Episode-59
காலையில் எழுந்ததுமே பரபரப்பாக இருந்தது தமிழ் நாடு. ஆம் அரசு பேருந்துகளில் சிறப்பு பேருந்து அதாவது பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்த படுவதாக வந்த செய்தியை கேட்டதும் முதலில் அதிர்ந்த நபர்கள் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தான். சிவராமனுக்கு அந்த செய்தி அதிர்ச்சியும் சோர்வையும் கொடுத்தது. கோவை, ஈரோடு, திருச்செங்கோடு, நாமக்கல், சேலம், கரூர் என இத்தனை கிளைகளில் ஓடிக்கொண்டிருக்கும் தனம் பேருந்தின் நிலையை நினைத்தால் கவலைக்கிடம் தான்.
உடைந்து உட்கார்ந்தார் சிவராமன். தனக்கொடி தயங்கியபடி வீட்டு வாசல் வரை வந்தவர். தனது கணவனின் இடிந்த முகத்தை பார்த்து அதிர்ச்சியுடன் மாமா!! மாமா என்னாச்சுங்க என புலம்பியபடி உள்ளே நுழைந்தார்.
சிவராமன் எதுவும் பேசாமல் கண்களில் நீர் கோர்க்க அமர்ந்திருக்க, அய்யோ மாமா என்னாச்சு? என தவிப்புடன் அருகில் அமர்ந்து கையை பிடித்தார்.
அப்பா!! என பூங்கொடி வெளியே வந்தவள் பார்வை அவளது தந்தையின் மீது இருக்க, என்ன ஆச்சு டாடி? எதுக்கு இப்படி இருக்கீங்க? என அவள் இன்னொரு பக்கம் அமர்ந்து கொண்டு கையை பிடித்தாள்.
அமுலி நான் பாவம் பண்ணிட்டேன். உன்ற தாத்தா ஆசையா வச்சிருந்த பஸ் எல்லாத்துக்கும் நான் ஓனர் ஆகனும்னு ஆசை பட்டு என்னோட பேராசை நடந்தது. ஆனால் இப்போ எல்லாமே போச்சு அமுலி. உன்ற அண்ணனோட வாழ்க்கைய சீரழிச்ச பாவி நான் தான். கூடவே அந்த பொண்ணு வாழ்க்கையை இழந்து நின்னதுக்கும் காரணம் நான் தான் என முகத்தை மூடி அழுதவர். கடவுள் எனக்கு பெரிய தண்டனைய கொடுத்துட்டார் என உடைந்து இழப்பு வாங்க ஆரம்பித்தார்.
என்னங்க மாமா இப்படியெல்லாம் பேசுறீங்க? அப்படி ஒண்ணுமில்ல! நீங்க கவலை படாதீங்க என்ன நடந்துச்சு? என தனக்கொடி கேட்க.. அழுகையுடன் இலவச பேருந்து விசயத்தை கூறினார். நம்ம பஸ் எல்லாமே டவுன் பஸ் தான். இனி யாருமே ஏற மாட்டாங்களே! மொத்தமா லாஸ் ஆகி போச்சு என விரக்தியுடன் பேசினார்.
அய்யோ இல்லைங்க!! என தனக்கொடி சேர்ந்து அழ..
நான் உயிரோட இருக்கிறது எந்த பிரயோஜனமும் இல்ல என அவர் கூறி விட, மாமா அப்படி இல்லைங்க மாமா!! நான் இப்போவே மகிழுக்கு போன் போடுறேன். என வேகமாக செயல்பட்டார்.
சவுந்தர்யா மகிழ் வேந்தனின் மடியில் தலை வைத்து உறங்கி கொண்டிருந்தாள். போன் வந்ததும் உடனே கிளம்பினான்.
என்னங்க நானும் வரேன் என அவளும் கிளம்பினாள்.
பூங்கொடி, தனம் ஒரு பக்கம் நின்றிருக்க, அன்பு செல்வன், மகிழ் வேந்தன், சவுந்தர்யா மூவரும் இன்னொரு பக்கம் நின்றிருந்தார்கள். சிவராமணின் கவலை தோய்ந்த முகம் மிகவும் வேதனையை கொடுத்தது.
மகிழ் தனது தந்தையின் முன்னால் சென்றவன். இவ்வளவு தான் விசயமா? இதுக்கு நீங்க எதுக்கு கவலை படுறீங்க? நம்ம பஸ்ச அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக வேண்டிய நேரம் வந்திடுச்சு. என்றான்.
