Epi -18
தாமரை, தாமரை என 24 மணி நேரமும் அவளின் நினைவுகளில் சிக்கித் தவித்தான் விஷ்வா. கண்களை மூடினால், இரண்டு வருடங்களுக்கு முன்னால் அந்த காபி ஷாப்பில் சுட்டிப் பெண்ணாகத் துடிப்புடன் இருக்கும் காட்சிகள் கண்முன் வந்து போனது. அப்படியே கடைக்கண்ணில் கண்ணீர்த் திவலைகள்… ‘என்னை ஏன் அவளுக்குப் பிடிக்கலை?’ என நொந்து போனான்.
ராஜேஷ் அவனுக்கு மாத்திரைகளை எடுத்து நீட்டி, “இதை கொஞ்சம் சாப்பிட்டு மாத்திரை போடு விஷ்வா. அப்போதான் காய்ச்சல் குறையும்,” என எவ்வளவோ எடுத்துக்கூறினான். ஆனால், விஷ்வா காதில் போட்டுக்கொள்ளவில்லை; ஆகாரம் எதுவும் இல்லாமல் மூன்று நாட்கள் அப்படியே கிடந்தான். மாத்திரை போட்டுக்கொள்ளாததால் காய்ச்சல் அடுத்த கட்டத்திற்குச் சென்று, மயங்கிச் சுருண்டு விழுந்தான்.
விஷ்வாவிற்குத் தீராத காய்ச்சல் என்ற செய்தி, கல்லூரி முழுவதும் காட்டுத்தீ போலப் பரவியது. அவன் இரண்டு வாரங்களாகக் கல்லூரிக்கு வராததால், அவனது அண்ணன் சத்யமூர்த்தி நேராகச் சென்னைக்கு வந்துவிட்டான். எப்போதும் தன் தம்பியின் மேல் உயிரையே வைத்திருக்கும் சத்யமூர்த்தி, விஷ்வாவின் இந்தத் திடீர் உடல்நலக் குறைவைக் கண்டு பதறிப்போனான். சென்னை அப்போலோ மருத்துவமனையின் சிறந்த மருத்துவர்களைக் கொண்டு பரிசோதித்தும், ‘உடம்பில் எந்தப் பாதிப்பும் இல்லை, இது ஏதோ மன உளைச்சலால் வந்த காய்ச்சல்’ என்றுதான் கூறினார்கள். சத்யமூர்த்தி சற்றும் தாமதிக்காமல், விஷ்வாவை அப்படியே காரில் ஏற்றி, ஈரோட்டில் இருக்கும் தங்களின் பிரம்மாண்ட விஷ்வ பவனத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டான். அங்கே அவனுக்காக ஒரு தனி மருத்துவக் குழுவே நியமிக்கப்பட்டது.
ஆனால், நாட்களும் வாரங்களும் உருண்டோடியதே தவிர, விஷ்வாவின் காய்ச்சல் துளிகூடக் குறையவே இல்லை. அவனது காந்தக் கண்கள் ஒடுங்கி, தேகம் மெலிந்து, சுயநினைவற்றுப் படுக்கையிலேயே கிடந்தான்.
அன்று விஷ்வாவின் நெருங்கிய நண்பர்களான ராகேஷ், தமிழ்ச்செல்வன், ஜான், பாண்டியன், செழியன் மற்றும் ராஜேஷ் ஆகியோர் ஈரோட்டிற்கு வந்து விஷ்வாவைப் பார்த்துவிட்டுத் திரும்பியிருந்தனர். விஷ்வாவை இப்படிப்பட்ட நிலையில் பார்த்ததும் ராஜேஷுக்கு இருப்பு கொள்ளவில்லை. தாமரையின் மேல் உள்ள காதலும் பாசமும்தான் விஷ்வாவை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறது என்பதை நினைத்தபோது, அவனுக்குத் தாமரையின் மேல் சொல்லவொண்ணா ஆத்திரம் வந்தது.
மறுநாள் காலை, சென்னைக்குத் திரும்பிய ராஜேஷ், நேராகக் கல்லூரி வராந்தாவில் புத்தகங்களை அணைத்தபடி நடந்து வந்துகொண்டிருந்த தாமரையின் முன்னால் போய் ஆக்ரோஷமாக நின்றான். அவனது கண்கள் கோபத்தால் சிவந்திருந்தன.
“தாமரை!” என்று ராஜேஷ் கத்தினான். அவனது குரலில் இருந்த முரட்டுத்தனம் தாமரையை ஒரு நொடி திடுக்கிட வைத்தது.
“என்ன அண்ணா… என்னாச்சு?” என்று தாமரை தன் தீர்க்கமான குரலில் கேட்டாள்.
