Epi – 5
“அம்மா ஆஆ!!” என வழுக்கி விழுந்தாள் அன்பரசி. அவளின் கைகள் சுகாசினியின் பாதத்தைத் தொட ஒரு இன்ச் இடைவெளி மட்டும்தான் இருந்தது.
“ஆத்தா, உனக்கு ஒன்னுமில்லையே?” என வேகமாக உள்ளே வந்தான் தேவ்.
“அச்சோ! அன்பரசி, பார்த்து வர மாட்டியா? உன்னோட கவனம் எங்கே இருக்கு? நீ செஞ்ச வேலையிலும் கவனம் இல்லை.. இப்போ பாரு, சிந்தின லெமன் ஜூஸ்ல வழுக்கி விழுந்திருக்க!” என கையை நீட்டினாள் சுகாசினி.
அந்த நேரம் பார்த்து ஓடி வந்த விஜய், மூச்சு வாங்கிக்கொண்டே, “பேபி ஆர் யூ ஓகே? உனக்கு ஒன்னுமில்லையே?” என கேட்டான்.
“டேய் எடுபட்ட பயலே! என்ற பேத்தி கீழே விழுந்திருக்கா, பார்த்திட்டு மலைமாடு மாதிரி நின்னுட்டு இருக்க? அவளை தூக்குடா!” என சொல்லியபடி ராசாத்தி குனியப் போக, “ஆத்தா இருங்க, நான் பார்த்துக்கிறேன்,” என முன்னால் சென்று அவளிடம் கையை நீட்டினான் தேவ்.
அவனை ஆத்திரத்துடன் முறைத்தவள், எதுவும் பேசாமல் எழுந்து நின்றாள். சுகாசினிக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
‘ஓவரா பண்றா! தூக்க பக்கத்தில் வந்தா பிகு பண்றா? எப்போ என்னை விட்டுப் போவான்னு இருக்கு. அந்த தாலியை கட்டினதும் கட்டினேன், அன்னையிலிருந்து வால் மாதிரி என் பின்னாடியே இருக்கா. தொந்தரவு பண்றா,’ என மனதுக்குள் நினைத்த தேவ், வெளியே சென்று அமர்ந்து கொண்டான்.
“அன்பு, வா கண்ணு.. மெதுவா உட்காரு கண்ணு. பார்த்து வரக்கூடாதா கண்ணு? வீட்டுக்கு வந்ததும் விழுந்துட்டியே கண்ணு. எனக்கு மனசே கேக்கல,” என்றவர் தண்ணீர் நீட்டினார் அக்கறையுடன்.
அவள் வலியை மறைத்துக்கொண்டு புன்னகையுடன், “இல்லை அம்மாச்சி! என் மேலேதான் தப்பு. நான் தான் கவனிக்காம விழுந்துட்டேன். நீங்க வருத்தப்பட வேணாம்,” என்றாள்.
“என் செல்லக்குட்டி,” என்று நெற்றி முறித்தவர், “இன்னும் அஞ்சு நிமிசம் கண்ணு..” என உள்ளே ஓடியவர் கையில் ஜூஸுடன் வந்தார்.
அன்பு புன்னகையுடன் வாங்கிக்கொள்ள, “விஜய்!” என சுகாசினி அழைத்தாள். அவளின் பார்வை ‘இங்கிருந்து கிளம்பலாம்’ என பாவனையில் காட்ட, “நான் பார்த்து கொள்கிறேன்,” என தலையசைத்தவன், நேராக ராசாத்தியின் அருகில் சென்றான்.
“விஜய் தங்கம்? நீயும் தேவ்வும் உங்க பொண்டாட்டிகளை கூட்டிக்கிட்டு திருச்செங்கோடு மலைக்கு போயிட்டு வந்துடுங்க. வேஷ்டி சட்டையும் புது புடவையும் எடுத்துட்டு வந்திருக்கீங்களா?” என கேட்டார் ராசாத்தி.
“அது ஆத்தா…” என தயங்கினான் விஜய்.
“என்னடா? உன்ற அம்மாக்காரி சொல்லவே இல்லையா?” என ராசாத்தியின் முகத்தில் கோபம் பரவ, “இப்போவே போன் பண்ணி அவளை…” என சிவதாசனுக்கு அழைக்கச் சென்றார்.
“ஆத்தா, சித்தி சொன்னாங்க, நான் தான் மறந்துட்டேன். அப்புறம் நீங்க சொன்னது போல கோவிலுக்கு போறோம். போற வழியில் டிரஸ் வாங்கிட்டு அப்படியே கோவிலுக்கு போறோம். முக்கியமா இன்னொரு இடத்துக்கு போக வேண்டி இருக்கு,” என்றான் விஜய்.
சடுதியில் ராசாத்தியின் முகம் மாறிவிட, “அப்போ நீங்க ஆத்தா வீட்ல தங்கல இல்லையா?” என்றார் கவலையுடன்.
உடனே முந்திக்கொண்டு வந்த தேவ், “அய்யோ ஆத்தா! நான் தங்கிட்டுப் போலாம்னு தான் வந்தேன்,” என சொல்லிக்கொண்டிருக்க, அன்பரசி புடவையை மாற்றிக்கொண்டு வெளியே வந்தாள். சுகாசினி போனை நோண்டிக்கொண்டே நின்றிருந்தாள்.
விஜய் நேராக ஆத்தாவை சமாதானம் செய்து ஒரு வழியாக சம்மதம் வாங்கிவிட்டான்.
ராசாத்தி அவனைப் பார்த்து, “மறக்காம கோவிலுக்கு போயிட்டு அப்படியே கிளம்புங்க ராசா,” என்றார்.
“கண்டிப்பா ஆத்தா!” என 1000 ரூபாய் எடுத்து நீட்டினான்.
ராசாத்தி சிரித்துக்கொண்டு, “எனக்கு எதுக்கு காசு? எனக்கு எந்த குறையும் இல்லை.. நீ போயிட்டு வா!” என்றவர், “அன்பு, நீ உட்காரு மா, நான் இதோ வந்துடுறேன்,” என விஜயின் பின்னால் சென்றார்.
விஜய் நிமிர்ந்து கூட தனது தம்பியைப் பார்க்கவில்லை. நேராக வெளியே செல்ல எத்தனிக்க, “கண்ணு விஜய், உம்மகிட்ட முக்கியமா ஒரு வார்த்தை சொல்லணும்,” என்றார் ஆத்தா.
“என்ன விஷயம் ஆத்தா? சொல்லுங்க.”
“உன்ற பொண்டாட்டியோட துணி சரியில்லை. நாலு செவுத்துக்குள்ள உன்ற முன்னாடி போட வேண்டிய துணியை வெளியே போட்டுட்டு வந்தால் அது நல்லாருக்குமா சொல்லு? உன்ற தம்பி இருக்கான், அவளுக்கு மாமனார் இருக்காப்டி. வீட்டுக்குள்ள ஆம்பிளைங்க தப்பான கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டாங்க, ஆனால் தயக்கமும் கூச்சமும் ஒரு பொட்டப் புள்ளைக்கு வேணும்ல?” என்றார்.
இதை கேட்டதும் விஜயின் முகம் மாறிப்போனது, எதுவும் பேசாமல் நின்றான். “விஜய், இன்னும் எவ்ளோ நேரம்?” என சுகாசினி கத்தினாள்.
ராசாத்தி அவனைப் பார்த்து, “போயிட்டு வா, உன்ற பொண்டாட்டி கூப்பிடுறா,” என அனுப்பி வைத்தார். விஜய் எதுவும் பேசாமல் கிளம்பிவிட்டான்.
தேவ் உடலை முறுக்கிக்கொண்டு உள்ளே நுழைய, “கண்ணு அன்பு, சீக்கிரம் சீக்கிரம்… ரெண்டு பேரும் போய் சாமி கும்பிட்டு வாங்க,” என அவர் கூற, தேவ் முன்னால் வந்து, “ஆத்தா, நான் மட்டும் போயிட்டு வந்துடுறேன்,” என அன்பரசியை விட்டுச் செல்ல முடிவெடுத்தான்.
