உயிரே-14
ஜெஸி அந்த உடை மாற்றும் இடத்தில் சசியின் இரண்டு சட்டைகள் தொங்கிக்கொண்டு இருக்க, ஜெஸி அந்தச் சட்டை இரண்டையும் தீண்டத்தகாத பொருளைத் தூக்குவதுபோலத் தூக்கி அந்தப் பையின் மேல் போட்டுவிட்டுத் திரும்பவும், அங்கே சசி அவளைக் கை கட்டி நின்று பார்த்துக்கொண்டிருக்கவும் சரியாக இருந்தது.
சசியின் பார்வை அவளைத் துளைத்துக்கொண்டிருக்க… ஜெஸி இரண்டு கைகளையும் தட்டிக்கொண்டே உள்ளே செல்ல…
“ஹே, நில்லு டி!”
“யாரைப் பார்த்து ‘டி’ சொல்ற! அவ்ளோதான்டா, உன்னை என்ன செய்வேன்னு தெரியுமா?” என்று ஜெஸி அவனை நோக்கி வந்தாள்.
சசி அவளைக் கோபத்துடன் பார்த்தவன், “உன் மனசுல பெரிய ரதின்னு நினைப்பா? அப்படியே சீன் போடுற! இது என் மாமன் வீடு! என்னோட சட்டையைத் தொடாத தொடுவதைப்போல தூக்கிட்டு வந்து வெளியே போடுற? என்ன டி உன் மனசுல நினைச்சிட்டு இருக்க?”
ஜெஸி நெற்றியைத் தேய்த்துக்கொண்டே, “நீ ஒண்ணும் தேவ தூதன் இல்லை. உன்னைப் பார்த்தாலே பத்திக்கிட்டு வருது!” என்று கூறியவள், முகத்தை ஒரு மாதிரி வைத்துக்கொண்டு, “இங்கே தங்க எனக்குத் துளிகூட விருப்பம் இல்லைதான்! அதுவும் நீ இருக்கும் இடத்தில் நான்! ச்ச, டிஸ்கஸ்டிங்!” என்று கூறிக்கொண்டே அவனை கேவலமாகப் பார்த்தாள்.
சசி அடுத்த வார்த்தை பேச வர… அதற்குள், “பேபி!” என்று சத்தம் கேட்டது. அன்பு அவளைத் தேடி வந்தான். “யார்கிட்ட பேசிட்டு இருக்க?”
அந்த நேரம் அங்கே வந்த அருண், “மாமா, அங்கே பாப்பா ரெண்டு பேரும் வெயிட் பண்றாங்க! வாங்க போலாம்! உன்னோட பேக் எடுத்துகிட்டீயா?” என்று கேட்டான்.
“ஹான் மாப்பிள்ளை!” என்று சொல்லிக்கொண்டே சசி உடையை மடித்து உள்ளே வைத்தான்.
அன்பு, அருணை கொஞ்சம் விரைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான். செவ்வந்திக்கு அருணை மிகவும் பிடிக்கும். ஆனால் அருணை சுத்தமாக அன்புவுக்குப் பிடிக்காது. எப்போ பார்த்தாலும் அவளுடன் ஒட்டிக்கொண்டே சுற்றுவான்.
அருண் ஜெஸியைப் பார்த்து, “இடம் சௌகரியமா இருக்குங்களா? உங்களுக்குச் சரிதானுங்க அக்கா?”
‘அக்கா’ என்ற வார்த்தையைக் கேட்டதும் ஜெஸிக்கு தன் தந்தைக்கும் சித்திக்கும் பிறந்த தம்பியின் நினைவு வர, உடனே கோபமும் தொற்றிக்கொண்டது. அருண் ‘அக்கா’ என்று அழைத்ததும் சசி உதட்டைக் கடித்துச் சிரிக்க ஆரம்பித்தான்.
ஜெஸி உதடு துடிக்க, அவளது கோபத்தைக் கட்டுப்படுத்த, அன்பு அவளுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு வருடியவன், “சார், அவள் ஓகே! இந்த இடம் கம்பர்ட்தான். இப்போ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தால் சரியாகிடுவா!” என்றான்.
