Epi -4
அந்தப் பிரம்மாண்டமான பங்களாவின் வாசலில் நின்றிருந்தாள் சாவித்ரி. அவளின் பார்வை, அங்கே பொறிக்கப்பட்டிருந்த எழுத்தின் மீது ஒரு நொடி சென்றது.
**’விஷ்வ பவனம்’** என்ற எழுத்துக்கள், தங்க முலாம் பூசப்பட்டு மின்னிப் பாராட்டிக் கொண்டிருந்தன. சாவித்ரியின் கைகள் இறுகின. ‘சத்யமூர்த்தி’ என்ற பெயரை, ‘ஸ்ரீ ராம ஜெயம்’ போலத் திரும்பத் திரும்ப மனதிற்குள் கூறினாள். அவளது கண்களில் தீ ஜூவாலை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
“யாரும்மா நீங்க?” எனக் காவலாளி கேட்க, சாவித்ரி கனிவான முகத்துடன் அனைத்து விவரங்களையும் கூற, உடனே உள்ளே அனுமதிக்கப்பட்டாள்.
கதவைத் திறந்து நின்ற சத்யமூர்த்தியின் உடல்மொழி, ஒரு சிலையாகச் செதுக்கப்பட்ட ஆணவத்தின் பிரதியாக இருந்தது. அவனது நீலநிற சூட், அறையின் விளக்கு வெளிச்சத்தில் மின்னியது. எதிரே நின்ற சாவித்ரி, அவனைப் போலவே நேரான பார்வையும், உறுதியான தோற்றமும் கொண்டிருந்தாள். அவளது சாதாரணமாக உடுத்திய புடவையும், நெற்றியில் இருந்த சிறு பொட்டும், சத்யமூர்த்தியின் பிரம்மாண்டமான பின்னணிக்கு முற்றிலும் முரணாக இருந்தன.
“நான் தான் விவானின் பேச்சுப் பயிற்சியாளர். அதாவது, டாக்டர் சொன்ன கேர் டேக்கர் அண்ட் டீச்சர் (Care taker and teacher). என்னோட பெயர் சாவித்ரி,” என்று அவள் கூறியதில் எந்தவிதத் தயக்கமோ, பணிவோ இல்லை. அது ஒரு பக்கா ப்ரொஃபஷனல் அணுகுமுறை.
சத்யமூர்த்தி அவளை மேலிருந்து கீழ் வரை அலட்சியமாக அளந்தான். அவனது உதடுகளில் ஒரு வளைந்த புன்னகை தோன்றியது; அது மரியாதையின் புன்னகை அல்ல, ஏளனத்தின் ஆரம்பம். அதற்கு காரணம், நேற்று மருத்துவர் சொன்ன விதிமுறைகள் உள்ளுக்குள் அத்தனை கோபத்தையும் எரிச்சலையும் கொடுத்திருந்ததுதான். அதன் வெளிப்பாடு தான், இன்று அவனது அணுகுமுறையில் தெரிந்தது.
சாவித்ரி நிமிர்ந்த பார்வையுடன் அவனது கண்களை நோக்கினாள்.
“ம்ம்… பரவாயில்லை. நான் எக்ஸ்பெக்ட் (Expect) பண்ணதை விட நீங்க ரொம்பச் சாதாரணமா இருக்கீங்க, மிஸ் சாவித்ரி. என்னோட மகன், விஷ்வா விகாஸ் குழுமத்தின் வாரிசு. அவனுக்கு டீச்சிங் (Teaching) பண்ணவும், ட்ரெய்ன் பண்ணவும் இதைவிட அனுபவம் வாய்ந்த, அதிகச் சம்பளம் வாங்குறவங்க வருவாங்கன்னு நான் நினைச்சேன். ஆனாலும்…” என ஒரு கமா வைத்து முடித்தான். சத்யமூர்த்தியின் குரல் அறையின் குளிர்ந்த அமைதியை உடைத்தது; அதன் ஒவ்வொரு வார்த்தையிலும் அவளது தகுதியைக் கேள்வி கேட்கும் அதிகாரம் இருந்தது.
ஆனால், சாவித்ரி ஒரு கணம் கூட அசையவில்லை. அவளது கண்களில் இருந்த தீர்க்கம், அவன் பார்வையின் அலட்சியத்தைத் துணிச்சலாக எதிர்கொண்டது. அதுவே அவளது பிடிவாதத்தின் (Adamant Attitude) முதல் வெளிப்பாடு.