“இன்னும் என்ன ஆகணும்? நீ பெரிய உலக அழகின்னு நினைப்பா?” என அதிரடியாகக் கேள்வி கேட்டான்; வாய்க்கு வந்ததைக் கேட்டு வைத்தான்.
தாமரை திடுக்கிட்டு, “அண்ணா, என்ன இப்படியெல்லாம் பேசுறீங்க? நீங்க பொண்ணுங்களை மதிக்கத் தெரிஞ்சவர்தானே?” என அவள் சொல்லி முடிக்க…
“ஓ! மரியாதை, மதிப்பு இதெல்லாம் பெரியவங்க, அப்புறம் பொண்ணுங்களுக்கு மட்டும்தான், அப்படித்தானே? இந்த இள ஆண் வர்க்கம் அப்படின்னா எப்படி? அவங்களைப் பற்றி ஒரே வார்த்தையில சொல்லணும்னா தறுதலையா?” எனக் கேட்டான்.
தாமரைக்கு ஒன்றுமே புரியவில்லை. “அண்ணா?” என அவள் அதிர்ச்சியானாள்.
“விஷ்வாவை கடைசியா நீ எப்போ பார்த்த? கொஞ்சம் சொல்லு,” எனக் கேட்டான் ராஜேஷ்.
‘விஷ்வா’ என்ற பெயரைக் கேட்டதும் உள்ளுக்குள் இனம் புரியாத பதற்றம் பரவியது பெண்ணவளுக்கு. அதற்குக் காரணம், அவனைப் பார்த்து மூன்று மாதங்களுக்கு மேல் இருக்கும். தாமரையின் முகம் தீவிர சிந்தனையில் இருக்க… ராஜேஷ் ஆத்திரத்துடன், “உனக்கு எப்படித் தெரியும்? அவன் ரெண்டு மாசமா படுத்த படுக்கையா இருக்கான் தெரியுமா? எல்லாம் உன்னால…” என்றான்.
“அண்ணா, நிதானமாப் பேசுங்க… யாருக்கு என்னாச்சு?” என்று தாமரை புரியாமல் கேட்டாள்.
“விஷ்வாவுக்குத்தான்! அவனுக்கு ரெண்டு மாசமா காய்ச்சல் குறையலை. இப்போ ஈரோட்டுல அவன் வீட்ல படுத்த படுக்கையா கிடக்கான். சாப்பாடு இல்லை, தண்ணீர் இல்லை… எப்படி கம்பீரமா இருப்பான் தெரியுமா? எல்லார்கிட்டயும் சிரிச்ச முகமா பேசுவான். இதுவரை அவன் எந்தப் பொண்ணையும் ஏறெடுத்துப் பார்த்ததில்லை… அப்படி இருந்தவன் இன்னிக்கு இந்த நிலையில இருக்க நீ மட்டும்தான் காரணம்!”
“அண்ணா, நான் என்ன பண்ணேன்?” எனத் தாமரையின் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.
“ஆனா அவனுக்கு வந்திருக்கிறது சாதாரண உடல்நலக் காய்ச்சல் இல்லை… காதல் காய்ச்சல்! உன்னோட இந்தத் திமிர் பிடிச்ச நிராகரிப்புதான் அவனோட இந்த நிலைக்குக் காரணம். அவனைக் காவு வாங்கிட்டா உனக்குச் சந்தோஷம், அப்படித்தானே? எதுக்கு இந்தப்போண்ணுங்க எல்லாம் இத்தனை சுயநலமா இருக்கீங்க? அவன் கூடப் பழகிப் பார்த்து, அவனைப் பிடிக்கலைன்னு சொன்னால் கூட ஒரு நியாயம் இருக்கு. ஆனால், அவனைப் பற்றி என்ன ஏதுன்னு தெரியாம ஒரு பையனை இந்த அளவுக்குக் கொண்டு வந்துட்டல்ல… நீ சந்தோஷமா இரு,” என்று ராஜேஷ் கண்களில் கண்ணீருடன் கோபத்தைக் கொட்டினான்.
விஷ்வாவின் நிலை தெரிந்ததும் உள்ளுக்குள் ஒரு அதிர்வைக் கொடுத்தது பெண்ணவளுக்கு. தாமரையின் நெஞ்சுக்குள் ஒரு மாபெரும் இடியைத் தாக்கின. அவளது அசைக்க முடியாத இரும்பு மனம் அந்த ஒரு நொடியில் உருகித் தவித்தது. அவனது முகம் கண் முன் நிழலாடியது.
“ராஜேஷ் அண்ணா…” என்று அழைத்துக்கொண்டு, அழுகையுடன் அவன் பின்னால் ஓடினாள் தாமரை.
