உறவே உயிரே

by Pradhanya kuzhali
396 views

உயிரே-13

“சரி மாப்பிள்ளை, கிளம்பலாமா?” – வேட்டியை மடித்துக் கட்டியபடி உள்ளே வந்தான் சசி.

சசியைப் பார்த்த அடுத்த நொடியே ஜெஸி எழுந்து நின்றாள்.

அன்பு, செவ்வந்தியின் பார்வையைத் தாங்க முடியாமல், கண்ணை மூடிக்கொண்டு அந்த டீயை ஒரே மடக்கில் குடித்துவிட்டு எழுந்து நின்றான்.

சசி அவளைப் பார்த்ததும், “நீயா?” என்று கேட்டான்.

ஜெஸி அவனை முறைத்துக்கொண்டே நின்றாள்.

செவ்வந்தி அவனை முறைத்துப் பார்க்க, அன்புவும் அவளுடன் சேர்ந்து எழுந்து நின்றான்.

அப்போது முத்துசாமி உள்ளே வந்தார். “அட, இன்ஜினியர் தம்பி நீங்களா! என்னால் போன் எடுக்க முடியலை. இப்பதான் என் வீட்டில் போன் பண்ணிச் சொன்னாங்க, அதான் விரசா வந்தேன்.”

அன்பு, “ஆமா சார்! உங்களைப் பார்க்கத்தான் வந்தோம். இது ஜெஸி! என்னோட கசின். கம் ஆன் ஜெஸி, விஷ் ஹிம்!”

ஜெஸி, “வணக்கம் சார்!” என்று கூறினாள்.

முத்துசாமி, “உட்காருமா! சுதா, காபி தண்ணி போட்டு எடுத்து வா. மணி என்ன?” என்று பார்த்தவர், “சாப்பிட்டுப் போங்க கண்ணு!” என்றார்.

அன்பு, “இல்லைங்க சார், இட்ஸ் ஓகே! என்னோட ப்ராஜெக்ட்ல இப்போ இவங்களும் ஜாயின் பண்ணியிருக்காங்க. அதனால இவங்க தங்க இப்போ வீடு வேணும். ஃபுட் ஒன்னும் பிரச்னை இல்லை, என் கூடச் சாப்பிடுவாள். ஆனா இவளுக்குக் கடையில் வெளியில சாப்பிட்டா சேராது. அதான் உங்களால் அரேஞ்ச் பண்ண முடியுமா?” என்று பேசிக்கொண்டிருந்தான்.

சசி கொஞ்சம் தெனாவெட்டாக அங்கே இருந்த தேக்குத் தூணில் சாய்ந்துகொண்டு, தன் பார்வையை அவள் மேல் வீசினான். ‘திமிரு பிடிச்சவ! இவளுக்கு இது எல்லாம் ஒரு கேடு! ஃபுட் பாய்சன் வேற! அவன் அதுக்கும் மேலே கொடி பிடிக்கிறான். ஒண்ணும் முடியலை!’ என்று மீசையை முறுக்கிவிட்டபடி பார்த்தான்.

செவ்வந்திக்கு இன்னும் கடுப்பு. அன்பு, ஜெஸியைத் தாங்குவது அவளுக்கு உள்ளுக்குள் பொறாமையாக இருந்தது.

உடனே சசி, “சின்ன பாப்பா, கிளம்புமா! காரணம்பாளையம் போகலாம் மாப்பிள்ளை! சீக்கிரம்!” என்று கூறினான்.

“இதோ அண்ணா!” என்று சொல்லிக்கொண்டே செவ்வந்தி அவளின் அறைக்குச் சென்றாள். அருண் சட்டையை மாற்ற உள்ளே சென்றான். சத்யாவும் செவ்வந்தி கூட உள்ளே சென்றாள்.

அன்பு, “என்ன பேபி ஃபேஸ், கொஞ்சம் கோபமா இருக்கு?”

“ஓ ஜீசஸ், ப்ளீஸ் அன்பு, எனக்கு இங்கே ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது. வா போகலாம்! நான் ஈரோடு பக்கத்துல ரெண்ட் எடுத்து ஸ்டே பண்றேன்! அதுதான் நமக்கு நியர். நீயும் ஒரு பிளாட் எடுத்துக்க. இந்த இடம் எனக்கு சுத்தமா பிடிக்கலை!” என்று ஜெஸி கூறினாள்.