“மிஸ்டர் சத்யமூர்த்தி, நீங்க என்னை எவாலுவேட் (Evaluate) பண்ற அளவுக்கோ, ஓர் என்னோட சம்பளத்தைப் பத்தி டிஸ்கஸ் (Discuss) பண்ணி அதை அதிகப்படுத்தவோ நான் இங்கே வரலை. இது ஒரு டிரேடிங் (Trading) இல்லை; நான் வந்திருப்பது என்னோட கடமையைச் செய்ய. என்னோட வேலையில நான் ரொம்பத் திறமைசாலின்னு என் கூட இருக்கிறவங்களுக்கும், என்னைப்பற்றித் தனிப்பட்ட முறையில் தெரிஞ்சவங்களுக்கும் அது நல்லா தெரியும். நான் எதுக்கு வந்தேனோ, அந்த வேலையைச் செய்ய விடுங்க,” என்று அவள் தன் குரலில் அதே நிதானத்துடன் பதிலளித்தாள்.
அவனுடைய வார்த்தைக்கு இப்படி ஒரு நேரடியான, சற்றும் சளைக்காத பதில் வரும் என்று சத்யமூர்த்தி எதிர்பார்க்கவில்லை. அவனது ஆணவக் கவசம் முதல் முறையாக லேசாக உரசியது. இந்த வீட்டில், அவனது அலுவலகம் போல, அவனுக்கு எதிராகப் பேச யாருக்கும் துணிச்சல் கிடையாது. இந்தச் சாதாரணப் பெண் தன்னைக் கேள்வி கேட்கிறாளா?
“Interesting!” என்று வாய்விட்டுச் சிரித்தவன், “உங்களோட அதிகப்படியான தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது. ஆனால், இது என்னோட வீடு; என் வீட்டுல நான் சொல்ற விதிமுறைகளைத் தான் எல்லாரும் ஒபே (Obey) பண்ணணும். அப்படியே நீங்க வந்ததும் ரூல்ஸ் (Rules) மாத்த முடியாது. உங்களுக்கு இந்த ஒரு வார காலம் ப்ரோபேஷன் (Probation). என் மகனைப் பேச வைக்க முடியலைன்னா, ஒரு பைசா கூடச் சம்பளம் இல்லாமல், அடுத்த நிமிஷமே நீங்க வெளியேற்றப்படுவீர்கள். அதேபோல, விதிகளை மீறினாலும் அதுதான் நடக்கும். சம்மதமா?” என்று அதிகாரத்துடன் கேட்டான்.
“சம்மதம்,” என்று ஒரு நொடியில் பதிலளித்தாள் சாவித்ரி.
“That’s ok,” என்றுவிட்டு, சத்யமூர்த்தி நேராக அவளை உள்ளே அனுமதித்து, வீட்டு நிர்வாகி ராஜேஷை அழைத்தான். “இவங்க ஸ்டே (Stay) பண்ண ஏற்பாடு பண்ணுங்க. இவங்களுக்குத் தேவையான அனைத்தையும் பார்த்துக்கோங்க. அதேபோல, இவங்க மேலே எப்பவும் ஒரு கவனிப்பு இருந்துகிட்டே இருக்கணும். எதுவும் அசம்பாவிதம் நடந்தா…” என நிறுத்தினான்.
“இல்லை சார், அப்படி ஆகாது. எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்,” என ராஜேஷ் வேகமாக, அதே சமயம் பணிவுடன் தலையசைக்க, சாவித்ரி தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றாள்.
சாவித்ரி அறைக்குச் செல்லும் போதும், சத்யமூர்த்தியின் காருக்குச் சாவியை எடுத்துச் செல்லும் அவசரத்திலும், ஒரு விஷயத்தை மறந்தவன், மீண்டும் அவளைப் பார்க்கச் சென்றான்.
“ஹலோ டீச்சர், ஒரு நிமிஷம்!” என சத்யமூர்த்தி திரும்ப அழைத்தான்.
“சொல்லுங்க,” என்று கனிவுடன் சாவித்ரி பதில் கொடுக்க…
“இங்க என்னுடைய தனிப்பட்ட விஷயங்கள்ல தலையிட யாருக்கும் அனுமதி இல்லை. நீங்க விவானின் கேர் டேக்கர் மட்டும்தான். என் அம்மா, என் தம்பி, என் தொழில் – எதைப் பத்தியும் நீங்க கேள்வி கேட்கவோ, அனாவசியமா பேசவோ, ஒப்பீனியன் (Opinion) சொல்லவோ கூடாது. இந்த கட்டுப்பாடுகளை மீறினால், விளைவுகள் மோசமாக இருக்கும்,” என்று எச்சரிக்கும் விதமாகக் கூறினான்.
