பெண்மையை வென்றவன் புயலானவன்

by Pradhanya kuzhali
216 views

Epi -4 

“என்ன கேட்டீங்க?” எனத் திரும்பக் கேட்டாள் அன்பு.

“உன் பேர் என்னன்னு கேட்டேன்? செவுடா நீ?” என அதட்டினான் தேவ்.

அவனை இயலாமையோடு நோக்கினாள் பெண்ணவள். இந்த பதிலே அவளுக்கு அனைத்தையும் சொல்லிவிட்டது—தன்னை இஷ்டப்பட்டு அவன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று. சொல்லப்போனால், இவன் என்னை மணமேடையில்தான் பார்த்திருப்பான்; அப்பொழுதுகூடச் சரியாகப் பார்க்கவில்லையே? நாசாவில் ராக்கெட் விட்டவனைப் போல ஒவ்வொரு நொடியும் பரபரப்புடன் திரிந்தான்.

“பேர் என்ன?” எனத் திரும்பவும் தேவ் கேட்க, அதில் சுயநினைவுக்கு வந்தவள், “என்னோட பேர் உங்களுக்கு எதுக்கு? எப்படியும் அம்மாச்சி வீட்டுக்கு போயிட்டு வந்ததும் என்னை துரத்தி விட்டுடுவீங்களே? அப்புறம் என்னோட பேர் உங்களுக்கு எந்த இடத்தில தேவைப்படப் போகுது?” என நெற்றிப்பொட்டில் அடித்தாற்போலச் சொல்லிவிட்டுச் சென்றாள்.

“நீ சொல்றதும் சரிதான், எனக்கு உன் பேர் தேவையில்லை!” எனச் சாதாரணமாகச் சொல்லிவிட்டுச் சென்றான் தேவ்.

அன்புக்கு அவனுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்துக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது. இருவரும் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். உறவினர்கள் அனைவரும் விருந்து முடித்து அவரவர் வீடுகளுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.

விஜய் தாஸ், சுகாசினி இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு அறைக்குள் சென்றவர்கள்தான், இன்னும் வெளியே வரவே இல்லை.

“இன்னும் கொஞ்சம் சாப்பாடு வைக்கட்டுமா மாமா?” எனச் சாந்தி உணவைப் பரிமாற…

சிவதாஸ் கண்ணாடியை மூக்குக்குத் தள்ளியபடி, “இதுக்கு மேலேயும் தேவ் அங்கே கொல்லைப்புறம் பக்கத்தில இருக்கிறது சரி இல்லை சாந்தி. அந்தப் பொண்ணு நம்ம வீட்டுக்கு வாழ வந்தவ. அவனோட ரூமுக்கு அனுப்பி வச்சிருக்கலாமே? அவன் தான் வீம்புக்குப் பண்ணிட்டு இருக்கான்னா, நீ அதுக்கு மேலே பண்ற சாந்தி. அவன் உன் பையன்டி! நீ விஜயைப் பார்க்கிற போல அவனையும் பாருடி!” என்றார் மனம் தாங்காமல்.

வேகமாகப் பாத்திரத்தைக் கீழே போட்டார் சாந்தி. சிவதாசன் தனது மனைவியைத் திடுக்கிட்டுப் பார்க்க, “அவன் நம்ம ரெண்டு பேருக்கும் சம்பாதிச்சுக் கொடுத்த பேருக்‌கும் புகழுக்கும் நடு வீட்டுல வச்சு சேவகம் பண்ணட்டுமா? சொல்லுங்க! ஒழுங்கா படிக்கல, வேலை வெட்டி இல்லை. ஊர்ல இருக்கிற அயோக்கியன் என்னென்ன பண்ணுவானோ அது எல்லாத்தையும் செஞ்சிட்டான்; ஜெயிலுக்கும் போயிட்டு வந்துட்டான். அப்படிப்பட்டவனுக்குக் கல்யாணம் ஒரு கேடா? ச்சே… அவனுக்கு எதுக்கு உங்க அம்மா கல்யாணம் பண்ணி வச்சாங்க? ம்ம்… நல்லவேளை ஒரு நல்ல குடும்பத்துல இருந்து பொண்ணு எடுக்கலை, இல்லன்னா அங்கேயும் என் மானம் போயிருக்கும். ஏற்கனவே இருக்கிற தரித்திரம் போதாதுன்னு இன்னொன்னு வேற!” என ஊசி குத்தும் வார்த்தைகளைப் பேசினார்.

சிவதாசன் வேகமாக எழுந்துகொள்ள, “மாமா, என்ன பண்றீங்க?” எனத் தடுத்தார் சாந்தி.

“நீ அவனுக்குப் பண்ண காரியம் சாதாரணமில்லடி. நீ என்ன அவனைச் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வச்சிருக்க? நான் எவ்வளவோ தூரம் தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன், என் பேச்சை நீ கேட்டியா? அவனோட வாழ்க்கை திசை மாறிப் போனதுக்குக் காரணமே நீதாண்டி! நீ மட்டும்தான்!” என்றவர் வேகமாகச் சென்றுவிட்டார்.