“எனக்கு எந்த விளக்கமும் தேவையில்லை தாமரை. உனக்கு மனசாட்சின்னு ஒண்ணு இருந்தா, அது சொல்றபடி நீ நடந்துக்கோ…” என்றுவிட்டு ராஜேஷ் திரும்ப…
“அண்ணா, எனக்கு விஷ்வா நம்பர் வேணும். ப்ளீஸ்…” என்றாள். ராஜேஷ் நம்ப முடியாமல் தனக்கு முன்னால் இருப்பவளைப் பார்க்க, “அண்ணா ப்ளீஸ்…” என்றாள் மீண்டும்.
ராஜேஷ் ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் விஷ்வாவின் எண்ணைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டான்.
அன்று இரவு விடுதி (Hostel) அறையில் தாமரைக்குத் தூக்கமே வரவில்லை. நெஞ்சுக்கூட்டிற்குள் ஒரு விசித்திரமான தவிப்பு அவளை வாட்டியது. ‘தன் மீது இவ்வளவு பித்தாக இருக்கும் ஒருவனை, தான் இந்த அளவுக்குக் காயப்படுத்தியிருக்கக் கூடாது’ என்ற குற்ற உணர்ச்சி அவளக் குடைந்தது. அதற்கும் மேலாக அவனுடன் பேச முடிவு செய்தாள்.
இரவு பதினொன்று மணி இருக்கும். ராஜேஷ் கொடுத்திருந்த விஷ்வாவின் எண்ணை இமை வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த எண்கள் எப்பொழுதோ மண்டைக்குள் ஏறிக்கொண்டன. மாலினியிடமிருந்து போனை வாங்கியவள், ‘தடக் தடக்’ எனத் துடிக்கும் இதயத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, பலவிதப் போராட்டங்களுக்குப் பிறகு அழைத்தாள்.
ரிங் சென்றுகொண்டிருந்தது.
மறுபுறம், விஷ்வாவின் படுக்கைக்கு அருகில் இருந்த மேசையின் மேல் ஐபோன் அதிர்ந்தது. காய்சசலின் பிடியில், மயக்கத்தின் எல்லையில் கிடந்த விஷ்வாவின் விரல்கள், ஏதோ ஒரு விசித்திரமான உள்ளுணர்வால் அந்தப் போனை நோக்கி நகர்ந்தன. அவன் தட்டுத்தடுமாறிப் போனை எடுத்து காதில் வைத்தான். அவனால் பேசக் கூடத் தெம்பில்லை.
“ஹலோ…” என்று விஷ்வாவின் பலவீனமான, கரகரப்பான குரல் மறுபுறம் கேட்டது.
தாமரையின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது. அவளது கண்களில் தானாக நீர் கொட்டியது. அவனது ஒற்றை வார்த்தை, அவனது காதலின் துயரத்தைக் காட்டியது. கடந்த இரண்டு வருடப் போராட்டத்திற்கும், கடுமையான நிராகரிப்பிற்கும் பிறகு… அவனது குரலைக் கேட்டதும் அவளது ஒட்டுமொத்தக் கர்வமும் அடியோடு சரிந்து போனது.
அவள் தன் குரலைச் சரிசெய்துகொண்டு, மென்மையான, கனிவான குரலில், “விஷ்வா… நான் தான் தாமரை பேசுறேன்…” என்றாள்.
அந்த ஒற்றைச் சொல்… விஷ்வாவின் மூளை நரம்புகளில் ஒரு மாபெரும் மின்சாரத்தைப் பாய்ச்சியது போல இருந்தது. அவனது கண்கள் சட்டென்று ஆச்சரியத்தில் விரிந்தன. அவனது உடம்பில் இருந்த காய்ச்சலின் வேகம் அந்த நொடியில் பாதியாகக் குறைந்தது போல ஒரு உணர்வைக் கொடுத்தது. விஷ்வாவின் கண்களில் நீர் சொரிந்தது.
மெல்லிய குரலில், “பிங்கி… நீயாடி? நிஜமாவே நீதான் பேசுறியா? நான் கனவு காணலையே?” என்று விஷ்வா நம்ப இயலாமல் கேட்டான்.
தாமரையின் உள்ளங்கை வியர்க்க, பதட்டத்துடன் காணப்பட்டாள். அவள் மூச்சு விடச் சிரமம் கொண்டாள். உதடுகள் தந்தியடிக்க, “ஆமாம் விஷ்வா, நான் தான் பேசுறேன். நான் உங்களை ஹர்ட் (Hurt) பண்ணது தப்புதான். அதுக்காக இப்படியா உடம்பைக் கெடுத்துப்பீங்க? உங்க பிரண்ட்ஸ் எல்லாரும் ரொம்பக் கவலைப்படுறாங்க. எனக்காக… ப்ளீஸ், சீக்கிரம் சரியாகி வாங்க விஷ்வா. நீங்க குணமடைஞ்சு காலேஜுக்கு வரணும். அதுவரைக்கும் நான் உங்களுக்காகக் காத்துக்கிட்டு இருப்பேன்…” என்று தன் இதயத்தின் ஆழத்தில் இருந்த மென்மையான காதலை முதல்முறையாக வார்த்தைகளாக வெளிப்படுத்தினாள் தாமரை.