சாவித்ரி, கதவின் கைப்பிடியைப் பிடித்தபடி அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் இவ்வளவு அழகாகவும், அதே சமயம் இவ்வளவு அடங்கப்பிடாரியாகவும் இருப்பாள் என்று அவன் நினைக்கவில்லை. அவனது கடுமையான எச்சரிக்கைக்கு, அவள் நிதானமாகப் பதிலளித்தாள்.
“மிஸ்டர் சத்யமூர்த்தி, விவானின் பேச்சுப் பயிற்சி, அவனோட ஆரோக்கியமான மனநிலையைச் சார்ந்தது. ஒரு குழந்தை, அதைச் சுற்றியுள்ள சூழலால், அதாவது என்விரான்மென்ட்டால (Environment) தான் அதிகம் பாதிக்கப்படுது. உங்க வீட்டிலிருக்கும் மன அழுத்தமும், உங்க அம்மாவோட உடல்நலமும், உங்க தம்பியின் நிலையும் கூட விவானின் விஷயத்துல தலையிடலாம்…” என்று நிறுத்தியவள், “நான் வேலைக்கு வந்திருப்பது விவானுக்காகத் தான்; குழந்தையைப் பார்த்துக்க மட்டும்தானே தவிர, உங்களோட பெர்சனல் ஃபேமிலி (Personal family) விஷயத்துல மூக்கை நான் எதுக்கு நுழைக்கணும்? அதேபோல, உங்க ஃபேமிலி இஸ்யூவால (Family issue) குழந்தை பாதிக்கப்படாமல் நடந்துக்கிறது உங்க பொறுப்பு,” என்றுவிட்டு உள்ளே சென்றிருந்தாள்.
சத்யமூர்த்தியின் முகம் கோபத்தால் சிவந்தது. அவன் எதைப் பேசினாலும் அதை அப்படியே அவன் பக்கமே திருப்பி விட்டு, அவனது வார்த்தைகளை வைத்தே நோஸ்கட் (Nosecut) செய்கிறாள்! அவனது சொல் என்பது கட்டளை; அவனை எதிர்த்து எந்தவிதத் தயக்கமும் இல்லாமல், அதேபோல் பிடிவாதத்துடன் சவால் விடும் விதமாகப் பேசுகிறாளே என கோபம் தலைக்கு ஏறியது. அவன் கார் சாவியை இறுக்கிப் பிடித்துக் கொண்டான். அவனது கவர்ச்சியான முகம், இப்போது கோபத்தால் கொதித்தது. அவளது துணிச்சல், சத்யமூர்த்தியின் மனதில் கோபத்தையும், அதே சமயம் ஒரு சிறு ஈர்ப்பையும் (Attraction) ஏற்படுத்தியது. அவன் புறப்பட்டுச் செல்ல, அவனது ஆணவம் முழுமையாகத் தகர்க்கப்பட்டிருந்தது.
அன்று இரவு, சாவித்ரி விவானின் அறைக்குச் சென்றாள். உள்ளுக்குள் ஒருவிதமான பதட்டம், பயம், பாசம், ஆர்ப்பரிப்பு எனப் பல்வேறு விதமான உணர்வுகள் அவளின் கண்களில் பிரதிபலித்தன. காலையிலேயே வீட்டுக்கு வந்ததிலிருந்து சாவித்ரி என்ன செய்கிறாள், எங்கு செல்கிறாள் எனக் கண்குத்திப் பாம்பு போல அவளைக் கண்காணிக்க சத்யமூர்த்தி ஆட்களை நியமித்திருக்கிறான்; அதனால், மிகுந்த கவனமாக இருந்தாள்.
இதோ, விவான் அவனது அறையில் தரையில் அமர்ந்து, பெரிய ஹெட்போனை (Headphone) மாட்டிக்கொண்டு, யூடியூப் ரைம்ஸை அதிக சத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கையில் ஒரு பொம்மை இருந்தது; அதைத் தரையில் அடித்துக் கொண்டிருந்தான். யாருமே தன்னை நெருங்கக் கூடாது என்ற பாவனையில், பிடிவாதத்தின் வடிவமாக அமர்ந்திருந்தான்.
சாவித்ரிக்கு அவனது தாமரை வடிவான முகத்தைப் பார்த்ததும் கண்களில் நீர் கொட்டியது. ‘ஹே, கண்ட்ரோல் யுவர்செல்ஃப் (Control yourself)!’ என உள்ளுக்குள் இருந்து குரல் கேட்க, மெல்ல தன்னைச் சமப்படுத்திக் கொண்டவள், மெதுவாக அவனருகில் அமர்ந்தாள். அவனது ஹெட்போனை எடுக்கவோ, ரைம்ஸை நிறுத்தவோ இல்லை.