சசி, “மாப்பிள்ளை, நம்ம டிஸ்டர்ப் பண்றோம்னு சொல்றாங்க! வாங்க போவோம்! மேடம் ரெஸ்ட் எடுக்கட்டும்!” என்று சொல்லிவிட்டு அவன் நகர…
அன்பு உடனே, “அப்படி இல்லை சார்! இவளுக்கு ரெஸ்ட் இல்லைன்னா எதிரில் யாரு இருந்தாலும் கொஞ்சம் பயம்தான்! ரொம்பக் கோபம் வரும்! சின்ன வயசுல இருந்தே அப்படிப் பழக்கமாயிப்போச்சு!” என்றான்.
சசி இளக்காரமாக, “என் தங்கச்சி கூட இப்படித்தான்… அப்போ நாங்க அப்படியே விடலை. நாலு சாத்து சாத்திவிட்டோம். இப்போ பொறுப்பா இருக்கா!” என்று கூறிவிட்டு ஜெஸியைப் பார்க்க…
“மாமா, என்ன சொல்லிட்டு இருக்கீங்க?” என்று காதுக்குள் கதை பேசியவன், “சரிங்க, நீங்க ரெஸ்ட் எடுங்க, நாங்க போறோம்!” என்று சசியை அழைத்துக்கொண்டு கீழே வந்தான்.
அன்பு அவன் சொன்னதை யோசித்து, ‘ஓ காட், நல்ல வேளை இவளுக்கு இதுக்கு அர்த்தம் புரியலை… புரிந்திருந்தால் அவனோட சட்டையைப் பிடிச்சு சண்டை போடப் போயிருப்பாளே!’ என்று ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டே ஜெஸியைப் பார்த்தான்.
இங்கே கீழே வந்த சசியிடம், “மாமா, எதுக்கு அந்தப் பொண்ணுக்கு அட்வைஸ் பண்ணிட்டு இருக்கீங்க! அவங்க என்னமோ பண்றாங்க! நமக்கு என்ன? இங்கே இருக்கிற வரைக்கும் நம்ம நல்லாப் பார்த்துக்கணும். அவ்வளவுதான்! அந்த அக்காவுக்குத் தங்க இடம் கிடைச்சதும் காலி பண்ணிட்டுப் போயிடுவாங்க!”
“இன்னொரு தடவை அவளை எல்லாம் ‘அக்கா’ன்னு சொல்லி கூப்பிடாத! எனக்கு அவளைப் பார்த்தாலே சுத்தமா பிடிக்கலை!” என்று சசி காட்டமாகக் கூறினான்.
அருண் கொஞ்சம் திடுக்கிட்டு, “எதுக்கு மாமா இத்தனை கோபம்! நீங்க கோபமே பட மாட்டீங்களே! என்ன ஆச்சு?”
சசி ஒரு பெருமூச்சு விட்டு, “ஒண்ணும் இல்லை மாப்பிள்ளை. அவள் எல்லார் முன்னாடியும் ‘மாமா’, ‘அத்தை’ அவ்ளோ தூரம் சொல்லியும் இங்கே தங்க சீன் போட்டாள். அது எனக்குப் பிடிக்கலை. அவ்ளோ கஷ்டப்பட்டு அவள் இங்கே தங்கணுமா?” என்று கேட்டான்.
“இது அவ்ளோ பெரிய விஷயம் இல்லை மாமா! அந்த இன்ஜினியரை அப்பாவிற்கு ரொம்ப பிடிச்சிருக்கு, அதனால இங்கே தங்க வைக்கிறார். விடுங்க மாமா, இது நமக்கு எதுக்கு? காரணாம்பாளையம் போறோம், ஃபன் பண்றோம்!” என்று சொல்லிக்கொண்டே அழைத்துச் சென்றான்.
சத்யா குதூகலத்துடன், “அண்ணா, போலாமா! அக்கா ரெடி, நானும் ரெடி!” என்று சொல்லிக்கொண்டே கிளம்பினார்கள்.
இங்கே அன்புசெல்வன் அவளுக்கு முன்னால் அமர்ந்திருந்தான். “சரி பேபி, நான் கிளம்பவா?”
ஜெஸி கண்களை வெடுக்கென்று முழித்து, “என்னை இங்கே விட்டுட்டுப் போற? என்னால் இங்கே இருக்க முடியாது…”
“ஜஸ்ட் ரிலாக்ஸ் பேபி! நான் போயிட்டு ஈவினிங் வரேன். இப்போ நீ ரெஸ்ட் எடு! எது வேணும்னாலும் சுதா ஆண்டிகிட்ட கேளு!”