சாந்தியின் கண்களில் நீர் கோர்க்க, இன்னொரு பக்கம் தேவின் மீது ஆத்திரமும் கோபமும் பொங்கியது.

“சித்தி என்னாச்சு?” எனக் கேட்டுக்கொண்டே வந்தான் விஜய். சாந்தி வேகமாகத் தன் கண்களைத் துடைத்துக்கொண்டவர், “ஒண்ணுமில்ல தங்கம்,” எனத் திரும்பினார்.

“இல்லையே, உங்க கண்ணு கலங்கி இருக்கு. அப்பா உங்களை எதுவும் திட்டிட்டாரா? நான் போய் கேட்கிறேன்,” என விஜய் தீவிரமாகக் கூறினான்.

சாந்தி விஜயைத் தடுத்து, “இல்லை தங்கம், ஒண்ணுமில்லை,” என்றவர், “போ தங்கம், சுகாசினி தனியா இருப்பா. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வெளியே எங்கேயும் போயிட்டு வாங்களேன்? என் பிரெண்ட் பார்வதி இருக்காளே, அவளோட பையன் சுரேஷ் அவனோட பொண்டாட்டியை கூட்டிக்கிட்டு பனிபொழியும் ஊருக்கு ஏஜென்சில புக் பண்ணி போயிட்டு வந்திருக்கான். நீயும் போயிட்டு வா தங்கம். சுகாசினி பெரிய வீட்டுல இருந்து வந்தவள். ஹான்… சொல்ல மறந்துட்டேன், நீங்க ரெண்டு நாள் உன் மாமியார் வீட்டுக்கு போயிட்டு வாங்க. அவளுக்குத் தான் புருஷன் கூட நாலு இடத்துக்குப் போகணும்னு ஆசை இருக்கும் தானே?” என்றார்.

விஜய் சாந்தியின் கையைப் பற்றிக்கொண்டான். “நான் உங்க பையனா இருந்திருக்கலாம் சித்தி. உண்மையாகவே என்னை பெத்த மரகதம்மா இருந்திருந்தாக் கூட இந்த அளவுக்குப் பார்த்திருப்பாங்களான்னு சத்தியமாத் தெரியல. என் மேலே அவ்வளவு பாசமா சித்தி? இத்தனைக்கும் தேவ் தான் உங்க பையன், ஆனா நீங்க?” என விஜய்க்கு கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.

“என் அக்கா மரகதம். என்னோட அக்கா பையனா உன்னை நான் பார்க்கவே இல்லை விஜய் கண்ணா. நீ என்னோட உயிருடா! நீ பிறந்ததும் உன்னை அக்கா என்கிட்ட தான் கொடுத்தா,” என்றார் கண்களில் நீர் கோர்க்க.

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் வெளியே வந்தார் சிவதாசன். “அப்பா, எதுக்கு சித்தியைத் திட்டிருக்கீங்க?” எனக் கண்களில் கோபத்துடன் திரும்பினான் விஜய்.

“நான் திட்டினேன்னு அவள் சொன்னாளா?” என சிவதாசன் கேட்டுக்கொண்டே வந்தவர், போனை நீட்டி, “நீ எங்கே வேணாலும் போயிட்டு வா. அதுக்கு முன்னாடி ஆத்தா வீட்டுக்கு போயி ஆசிர்வாதம் வாங்கிட்டு வாங்க ரெண்டு பேரும். உன்கிட்ட ஆத்தா பேசணும்னு சொன்னாங்க,” என்றார்.

சாந்தி சேலையின் தலைப்பால் முகத்தைத் துடைத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்துவிட்டார்.

“சுகா!” என அழைத்தபடி உள்ளே நுழைந்தான் விஜய். “எதுக்கு வெளியே போன?” எனச் சோபாவில் படுத்திருந்தவள் அவனை அழைத்தாள்.

“ஒரு சர்ப்ரைஸ் வெயிட்டிங், வேணுமா?”

“என்ன சர்ப்ரைஸ்? ரெண்டு பேரா மாறி செய்யப்போறியா என்ன?” என அவள் சிரித்துக்கொண்டே கேட்க, விஜய் அவளைப் புரியாமல் பார்த்தான். சுகா அவனது காதில் கிசுகிசுக்க, அவளின் மோவாயைக் கடித்தவன், “அம்மா ஹனிமூன் போகச் சொல்லியிருக்காங்க. சோ, எங்கே போலாம்? உன்னோட சாய்ஸ்,” என்றான்.

“ஹே சூப்பர் விஜய், லவ் யூடா!” எனக்கட்டியணைத்து முத்தமிட்டாள் சுகாசினி.

“ஆனா அதுக்கு முன்னாடி ஆத்தா வீட்டுக்கு போயிட்டுப் போகணும்,” என விஜய் சொல்லிக்கொண்டிருக்க, “அவங்க வீட்டுக்கு எதுக்குப் போகணும்?” எனச் சுகாசினியின் முகம் மாறியது.

