உயிரே 16
ஜெஸி கைகளைக் கட்டிக்கொண்டே கொஞ்சம் தயக்கத்துடன் சாப்பிட உள்ளே வந்தாள். அவளுக்குப் பின்னால் சுதாவும், அவருக்குப் பின்னால் சசியும் வந்தார்கள்.
சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தவள், “மா, அங்கிளைக் காணோம்?” என்று கேட்டாள்.
“யாரு கண்ணு? பெரியசாமியவா கேக்குற?”
“ஆமாம் மா,” என்று அவள் தலையசைக்க, சத்யா குறுக்கிட்டாள்.
“ஓ, எங்க மாமாவைக் கேக்குறீங்களா?”
“இல்ல இல்ல,” என்று மறுத்த ஜெஸி, செவ்வந்தியைப் பார்த்தபடி, “செவ்வந்தியோட டாடி,” என்றாள்.
ஜெஸி அப்படிச் சொன்னதும், சாப்பிட்டுக் கொண்டிருந்த செவ்வந்திக்கு டக்கென்று புரை ஏறியது. இருமல் வர, எல்லோரும் ஒரு கணம் ஜெஸியைத் திரும்பிப் பார்த்தார்கள். அவள் எதுவுமே நடக்காதது போல, “ஏன்? அப்படிக் கூப்பிடக் கூடாதா?” என்று சாதாரணமாகக் கேட்டாள்.
சுதா சிரித்துக்கொண்டே, “இது உன்னோட வீடு மாதிரி கண்ணு. உன் இஷ்டப்படி இருக்கலாம்,” என்றார்கள்.
“உங்க பொண்ணு ரொம்ப லக்கி,” என்று சொல்லிக்கொண்டே ஒரு வாய் இட்லியைப் பிய்த்து வாயில் வைத்தாள்.
“என்ன, வீட்டு ஞாபகம் வந்திருச்சா?” என்று அருண் கேட்டான்.
“அதுக்கென்ன, வீட்டுக்கு போன் பண்ணி அம்மா கிட்ட பேசுங்க,” என்று சத்யா உற்சாகமாகச் சொன்னாள்.
ஜெஸி சாதாரணமாக, “அம்மா இருந்தாத்தானே பேச… என் மம்மி இல்ல. என்னோட சின்ன வயசுலேயே ஷீ இஸ் கான்,” என்று சொல்லிக்கொண்டே இயல்பாக சாப்பிடத் தொடங்கினாள்.
அந்த ஒரு வார்த்தை, சாப்பிட்டுக்கொண்டிருந்த மொத்த இடத்தையும் அமைதியாக்கிவிட்டது. அனைவரும் தங்கள் வேலையை விட்டுவிட்டு ஜெஸியையே பார்த்தார்கள்.
அவர்களின் பார்வையை உணர்ந்து நிமிர்ந்தவள், “என்ன ஆச்சு?” என்று கேட்டாள்.
சுதா டக்கென்று தன் இடத்திலிருந்து எழுந்து வந்து, ஜெஸியின் தலையை மென்மையாக வருடி, அவளை அணைத்துக்கொண்டார். “என்ன கண்ணு இப்படிச் சொல்லிட்ட… நான் இருக்கேன், நாங்க எல்லாரும் இருக்கோம் உனக்கு.”
“அட போங்க மா! என் டாடிக்கே நான் முக்கியம் இல்ல…”
“ஏன், என்ன ஆச்சு?” என்று சத்யா ஆர்வமாகக் கேட்டாள்.
ஜெஸி ஒரு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு, “சரி, இது ஒரு சந்தோஷமான நேரம். அதைப் பத்திப் பேசி மூடைக் கெடுக்க விரும்பல. டின்னர் சூப்பரா இருக்கு!” என்று பேச்சை மாற்றிவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
செவ்வந்திக்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ‘அவருக்கும் அம்மா இல்ல, இவளுக்கும் அம்மா இல்ல… அச்சோ பாவம்! அதனாலதான் இப்படி இருக்காங்களோ!’ என்று மனதுக்குள் வருந்தினாள்.
ஜெஸி சாப்பிட்டு முடிக்கும் வரை சுதா அவளையே கவலையோடு பார்த்தார். ‘இத்தனை கவலையை மனசுக்குள்ள வச்சுக்கிட்டு இந்த பொண்ணு எப்படித்தான் சிரிச்சுப் பேசுதோ!’ என்று நினைத்துக்கொண்டார்.
ஜெஸி சாப்பிட்டு முடித்துவிட்டு, தன் பழக்க தோஷத்தில் சாப்பிட்ட தட்டிலேயே கையைக் கழுவிவிட்டு, கையை உதறினாள். அவள் உதறிய நீர், சரியாக அந்தப் பக்கம் வந்த சசியின் முகத்தில் தெறித்தது.
“ஹேய், அறிவு இல்லையா உனக்கு?” என்று அனைவர் முன்னிலையிலும் கத்திவிட்டான் சசி.
சுதா, செவ்வந்தி, சத்யா, அருண் என அனைவரும் ஒரு கணம் ஸ்தம்பித்துப்போய் அவனை அதிர்ச்சியுடன் பார்த்தார்கள்.
ஜெஸி அவனை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தாள்.
“என்ன ஆச்சு சசி? இப்போ எதுக்கு இவ்வளவு கோபம்? அதுவும் எதுக்கு இப்படி குரலை உயர்த்தி, மரியாதை இல்லாம பேசுற? இது மாமாவுக்குத் தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா?” என்று சுதா கோபமாகக் கேட்டார்.
சசி, “அத்தை, நான் வேணும்னு பண்ணல. இந்தப் பொண்ணுதான் என் மேல எச்சிக் கையை உதறி…” என்று அவளை முறைத்தான்.
ஜெஸி வேண்டும் என்றே முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு, “நான் வேணும்னு பண்ணல மா. இட்ஸ் ஓகே,” என்று சோகமாகச் சொல்லிவிட்டு எழுந்தாள்.
“ஐயோ என்ன கண்ணு இது? அதெல்லாம் ஒண்ணுமில்லடா. அவன் தெரியாம பேசிட்டான். நீ மனசுல வச்சுக்காத,” என்று சுதா சமாதானப்படுத்தினார்.
“என்னால உங்களுக்குத் தொந்தரவு வேணாம் மா. அன்பு வந்ததும் நான் கிளம்பிடுவேன்,” என்று சொல்லிக்கொண்டே அவள் வேகமாக வெளியே சென்றுவிட்டாள்.
“அத்தை, இங்க பாருங்க! சாப்பிட்ட தட்டுல கையக் கழுவிருக்கு. இது என்ன பழக்கம்?” என்று சசி சொல்ல வர, சுதா கோபமானார்.
“என்ன சசி இது? அது ஒரு அப்பா அம்மா இல்லாத புள்ளை. நீ இப்படி நடந்துக்கலாமா? இப்போ அந்தப் புள்ளை கோச்சுக்கிட்டுப் போச்சு. மாமா வந்தா என்னைத்தான் திட்டுவாரு!” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, முத்துசாமி உள்ளே வந்தார்.
“அந்தப் பட்டணத்துப் பொண்ணு சாப்பிட்டுப் போயிடுச்சா சுதா?” என்று தலையைத் துவட்டிக்கொண்டே கேட்டார்.
அங்கிருந்த அனைவரின் பார்வையும் முத்துசாமி மற்றும் சசி இருவரையும் மாறி மாறிப் பார்த்தது.
செவ்வந்தி எழுந்து, “மாமா, அவங்க இப்போதான் சாப்பிட்டுப் போனாங்க. நீங்க சாப்பிடுங்க… அண்ணா, நீயும் வா!” என்று அவனையும் அழைத்தாள்.
“எனக்கு வேணாம் பாப்பா,” என்று சொல்லிவிட்டு சசி வெளியே சென்றான்.
செவ்வந்தி நேராக அவன் பின்னாடியே ஓடி, “அண்ணா! அண்ணா, நில்லு!” என்று அவன் முன்னால் வந்து நின்றாள்.
“என்ன பாப்பா?” என்று வேறு எங்கோ பார்த்தபடி கேட்டான்.
“அண்ணா, அந்தப் பொண்ணு தெரியாம பண்ணிடுச்சு. நீ எல்லார் முன்னாடியும் இப்படிப் பேசியிருக்கக் கூடாது. இப்போல்லாம் உனக்கு கோபம் ரொம்ப அதிகமா வருது!”