“ஒரு நிமிஷம் இரு!”
“என்ன பேபி!”
ஜெஸி அவனைப் புருவம் நெருக்கிப் பார்த்து, “அந்த டீ எப்படி உன்னால் குடிக்க முடிந்தது? அப்படி சகிச்சுக்கொண்டு குடிச்சே ஆகணுமா?”
இதைக் கேட்டதும் அன்புசெல்வன் சிரித்துக்கொண்டே, “என்னைப்பத்தி உனக்குத் தெரியாதா பேபி!”
“என்ன அன்பு?”
அன்புசெல்வன், “அவளை இங்கே இருந்து தூக்கிட்டுப் போற வரைக்கும் இதை அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.”
“அப்புறம்?” என்று ஜெஸி கேட்க…
“நம்ம பழக்கத்துக்கு அவள் மாறிடுவா!”
“மாறலைன்னா அவளை மாத்திடுவேன்!” என்று தந்திர வார்த்தையில் கூறினான். அதைக் கேட்டுச் சிரித்த ஜெஸி, “அது அன்பு! யாருக்காகவும் எதுக்கும் நம்மளை மாற்றிக்கொள்ளக் கூடாது!” என்று முதல் வரியை அவள் சொல்ல…
“அப்படி மாறினால் பச்சோந்திக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்!” என்று அன்பு சிரித்துக்கொண்டே அவளைப் பார்த்தான்.
ஜெஸி ஒரு பெருமூச்சு விட்டு, “நான் கூட நீ மாறிவிடுவியோன்னு நினைச்சேன்.”
அன்பு சிரித்துக்கொண்டே, “உனக்கும் எனக்கும் ஜெண்டர் தான் வித்தியாசம், நம்ம ஒண்ணு பேபி! எப்பவும் மாற மாட்டேன்!” என்று சொல்லிவிட்டு, “நீ ரெஸ்ட் எடு!” என்று சென்றான்.
அருண், சசி, செவ்வந்தி, சத்யா என அனைவரும் அங்கே சென்றார்கள். தண்ணீர் நிறைய இருக்க, அருண் மற்றும் சத்யா இருவரும் குதூகலத்துடன் விளையாட ஆரம்பித்தார்கள். “அண்ணா வா! அக்கா என்ன முகத்தை இப்படி வச்சிருக்க? வா!” என்று அழைத்தாள்.
சசி அவளைப் பார்த்து, “நீ போ! அதான் பாப்பா வரலைன்னு சொல்லுதே! போ!”
“போடா!” என்று சத்யா செல்ல…
சசிக்கு உடனே ஜெஸியின் நினைவு வந்தது. ‘அடிங்க… பல்லைத் தட்டிக் கையில கொடுத்திடுவேன். என்ன பழக்கம் இது? பெரியவங்களை மரியாதையா கூப்பிடத் தெரியாதா! இல்லை படிக்கப் போனதும் நம்ம பழக்கத்தை மறந்துட்டியா?’
இதைக் கேட்டதும் சத்யா அழ ஆரம்பித்தாள்.
செவ்வந்தி திடுக்கிட்டு, “அண்ணா! விடுங்க! சத்யா பாப்பா!” என்று அழைக்க…
அவள் வேகமாக ஓடிவிட்டாள். அருணுக்கு சத்யாவைப் பார்க்கப் பாவமாக இருந்தது. “என்ன மாமா இப்படிச் சொல்லிப்புட்டீங்க? அவ அழுதுகிட்டே ஓடுறா?” என சத்யாவின் பின்னால் ஒருவித தயக்கத்துடன் சென்றான்.
செவ்வந்தி, “அண்ணா! உன்னாலதான்!” என்று செல்லப்போக…
சசி, “விடு பாப்பா! நீ போகாத!.”
“என்ன அண்ணா! உங்களோட பேச்சு ஒண்ணுமே சரியில்லையே! வந்தபோது எப்படி சிரிச்சிட்டு சந்தோஷமா இருந்தீங்க? இப்படிச் சின்னவளை பொசுக்குன்னு திட்டிட்டீங்க! அங்க பாருங்க, அழுதுகிட்டே ஓடுறா! ஆட்டுக்குட்டி மாதிரி அங்கேயும் இங்கேயும் அழகா சுத்திக்கிட்டு இருப்பா! இப்படி அவளைத் திட்டி கஷ்டப்படுத்திட்டீங்களே!” என்று செவ்வந்தி வருத்தத்துடன் கூறினாள்.
