Epi -20
விஷ்வாவின் மருத்துவ அறையில், அந்த நள்ளிரவு நேரத்தில், விஷ்வாவின் அசைவற்ற கரங்களில் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட சாவித்திரியின் (ரோஜா) குரல் தழுதழுத்தது. “மாமா… அன்னைக்கு அக்கா தாமரை தன் காதலைச் சொன்ன அந்த ஒரு விநாடியில, உங்க ஒட்டுமொத்த உலகமே ஜெயிச்ச சந்தோஷத்துல திக்குமுக்காடிப் போயிருப்பீங்கதானே மாமா?” என்ற சாவித்ரி, டைரியின் அடுத்த பக்கத்தை மெல்லத் திருப்பினாள்.
போனில் அழுதுகொண்டே தன் காதலைச் சொன்ன தாமரையின் வார்த்தைகளைக் கேட்ட விஷ்வாவின் இதயம் ஆனந்தக் கடலில் நீந்தினாலும், அவனது மனம் அவளிடம் தன் காதலின் ஆதிக்கத்தை நிலைநாட்ட நினைத்தது. அவளது வெட்கத்தையும் தவிப்பையும் இன்னும் கொஞ்சம் அதிகரிக்க, தவிக்க வைக்க ஆசைப்பட்டான்.
“தாமரை…” என்று விஷ்வா தன் கரகரப்பான குரலில் அழுத்தமாக அழைத்தான்.
“வி… விஷ்வா…” என அழுது முடித்த குரலில் விம்மினாள் தாமரை.
“நீ என் மேலே வச்சிருக்கிறது நிஜமான காதல்தான்னு எனக்கு எப்படித் தெரியும் பிங்கி? உன்னோட இந்த லவ்வை (Love) நீ எனக்கு ப்ரூஃப் (Proof) பண்ணணும்,” என்றான் விஷ்வா, உதட்டின் ஓரத்தில் தன் பழைய வசீகரப் пуன்னகையைத் தேக்கிக்கொண்டு.
‘என்ன சொல்கிறான் இவன்? லவ்வை எப்படி ப்ரூஃப் பண்றது?’ என்று யோசித்தவள், “நான் எப்படி விஷ்வா ப்ரூஃப் பண்றது? எனக்கு எதைப்பத்தியும் தெரியாது…” எனத் தாமரை அப்பாவியாகக் கேட்க…
“இன்னும் ரெண்டு நாள்ல லீவ் முடிஞ்சு நீ சென்னைக்குத் திரும்பப்போறே, அப்படித்தானே? நீ எப்பவும் வர்ற அந்தச் சேரன் எக்ஸ்பிரஸ்ல… இந்தத் தடவை நீ ஸ்லீப்பர் கிளாஸ்ல வரக்கூடாது. எனக்காக, நீ செகண்ட் ஏசி (2nd AC) கோச்ல என்கூட டிராவல் (Travel) பண்ணி வரணும். நான் உனக்கு செகண்ட் ஏசியில புக் பண்ணப் போறேன். அண்ட் நான் ஈரோடு ஸ்டேஷன்ல ட்ரெயின் ஏறுவேன். நீ கோயம்புத்தூர்ல இருந்தே அந்த ஏசி கோச்ல எனக்காகக் காத்துக்கிட்டு இருக்கணும். இந்த ஒரு விஷயத்துல நான் தெரிஞ்சுப்பேன்… நீ என்னை உண்மையாகவே லவ் பண்றையா இல்லையான்னு,” என்று சவாலாகக் கேட்டான் விஷ்வா.
தாமரைக்குத் தூக்கி வாரிப்போட்டது. செகண்ட் ஏசி டிக்கெட்டா? அவளது குடும்பச் சூழ்நிலைக்கு அது எவ்வளவு பெரிய ஆடம்பரம்! ஆனால், காதலின் தவிப்பும், விஷ்வாவை இழந்துவிடுவோமோ என்ற பயமும் அவளது வறுமையின் தயக்கத்தை அடியோடு மனதில் இருந்து தூக்கி எறியச் செய்தது. “சரி விஷ்வா… நான் வர்றேன்,” என்று தன் காதலுக்காகத் துணிந்து சம்மதித்தாள் பெண்ணவள்.
விஷ்வாவுக்குத் தெரியும், அவள் முழு மனதாகச் சம்மதிக்கவில்லை என்று. தாமரை வரமாட்டாள் என்று நினைத்துத்தான் அவளுக்கும் சேர்த்து புக் செய்தான். அதே போல இருவரும் சென்னைக்குக் கிளம்பும் அந்த நாளும் வந்தது.
