆமா!” என ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டான் தேவ்.
“யாருக்கு சார் கல்யாணம்?” என மீண்டும் கேள்வி கேட்க…
“இப்போ உனக்கு என்ன வேணும்? எனக்குதான் கல்யாணம். பின்னாடி உட்கார்ந்திட்டு இருக்கே, அதான் பொண்ணு,” என்றான் தேவ்.
அதில் ஒரு நொடி பயந்து போன ஓட்டுநர், சிறிது நேரம் அமைதியாக வந்தார். சிறிது நேரம் தான்… அவரது பார்வை தேவ் தாஸ் மற்றும் அன்பரசி இருவரின் மீதும் பட்டு, “கல்யாணம் முடிஞ்சதும் உடனே பேக் பண்ணி கிளம்பிட்டீங்க? எங்க சார், ஹனிமூனா?” என ஓட்டுநர் கிண்டலாகத்தான் கேட்டார்.
“வாய கிழிப்பேன்டா ராஸ்கல்! என்னை பார்த்தால் இப்படியெல்லாம் தோணுதா உனக்கு?”
சட்டென சிரிப்பும் எட்டி பார்த்தது அன்புவுக்கு.
“அய்யோ சார், சார்! உங்களை பார்த்தால் எனக்கு எதுவும் தோணல. புது பொண்டாட்டிய கூட்டிட்டு எல்லாரும் ஹனிமூன் போவாங்க, அதான் கேட்டேன்,” என சமாளித்தான் ஆட்டோ ஓட்டுநன்.
“எந்த ஊருக்கு ஹனிமூன் போறீங்க? ஊட்டியா, கொடைக்கானலா, ஏற்காடா சார்?” என மீண்டும் அவன் கேள்வி கேட்க…
தனது கையை முறுக்கிக் காட்டினான் தேவ். அவ்வளவுதான்! ஓட்டுநன் பேருந்து நிறுத்தம் வரும் வரைக்கும் எதுவுமே பேசவில்லை.
“சார், 250 ரூபாய் ஆச்சு,” என ஓட்டுநர் சொல்லிவிட்டு நகர்ந்தான். ‘என்ன பண்றான் இவன்?’ என ஓட்டுநர் ஆட்டோவின் கண்ணாடியைத் துடைத்தபடி பார்த்தார்.
“வெயிட் பண்ணு,” என அன்புவின் பக்கம் சென்றவன், “உங்க ஊருக்கு பஸ் எதுன்னு சொல்லு?” என்று கேட்டான்.
அன்பு மவுனமாக நிற்க, “சரி போய்க்கோ, அதான் இவ்வளவு பெரியவராக வளர்ந்திருக்கியே,” என கம்பீர தொனியில் கூறியவன், அவளிடம் பணம் இருக்கிறதா, இல்லையா என்று கூட கேட்காமல் நகர்ந்தான்.
ஓட்டுநர் வாயடைத்துப் பார்த்தான். ‘இவன் மனுஷ ஜென்மமா? இல்லை மர கலண்டவனா?’ என்றவனின் பார்வை அன்பரசியின் கழுத்தில் படிந்து மீண்டது. நேற்று கட்டிய தாலிச் சரட்டின் ஈரம் கூட காயவில்லை, அதற்குள் அம்மா வீட்டுக்கு எவனாவது அனுப்புவானா என்னும் தொனியில் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஹலோ!” எனச் சொடக்குப் போட்டு அழைத்தான் தேவ் தாஸ்.
ஓட்டுநர் சட்டென சுயநினைவுக்கு வந்தவன், அங்கே பாவமாக நின்றுகொண்டிருக்கும் அன்பரசியைப் பார்த்து, “சார், கல்யாணம் ஆகி ஒரு நாள் கூட ஆகல, இப்படி தனியா விட்டுப் போறீங்க? அந்தப் பொண்ணப் பார்க்க பாவமா இருக்கு,” என அங்கலாய்ப்புடன் கேட்டுவிட்டான்.