“நான் வேணும்னு பண்ணல பாப்பா! ஆனா அத்தை…”
செவ்வந்தி அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு, “அண்ணா, எல்லார் முன்னாடியும் இப்படிக் கத்துனது தப்புன்னு உனக்கே தெரியும். சோ, அந்தப் பொண்ணுகிட்ட சாரி சொல்லிடு.”
“மாட்டேன். நான் சொல்ல மாட்டேன்.”
“அண்ணா, என்ன இது? அந்தப் பொண்ணு குடும்பத்தை விட்டுட்டு வந்திருக்கு. அவளோட ஃபிரெண்ட் அன்பு, நம்ம பொறுப்புல விட்டுட்டுப் போயிருக்காரு. நாம இப்படி நடந்துக்கறது நல்லா இருக்கா சொல்லு? நீயே யோசிச்சுப் பாரு,” என்று அவள் கெஞ்சினாள்.
“இல்ல பாப்பா.”
“சரி, அண்ணா சாப்பிட வா.”
“நான் பெரியப்பா வந்ததும் சாப்பிடுறேன்,” என்று சொல்லிக்கொண்டே அதே இடத்தில் நின்றான்.
செவ்வந்தி அதற்கு மேல் எதுவும் பேசாமல் உள்ளே சென்றுவிட்டாள்.
சசியின் பார்வை தெற்குப் பக்கமிருந்த வீட்டின் மீது சென்றது. ‘நம்மதான் கொஞ்சம் அதிகமா பேசிட்டோமோ! நம்ம நிலையில் இருந்து என்னைக்கும் மாறக் கூடாது. இனி அவகிட்ட நாமளா எந்தப் பிரச்சனையும் பண்ணக் கூடாது. அவ என்னமோ பண்ணிட்டுப் போறா, நமக்கு என்ன? பாப்பா சொன்ன மாதிரி ஒரு தடவை மன்னிப்பு கேட்டுட வேண்டியதுதான்,’ என்று ஒரு பெருமூச்சை விட்டு அந்த வீட்டை நோக்கி நடந்தான்.
இதே நேரத்தில்…
பெரியசாமி பங்க்கில் கலெக்ஷனை சரிபார்த்துவிட்டு, தன் வண்டியில் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.
ஒரு மறைவான இடத்தில், ராசு தன் ஆட்களிடம் சொல்லிக்கொண்டிருந்தான். “டேய், சரியா அந்த டர்னிங்ல வண்டி மேல ஏத்தி சேக் பண்ணுங்கடா!”
“அண்ணே! என்னண்ணே சொல்ற? அவரு ஊருக்கே அறங்காவலர் அண்ணே!”
“அது இந்த ஊர்க்காரனுக்குத்தான்டா. அவன் எப்படி ஓரம்பரைக்காரனுக்கு அறங்காவலன் ஆக முடியும்? அந்த ஆளோட பொண்ணைக் கேட்டதுக்கு என்ன பேச்சு பேசினான்! அவ எனக்கு முறைப்பொண்ணு. அவளைத் தூக்கிட்டுப் போக நான் யாரைக் கேட்கணும்? தூக்குங்கடா வண்டியை!” என்று மீசையை நீவி விட்டான் ராசு.
அவன் ஆட்கள் காரை வேகமாக ஓட்டி, பெரியசாமி சென்றுகொண்டிருந்த வண்டி மீது மோதுவது போல நெருங்கினார்கள். ஆனால், அதே சமயம் எதிர்த் திசையில் இருந்து அன்பு செல்வனின் கார் மின்னல் வேகத்தில் வர, “டேய் டேய், வண்டியைக் குறைடா! இன்னொரு கார் வருது!” என்று ராசு கத்தினான்.
ராசுவின் கார், பெரியசாமியின் வண்டியை லேசாக உரசிவிட்டுச் செல்ல, அவர் நிலைதடுமாறி வண்டியுடன் கீழே விழுந்தார்.
தன் பார்வையை கூராக்கிய அன்பு செல்வன், அந்த கார் ஒரு இருசக்கர வாகனத்தை உரசிவிட்டுப் போவதைப் பார்த்து, பதட்டத்துடன் காரை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கினான்.