“ஹே, இல்லடி… இது நம்ம வீட்டு வழக்கம். உன்னைத் தங்கச் சொல்லல, நம்ம ஆத்தாவப் பார்த்திட்டு வந்திடலாம். அவ்வளவுதான், போலாமா?” என்றான். அவளின் முகம் பிடிக்கவில்லை என்பதை அப்பட்டமாகக் காட்டினாலும், கஷ்டப்பட்டுச் சமாதானம் செய்து அழைத்துச் சென்றான்.

விஜய் மற்றும் சுகாசினி இருவரும் கிளம்பும்போது வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்த சாந்தியோ, தேவ் மற்றும் அன்பரசி இருவரும் கிளம்பும் நேரம் முகத்தில் அடித்தாற்போலக் கதவைப் படாரெனச் சாத்தினார்.

தேவ் தாசின் கண்கள் சிவந்து போனது. முகத்திலும் கண்களிலும் இன்னதெனச் சொல்ல முடியாத ஒரு உணர்வு இழை ஓடியது. பின்னால் அன்பரசியின் வளையல் சத்தம் கேட்க, சட்டெனச் சுதாரித்துக்கொண்டவன் முன்னால் நடந்தான்.

போகும் அவனை ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் பார்க்கவி. தனது குழந்தையைத் தோளில் போட்டுத் தட்டியபடி இருக்க, “நானும் எங்க அக்கா போன இடத்துக்கே போய் சேர்ந்தால்தான் உங்களுக்கு நிம்மதி, அப்படித்தானே?” எனச் சாந்தி பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தார்.

சிவதாசன் ஆவேசமாகத் தனது மனைவியின் முன்னால் வந்து, “இது உனக்கே அடுக்குமா சாந்தி? பெரியவன் கார்ல போறான், அவனை வாசலுக்கு வெளியே போய் வழியனுப்பி வச்சிட்டு வர்ற… சின்னவன் நடந்து போறான்டி! இந்த வீட்டுக்கு ரெண்டு மருமகள் வாழ வந்திருக்காங்க, அவங்க ரெண்டு பேரையும் ஒரே மாதிரிப் பார்க்கணும்டி! எங்க அம்மா உன்னையும் மரகதம் போலத் தானே நடத்துறாங்க, நீ மட்டும் எதுக்குடி இப்படி நடந்துக்கிற?” எனக் கேட்டார்.

“ஆமா, உங்க அம்மா என்னை நல்லா நடத்துறாங்க, ரொம்ப நல்லா…” என்றவர் கண்களில் நீர் கொட்ட, “உங்க அம்மா என்கிட்ட பேசி 10 வருஷம் ஆகுது,” என்றார் சாந்தி.

சிவதாசன் ஒரு பெருமூச்சுடன் தனது மனைவியைப் பார்த்தவர், அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக விட்டுவிட்டார்.

விஜய் தாஸ், சுகாசினி இருவரும் ஜம்பமாகப் போய் காரில் இறங்கினார்கள். அவர்கள் வந்து இரண்டு மணி நேரம் கழித்து தேவ், அன்பு இருவரும் ஆத்தாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.

சுகாசினிக்கு அன்பரசியைப் பார்த்ததும் இகழ்ச்சியாக உதடு வளைந்தது. ‘இப்படியே விடக்கூடாது இவளை, எதுவும் பண்ணனும். இங்கே இதே இடத்துல இவள் என்னோட காலைப் பிடிச்சா எப்படி இருக்கும்? பிச்சைக்கார நாயி… என் கடையில நின்னு வேலை செஞ்சவ, இன்னைக்கு என் கூடச் சமமா மருமகளா?’ என நினைத்தவள், காதைத் குடைந்தபடி அவளது வேலையை ஆரம்பித்தாள்.

தேவ் தாஸ், அன்பரசி என இருவரையும் பார்த்த ராசாத்திப் பாட்டி வேகமாக வெளியே சென்று அவர்களை ஆசையுடன் உள்ளே அழைக்க, புன்னகையுடன் வீட்டுக்குள் நுழைந்தாள் அன்பரசி. தேவ் தாஸ் வெளியிலேயே அமர்ந்து கொண்டான். சட்டையின் முன் இரண்டு பட்டன்களை அவிழ்த்து விட்டுத் தூக்கிவிட்டவன், வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்க…

சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தவள், ராசாத்தி கொடுத்த லெமன் ஜூஸைக் கீழே தட்டிவிட்டாள். “அம்மா… ஆஆ!” எனக் கத்தியபடி பொத்தென விழுந்தாள் அன்பரசி.

“கண்ணு சாமி, என்னாச்சு?” என உள்ளிருந்து வந்தார் ராசாத்தி. விஜய் போனை கட் செய்துவிட்டு உள்ளே வந்தவன், “பேபி, உனக்கு ஒன்னுமில்லையே?” எனத் தனது மனைவிக்கு என்னாச்சு எனப் பதறினான்.

“என்னாச்சு ஆத்தா உனக்கு?” எனக் கேட்டுக்கொண்டே உள்ளே வந்தவன் பார்வை அன்பரசியின் மீது பட்டது.

தொடரும்…

You may also like

Leave a Comment