உடனே சசி செவ்வந்தியிடம், “அப்படி இல்லை பாப்பா! நம்ம எதுக்காகவும் சில விஷயத்தை மாத்திக்கக் கூடாது! பாரு, அங்கே படிக்கப் போனதும் நம்ம வீட்டோட பழக்கத்தை மாத்திக்கிட்டு ‘போடா’ன்னு சொல்றா? நான் அவளை விட எத்தனை வயசுக்கு மூத்தவன்? இது மாதிரி கட்டி கொடுக்கும் இடத்தில் யாரையாவது சொன்னா, நம்ம குடும்பத்தைப் பற்றி அவங்க என்ன நினைப்பாங்க?” என்று கேட்டான்.
செவ்வந்தி சிரித்துக்கொண்டே, “அண்ணா, நம்ம பழக்கத்தை மாத்திக்கக் கூடாதுதான். ஆனா நமக்கு பிடிச்சவங்களுக்காக ஒரு சில விஷயத்தை மாத்திக்கலாம். அது ஒண்ணும் தப்பு கிடையாது. அவ நம்மளோட தங்கச்சி, நம்மளைத்தான் அப்படி கூப்பிடுறா! நம்மளோட கடைக்குட்டி செல்லம், அதுக்கு நம்மளோட பழக்கத்தை மாத்திக்கிறதுல ஒண்ணும் தப்பு இல்லையே! நீங்க கம்முனு இருங்க! அவளைத் திட்டாதீங்க!” என்று அவள் செல்லப்போக…
சசி, “சரி சரி, இரு! எங்கே போற? அவளே வருவா! நீ இறங்க வேண்டாம். பெரியப்பா உன்னைப் பத்திரமா பார்த்துக்கச் சொன்னாரு. அவள் ரெண்டு நிமிஷத்துல வந்து ஒட்டிக்குவா!” என்று இருவரும் அந்த ஆற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ஒரு பக்கம், அங்கு சிறுவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
அருண், “ஏய், நில்லு டி!” என்று அவளின் பின்னால் மணலில் நடக்க முடியாமல் ஓடினான்.
சத்யா கண்களைத் துடைத்துக்கொண்டே, “நீ மட்டும் எதுக்கு சும்மா இருக்கிற? நீயும் என்னை ஏதாவது திட்டு!” என்று சொல்ல…
“சத்யா குட்டி! என் சீனி கட்டி!” என்று அருண் அழைத்தான்.
சத்யா ஒரு நிமிடம் திகைத்துத் திரும்பிப் பார்க்க…
அருண் கண்ணடித்துக்கொண்டே, “அழகி! என் வருங்கால பொண்டாட்டி!” என்றான்.
உடனே கண்களைத் துடைத்தவள், “என்ன மாமா, இன்னைக்குப் பயங்கரமா பேசுற?” என்று அருகில் நெருங்கினாள்.
அருண், ‘ஆக்டிவேட் ஆகிட்டா! அய்யோ இவளை வச்சுக்கிட்டு…’ என்று அவளை அசறும் நேரத்தில், தண்ணீரில் தள்ளிவிட்டான்.
“மாமா, உன்னை விட்டுடுவேனா…”
அருண், “ஏய், வேணாம் டி மாமா, செவ்வந்தி எல்லாம் இருக்காங்க!” என்று நகர்ந்து சென்றான்.
“ஏய் மாமா, உன்னை என்ன பண்றேன் பாருடா!” என்றவள் அவனுடைய கையைப் பிடித்துத் தண்ணீருக்குள் இழுத்தாள்.
அருண், “விடு டி!”
சத்யா, “மாமா, வாயேன்! தண்ணீருக்குள் மூச்சைப் பிடிச்சு கொஞ்ச நேரம் இருப்போம்!” என்று ஒட்டிய உடையுடன் அவனுக்கு அருகில் நெருங்கினாள்.
அருண்…?
இங்கே பெரிய சாமி – ஜெஸி சந்திப்பு! காத்திருப்போம்! எப்போ அன்பு – பெரிய சாமி சந்திப்பு நடக்கும்? அது கொஞ்சம் பயங்கரமா இருக்கப் போகுது? வெயிட் பண்ணுங்க. இனி UD டெய்லி வரும்.
தொடரும்…
do like and share pradhanyakuzhalinovels