இங்கே தாமரை அவளது வீட்டில் நிலைக்கண்ணாடியின் முன் நின்று, தலை முதல் கால் வரை தன்னைத் பார்த்துக்கொண்டாள். ‘விஷ்வாவை பார்க்கப் போகிறோம்’ என உள்ளுக்குள் தோன்ற, அவளது உடைகள் அனைத்தையும் தேடினாள்; எல்லாமே வெளுத்துப்போன உடைகள். அவளது பிறந்தநாளுக்கு ரோஜா அவளுக்கு வாங்கிக்கொடுத்த காட்டன் சுடிதாரை எடுத்துப் பார்த்தாள். அவளிடம் இருந்த உடையில் அது மட்டுமே புதியது போல இருந்தது. அதை இஸ்திரி போட்டு அயர்ன் செய்யத் தந்தையிடம் கொடுத்தாள்.
செல்வி அவளுக்காக மல்லிகைப் பூ வாங்கி, நாளை கிளம்பும்போது வைத்துக்கொண்டு செல்லக் கட்டிக்கொண்டிருந்தார். செம்பருத்தி தாமரையின் உடையை மடித்து அடுக்கி வைத்தாள். இப்படி மொத்த குடும்பமும் அவளுக்காகப் பணிவிடைகள் செய்தார்கள். அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது.
“இந்நேரத்துல எதுக்குடி தலைக்குக் குளிச்ச? தலைப்பாரம் பிடிச்சுச் சளிக் காய்ச்சல் வந்துட்டா என்ன பண்றது?” எனச் செல்வி திட்டிக்கொண்டிருக்க…
“ம்மா, அங்கே சிறுவாணி தண்ணியில குளிச்ச போல வருமா? அதான் தலைக்குக் குளிச்சேன். அதுல உனக்கு என்ன பிரச்சனை?” எனச் சமாளித்தாள்.
“நைட்டு நேரமா இருக்குது, பார்த்துப் பத்திரமா போயிடுவியா கண்ணு?” எனப் பாரி பதட்டத்துடன் கேட்க…
“அப்பா, அதெல்லாம் நான் போய்க்குவேன்பா. எத்தனை முறை வந்திருக்கேன்? ஏதோ புதுசா வர்ற போலக் கேட்கிறீங்க?” எனத் தாமரை தைரியமாகப் பேசினாள்.
“நம்ம வீட்லயே முதன்முதலா ட்ரெயின்ல போறது நம்ம தாமரை அக்கா தான்!” எனச் சம்பூர்ணா, தர்மன் இருவரும் சொல்லிப் பேசிக்கொண்டார்கள்.
இந்தப்பக்கம் தாமரை தன்னைப்பார்த்துப் பார்த்து அலங்கரித்துக்கொண்டாள். தலைக்குக் குளித்துச் சிடுக்கு எடுத்து, தண்ணி ஜடை போட்டுவிட்ட செல்வி மல்லிகைப் பூவைச் சூடிவிட… அவள் நேராகக் கண்ணாடியின் பக்கம் சென்று கண்ணுக்கு மையிட்டுக்கொண்டவள், அழகாக ஒரு பொட்டு வைத்துக்கொண்டாள். செல்வி குலதெய்வக் கோவிலில் இருந்து கொண்டுவந்த திருநீற்றை அவளின் நெற்றியில் பூசிவிட்டார்.
“எப்போ நீ இங்கே வருவேன்னு இருக்கு கண்ணு…” என வருத்தத்துடன் பாரி கூற…
“சீக்கிரமே!” எனக் கண்களைச் சிமிட்டிச் சொன்னாள்.
“அக்கா, இன்னிக்கு ரொம்ப அழகா இருக்க!” எனச் சம்பூர்ணா கூற… தனது தங்கையை அணைத்துக்கொண்ட தாமரை, “ரெண்டு பேரும் நல்லா படிக்கணும்,” எனச் சொல்லிவிட்டுப் புறப்பட்டாள்.
எப்பொழுதும் போலத் தாமரையை வழியனுப்ப அவளது ஒட்டுமொத்தக் குடும்பமும் கோயம்புத்தூர் இரயில் நிலையத்திற்குத் திரண்டு வந்திருந்தது. அப்பா பாரி, அம்மா செல்வி, அக்கா துளசி, தங்கைகள் ரோஜா, செம்பருத்தி, சம்பூர்ணா, தர்மன் என ஒரு பட்டாளமே பிளாட்பாரத்தில் (Platform) நின்றிருந்தது.
தனது வீட்டாருக்குச் சந்தேகம் வரக்கூடாது என்று நினைத்த தாமரை, ஸ்லீப்பரில் ஏறிக்கொண்டாள்.
“கண்ணு, அங்கே காலேஜ் போயிட்டுப் போன் பண்ணு தங்கம். என் மனசெல்லாம் உன் மேலதான் ஓட்டமா இருக்கும்,” எனப் பாரி உருக்கமாகக் கூற…
“அப்பா, நீங்க கவலைப்படாதீங்க. நான் அங்கே காலேஜ் போயிட்டு மாலினி போன்ல இருந்து கூப்பிடுறேன்,” என்று தாமரை அனைவரிடமும் கைகளை அசைத்து விடைபெற்று, அந்தப் பிரம்மாண்ட ஏசி கோச்சிற்குள் நுழைந்தாள். அவளது இதயம் ‘தடதட’வென அடித்துக்கொண்டது. ‘விஷ்வா… இதோ உன் தாமரை உனக்காக வந்துட்டேன்’ என அவளது ஆத்மா முணுமுணுத்தது.
இரயில் ஈரோடு இரயில் நிலையத்தை வந்தடைந்தது. பிளாட்பாரத்தில் தன் கறுப்பு நிற ட்ராவல் பேகுடன் (Travel Bag), நீல நிற ஃபார்மல் ஷர்ட்டில், கம்பீரமான தேவதூதனைப் போலக் காத்து நின்றிருந்தான் விஷ்வா. இரயில் நின்றதும், அவனது காந்தக் கண்கள் ஆவலோடு அவனது செகண்ட் ஏசி கோச்சிற்குள் தேடி நுழைந்தன.
அவன் தன் சீட்டை (Seat) நெருங்கி வந்து பார்த்தான். ஆனால்… அங்கே தாமரை இல்லை! அவளது பையோ, கட்டைப்பையோ கூட அங்கே தென்படவில்லை. விஷ்வாவின் முகம் ஒரே நொடியில் சோகத்தில் இருண்டது. அவனது இதயம் படபடவென அடித்துக்கொள்ள, ‘அவள் வரவில்லையா? இன்னும் என்னை அவள் முழுமையாக ஏத்துக்கலையா?’ என்று ஏமாற்றத்தின் உச்சத்துக்கே சென்றான் விஷ்வா. பெருமூச்சுடன் தன் பேகைக் கீழே வைத்துவிட்டு, சோகமாகத் திரும்பி வாசலை நோக்கி நடக்க முயன்றான்.
சரியாக அதே விநாடி… கோச்சின் பாத்ரூம் (Bathroom) கதவைத் திறந்து கொண்டு, தன் முகத்தைக் கழுவிவிட்டு, கைகளில் இருந்த தண்ணீரைத் துடைத்தபடி வராந்தாவில் நடந்து வந்தாள் தாமரை.
‘ச்ச! எங்கே பார்த்தாலும் என் பிங்கி கண்ணுக்குத் தெரியுறா. இதுக்கும் மேலே நான் என்ன பண்ணட்டும்? அவள் காலில் விழுந்துதான் என்னோட காதலை ப்ரூஃப் (Proof) பண்ணனுமா?’ என்னும் யோசனையில் அவன் நின்றிருக்க… தாமரை நேராக விஷ்வாவின் அருகில் வந்தாள்.
“விஷ்வா!! டிடிஆர் (TTR) வந்தார், நான் போர்டிங் (Boarding) பண்ணிட்டேன். செகண்ட் ஏசியில யாருமே இல்லை,” என்று புன்னகையுடன் அவள் கூறிக்கொண்டிருக்க… விஷ்வா ஆடாமல் அசையாமல் அவளையே உறைந்து பார்த்துக்கொண்டிருந்தான்.
தாமரை அவள்பாட்டுக்குப்பேசிக் கொண்டே சென்றாள். விஷ்வா உறைந்த பனிச்சிலை போல நின்றுகொண்டிருக்க, புருவம் சுருக்கி அவனைப் பார்த்தவள், “ஹலோ விஷ்வா…” எனக் கையை ஆட்டினாள்.
விஷ்வா வெடுக்கென்று நிமிர்ந்து பார்த்தவன், சட்டென்று அவளின் கையைப் பற்றிக்கொண்டான். அவளுக்கு நேர் எதிரே நின்றிருந்த அவனது இதயம், அவளைப் பார்த்த அடுத்த நொடி ‘படபட’வென்று புயல் போல அடிக்கத் தொடங்கியது. ஓராண்டு காலப் பிரிவின் தவிப்பும், ஏகப்பட்ட ஏகங்களும் அவனது கண்களில் காதலாகப் பொங்கி வழிந்தன.
“விஷ்வா, எ… என்னாச்சு?” என இதயம் படபடக்க வெட்கத்துடன் கேட்டாள்.
அவளின் விரல்களுக்குச் சட்டென முத்தம் வைத்தவன், “இது நிஜமாவே நீதானா பிங்கி? எ… என்னால நம்ப முடியலை. நீ வரமாட்டேன்னு நினைச்சேன்,” என்றான் தவிப்புடன்.
“நான் ஏன் வரக்கூடாது?” எனத் தாமரை அவனைப் புருவம் சுருக்கிக் கேட்டாள்.
விஷ்வா இரண்டு புருவங்களையும் உயர்த்தி, “அதானே, நீ வரலாமே?” என்றான் குட்டிக்குறும்புடன்.
‘களுக்’ என்று சிரித்தாள் தாமரை. அவனுக்கு இது கனவா நனவா எனக் கண்டறியக் கூடச் சில நாழிகைகள் பிடித்தன. விஷ்வா அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்க, அவனது காந்தப் பார்வையின் முன்னால் வெட்கம் அடியோடு தலைதூக்கியது. அவளது மாநிறக் கன்னங்கள் முதல்முறையாகக் காதல் பிங்க் நிறமாக மாறின. அவள் தன் முகத்தைத் தாழ்த்திக்கொண்டு, தன் துப்பட்டாவின் நுனியை விரல்களால் சுருட்டினாள். அவளது தேகமெங்கும் ஒரு புதிய சிலிர்ப்பு ஓடியது.
“பிங்கி…” என்று விஷ்வா தன் கரகரப்பான, வசீகரக் குரலில் உருகி அழைத்தான். கடைசியாக அவனிடம் பேசிய போன் அழைப்புக்குப் பிறகு, இன்றுதான் அவனது வாயில் இருந்து வந்த அந்தப் பெயர், பிங்கி என்ற வார்த்தை தாமரையின் நெஞ்சுக்குள் தேனாய் மதுரமாய் இனித்தது.
“விஷ்வா… நான் நிஜமாவே வந்துட்டேன்…” என்று வெட்கத்துடன் தன் காந்தக் கண்களை நிமிர்த்தி அவனது முகத்தைப் பார்த்தாள் தாமரை.
விஷ்வாவின் மருத்துவ அறையில், இந்த டைரி வரிகளை வாசித்து முடித்த சாவித்திரியின் (ரோஜா) கண்களில் இருந்து கண்ணீர் சொட்டுச் சொட்டாக விஷ்வாவின் கைகளில் விழுந்தது.
“பார்த்தீங்களா மாமா… தாமரை உங்க காதலுக்காக முதன்முதலாக வீட்ல பொய் சொல்லி வந்திருக்கா. உங்க தாமரையை நீங்க பார்க்க வேண்டாமா மாமா? ப்ளீஸ் மாமா… உங்க தாமரைக்காக, உங்க பிங்கி காதலுக்காக மாமா, இப்போ கண் திறங்க…” என்று விஷ்வாவின் காதருகே உருகினாள் சாவித்ரி.
விஷ்வாவின் சிந்தைக்குள் தாமரையின் முகம் வந்து போனது. அன்று ட்ரெயினில் முதன்முதலாக அவனுக்கு முதல் முத்த அனுபவத்தைக் கொடுத்தாள் அவனுடைய பிங்கி. அவனது கண்மணிகள் மெல்ல அசைந்தன!
மறுநொடி… ‘க்ரீச்’ என்ற சத்தத்துடன் கதவு முழுமையாகத் திறக்கப்பட, தன் அசாத்திய கதிர்வீச்சுப் பார்வையுடன் உள்ளே நுழைந்தான் சத்யமூர்த்தி! அவனது கூர்மையான கண்கள் நேராகப் படுக்கையின் அருகில் டைரியோடு நின்றிருந்த சாவித்திரியின் மீது பாய்ந்தன!
* தொடரும்.