“அய்யோ, சாவடிக்கிறானே?” எனத் தலையைக் கோதிய தேவ் கடுப்புடன், “உன்னோட சவாரி காசு 250 ரூபாய் வேணுமா, வேணாமா?” என கேட்டுக் கொண்டிருக்க…
“யாராவது பிடிங்க! ஐயோ, யார் இந்தப் பொண்ணு? பாவம்!” என்று குரல் கேட்டது.
“சார், சார்! உங்க வீட்டுக்காரம்மா மயங்கி விழுந்துட்டாங்க,” என ஓட்டுநர் பதட்டத்துடன் கூற, அதே நேரம் ஊரில் இருந்து ராசாத்தி பாட்டி அவனுக்கு அழைத்தார்.
“என்னாச்சு இந்தப் பொண்ணுக்கு?” என வேகமாக தேவ் கீழே விழுந்த அன்பரசியைத் தூக்கிக்கொண்டான். “ஹே, முழி!” என கன்னத்தைப் பற்றி தட்டினான்.
“சார், அந்தப் பொண்ணை அடிக்காதீங்க,” என ஓட்டுநர் கூற…
“டேய், யார்ரா நீ? நானும் வந்ததில் இருந்து பார்க்கிறேன், கிராஸ் டாக் விட்டுட்டே இருக்க? ஒண்ணு விட்டேன்னு வச்சுக்கோ, அப்புறம் ஒரு பக்கப் பல்லு கொட்டிடும். போடா அந்தப் பக்கம்!” என கர்ஜித்தான் தேவ்.
அவனது கரடு முரடான பேச்சில் சட்டென வாய் மூடிக்கொண்டு ஓரமாக நின்றான் ஓட்டுநன்.
“தம்பி, அந்தப் பொண்ணு முகத்தில தண்ணி தெளிப்பா,” என்றார் ஒருவர், வாட்டர் பாட்டிலை நீட்டி.
தேவ் ஒரு பெருமூச்சுடன் தண்ணீரைத் தெளித்து கன்னத்தைத் தட்டினான். மெதுவாகக் கண்களை விழித்தாள் அன்பு.
“எதுக்கு மயங்கி விழுந்த? உனக்கு மயங்கி விழ வேற இடமே கிடைக்கலையா? உங்க வீட்டுக்கு போய் மயங்கி இருக்க வேண்டியதுதானே?” என மிரட்டினான்.
அவனை கோபமும் இயலாமையும் ஒருசேர கலந்து பார்த்தவள், கஷ்டப்பட்டு தள்ளாடியபடி எழுந்து நின்றாள்.
இதோ, திரும்பத் திரும்ப ராசாத்தி பாட்டியிடமிருந்து போன் வந்து கொண்டிருக்க, கடுப்புடன் போனை எடுத்தவன் தலையைக் கோதிக்கொண்டு, “ஹான், சொல்லுங்க ஆத்தா,” என மெல்லிய குரலில் பதில் கொடுத்தான்.
“தாசு, எங்கே இருக்க?” என ராசாத்தி கேட்க…
“ஹான், அது கொஞ்சம் வேலையா வெளியே வந்தேன். சொல்லுங்க ஆத்தா, என்ன விஷயம்?” எனக் கேள்வி கேட்டான் தேவ்.
“ஒண்ணுமில்ல கண்ணு. நீ வீட்டுக்கு போயிட்டு என் பேத்திகிட்ட போனை கொடு, நான் பேசணும்,” என்றார்.
“அப்போ விமலா அத்தைக்கு கால் பண்ணுங்க ஆத்தா, நான் வைக்கிறேன்,” என்று விட்டு போனை வைக்கச் சென்றான்.
“டேய் டேய்! சாலாக்கு நாயம் பேசிட்டு இருக்காத. வந்தேன்னு வை, தோலை உரிச்சு தொங்கப்போடுவேன் ராஸ்கல்,” என இழுப்பு வாங்கி கொண்டே பேசினார் ராசாத்தி.