அன்பு, “டிரை டு அண்டர்ஸ்டாண்ட் பேபி! இங்கே இந்த ஈரோடு ஈஸ்ட் பக்கத்துல இவங்கதான் பெரிய ஆளு! இங்கே கொஞ்சம் பிரச்னை வரும்போது ஃபேஸ் பண்ண ஈஸியா இருக்கும் பேபி. இவரு பேரைச் சொன்னால் ஈஸியா இருக்கும், அதுக்குத்தான் பேபி!” என்று கூறினான்.

ஜெஸி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

முத்துசாமி நான்கு நபர்களுக்கு போன் செய்து பார்த்துவிட்டு, சற்று நேரம் யோசித்தார்.

“என்ன சார் ஆச்சு?”

முத்துசாமி, “இப்போதைக்கு நமக்குச் சாதகமா எதுவும் இல்லை தம்பி! அதான்!”

ஜெஸியின் முகம் இதைக் கேட்டதும் பளிச்சிட்டது.

முத்துசாமி, “பொம்பளப் புள்ளை வேற, அதுதான்! உங்களுக்கு சவுகரியமா இருந்தால் இங்கே தெற்குப் பக்கம் பெரிய வீட்டில் மாடிப் படிக்கட்டுக்கு மேல ஒரு அறை இருக்கு, அங்கே உங்களுக்கு ஓகேவா?”

ஜெஸி திடுக்கிட்டு, “நோ அன்பு!” என்று, ‘உன்னை நினைச்சு எனக்கு ஓகே சொல்லாத ராஸ்கல்’ என்று முனகிக்கொண்டே கூறினாள்.

அன்பு, “பாரு, இதை நான் யோசிக்கவே இல்லையே! அப்போ எனக்கு ஓகே” என அவளின் காதில் கூறிவிட்டு, நேராக அமர்ந்தவன், “ஓகே சார், எனக்கு சம்மதம்! அவள் இங்கே பத்திரமா இருப்பா!” என்றான்.

முத்துசாமி, “என்னம்மா, உங்களுக்கு சரிதானா கண்ணு? நீ நம்ம வீட்டில் சாப்பிட்டுக்கொள்ளலாம்!”

ஜெஸி, “இல்லைங்க அங்கிள், அன்பு தனியா இருப்பான் நான்…!” எனச் சொல்ல வர,

அன்பு, “ஓகே சார், ரொம்ப தேங்க்ஸ்! அப்புறம் ரெண்ட் எவ்வளவு?” என்று கேட்டான்.

முத்துசாமி, “என்ன தம்பி இப்படி கேட்டுப்புட்டீங்க! நீங்க சின்ன வயசுல இவ்ளோ பெரிய வேலையை எடுத்துச் செய்யுற அந்தப் பொறுப்பு எனக்கு பிடிச்சுப்போச்சு! அதுக்குதான் இதெல்லாம் செய்றேன். அதைவிட நீங்க எனக்குத் தெரிந்தவர் மூலமா வந்திருக்கீங்க. இப்படி கேட்கலாமா?”

ஜெஸி, “அப்படி இல்லை அங்கிள்! இது அவசியம். நாளைக்கு எங்களை ஒரு வார்த்தை யாரும் சொல்லக் கூடாது. அதுக்குத்தான்! இந்தத் தவணை எல்லாம் வேணாம்!”

அன்பு, “ஜெஸி, ஷட் அப் டி!”

ஜெஸி, “ஒன் மினிட் அன்பு!” என்று கூறியவள், “நான் கிறிஸ்டியன், அதனால உங்களுக்கு…!”

முத்துசாமி, “எல்லாம் ஒண்ணுதான் கண்ணு! ரொம்ப புத்தி கூர்மையா பேசுற! அவ்ளோ அறிவு!”

அன்பு, “சாரி சார், அவள் கொஞ்சம் அப்படிதான்! எதுவும்…!”

“இல்லை இல்லை தம்பி, சரிதான். ‘வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு’ அப்படின்னு பேசுறா. நல்ல பழக்கம்தான்! நீங்க எதுவும் கொடுக்க வேணாம்! உங்க வேலை முடியுறவரை இருந்து தங்கிட்டுப் போங்க!”