என்ன சொல்ற? என சிவராமன் நிமிர்ந்து பார்க்க, டூரிசம் பஸ் அப்புறம், புக் மை டிராவல் இதுல எல்லாத்துலயும் நம்ம பஸ்ச லிங்க் பண்ணலாம். ஸ்லீப்பர் பஸ்சாக மாத்தி, கோவை to சென்னை மார்க்கம், சேலம் to பெங்களூர், கரூர் to மதுரை, கோவை to கேரளா, இப்படி எல்லாத்தையும் மாத்தி அடுத்த கட்டத்துக்கு கொண்டு போனோம்னா நல்ல முன்னேற்றம் கிடைக்கும். கூடவே லாஜிஸ்டிக்ஸ் கூட பண்ணலாம் பா என தெளிவாக பேசிய மகிழ் வேந்தனை பார்த்து ஒரு தந்தையாக பிரம்மித்தவர். உடனே எழுந்து மகனின் அருகில் சென்று கையை பிடித்து கொண்டார்.
மாப்ளை உங்க திங்கிங் எல்லாமே உங்க தாத்தா போல என்றான் அன்பு.
பூங்கொடி அவனை முறைத்து பார்க்க, இல்ல இல்ல மாப்ளை அப்டியே சிவராமன் மாமா போல என திருத்தினான் அன்பு.
என்ற அப்பா போல என் மகன் திறமை இருந்தால் சந்தோசம் தான் என தனக்கொடி மெட்சுதலுடன் கூறினார்.
சிவராமன் தனது மகனை இறுக்கி அணைத்து கொண்டவர். நீயே பாரு மகிழ். இனி எல்லாமே உன்னோட பொறுப்பு. என கூறினார்.
அப்பா நான் ஸ்கூல் பஸ் ஓட்டிட்டு இருக்கேன். நானும் அவளும் ஸ்கூல் பக்கமே போகலாம்னு முடிவு எடுத்திருக்கோம் என மகிழ் கூற.. தலையை குனிந்தபடி பின்னால் நின்றாள் சவுந்தர்யா.
சிவராமன் நேராக சவுந்தர்யாவின் முன்னாள் சென்றவர். கண்ணு என்னை மன்னிச்சிடு மா!! ஏதோ நான் தப்பு பண்ணிட்டேன். அதை ஓத்துக்கிட்டு உன்கிட்ட மனசார மன்னிப்பு கேட்கிறேன். உன்னை நான் எந்த பாகுபாடும் பார்க்க மாட்டேன் மா. நீ ஏன் பையன் கூட சந்தோஷமா இருந்தால் போதும். என்றவர் வேகமாக சென்று உள்ளிருந்து பத்திரத்தை எடுத்து வந்து, உன்னை மட்டும் நான் ஏத்துக்கல. குழந்தையையும் சேர்த்து தான் சொல்றேன். இது குழந்தைக்கு உண்டான சொத்து பத்திரம். நீ என்ற பையனோட இங்கேயே இரு கண்ணு என உருக்கமாக பேசி கையெடுத்து கும்பிட்டார்.
சவுந்தர்யா சொல்லு மா!! என அன்பு செல்வன் பரிந்து பேசினான்.
அப்பா அவளை கட்டாயப்படுத்த வேணாம். என மகிழ் பேச வர, சவுந்தர்யா கையெடுத்து கும்பிட்டவள். நான் உங்க பையன தனியா கூட்டிட்டு போக மாட்டேங்க. ஆனால் இது எல்லாத்துக்கும் நான் ஏத்துக்கிட்டு இயல்பு நிலைக்கு வர எனக்கு கொஞ்ச நாள் ஆகும். அவர் உங்க பையன நான் பிரிக்க மாட்டேன். ஆனால் எனக்கு கொஞ்சம் நாள் வேணும். என கூறி முடித்தாள்.
சிவராமன் வேதனையுடன் நிற்க, பா நீங்க வாங்க. அவன் இனி வேலைய பார்க்கட்டும். உங்களுக்கு நான் இருக்கேன். நம்ம இங்கே இருப்போம். மகிழ தனிகுடித்தனம் வச்சிடுங்க அவங்க மச்சு வீட்டுக்கு போயிடட்டும் இது தான் சரி என்றாள் பூங்கொடி.
அன்பு செல்வன் அவளை புருவம் சுருக்கி பார்க்க, தனக்கொடி சிவராமின் பக்கம் வந்தவர். மகிழ், சவுந்தர்யா ரெண்டு பேரும் தனி குடித்தனம் இருக்கட்டும் மாமா. அது தான் சரி வரும். எல்லாமே பழையபடி ஆக கொஞ்சம் நாள் எடுக்கும். நீங்களும் நானும் கீழே இருந்துப்போம். போதும் உங்க பொண்ணு இங்கே இருந்தது. அமுலி இப்போவே என்ற தம்பி கூட அவள் பொழப்பை பார்க்க போகட்டும் என கூறினார்.
மகிழ் சவுந்தர்யாவின் கையை பிடித்து எல்லாம் ஓகேவா? ஒன்னும் பிரச்னை இல்லையே என்பதை போல கேட்டான். அவளும் புன்னகையுடன் தலையசைத்தாள்.
அன்பு செல்வன் கண்ணக்குழி தெரிய புன்னகை செய்தபடி பிடரி முடியை வருடி கொண்டே பூங்கொடியின் மீது லுக்கு விட, பாவி பயலே! உன் கண்ணு அவிஞ்சு போகனும் டா! விலங்காத நாயே! கிரகம் புடிச்சவனே! என மனதிற்குள் அர்ச்சித்து கொண்டே நின்றாள். அவளுக்கு மறுத்து பேச முடியாத நிலை. வேறு என்ன செய்ய முடியும் அவளால்.
இன்னும் என்னடி நின்னுட்டு இருக்க? புறப்படுற வழிய பாரு!! என தனக்கொடி சொல்லி கொண்டே கொண்டையிட்டவர். தம்பி உள்ளே வா கண்ணு, டேய் மகிழ் நீ மருமகளை மேலே கூட்டிட்டு போய் வீட்டை சுத்தி காட்டு என்று விட்டு உள்ளே சென்றார்.
சவுந்தர்யா அவனது கைகளை நம்பிக்கையுடன் பற்றி கொண்டாள். மகிழ் புன்னகையுடன் உள்ளே அழைத்து சென்றான்.
டாடி நான் இங்கேயே இருக்கேன். எனக்கு கார்ல தான் காலேஜ் போகணும். நம்ம வீட்டுக்கும் காலேஜுக்கும் ரொம்ப தூரம். இல்லன்னா நான் ஹாஸ்டல் சேர்ந்துக்கிறேன். பிளீஸ் டாடி!! டாடி பிளீஸ் என தந்தையின் பின்னால் சென்றாள் பூங்கொடி.
மாமா யுனோவா கார் வாங்கலாம்ன்னு இருக்கேன். ரெடி கேஷ் கொடுத்து எடுக்க போறேன் எனக்கு காரே வாங்க தெரியாது மாமா. வாங்களேன் நம்ம ரெண்டு பேரும் போயிட்டு வரலாம் கார் எடுக்க என சொல்லி கொண்டே அன்பு செல்வன் வீட்டுக்குள் வந்து சேர்ந்தான்.
சிவராமன் புன்னகையுடன், இன்னோவா காரா? அருமை மாப்ளை. என்றவர் பூங்கொடியின் பக்கம் திரும்பி, உன்னை டெய்லி நான் கொண்டு போய் விடறேன் அமுலி என்றவர் அன்பு செல்வனிடம், அந்த பணத்துக்கு நிலம் வாங்கி போடலாம் மாப்ளை. உங்க வேலைக்கு உபயோகமா தென்ன தோப்பு, தோப்பு வீடு அது போல வாங்கினோம்னா உங்களுக்கு உதவியா இருக்கும் என்றார்.
இதுவும் நல்ல யோசனை தான் மாமா. நான் அப்படியே செஞ்சிருறேன் என சொல்லிவிட்டு காலை உணவை அக்காளின் வீட்டில் முடித்தான் அன்பு.
போயிட்டு வா அமுலி! நம்ம வீட்டுக்கு நடந்தே வந்திடலாம் என சொல்லி கொண்டே அனுப்பி வைத்தார் சிவராமன்.
முகத்தை தூக்கி கொண்டு சக்கரவர்த்தியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் பூங்கொடி.
காலை முதல் மாலை வரை அன்பு செல்வனை தவிர்த்து வந்தாள். இன்று மாவிளக்கு, கறி விருந்து என ஊரே திருவிழா கோலத்தில் கொண்டாடி கொண்டிருக்க, இரவு அனைவரும் ஒன்றாக கோவில் சென்று வந்தார்கள்.
நான் பெரிய வீட்ல தூங்கினதே இல்ல. இந்த ரூம் எனக்கு பிடிச்சிருக்கு. நான் இங்கேயே இருந்துக்கவா அம்மாச்சி! என பூங்கொடி கேட்க..
இங்கேயா கண்ணு? அமுலி இங்கே அடைச்ச மாதிரி இருக்கும் கண்ணு. விஸ்தாரமா இல்ல நீ அங்கே அன்பு கூட தெற்கு வீட்டுக்கு போய் படுத்துக்க சாமி! என அன்னம் கூறினார்.
ஒரு கட்டத்துக்கு மேல் பூங்கொடியால் சமாளிக்க முடியவில்லை. சந்தனக்கொடி குடும்பத்துடன் இருக்க, ஜெயக்கொடி. சங்கீதா என அனைவரும் அங்கு தான் இருந்தார்கள்.
இரவு உணவை முடித்து விட்டு இறுக்கமான புடவையை வீசி நைட்டிக்கு மாற வேண்டும் என வேகமாக அறைக்குள் நுழைந்தாள் பூங்கொடி.
அன்பு செல்வனும் அவளின் பின்னால் நுழைந்தான். கொடி இடையாளே இடையினத்தில் இளைப்பாற இடம் கொடுப்பாயா என பிதற்றி கொண்டே அவள் முன் வந்தான் அன்பு.
பூங்கொடி..?
தொடரும்..