ஈகோ பிடிச்சவனின் இதய தேவதை 32

by Pradhanya kuzhali
210 views

Epi -32 

அந்தப் ‘பளார்’ அறையின் ஓசை ஏசி அறையின் சுவர்களின் ஒவ்வொரு மூலையிலும் பட்டு எதிரொலித்தது. சத்யமூர்த்தியின் முகத்தில் அவளது ஐந்து விரல்களும் சிவந்து தடம் பதித்திருந்தன. இது அவனுக்கு அவமானமாகத் தெரியவில்லை. அவளிடம் தவறாக நடந்து கொள்ளவில்லையே. உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறான், அவ்வளவே!

சாவித்ரி தன் கைகள் நடுங்க, மூச்சு வாங்க அவனையே ஆக்ரோஷமாகப் பார்த்தாள். அவளது காந்தக் கண்களில் பழி வாங்கும் எண்ணம் என்றோ அழிந்திருந்தது. கலாவதி அன்று சொன்ன போதே அந்தப் பழிவாங்கும் உணர்வுகள் மடிந்திருந்தன. அவளுக்கு இப்பொழுது இருக்கும் ஒரே குறிக்கோள், தாமரையை விஷ்வா மற்றும் விவாவுடன் சேர்த்து விட வேண்டும். ஆனால் சத்யமூர்த்தியின் மனதில் இப்படி ஒரு எண்ணம் இருப்பது உள்ளுக்குள் ஒரு கிளிர்ச்சியையும் நடுக்கத்தையும் கொடுத்தது. தன் மீதான உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டான் என நினைத்திருந்தாள். ஆனால் இன்று அது தலைகீழாக மாறிப் போனது. இனி தலையெழுத்தை மாற்றும் என்பது அவளுக்கு தெரியாத விஷயங்களில் ஒன்று.

அதற்கு மேல் அங்கு நில்லாமல் விறுவிறுவென கதவை ஓங்கி அடித்துச் சாத்திவிட்டுப் புயலென வெளியேறினாள்.

அவள் சென்ற பிறகும் சத்யமூர்த்தி அதே இடத்தில் அசைவற்று நின்றான். அவனது வலது கை மெதுவாகத் தன் சிவந்த கன்னத்தைத் தொட்டது. வலி அவனது முகத்தில் இல்லை; அவனது இதயத்துக்குள் பரவியது. அவளைப் பிடித்திருக்கிறது. அவள் வேண்டும் என்று தோன்றுகிறது. மற்றவர்களின் முன் உணர்வுகளை அவ்வளவு சீக்கிரத்தில் உள்மன உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டான். ஆனால் இன்று அவள் முன்னால் அனைத்தையும் மனம் திறந்து விட்டிருந்தான். மடை திறந்த வெள்ளம் போல… ‘நான் ஏன் அப்படி நடந்துகொண்டேன்? என் கட்டுப்பாட்டை மீறி அவளது கன்னங்களைத் தொட எனக்கு என்ன உரிமை இருக்கிறது? அவளை அடித்த குற்ற உணர்ச்சியில் இருந்து மீள நினைத்த நான், இன்று அவளது!!’ என நெஞ்சுக்குள் மாபெரும் பாரம் இறங்கி அவனை அமுக்கியது.

சலிப்புடன் தன் நாற்காலியில் சரிந்தவள், தன் கைகளால் முகத்தைப் பொத்திக்கொண்டு அழுதாள். கைகள் நடுங்கின. இந்த நொடி கூட நம்ப முடியவில்லை. அவனை அடித்து விட்டாள். இந்த ஐந்து வருடங்களும் சத்யமூர்த்தியை எட்ட நின்று பார்க்கவே தவம் கிடந்திருக்கிறாள். அவனைப் பழிவாங்கும் எண்ணத்தில், எப்படியாவது அவன் அருகில் சென்று விட வேண்டும் என்று நினைத்திருக்கிறாள்.

ஆனால் இன்று அதெல்லாம் தலைகீழாக மாறி இருந்தது. அவனை அடித்திருக்கிறாள்! தமிழ்நாட்டிலேயே அவன் மிகப் பெரிய பெரும்புள்ளி, பணக்காரன், வசதி படைத்தவன், கல்நெஞ்சக்காரன்… இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அப்படி இருப்பவனை… இன்று இந்த நொடி இப்பொழுது நினைத்தால் கூட அவளால் பழிவாங்க முடியும். காதல் என்ற ஒற்றை ஆயுதத்தைப் பயன்படுத்தி அவனை அணுவணுவாகச் சித்திரவதை செய்து துடிக்க வைக்க முடியும். அந்த அளவுக்கு வந்திருக்கிறாள். அவனது மனதில் அந்த அளவுக்கு வீற்றிருக்கிறாள், வேரூன்றி விருட்சமாக இருக்கிறாள்.