“மூளை கெட்டவனே! புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்துதான் போகணும். கிளம்புடா!” என்றவர் அன்புவிடம், “கண்ணு, இதுல காசு முடிஞ்சு வச்சிருக்கேன், அதை உண்டியலில் போட்டு விடு. கயிறு கட்டும் இடம் இருக்கும், உன்ற புருஷனுக்கு கையில கயிறு கட்டச் சொல்லு. மரத்தில் வளையல் போட்டு வேண்டிட்டு வரணும் சரியா தங்கம்?” என ராசாத்தி கூறி முடித்தார்.
“சரிங்க ஆத்தா,” என புன்னகையுடன் தலையசைத்துவிட்டு நகர்ந்தாள் அன்பு. “அட இரு கண்ணு, பூ வச்சுட்டுப் போவ?” என்ற ராசாத்தி, இரண்டு முழம் மல்லிகைப்பூவைத் தேவ் தாசிடம் நீட்ட, “நான் பூ வைக்கிறதில்லை!” என முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
அன்பு உதட்டைக் கடித்துக்கொண்டு சிரிப்பை அடக்கினாள்.
“ராஸ்கல்! இது உன்ற பொண்டாட்டிக்கு நீ வச்சு விடணும். இந்தா, இப்போவே போய் வச்சு விடு!” என திட்டினார். தேவ் முறைத்தபடி அவளின் மண்டையில் சூட்ட வர, “டேய் பின்னாடி வச்சு விடு! பூ போல வச்சு விடு,” என மிரட்டினார்.
அன்பரசி, தேவ் தாஸ் இருவரும் கோவிலுக்குப் புறப்பட்டார்கள். ஆட்டோ வந்தது. ராசாத்தி அவளின் கையைப் பிடித்து, “அன்பு, அவன் குத்துச்சண்டைக்குப் போகக்கூடாதுன்னு வேண்டிக்கோ மா! அதான் முக்கியம்,” எனச் சொல்லி அனுப்பி வைத்தார்.
“சரிங்க அம்மாச்சி,” என ஆட்டோவில் ஏறிக்கொண்டாள். “நல்லபடியா சாமி கும்பிட்டு வாங்க,” என அனுப்பி வைத்தார்.
“போலாம், வண்டியை எடுங்க!” என தேவ் விசிலடிக்க, ஆட்டோக்காரர் வண்டியை எடுத்தார்.
அன்பரசி வண்டியில் ஏறியதும் தனது கணவனையே பார்த்துக்கொண்டு வந்தாள். ‘குத்துச்சண்டையா? அதான் நேத்து பச்சை முட்டை குடிச்சாங்களா? கர்லா கட்டைக்கு இதுதான் காரணமோ? என்னவோ தினுசா இருக்கார்,’ என மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.
படியின் பக்கம் வந்து இறக்கிவிட்டார் ஆட்டோக்காரர். பணத்தைக் கொடுத்துவிட்டு வேகமாக முன்னால் நடந்தான் தேவ்.
‘அய்யோ, என்ன இத்தனை வேகமா நடந்து போறானே?’ என ஓரடி எடுத்து வைத்தவளுக்கு கால் இழுத்துப் பிடித்தது. கண்களில் கண்ணீர் கோர்த்துக்கொண்டது.
“சீக்கிரமா வந்தால்தான் சாமியைப் பார்க்க முடியும், வா!” எனத் திரும்பிப் பார்த்தவனுக்கு முகத்தில் கோபம் அப்பிக்கொண்டது. ஆம், அன்பரசி அதே இடத்தில் அசையாமல் நின்றிருந்தாள்.
“உன்னோட மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? மகாராணியை வெத்தலை பாக்கு வச்சு அழைக்கணுமா என்ன?” என்று கடுப்புடன் கேட்டான்.
“கீழே விழுந்ததுல கால் சுழுக்கிடுச்சு,” என வலியில் அவளது முகம் சுணங்கிப் போனது.
“அப்போ நீ இங்கேயே இரு, நான் மட்டும் போயிட்டு வரேன்,” என அவன் இரண்டெட்டுகள் ஏறினான்.