“ஹாய் விவான்! உன் பெயர் விவானா? ரொம்ப அழகான பெயர் தெரியுமா?” என்று அவள் மெதுவாகப் பேசினாள்.
விவான் அவளைக் கண்டுகொள்ளவே இல்லை; மேலும் பிடிவாதமாகக் கால்களை ஆட்டினான்.
சாவித்ரி கொஞ்சம் சத்தமாக, “ஹே விவான்! எனக்கு ஒரு சீக்ரெட் (Secret) தெரியும். உனக்கு ஸ்டோரிஸ் (Stories) பிடிக்குமா? காமிக் ஸ்டோரிஸ் புக்ஸ் (Comic stories books)?” எனச் சொல்லிக்கொண்டே அவனிடம் அருகில் அமர்ந்தவள், கதைப் புத்தகத்தைக் காட்டி, “இந்தக் கதையில ஒரு பூனை இருக்கு. அதுக்கும் பேசத் தெரியாது; ஆனா, அது ஒரு நாள் பேச ஆரம்பிச்சிருச்சு. ஏன் தெரியுமா?” என்று அவள் தானாகவே கதையைப் பேசத் தொடங்கினாள்.
விவான், அவள் பேசுவதைச் சத்தம் குறைக்கப்பட்ட ரைம்ஸ் காரணமாகக் கேட்கவில்லை. அவனுக்கு அவள் அனாவசியம் என்று தோன்றியது. சட்டென்று, அவன் தன் கையில் இருந்த பொம்மயால் சாவித்ரியின் கையில் ஓங்கி அடித்தான். அது அவனது கோபம்.
சாவித்ரியின் கையில் வலித்தது; ஆனால், அவள் சிறிதும் முகம் சுளிக்கவில்லை. அவளின் கவனம் முழுவதும் சிறுவன் மேல் இருக்க, “விவான்! நீ உன்னை விடப் பெரியவங்களை அடிக்கிறது பேட் ஹாபிட் (Bad habit), தெரியுமா? எனக்கு ஹர்ட்டிங்-ஆக (Hurting) இருக்கு, வலிக்குது. இப்படி பேட் ஹாபிட் இருந்தால் டூத் ஃபேரி (Tooth fairy) கிஃப்ட் (Gift) தர மாட்டாங்க. என்னமோ பண்ணு, நான் டூத் ஃபேரிகிட்ட சொல்றேன்; இனி விவானுக்கு நோ கிஃப்ட் (No gift) அப்டின்னு,” என்றுவிட்டு எழுந்தாள்.
விவான் அவள் பேசுவதை ஒரு நொடி கேட்டவன், அதன்பின் மீண்டும் போனில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டான்.
இதுவரையில், விவான் கோபப்பட்டால் கலாவதி பயந்து அவனைச் சமாதானப்படுத்துவார்; சத்யமூர்த்தி வேலையின் காரணமாக அலட்சியமாக இருப்பான். ஆனால், சாவித்ரியின் உறுதியான, அதே சமயம் தண்டிக்காத அணுகுமுறை விவானுக்குப் புதியதாக இருந்தது. அவன் முதல் முறையாக, நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவள் கண்களில் எந்தப் பயமும் இல்லை.
கலாவதி, இந்த உரையாடல்களைக் கேட்டு கவலையுடன் அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். சாவித்ரி வெளியே வந்தபோது, கலாவதி அவளிடம், “நீ நிஜமாவே தைரியமான பொண்ணுதான்மா. என் பேரனை எப்படியாவது பேச வச்சுடும்மா!” என மருகிக்கொண்டு கூறினார்.
சாவித்ரி கனிவான புன்னகையுடன், “என்னோட கடமை அது. விவான் நிச்சயம் உங்ககிட்ட பேசுவான், கவலைப்படாதீங்க,” என்று ஆறுதல் கூறினாள்.
கலாவதி கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, “என் பெரிய பையனுக்குக் கோபம் அதிகம். அதுவும் விஷ்வா கோமாவுக்குப் போனதிலிருந்து அவன் ரொம்பக் கஷ்டப்படுறான். என் உடல்நிலையும் அதற்கு ஒரு காரணம். அவன்தான் என் முதுகெலும்பு,” என்றார்.
சாவித்ரி அதற்கு எந்தப் பதிலும் பேசவில்லை; அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அந்த நேரம் பார்த்து, சத்யமூர்த்தியின் காரின் ஹாரன் சத்தம் கேட்க, கலாவதி திடுக்கிட்டு, “என் பையன் வந்துட்டான்மா!” எனப் பதட்டமானார்.
* தொடரும்.