விஷ்வா நிதான குரலில், “தாமரை, ஒரு நிமிஷம்…” எனத் தடுத்தான்.
“எ… என்ன விஷ்வா?” என்று தாமரை வெட்கத்துடன் கேட்டாள்.
“நீ நீயாக வந்து என்கிட்ட பேசுறியா? இல்லை என்னோட பிரண்ட்ஸ் உன்னை இப்படிப் பேசச் சொன்னாங்களா?” எனக் கேட்டான்; அவனது குரலில் ஒரு அதிகாரமும் கண்டிப்பும் தெரிந்தது.
“அது வந்து… நான் ராஜேஷ் அண்ணாகிட்ட நம்பர் வாங்கினேன்,” எனத் தாமரை கூற…
“நான் கேட்டதுக்கு இது பதில் இல்லையே?” என ஆக்ரோஷமாகக் கேட்டான்.
“இல்ல… இல்லை விஷ்வா, அது வந்து ராஜேஷ் அண்ணா…”
“ஓகே, ரைட்! எனக்குப் புரியுது. நீ அவன் சொன்னதால என்கிட்ட பேசுற? உனக்கா என் மேலே லவ் (Love) வரலை; அது எனக்குத் தெரிஞ்சு போச்சு… இல்லை தாமரை, இது வேண்டாம். நீ அவ்வளவு கஷ்டப்பட்டு என்கிட்ட பேச வேண்டாம். காதல்ல வற்புறுத்துதல் இருக்கக் கூடாது; காதல் தானாக வரணும். நான் நிறைய யோசிச்சுட்டேன், இதுக்கும் மேல எதுவும் வேண்டாம்,” எனச் சொல்லிவிட்டுப் போனை வைத்தான் விஷ்வா.
ஆக மொத்தத்தில், சலனமே இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த தாமரையின் மனதில் ‘காதல்’ என்கிற சலனத்தைத் தோற்றுவித்துவிட்டு, அதை உடனே துண்டித்துவிட்டிருந்தான் விஷ்வா!
தாமரைக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அதற்காக அவள் படிப்பில் கோட்டை விடவில்லை; முன்பை விட இன்னும் வெறித்தனமாகப் படித்தாள். ஏழைகளுக்குப் பெரிய சொத்தே படிப்புதான். படிப்பு ஒருவரிடம் இருந்தால், அதை வைத்து எல்லா விதமான பணம் சம்பாதிக்கும் வாய்ப்புக்களையும் உருவாக்கிக்கொள்ள முடியும். அந்தப் படிப்பு ஒருவருக்கு மரியாதையையும் நன்மதிப்பையும் பெற்றுத் தரும்.
விஷ்வா அடுத்த ஒரு வாரத்தில் குணமாகி வந்திருந்தான். ராஜேஷ் தனது நண்பனின் செய்கையில் குழப்பமடைந்து, “என்னாச்சுடா? அவளே உன்னை லவ் பண்றேன்னு வந்து நின்னப்போ எதுக்குடா வேண்டாம்னு சொன்ன? ரெண்டு வருடமா அவள் பின்னாடி சுத்திட்டு, இப்போ வேண்டாம்னு சொல்ற? என்னடா இதெல்லாம்?” எனக் கேட்டான்.
விஷ்வா ஒரே வார்த்தையில், “என்னோட காதலை அவள் இக்கட்டான சூழ்நிலையில, வேற வழியே இல்லாம என்னை ஏத்துக்கிட்டுதான் ஆகணும்னு காதலிக்கக் கூடாது. என்னை அவள் இயற்கையோட சேர்ந்து காதலிக்கணும்; என்னை உணரணும், என்னோட காதலை உணரனும். இந்த காதல் உணர்வை உருவாக்க முடியாது, அதுவே அவளுக்கு என் மேல் உருவாகணும். நான் இந்த காலேஜ்ல இருந்து படிச்சு முடிச்சுப் போறதுக்குள் அவளுக்கு என் மேலே வந்தால் வரட்டும்; இல்லைன்னா வேண்டாம்,” எனத் தீர்க்கமாகச் சொல்லிவிட்டு நகர்ந்தான்.
தாமரைக்குக் காதல் வருமா?
* தொடரும்.