Epi -13
பிரம்மாண்டமான அந்த விஷ்வ பவனம் நள்ளிரவின் நிசப்தத்தில் ஆழமாக மூழ்கிப் போயிருந்தது. ஹாலில் இருந்த பெரிய கடிகாரம் ‘டிக் டிக்’ என்று ஒலிக்க, அந்தச் சத்தமும் ஏசி குளிர்ச்சியும் மட்டுமே அந்தப் பெரும் மாளிகையின் தனிமையை இன்னும் அதிகப்படுத்திக் காட்டின.
சாவித்ரி தன் கையில் இருந்த அந்தப் பழைய கறுப்பு நிற டைரியை நெஞ்சோடு இறுக்கிப் பணைத்துக் கொண்டாள். அவளது இதயம் ஒரு போர்க்களத்தின் முரசொலியைப் போலப் பலமாக அடித்துக் கொண்டது. அவள் மெல்லத் தன் பாதங்களை எடுத்து வைத்து, அந்த மாளிகையின் மிக ரகசியமான, சத்யமூர்த்தியின் அனுமதி இல்லாமல் ஒரு எறும்புகூட நுழைய முடியாத அந்த விசேஷ மருத்துவ அறைக்குள் நுழைந்தாள்.
சுற்றியிருந்த மருத்துவ உபகரணங்களின் ஒளியும், ஏசியின் அதீத குளிரும் அவளை வரவேற்றன. அவள் உள்ளே நுழைந்து கதவைச் சத்தம் வராமல் மெல்லச் சாத்தினாள்.
அங்கே… அந்த அதிநவீன மருத்துவப் படுக்கையில், அசைவற்று, உலகமே மறந்து ஐந்து வருடங்களாகக் கோமா நிலையில் படுத்துக் கிடந்தான் விஸ்வமூர்த்தி!
விஷ்வாவின் முகத்தைப் பார்த்த அடுத்த நொடி, சாவித்திரியின் நெஞ்சுக்குள் இருந்த ஆறாத வேதனையும், துயரமும் ஒன்றாகக் கலந்து வெடித்தன. மெதுவாக அந்தப் படுக்கையின் அருகில் நடந்தவள், தன் கையில் இருந்த டைரியை மேசையின் மேல் வைத்துவிட்டு, விஷ்வாவின் குளிர்ந்து போயிருந்த கைகளைப் பற்றிக் கொண்டாள். சாவித்திரியின் கண்களில் இருந்து நீர் கொட்டியது. சாவித்ரி விஷ்வாவின் குளிர்ந்த கைகளைத் தன் கைகளுக்குள் அடக்கிக் கொண்டு, அவனது காதருகே குனிந்து மெதுவாகப் பேசத் தொடங்கினாள்.
“விஷ்வா!! உங்களுக்கு நியாபகம் இருக்கா? உங்களுக்கு உங்க அம்மாவை அடுத்து ரொம்பப் புடிச்ச பொண்ணு யாருன்னு?” எனக் கேட்டவள் கீழ் உதட்டைக் கடித்துக்கொண்டு, “நீங்க நாலு வருஷமா ‘லவ் பண்ணு லவ் பண்ணு’ன்னு பின்னாடி சுத்தின பொண்ணு பேர் நியாபகம் இருக்கா விஷ்வா?” என்ற சாவித்ரி, தனது அக்காவின் டைரியில் இருந்து படிக்க ஆரம்பித்தாள்.
“‘விஷ்வா, நான் தான் தாமரைச்செல்வி… எதுக்கு விஷ்வா என்னை இப்படித் தொந்தரவு பண்ற? உன்னை எவ்வளவுதான் நான் வேணாம்னு வெறுத்து ஒதுக்கினாலும், நீ ஏண்டா விஷ்வா என் பின்னாடியே வர்ற?'” என்று தாமரை அவளது டைரியில் எழுதி இருந்ததை படித்துக் கொண்டிருந்தாள் சாவித்ரி.
(Flashback)
கோவையின் புறநகர்ப் பகுதியில் இருந்த அந்தச் சிறிய ஓட்டு வீடு, ஐந்து பெண் குழந்தைகளின் சத்தத்தோடு வறுமையின் பிடியில் எப்போதுமே தத்தளித்துக் கொண்டிருந்தது. அந்த வறுமை இருளுக்குள், ஒரு சுடராகப் பிரகாசித்தாள் தாமரை. அடர் மாநிறம், கூர்மையான நாசி, எப்போதும் எதையாவது சாதிக்கத் துடிக்கும் தீர்க்கமான கண்கள், தோளோடு வெட்டப்பட்ட சுருள் கூந்தல் என அவளது தோற்றமே ஒரு தனித்துவமான ஆளுமையைப் பறைசாற்றியது.
“என்ன அக்கா, இத்தனை நேரத்துல எழுந்துட்ட?” என ரோஜா கண்களைத் தேய்த்துக்கொண்டே கேட்க…
“இன்னிக்கு ரிசல்ட் பாப்பா… எனக்குக் கொஞ்சம் பதற்றமா இருக்கு,” எனத் தாமரை சொல்ல, ரோஜா தோள்களைக் குலுக்கிக்கொண்டு, “எது வந்தாலும் கவலைப்படக் கூடாது, ஓடிக்கிட்டே இருக்கணும்,” என்றாள்.
“இல்லை, எனக்கு இன்ஜினியர் ஆகணும். நம்ம வீட்டு கஷ்டத்துல பாதியாவது குறையணும். நான் நம்ம அப்பாவை வீட்ல வச்சுப் பார்த்துக்கணும்,” எனத் தீர்க்கமாகப் பேசினாள் தாமரை.
“தங்கப் பொண்ணு!” எனச் சொல்லிக்கொண்டே வந்த பாரி, “இன்னிக்கு பிஸ்கட் வாங்கிட்டு வந்திருக்கேன்,” என நீட்டினார். செல்வி கொண்டை போட்டுக்கொண்டு சமையலறை சென்றவர், சுடச்சுட டீ போட்டுக்கொண்டு வந்து கொடுத்தார். தாமரையோ, “வேண்டாம்” என்று மறுத்துப் பேச, “அட, தங்கப் பொண்ணு எடுத்துக்குடி… கண்டிப்பா நல்ல மார்க் வரும்,” என ஊக்குவித்துப் பேசினார் பாரி.
“அக்கா, அதான் அப்பா சொல்றாரே… குடி கா… டென்ஷன் ஆகாதே,” என ரோஜா சொல்ல, “சரி,” என டீ குடித்தவள், காலையிலேயே குளித்து முடித்துக் கோவிலுக்குப் போய் வந்து ரிசல்ட்டுக்காகக் காத்திருந்தாள்.
அவளது உழைப்பிற்குப் பலனாக, கோவையின் அரசுப் பள்ளியில் படித்து மாவட்ட அளவில் இரண்டாம் மதிப்பெண் பெற்றுச் சாதனை படைத்தாள் தாமரை.
“அப்பா, அம்மா, ரோஜா, துளசி அக்கா… நான், நான் எங்க ஸ்கூலிலேயே ரெண்டாவது மார்க்!” என உற்சாகமாகக் கூறினாள்.
மொத்த குடும்பத்துக்கும் சந்தோஷம் இருந்தாலும், செல்விக்கு பெரிதாகச் சந்தோஷம் இல்லை. அதற்குக் காரணம், படிக்க வைக்கப் பணம் இல்லை. ஐந்து பிள்ளைகளில் இப்பொழுதுதான் துளசிக்கு அர்ஜுனுடன் திருமணம் ஆகி இருக்கிறது. தாமரைக்கும் திருமணம் செய்துவிடும் முனைப்பில் செல்வி இருக்க, ரோஜா சண்டைக்குப் போய் எதிர்த்துத் தனது அக்காவுக்குப் பரிந்து பேசினாள். அவளது மதிப்பெண்ணிற்குச் சென்னையில் உள்ள ஆகச்சிறந்த, உலகப் புகழ்பெற்ற அரசுப் பொறியியல் கல்லூரியில் (Merit Seat) படிக்கக் கட்டணமில்லா வாய்ப்பு கிடைத்தது எனக்கூறி, மொத்த குடும்பமும் அவளைப் படிக்கச் சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள்.
பாரி தனது மகளின் கையைப் பற்றியவர், “என்ன பொண்ணு, அவ்வளவு தூரம் போகணுமா கண்ணு?” எனப் பரிவுடன் கேட்டார்.
தாமரை அவரின் கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, “நான் படிச்சாகணும்பா… நம்ம சீக்கிரம் சொந்த வீட்டுக்குப்போகணும். அதுக்கு நான் வேலைக்குப்போறது முக்கியம்பா,” எனக் கூறினாள்.
“நானும் இருக்கேன்! இந்த வருடம் 12th-ல உன்னை விட நிறைய மார்க் வாங்கி மெரிட்ல டீச்சர் ட்ரெய்னிங் சேரப்போறேன். உனக்கு முன்னாடி நான் கவர்மெண்ட் ஸ்கூல்ல ஜாயின் பண்ணலைன்னா என் பேர் ரோஜா இல்லைடி தாமரை!” என்றாள் ரோஜா சவாலாக.
“போடி!” எனத் தாமரை செல்லமாகத் தனது தங்கையை அதட்ட, அனைவரும் களுக் களுக் எனச் சிரித்து வழியனுப்பி வைத்தார்கள்.
சென்னைக் கல்லூரியின் முதல் நாள். பிரம்மாண்டமான அந்த வளாகத்தின் நுழைவாயிலில், எண்ணெய் போட்டு நேர்த்தியாக வாரிய ஜடையுடன் வந்து நின்றாள் தாமரை. அவளது கால்களில் இருந்த சாதாரணச் செருப்பும், எளிமையான பருத்திப் புடவையும் அவளது வறுமையை அப்பட்டமாகக் காட்டின.
அவளின் தோற்றத்தைக் கண்டு ஒரு சிலர் கிண்டல் செய்தாலும், கேலி அதிகப்படியாகச் சென்றாலும், புறங்கையால் ஒரு தள்ளு தள்ளிவிட்டு அவளது படிப்பில் முழு கவனத்துடன் இருந்தாள் தாமரை.
“என்னடி இது, மெட்ராஸ் காலேஜுக்கு வர்ற லட்சணமா? கட்டப்பையில லக்கேஜ் (Luggage) தூக்கிட்டு வரா!” என்று பின்னால் வந்த சில ஆடம்பர மாணவிகள் அவளைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தனர். ஆனால், தாமரை எதைப் பற்றியும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. அவளது இந்த ஒட்டாத தன்மை அங்கிருந்த மற்ற மாணவிகளை ஆச்சரியப்பட வைத்தது.
‘இப்படி ஒரு பெண்ணா, எதை நினைத்தும் கவலையில்லாமல் இருக்கிறாளே’ என்று கூட மற்றவர்களுக்குத் தோன்றியது.
கல்லூரியில் சேர்ந்த ஒரே வாரத்தில், அருகில் இருக்கும் ஒரு காபி ஷாப்பில் (Coffee Shop) வேலையைத் தேடிக்கொண்டாள் தாமரை. ஆமாம், அவள் மிகவும் கெட்டிக்காரி. ஏதாவது ஒரு வகையில் தான் குடும்பத்திற்கு உபயோகப்பட வேண்டும் என்று நினைப்பவள். அவளது குடும்ப சூழ்நிலையின் காரணமாகப் படிப்பிற்கோ, இதர செலவுகளுக்கோ, பாடப் புத்தகங்களுக்கோ பணம் கேட்க முடியாத நிலையில் இருந்தாள். அப்பொழுதுதான் பகுதி நேரமாக வேலைக்குச் செல்லலாம் என்று முடிவு எடுத்தாள்.
அங்குதான் முதன்முறையாக விஷ்வா அவளைப் பார்த்தான்!
விஷ்வா தன் நண்பர்களுடன் அந்த ஆடம்பரமான காபி ஷாப்பிற்குள் நுழைந்தபோது, வெல்கம் சார் என வணக்கம் வைத்து அழைத்த பெண்ணுக்கு பின்னால் billing counter பக்கம் இருந்தாள்.
அவனது கார் சாவியைச் சுழற்றியபடி, எப்போதும் போல அவனது ‘காதல் மன்னன்’ தோரணையில் இருந்தான்.
இன்னொரு பக்கம் கரும்பச்சை நிற யூனிஃபார்ம் (Uniform) அணிந்து, தலையைச் சற்றே நிமிர்த்தி கஸ்டமர்களின் ஆர்டரை (Order) எழுதிக் கொண்டிருந்த தாமரையைக் கண்டதும் அவனது நடை சட்டென்று நின்றது.
மாநிறத்து அழகும், எதற்கும் அசையாத அந்தத் தீர்க்கமான கண்களும், அந்தப் பிரம்மாண்ட காபி ஷாப்பின் விளக்கு வெளிச்சத்தில் நேர்த்தியாக இருந்தாள்.
ஆர்டரை வாங்கிக்கொண்டு தாமரை காபியைக் கொண்டு வந்து அவனது மேசையின் மேல் வைத்தபோது, முதன் முதலில் அவளை பார்த்தான். அதன் பின் நண்பர்களுடன் பிசியாகி விட்டான்.
Bill கட்டும் நேரம் வந்தது. விஷ்வா சிரித்து கொண்டே ஒரு ஐந்நூறு ரூபாய் நோட்டை எடுத்து, “Keep the change… இது உங்களோட டிப்ஸ் (Tips)!” என்று தன் வசீகரப் புன்னகையுடன் நீட்டினான். அவன் எப்பொழுதும் போல மிகவும் அவனது சாதாரண தோரணையில் தான் வைத்தான்.
Thank you சார் என்ற தாமரை கட்ட வேண்டிய தொகையை மட்டும் எடுத்து கொண்டு இனாம் பணமான 500 ரூபாயை அதே இடத்தில் வைத்து விட்டு நகர்ந்தாள்.
விஷ்வா புருவத்தை சுருக்கி கொண்டு, சொடக்கு போட்டான்.
தாமரை அங்கே நிற்காமல் அடுத்தடுத்து வாடிக்கையாளர்களை கவனிக்க சென்று விட, ஹலோ எஸ்கியூஷ்மி என சட்டை காலரை தூக்கி விட்டபடி, ஹலோ மேடம்? என தாமரையின் முன்னால் போய் நின்றான்.
விஸ்வாவின் அதிரடியான ஆக்ஷனில் தாமரை அதிர்ந்து போய் நின்றவள். வாட் சார்? எதுவும் பிரச்னையா? என்னாச்சு சார்? என தாமரை திடுக்கிட்டு கேட்டாள்.
“Tips வச்சேன் எடுத்திட்டு போங்க”
சாரி சார்!! எனக்கு டிப் வேணாம்.. அண்ட் thank you சார் என்றவள் அங்கிருந்து விறுவிறுவென்று நகர்ந்தாள்.
விஷ்வா அப்படியே திகைத்துப் போய் நின்றான். அவனது அசாத்திய அழகையோ, அவனது பணப் பின்னணியையோ துளிகூடச் சட்டை செய்யாமல், தன் சுயமரியாதையை ஒற்றை வார்த்தையில் நிலைநாட்டிய அந்தப் பெண், அவனது மனதில் ஆழமாகப் பதிந்து போனாள்.
அன்றிலிருந்து விஷ்வாவின் ‘சைட்டிங்’ (Sighting) படலம் தொடங்கியது. கல்லூரி வகுப்புகள் முடிந்ததும், விஷ்வா நேராக அந்த காபி ஷாப்பிற்கு வந்துவிடுவான். ஒரு ஓரமாக அமர்ந்துகொண்டு, தாமரை காபி போடுவதையும், அவள் மற்றவர்களிடம் பேசும் அந்தத் தன்மானத் தோரணையும் மணி கணக்காகப் பார்த்துக் கொண்டிருப்பான். அவளது ஒவ்வொரு அசைவையும் தன் கண்களால் பருகத் தொடங்கினான். அவளை எப்படியாவது காதலிக்க வைக்க வேண்டும் என்ற விஷ்வாவின் அந்த நான்கு வருடப் போராட்டத்தின் முதல் புள்ளி அங்கேதான் வைக்கப்பட்டது.
விஷ்வாவின் மருத்துவ அறையில், அந்த நள்ளிரவு நேரத்தில், விஷ்வாவின் அசைவற்ற கைகளைப் பற்றிக் கொண்டு இந்தக் கடந்த காலக் கதையை வாசித்துக் கொண்டிருந்த சாவித்திரியின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டியது.
“மாமா… அக்கா உங்களை எவ்வளவு வெறுத்து ஒதுக்கினாலும், நீங்க அவளோட இந்தத் தன்மானத்துக்குத் தானே மாமா அடிமையானீங்க? ப்ளீஸ் மாமா… கண் திறங்க…” என்று விஷ்வாவின் காதருகே உருகினாள் சாவித்ரி.
அப்போது… கதவின் கைப்பிடி மெதுவாக அசையும் சத்தம் கேட்டது!
தொடரும்.