“ஆத்தா!” என்று ஒரு முறை அழைத்தான்.
“டேய்! உம்மட பொண்டாட்டிதான் என் பேத்தி, இப்போ புரியுதா உனக்கு? வீட்டுக்கு போயிட்டு என் பேத்தி அன்புக்கிட்ட கொடு, நான் பேசணும். போனை வச்சிடுறேன்,” எனக் கூறி கட் செய்தார்.
தேவ் கடுப்புடன் அன்பரசியைப் பார்த்தான். அவள் அதே இடத்தில் அங்கு வரும் பேருந்துகளைப் பார்த்தபடி நின்றிருந்தாள். தேவ் பெருமூச்சுடன் அவளின் பக்கம் சென்றான்.
அடுத்த சில நிமிடங்களில் இருவரும் பேக்கரியில் அமர்ந்திருந்தார்கள். “எதுவும் வேணுமா?” என கேட்டான்.
அன்பு தயக்கத்துடன் பார்க்க, அவன் நன்றாகச் சேரில் சாய்ந்து கொண்டு, “நான் காலையிலேயே பச்சை முட்டை சாப்பிட்டேன், எனக்கு பசி இல்லை. உனக்கு எதுவும் வேணுமா? டீ, காபி எதுவும்?” என தேவ் அவளைப் பார்த்துக் கேட்டான்.
“டீ வேணும்.”
“அவ்ளோதானா?”
“ம்ம்,” என்றாள் ஒற்றை பதிலில்.
“அண்ணா, ஒரு டீ,” எனச் சொல்லி விட்டு தேவ் திரும்ப, அன்பரசியின் கண்களோ அங்கிருக்கும் பட்டர் பண்ணில் படிந்திருந்தது.
“மூணாவது டேபிளுக்கு டீ வச்சாச்சு,” என பேக்கரி பணியாள் நகர, “தம்பி, அந்த பண் ரெண்டு வேணும்,” என்றான் தேவ்.
அவள் மடியில் வைத்திருந்த பையை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள். “ம்ம், டீ எடுத்து குடி!” என்றான் தேவ்.
அன்பு அவனைப் பார்க்காமல் டீ கிளாஸை எடுத்து ஒரு மிடுக்கு குடிக்க, கூடவே அவளின் முன்னால் மூன்று பட்டர் பண்கள் வைக்கப்பட்டிருந்தது. அன்பரசி ஆச்சரியத்துடன் எதிரில் இருப்பவனை திகைத்துப் பார்க்க, “உனக்குதான்,” என்று வாய்மொழியாகக் கூறினான்.
“வேண்டாம்…” என்றாள் தயக்கத்துடன்.
“வேண்டாமா? அப்போ எடுக்க சொல்லிடுறேன்,” என தேவ் சொல்லியபடி அவளது முகத்தைப் பார்க்க, பதட்டமானாள்.
“சாப்பிட்டா சாப்பிடு, இல்லன்னா போ,” என்று விட்டு சிகரெட் ஊத சென்றான்.
அவன் சென்றுவிட்டானா எனப் பார்த்தவள், வேகமாகப் பண் எடுத்துச் சுருட்டி கொஞ்சம் கொஞ்சமாக டீயில் நனைத்து உள்ளே தள்ளினாள். அவளின் கண்களில் நீர் கசிந்தது.
“மெதுவா சாப்பிடு, எல்லாமே உனக்குதான்,” என ஒரு குரல் கேட்டது. அவன்தான் அன்பரசியின் முன்னால் நின்றிருந்தான்.
அதன்பின் பதட்டமில்லாமல் சாப்பிட்டாள். நேற்று மண்டபத்தில் மதிய உணவைக் கூட அவள் சாப்பிடவில்லை. நேற்று முழுக்க பட்டினி; இன்றும் பட்டினியில்தான் மயங்கி விழுந்தாள். மனதில் இருந்த பாரமே வயிற்றை நிறைத்திருந்த காரணத்தால், அதே துக்கத்தில் உறங்கிப்போனாள் என்று சொல்வதை விட, அந்த அட்டை வீடு அவளை அழுத்தியது – மயக்கத்திலும் சோர்விலும்.