பெரியசாமி வலியுடன் தரையில் கிடந்தார். அன்பு செல்வன் வேகமாக அருகில் சென்று வண்டியைத் தூக்கி நிறுத்திவிட்டு, விழுந்தவரைப் பிடித்துத் தூக்கினான். “எப்படி இருக்கு உங்களுக்கு? பார்த்து வர மாட்டீங்களா?” என்று சொல்லிக்கொண்டே அவரைத் தன் காருக்கு அருகில் அழைத்து வந்தான்.
“அது… அந்தக் கார் மோதிடுச்சு தம்பி. நல்லவேளை நீங்க வந்தீங்க…” என்று சொல்லிக்கொண்டே வெளிச்சத்தில் அவன் முகத்தைப் பார்த்த பெரியசாமிக்கு பேச்சே நின்றுவிட்டது.
அன்பு செல்வனும் அவரை இப்போதுதான் அடையாளம் கண்டுகொண்டான். “இந்த நேரத்துல, இந்த வயசுல வீட்ல தூங்குற வேலையைப் பார்க்காம, எதுக்கு இப்படி ஊரைச் சுத்தி டார்ச்சர் பண்றீங்க?”
பெரியசாமி கோபத்தில் அவன் சட்டையைப் பிடித்து, “நீதானேடா என் மேல வண்டியை ஏத்தித் தூக்கப் பார்த்த! ச்சே… இவ்வளவு கேவலமான ஒரு ஆளை நான் பார்த்ததே இல்லை!”
“ஹலோ, நிறுத்துங்க! நான் உங்களைக் காப்பாத்த வந்தா, பழியை என் மேலேயே தூக்கிப் போடுறீங்களா? உங்களையெல்லாம்…” என்று சலித்துக்கொண்டவன், காரிலிருந்து ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினான்.
“நான் உன்னை நம்ப மாட்டேன். நீதான்டா இதை பண்ணிருக்க, எனக்குத் தெரியும்!”
அன்பு செல்வன் ஒரு பெருமூச்சை விட்டு, “அது நான் இல்ல. இந்த ஊர்க்காரன்தான் உங்களைத் தூக்க வந்திருக்கான். என்னோட கார் வர்றதைப் பார்த்ததும் வேகத்தைக் குறைச்சுட்டுப் போயிட்டானுங்க. நீங்க யார் கிட்ட என்ன வம்பை விலை கொடுத்து வாங்குனீங்களோ தெரியலை,” என்று சொல்லிவிட்டுத் தன் காருக்குச் சென்றான்.
“என்ன சொல்ற?” என்று அவனைப் பிடித்தார் பெரியசாமி.
“அது ஒரு வெள்ளைக் கலர் கார். நம்பர் TN @#+*. நீங்களே யாருன்னு கண்டுபிடிச்சுக்கோங்க. நான் பகல்ல வேணும்னா கவனம் சிதறுவேன், ஆனா நைட்ல எப்போவும் இப்படி கவனம் இல்லாம இருக்க மாட்டேன்,” என்று சொல்லிவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் காரைக் கிளப்பிச் சென்றுவிட்டான்.
பெரியசாமி அந்த நம்பரைப் பார்த்ததும், “ராசு…” என்று உதடுகள் முணுமுணுக்க, அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.
செவ்வந்தி தன் தந்தைக்கு போன் செய்ய, “மாமாகிட்ட போனைக் கொடு கண்ணு,” என்று முத்துசாமியிடம் பேச ஆரம்பித்தார்.
சாப்பிட்டுக்கொண்டிருந்த முத்துசாமி, விஷயத்தைக் கேட்டதும் வேகமாகக் கையைக் கழுவிவிட்டு, சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பினார்.
“என்னங்க, என்ன ஆச்சு?” என்று பதற்றத்துடன் சுதா வெளியே வர, “அருண் வாடா! சசி எங்கே?” என்று தேடிக்கொண்டே, “எனக்கு ஒரு அவசர வேலை, நான் வர்றேன்,” என்று சொல்லிவிட்டு அருணுடன் பறந்தார்.
இங்கே சசி, ஜெஸியிடம் மன்னிப்புக் கேட்க, தயக்கத்துடன் அவள் தங்கியிருக்கும் அறைக்கு அருகில் வந்து நின்றான்.
அடுத்து என்ன நடக்கும்?
தொடரும்…
do like and share pradhanyakuzhalinovels