அன்பரசி ஒரு பெருமூச்சுடன், “அம்மாச்சிய ஏமாத்த எனக்கு மனசு வரல.. நான் எப்படியாவது வந்துக்குவேன், நீங்க போங்க,” என்று சொல்லிவிட்டு ஓரடியாக மேலே ஏறினாள்.
தேவ் கடுப்புடன், “நீ தேவையில்லாம பண்றயோன்னு தோணுது. நம்ம உறவே இல்லைன்னு ஆகப்போகுது. நீயும் நாளையிலிருந்து உன்ற வீட்டுக்குப் போயிடுவ? அப்புறம் எதுக்கு இதையெல்லாம் பண்ற?” எனக் கேட்டான்.
“நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க,” எனச் சொல்லியவள், உதட்டை மடித்து வலியை அடக்கியபடி மெல்ல ஏறினாள்.
தேவ் சட்டென அருகில் வந்தவன், “இப்படி ஏறினா நீ ஒரு மாசம் ஆனாலும் கடவுளைத் தரிசிக்க முடியாது,” என்றவன் அவளை அலேக்காகத் தூக்கிக்கொண்டான்.
“என்ன பண்றீங்க?” என அவள் திடுக்கிட்டுப் பார்க்க, “வேற என்ன பண்ணட்டும்?” என கடுப்புடன் ஏறினான்.
“தூக்க வேணாம், இறக்கி விடுங்க.. எனக்குப் போகத் தெரியும்,” என கோபத்தில் தொணதொணவெனப் பேசினாள்.
“இம்சை! கொஞ்சம் உன் வாயை மூடிட்டு வர மாட்டியா? நசநசன்னு பேசிட்டே இருக்க?” என்றவன் அவளைத் தூக்கிக்கொண்டான்.
கண்களை இறுக்கி மூடிக்கொண்டவள், அவனது நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.
அவர்கள் இருவருக்கும் நடுவில் அமைதி மட்டுமே இருந்தது. ‘மூணு பட்டர் பன்னை முழுங்கினா இத்தனை கனம் கனக்குமா என்ன? கர்லா கட்டைக்குப் பதிலாக இவளைத் தூக்கிச் சுத்தலாம்,’ என ‘நீ பாதி நான் பாதி’ எனத் தோற்றமளிக்கும் அர்த்தநாரீஸ்வரனைத் தரிசிக்கச் சென்றார்கள்.
“வேண்டுதல் இப்படி இருக்கணும்! பாருயா, புதுசா கல்யாணமான ஜோடி. அந்தப் பையன் எப்படித் தூக்கிட்டுப் போறான் பாரு அந்தப் பொண்ணை!” என ஆளாளுக்குச் சொல்லிக்கொண்டிருக்க, மற்ற ஆண்களுக்கு கடுப்பாகிப்போனது.
‘ஏன்டா, எதுக்குடா இப்படி ஹீரோயிசம் காட்டுறீங்க?’ என அவர்கள் நினைத்துக்கொண்டார்கள்.
“கை வலிக்குதா? நான் வெயிட்டா இருக்கேனா?” என அன்பரசி கேட்க, “ச்சே ச்சே, காத்து மாதிரி இருக்க.. நான் ஊதினால் பறந்து போயிடுவ,” என்றான் தேவ்.
அவனது முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள் பெண்ணவள். சாக்லேட் பிரவுன்… இல்லை இல்லை, சந்தன பிரவுன். கட்டையான மீசை, அடர்ந்த கேசம், சிவந்த கண்கள், சுருங்கிய புருவம். இவனைப் பார்த்த நாளிலிருந்து மாறாமல் இருக்கும் ஒரே விஷயம் அந்தப் புருவம்தான்.
“ஈஸ்வரா!” என மூச்சு வாங்கிக்கொண்டு தேவ் குரல் கொடுக்க, சுயநினைவுக்கு வந்தாள் அன்பரசி.
இருவரும் கோவிலுக்கு வந்தாகிவிட்டது. உள்ளே சாமி கும்பிடச் சென்றபோது அன்பரசியைக் காணவில்லை.
அச்சச்சோ, என்னாச்சு?
தொடரும்…