இப்பொழுதுதான் அவளின் முகம் கொஞ்சம் நன்றாக இருந்தது. கடையில் பணத்தைச் செட்டில் செய்தவன், இப்பொழுது அவள் முன்னால் வந்து நின்றான்.
“வீட்டுக்கு போறோமா?” என அன்பரசி ஒரு நப்பாசையில் கேட்க…
“ஆத்தா உன்கிட்ட பேசணுமாம். நீ பேசிட்டு புறப்படு,” எனப் போனை நீட்டினான்.
அன்பரசியின் முகத்தில் கவலை ஒட்டிக்கொள்ள, வேறு வழி இல்லாமல் போனை வாங்கினாள். “ஸ்பீக்கர்ல போடு!” எனத் தட்டிவிட்டான்.
“ஹலோ அம்மாச்சி! நல்லாருக்கீங்களா?” என அன்பரசி புன்னகையுடன் கேட்க…
தேவ் தாஸ் வேறு புறம் திரும்பிக்கொண்டான். ஏனென்றால், அன்பரசி அவளின் முத்து பற்களைக் காட்டி சிரித்துக்கொண்டிருந்தாள்.
“கண்ணு, சீக்கிரம் புறப்பட்டு இங்கே ஊருக்கு வாங்க. விருந்து இருக்குது உங்களுக்கு,” என்றார்.
“இல்லை!” என வேகமாக போனை பிடுங்கிக் கூறினான் தேவ்.
அன்பரசி எதுவும் பேசாமல் நின்றாள். தேவ் அங்கும் இங்கும் நடந்தவன் எதேதோ கூறினான், ஆனால் எடுபடவில்லை. ராசாத்தி ஒரே பேச்சாக, “நீ இங்கே கிளம்பி வரலன்னா, நான் அங்கே கிளம்பி வருவேன்,” எனச் சொல்லியபடி போனை வைத்தார்.
தேவ் தாஸ் கடுப்புடன் எதிரில் இருப்பவளை முறைத்தான். அன்பரசி புரியாமல் அவனைப் பார்க்க, இன்னொரு பக்கம் ஆட்டோக்கார ஓட்டுநர் வந்துவிட்டிருந்தார்.
“இருங்க வரேன்,” என தேவ் முன்னால் நடக்க, அன்பு அதே இடத்தில் நின்றாள். ஓட்டுநர் தேவ் தாசுக்கு பின்னால் எட்டிப் பார்க்க, தேவ் மெல்ல திரும்பினான். பேக்கரியின் வெளியேதான் அன்பு நின்றிருந்தாள்.
“இன்னும் எதுக்கு அங்கேயே நிக்கிற?” என தேவ் கேட்க…
“புரியல,” என்றாள்.
“ஆத்தா ஊருக்கு வரச் சொல்லியிருக்காங்க, வா,” என்றான்.
அன்பரசிக்கு ஒரு பக்கம் நிம்மதி பரவ, வேகமாக ஆட்டோவில் வந்து ஏறிக்கொண்டாள். ஓட்டுநரின் உதட்டில் புன்னகை மட்டும் இருந்தது. அவர்கள் இருவரையும் பார்த்துச் சிரித்துக்கொண்டான்.
இருவரும் வீடு வந்து சேர்ந்தார்கள். அன்பரசி நேராக அவர்கள் இருக்கும் இடத்துக்குச் சென்றாள்.
“ஹே, ஹலோ!”
அன்பரசி திரும்பவே இல்லை.
“ஹே, உன்னைத்தான், நில்லு!” என வேகமாக முன்னால் சென்றான்.
“சொல்… சொல்லுங்க.”
“ஆமா, உன்னோட பேர் என்ன?” என கேட்டானே பார்க்கலாம் ஒரு கேள்வி!