ஜெஸி தயங்கிக் கொண்டே பார்த்தாள். அன்பு, “ஜெஸி… என்ன ஹேபிட்!”

“ஓகே அங்கிள்!” எனப் புன்னகை உதிர்த்தாள்.

முத்துசாமி, “சுதா! சுதா!”

“என்னங்க!” என்று உள்ளே இருந்து கையைத் துடைத்துக்கொண்டே வந்தாள்.

முத்துசாமி, “இந்த பொண்ணு நம்ம தெற்க இருக்க வீட்டில் உள்ள அந்த மாடி மேல இருக்கும் அறையில தங்க வைக்க ஏற்பாடு பண்ணு! அப்புறம் வீட்டைச் சுற்றிக் காட்டு! எனக்குக் கொஞ்சம் தென்னந்தோப்பு கணக்கு பார்க்க வேண்டி இருக்கு, நான் சாப்பாட்டுக்கு வரேன்! கண்ணு, பாருங்க!” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

சுதா, “பேர் என்ன கண்ணு?”

“ஜெஸி ஆன்ட்டி!”

“ஆன்ட்டி வேணாம் கண்ணு! அம்மா சொல்லு பொண்ணு!”

ஜெஸி கண்களில் ஒரு நிமிடம் கலங்கப்போனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், “ஓகே அம்மா!” என்று கூறினாள்.

ஜெஸியின் அப்பா ராபர்ட் ஒரு ராணுவ வீரர். அவருடைய மனைவி ஜெனி. இவர்களுக்கு ஒரு மகள் ஜெஸி. இவள் பிறந்து ஆறு வருடத்தில் ஜெனி உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். வேறு வழியில்லாமல் ராபர்ட் இரண்டாம் திருமணம் செய்ய வேண்டிய சூழல் வந்தது. அவர் ஜெனியின் தங்கை மரியாவைத் திருமணம் செய்துகொண்டார்.

ஆனால், என்னதான் மரியா தன் பிள்ளைபோல பார்த்துக்கொண்டாலும், மரியாவின் மீது சிறுவயதிலிருந்தே ஜெஸிக்கு வெறுப்பு. அதனால் அவள் அதிக நேரம் அழகுநாச்சி, மகேந்திரன் மற்றும் அன்புசெல்வன் கூடத்தான் வளர்ந்தாள். ஜெஸி அவர்கள் வீட்டில் ஒரு பிள்ளைபோல… ஆனால் மரியா மிகவும் நல்லவர். பத்து வருடங்கள் இவளின் மாறுதலுக்கு எவ்வளவோ போராடிப் பார்த்தார். ஆனால் ஜெஸியின் மனம் மாறவே இல்லை.

ராபர்ட் அதன் பின் ஜெஸியை எதிர்க்க ஆரம்பித்தார். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக மரியா கருவுற்றார். ஜெஸிக்கு இன்னும் வெறுப்பு கூடிப்போனது. அந்த நேரம் அவள் பத்தாம் வகுப்பு. அனைவரின் கிண்டல் பேச்சுக்கு ஆளாகிப்போனாள்.

மரியா குழந்தையைக் கலைக்கக்கூட முயற்சி செய்தார். தனக்கு தன் அக்காவின் குழந்தை ஜெஸிதான் முக்கியம் என நினைக்க, ராபர்ட் தான் அதைத் தடுத்தார். ஜெஸிக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால், அவர்களை அடிமட்டம் வரை வெறுப்பாள். ஒருவரைப் பிடித்துவிட்டால், அவர்களுக்குத் திகட்டும் வரை நேசிப்பாள். இந்தச் சூழலில் வளர்ந்த ஜெஸிக்கு அவளுடைய எண்ணத்தைப் பிரதிபலிக்கும் அன்புசெல்வன் தான் ஆதரவு. அவன்தான் அவளுக்கு எல்லாமே! ஒட்டிப் பிறக்காத இருவர் என்று கூறலாம்.

அன்பு, ஜெஸியைப் பார்த்தான். ஜெஸி, “அன்பு, கம், போய்ப் பார்த்துட்டு வருவோம்!”