இப்பொழுது சாவித்திரி… இல்லை, ரோஜா… இப்பொழுது என்ன செய்யப் போகிறாள்? பார்ப்போம்.

அன்றைய இரவை நரகமாகக் கழித்தான். அடுத்த இரண்டு நாட்களாக விஷ்வ விகாஸ் பள்ளியின் புயலுக்கு முன் வரும் அமைதி போல இருந்தது. சத்யமூர்த்தி தன் சேர்மன் அறையை விட்டு வெளியே வரவில்லை; சாவித்ரி தன் கிளாஸ் ரூம்களை விட்டு வெளியே வரவில்லை. இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வதைத் தீவிரமாகத் தவிர்த்தனர்.

இப்படியே ஒரு வாரம் கடந்து போனது. அந்த ஒரு வாரத்தில் இருவருக்குள்ளும் ஓடிய மௌன யுத்தம், அவர்களின் ஆன்மாவை அணுவணுவாக உலுக்கி எடுத்திருந்தது.

இதற்கிடையில், வீட்டில் விஷ்வாவுக்கு தாமரையின் நினைவுகள் முழுமையாகத் திரும்பின. கண்களில் நீர் கொட்டத் தன் காதல் மனைவியை நினைத்து துடித்துப் போனான். ‘கடவுளே, என் தாமரைக்கு எதுவும் ஆகி இருக்கக் கூடாது. அவள் அவளை நான் சந்தோஷமாக வச்சுக்கத்தானே கல்யாணம் பண்ணேன். என் தாமரைக்கு எதுவும் ஆகி இருக்கக் கூடாது’ எனத் துடித்தான். ராஜேஷைப் பார்க்கச் சென்றான்.

ராஜேஷ் வெளியே அனைத்து வேலைகளையும் கண்காணித்துக் கொண்டிருக்க, “ராஜேஷ்” எனக் கமரிய குரலில் அழைத்தான்.

“விஷ்வா வந்துட்டயா!! என்னை நியாபகம் வந்துடுச்சா?” என்று ஆசையுடன் ராஜேஷ் கேட்க, “தாமரை எங்கே டா!” என்று எடுத்ததும் கேட்டான்.

தாமரையைப் பற்றி கேட்டதும் ராஜேஷின் முகம் சடுதியில் மாறிப் போனது. அவன் அவ்விடத்தைச் சுற்றிப் பார்த்தபடி நேராக கண்ட்ரோல் ரூம் அழைத்துச் சென்றான். “இப்போதைக்கு எதுவும் என்னால சொல்ல முடியாத சூழ்நிலையில் இருக்கேன் டா. நீ உன்னோட உடம்பைப் பாரு. நேரம் வரும்போது கண்டிப்பா சொல்றேன். இனி வீட்டுக்குள் தாமரையைப் பத்தி பேச்சு எடுக்காத டா…” என்று விட்டு நகர, “ராஜேஷ் நில்லு… அவளுக்கு எதுவுமில்ல தானே? அவள் நல்லாருக்கா தானே?” என வளைத்துக் கேட்டான்.

ராஜேஷ் பெருமூச்சுடன், தாமரை நல்லாருக்கா என்று நகரப் போக, “என் எங்க குழந்தை?” என விஷ்வா கமரியபடி கேட்டான்.

“விவான் உன்னோட குழந்தை மச்சான்” எனக் கட்டியணைத்து அவனைச் சமாதானம் செய்தான். “விவான் என்னோட பையனா?” என விஷ்வாவின் கண்களில் சூடான நீர் வழிந்தது. “உன்னோட பையன் மச்சான். உனக்கும் தாமரைக்கும் பிறந்தவன்” என ராஜேஷ் கூற… விஷ்வா தன்னைத் திடப்படுத்திக் கொண்டு விவானைப் பார்க்கச் சென்றான். ஓரளவுக்கு அவனுக்கு அனைத்தும் புரிந்திருந்தது. விவான் பள்ளியில் இருந்து எப்பொழுது வீட்டுக்கு வருவான் எனக் காத்திருந்தான்.

இதோ பள்ளியில் இருந்து வந்தாகிவிட்டது. வந்ததும் கதைகள் பேச உடனே அவன் நாடியது சாவித்திரியைத் தான்… “ஆத்தா சாவி வந்துட்டாளா? எனக்கு ஸ்கூல் விட்டாச்சு, நான் வந்துட்டேன். இன்னும் சாவி ஏன் வரல?” என விவான் கேட்டுக் கொண்டே விளையாடச் சென்றான்.

விஷ்வா தன் மகன் பேசுவதை எட்ட நின்று ரசித்தான். அவனிடம் பேசச் சென்றான். விவான் வெளியே பந்து விளையாடிக் கொண்டிருக்க, “விவான்… இங்க வாடா குட்டி…” என விஷ்வா தன் வறண்ட, கரகரப்பான குரலில் உருகி அழைத்தான்…

விவான் கையில் ஒரு பந்துடன் படுக்கையின் அருகில் வந்து நின்றான். ஆனால், அவனது பிஞ்சு விழிகளில் விஷ்வாவை நோக்கிய எந்த ஒட்டுதலும் இல்லை; மாறாக ஒரு விசித்திரமான அந்நியப் பார்வையே இருந்தது.

விஷ்வா தன் நடுங்கும் கரங்களால் அவனது பிஞ்சு விரல்களைப் பற்றிக்கொண்டு, “விவா… நான் தான்டா உன்னோட அப்பா… டாடிடா… கண்ணா!” என நெகிழ்ச்சியுடன் அழுது கூறினான்.

விவான் தன் கைகளை வெடுக்கெனப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு, “நோ… நீ என் டாடி இல்ல! நீ பொய் சொல்ற! நீ இவ்வளவு நாள் தூங்கிட்டு இருந்த… என் டாடி சத்யமூர்த்தி… அவர் மட்டும் தான் என்னோட டாடி. எனக்கு சாக்லேட் வாங்கித் தருவார். எனக்கு அவர் சாவியைக் கூட்டிட்டு வந்தார். அப்புறம் சாவி தான் என் மம்மி! அவங்க ரெண்டு பேரும் தான் என் மம்மி டாடி. நீ சும்மா பொய் சொல்லாதே! நீ too bad boy” எனச் சொல்லி ஓடிவிட்டான்.

தன் சொந்த மகனின் வாயால் ‘சத்யமூர்த்தி தான் அப்பா, சாவித்ரி தான் அம்மா’ என்ற வார்த்தைகளைக் கேட்ட விஷ்வாவின் இதயம் அப்படியே சுக்குநூறாக உடைந்து போனது. சாவித்ரி என்று விவான் அழைப்பது… தாமரையின் தங்கை ரோஜாவை… அவள் எப்படி இங்கு வந்தாள்? சாவித்ரி என ஏன் பெயரை மாற்றி வைத்துக் கொண்டாள்? அவள் இங்கு இருக்கிறாள் என்றால் என் தாமரை எங்கே? என ஆயிரம் கேள்விகள் மண்டையைக் குடைய, உடனடியாக அவளைச் சந்திக்கப் புறப்பட்டான்.

“சாவி இங்கே தூக்கி போடு! சாவி இங்கே” எனக் களுக்களுக் சிரிப்புடன் விவான் அவளுடன் விளையாடிக் கொண்டிருக்க, “விவா, நான் போய் fresh ஆகிட்டு வரேன். அப்புறம் நம்ம ஹோம் வர்க் பண்ணலாம். தமிழ் படிக்கணும். டின்னர் சாப்பிடணும். அதனால நீங்க ரெடி ஆகுங்க” என்று சொல்லிக் கொண்டே நெற்றியைத் தேய்த்தபடி வீட்டுக்குள் செல்ல அவளை வழி மறித்தான் விஷ்வா.

விவான் குதித்தபடி “சாவி, நான் அதுவரை கலர் பண்ணப் போறேன்” எனக் குழந்தை வீட்டுக்குள் ஓடியது.

சாவித்ரி திடுக்கிட்டு “விஷ்வா” என்று அழைக்க, “நீ ரோஜா தான? ஏன் சாவித்ரின்னு உன்னை கூப்பிடுறாங்க? என்னைச் சுத்தி என்ன நடக்குது? நீ இங்கே இருக்கன்னா எங்கே தாமரையைக் காணோம்? அவள் எங்கே இருக்கா? என்னோட தாமரையை நான் பார்க்கணும்” எனப் படபடவென்று கேள்விகளாகக் கேட்டான்.

ரோஜாவுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அவள் தடுமாறியபடி நிற்க, விஷ்வா அவளின் கையைப் பற்றி, “உன்கிட்டத் தான் கேட்டுட்டு இருக்கேன். சொல்லு, எங்க என்னோட தாமரை? திவான் உன்னையே சாவித்திரி என்று கூப்பிடுகிறான். அவள் எங்க இருக்கா? இங்க நடக்கிறது எதுவுமே எனக்கு சரியா படலையே. சொல்லு” என்று கமரிய குரலில் கேட்டான்.

ரோஜா பெருமூச்சு விட்டபடி, “இப்போதைக்கு என்னால எதையும்…” என்று ஆரம்பிக்க, “உன் மனசுல என்ன நெனச்சிட்டு இருக்க?” என்று அவளின் தோள்பட்டையைப் பற்றினான் விஷ்வா.

அதே நேரம் சத்யமூர்த்தி அவனது அறையில் இருக்கும் பால்கனி பக்கம் வந்தவனுக்கு, வெளிச்சத்தில் விஷ்வாவும் சாவித்திரியும் மிக நெருக்கமாக நின்று பேசிக் கொண்டிருப்பதையும், விஷ்வா அவளது கைகளைப் பற்றி அழுவதையும், சாவித்ரி அவனது தோள்களைத் தொட்டுத் தேற்றுவதையும் நேரில் கண்டான்.

“பைபாஸ் வர்ற வழியில லாரி மோதி ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. விவான் குறைபிரசவத்தில் பிறந்துட்டான். நீங்க கோமாவுக்கு போயிட்டீங்க. தாமரை சுயநினைவுகளை இழந்துட்டா. இதுதான் நடந்தது. உங்க அண்ணா சத்யமூர்த்திக்கு நீங்க ரொம்ப முக்கியமா பட்டீங்க. உங்களையும் விவானையும் அவர் கூட்டிட்டு வந்துட்டாரு. தாமரை இப்போ எங்க வீட்ல இருக்கா” என்று சில விஷயங்களை மறைத்துக் கூறியவள், “விவானோட நிலைமை கொஞ்சம் மோசமா இருந்தது. அதனால நான் உங்க அண்ணனுக்கு தெரியாமல் இந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சேன்” என்று ரோஜா சொல்லிக் கொண்டிருந்தவளுக்கு பால்கனியில் நின்று சத்யமூர்த்தி தங்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு கொண்டாள். ‘என்னாச்சு இவனுக்கு? இவனோட முகம் சரியில்லையே’ என ரோஜா யோசித்துக் கொண்டிருக்க, விஷ்வா வேகமாக, “நான் இப்போவே அவளைப் பார்க்கக் கிளம்புறேன்” என்று திரும்ப,

ரோஜா அவனது கையைப் பற்றித் தடுத்தவள். “வேண்டாம் விஷ்வா. இப்போ நீங்க திடீர்னு போய் நின்னீங்கன்னா, அவளோட மூளை நரம்புகள் இன்னும் பாதிக்கப்பட வாய்ப்பிருக்குன்னு டாக்டர்ஸ் சொல்றாங்க. தாமரைக்கு உங்களை அடையாளம் தெரியுற வரைக்கும், அவளுக்கு உங்களோட ஞாபகம் தானா வர்ற வரைக்கும் நீங்க கொஞ்ச நாள் காத்திருக்கத்தான் வேணும்” என்று தீர்க்கமாகக் கூறிவிட்டு நகர்ந்தாள்.

விஷ்வா – சாவித்ரி இருவரின் நெருக்கம் சத்யமூர்த்தியின் அசாத்திய நெஞ்சுக்குள் ஒரு பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது. அவனது காதல் இதயம் அடியோடு உடைந்து சிதறியது.

‘அப்போ… சாவித்ரி விஷ்வாவை கோமாவில் இருந்து மீட்டதும், இந்த வீட்டுக்கு வந்து விவானைப் பார்த்துக் கொண்டதும்… இதெல்லாம்… இதெல்லாம் அவளுக்கு விஷ்வாவைத் தானே பிடிச்சிருக்கு. அப்போ சாவித்ரி மனதில் விஷ்வா தான் இருக்கிறான். அவனுக்காகத் தான் அவள் பள்ளிக்கு வருகிறாள், விவானைப் பார்த்துக் கொள்கிறாள். முக்கியமாக கோமாவில் இருப்பவனைச் சரி செய்து அமர்த்தி இருக்கிறாள்’ என்று நினைத்தவனுக்கு காதல் உள்ளுக்குள் நெஞ்சை அடைத்தது. ‘அப்போ சாவித்ரி மேலே நமக்கு தப்பான கண்ணோட்டம் இருக்கக் கூடாது. அவள் விஷ்வாவுக்கு பிடிச்சவள்!!’ என்று நினைக்கும் போது ஒரு மிகப் பெரிய பாராங்கல்லை வைத்தது போன்று உணர்வு. அனைத்தையும் மிகத் தவறாகப் புரிந்து கொண்டான்.

‘எனக்கு 41 வயசு… அவளுக்கு 28 வயசு. இந்த வயது வித்தியாசமே அதிகமா இருக்கு. அவளுக்கு என்னை எப்படிப் பிடிக்கும்?’ என நினைத்தவன். ‘என்னை ஏன் பிடிக்க வேண்டும்? அவள் என் விஷ்வாவுக்கு பொருத்தமானவள்’ எனச் சொல்லித் தேற்றிக் கொள்ள முயற்சி செய்தான். ஈரோட்டில் இருக்கும் தன் தனிப்பட்ட ஆடம்பர அப்பார்ட்மெண்ட் வீட்டிற்குச் சென்று தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டான்.

அடுத்த இரண்டு நாட்களாகச் சத்யமூர்த்தி பள்ளிக்கு வந்தான். ஆனால், பழையபடி சிங்கம்போல வலம் வந்த ஆடவன், இன்று முற்றிலும் உடைந்து, உடல் மெலிந்து, கண்கள் குழிவிழுந்து போயிருந்தான். சாவித்திரியின் நினைவுகளும், அவளது அந்தப் ‘பளார்’ அறையும், விஷ்வாவுடன் அவள் நெருக்கமாக இருந்த காட்சியும் அவனது மூளையைப் பாடாய்ப் படுத்தின. காதலின் அதீத அழுத்தம் தாங்காமல் அவனுக்குக் கடுமையான காய்ச்சல் வந்து, உடல்நிலை முற்றிலும் மோசமடைந்தது. தன் சேர்மன் அறையின் சோஃபாவிலேயே சோர்ந்து படுத்துக் கிடந்தான்.

சத்யமூர்த்தி இரண்டு நாட்களாக வீட்டில் இல்லை என்பதையும், அவனது நடத்தையில் இருக்கும் விசித்திரமான மாற்றத்தையும் கலாவதியின் கவலையில் தெரிந்து கொண்டாள் சாவித்ரி.

“ராஜேஷு, அந்த கதிர் பையனுக்கு போன் போடு. ரெண்டு நாளாக வீட்டுக்கும் சத்யமூர்த்தி வரல, போனும் எடுக்க மாட்டிக்கிறான். அப்படி என்ன வேலை வேண்டி கிடக்கு? இவனுக்கெல்லாம் காலா காலத்தில் கல்யாணம் பண்ணி வச்சிருந்தா இந்நேரம் குடும்பம் குட்டின்னு இருந்திருப்பான். ஆனா இப்போ…” என்று மூக்கால் அழுதார்.

சாவித்ரி அங்கு நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தாள். அதுமட்டுமில்லாமல், அன்று இரவு அவள் விஷ்வாவுடன் பேசிக் கொண்டிருந்தபோது, தூரத்தில் சத்யமூர்த்தியின் கார் நின்றிருந்ததையும், அவன் பால்கனி வழியே தங்களைப் பார்த்தான் என்பது நன்றாகவே தெரிந்தது. ‘ஒருவேளை என்னையும் விஷ்வாவையும் ஏதாவது தப்பா assumption பண்ணி வச்சுட்டானா அந்த ஈகோ பிடிச்சவன்?’ என உள்ளுக்குள் கவலை தோன்ற, ‘பாவி சண்டாளன் போயும் போயும் விஷ்வா கூட என்னைத் தப்பா நினைச்சிருக்கான்’ என உள்ளுக்குள் தோன்ற, அவனது இந்தக் கிறுக்குத்தனம் மற்றும் அதிகாரத் தொனியில் இருப்பவன் இப்பொழுது தனக்காக மிகவும் பாவமாகச் சுற்றிக் கொண்டிருப்பது எல்லாம் உள்ளுக்குள் ஒரு வித சுவாரசியத்தையும் கிறுக்குத்தனத்தையும் கொடுத்தது. அடுத்த நாள் அவனைப் பள்ளியில் சந்திக்கத் தயாரானாள்.

தொடரும்…

You may also like

Leave a Comment