அன்புசெல்வன் ஜெஸி பின்னால் சென்றான். அவளின் தலையைச் செல்லமாக வருட, “ஐ ஃபீல் டூ டயர்ட். எனக்கு இந்த இடம் பிடிக்கலை, பட் உனக்குத் தொந்தரவு தரக் கூடாதுன்னு இங்கே ஸ்டே பண்றேன்.”

அன்பு, “கொஞ்ச நாள் பொறுத்துக்க. அதுக்கு அப்புறம் என்னோட வீட்டுப் பக்கத்துல உன்னை ஸ்டே பண்ண வைக்கிறேன்.”

“ம்ம்…” என்று சொல்லிக்கொண்டே இருவரும் கைகோர்த்துக்கொண்டு அந்த அறைக்குச் சென்றனர்.

சத்யா கிளம்பி வெளியே வர, சுதா, “சத்யா!”

“அத்தை, சொல்லுங்க!”

“தெக்க வீட்டில் மேலே சுத்தமா இருக்குதா கண்ணு? அந்தப் பொண்ணு அங்கேதான் தங்கப் போகுது.”

சத்யா, “அந்த ரூமுக்கு அருண் மாமாவும், சசி அண்ணாவும் தான் இருப்பாங்க. அண்ணா கூட இப்போதான் அதோட பொருளை எல்லாம் ஊரில் இருந்து கொண்டு வந்து வச்சாரு.”

சுதா, “பொண்ணு, ஓடிப்போய் சசிகிட்ட விவரத்தைச் சொல்லி, போய் அதை விரசா க்ளீன் பண்ணச் சொல்லு! மாமாவுக்குத் தெரிஞ்சா என்னைத் திட்டுவாரு!”

“இதோ இப்போவே போறேன்!” என அருண் அறைப் பக்கம் திரும்பிச் சென்றாள்.

“சசியா! சசியோ!”

“எதுக்குக் கத்துற!” என்று சொல்லிக்கொண்டே வெளியே வந்தான்.

சத்யா விவரத்தைச் சொல்ல, அருண், “மாமா, வாங்க போய்ப் பார்த்துட்டு வருவோம்!”

சசி, “அப்போ நான் எங்கே தங்க?”

அருண், “என்னோட ரூம்ல மாமா! அப்படி இல்லைனா மாடியில் நாம கட்டில்ல படுத்துக்கொள்ளலாம்.”

சசி அமைதியாக நின்றான். அந்தத் திமிரு பிடித்தவள் இங்கு வருவாள் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

அருண், “மாமா! இந்த முறை நிறையச் சிறப்பா பண்றதா நீதானே சொன்ன? இப்போ இப்படிப் பேசுற! வா மாமா!”

செவ்வந்தி, “என்ன ஆச்சு அண்ணா?”

அருண், “ஏய், உங்க அண்ணன் ஊருக்குப் போறானாம்!”

சத்யா, “நிம்மதிடா!”

செவ்வந்தி அவளின் காதைத் திருகிவிட்டு, “அண்ணா, என்ன பிரச்னை? எதுக்கு இப்படிப் பேசுறீங்க?”

சசி, “ஒண்ணும் இல்லை, நான் போகலை! அருண், வா, போய் என்னோட பேக் எடுத்துட்டு வருவோம்.”

அருண் மற்றும் சசி இருவரும் சென்றனர். இங்கே ஜெஸி படுக்கையில் அமரப்போக, அங்கே இருந்த பேக்கைப் பார்த்துவிட்டு அதை எடுத்து அறையின் வெளியே தூக்கி வைத்தாள்.

அன்பு அந்த அறையைச் சுற்றிப் பார்த்துக்கொண்டே ஜன்னலைத் திறந்துவிட்டான்.

ஜெஸி அந்த உடை மாற்றும் இடத்தில் சசியின் இரண்டு சட்டைகள் தொங்கிக்கொண்டு இருக்க, ஜெஸி அந்தச் சட்டை இரண்டையும் தீண்டத்தகாத பொருளைத் தூக்குவதுபோலத் தூக்கி அந்தப் பையின் மேல் போட்டுவிட்டுத் திரும்பவும், அங்கே சசி அவளைக் கை கட்டி நின்று பார்த்துக்கொண்டிருக்கவும் சரியாக இருந்தது.

ஜெஸி… ?

சசி… ?

அன்பு… ?

தொடரும்…

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment