உயிரே-6
அன்பு செல்வன், அவளோட நினைப்புலேயே மிதந்தபடி காரை ஓட்டிட்டு இருந்தான்.
“என்னங்க… என்னங்க!”
ஒரு மெல்லிய குரல். ஆனா அன்புவோட கவனம் எங்கேயோ இருந்துச்சு. செவ்வந்தி திரும்பத் திரும்ப கூப்பிட்டுப் பார்த்தா. அவன் எந்த அசைவும் இல்லாம சிலையா உறைஞ்சு போயிருந்தான்.
வேறு வழியில்லாம செவ்வந்தி அவன் தோளை மெதுவாத் தட்டினா. “இன்ஜினீயர் சார்! சார்!”
அவன் ஒருவித மயக்கத்தோட, “ம்ம்… செவ்வந்தி!”ன்னான்.
அவ உடனே புருவத்தைச் சுருக்கி, “ஹலோ! நர்சரியைத் தாண்டி வந்தாச்சு!”னு அவனை முறைச்சுப் பார்த்தா.
அன்பு திடுக்கிட்டு சுயநினைவுக்கு வந்தான். “ஹே… சாரி!”ன்னு சொல்லிக்கிட்டே சட்டென அவளோட கைகளைப் பிடிச்சான்.
செவ்வந்தி ஒரு கணம் அதிர்ந்து, அவனையும் அவன் பிடிச்சிருந்த தன் கைகளையும் மாறி மாறிப் பார்த்தா.
அன்பு அதையெல்லாம் கண்டுக்காம, மெதுவா அவ கைகளை விட்டான்.
செவ்வந்தி பட்டென அவனை முறைச்சு, “வண்டியை நிறுத்துங்க!”ன்னு கொஞ்சம் அழுத்தமா சொன்னா.
அன்பு ஒருமாதிரி தர்மசங்கடமா தலையைக் கோதிக்கொண்டே தாடியை நீவியபடி, நர்சரிக்கு முன்னாடி காரை நிறுத்தினான்.
செவ்வந்தி அவன்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசாம கோபமா இறங்கினா.
“செவ்வந்தி!”னு பின்னாலேயே இறங்கி வந்து கூப்பிட்டான் அன்பு.
“ப்ளீஸ்! என் பேரைக் கெடுக்காதீங்க!”
ஆனா அவ சொல்றத அவன் காதுலயே வாங்கிக்கல.
செவ்வந்தி கடுப்போட, வேற எங்கேயோ பார்த்துகிட்டே, “இப்போ உங்களுக்கு இங்க எந்த வேலையும் இல்ல. சோ, நீங்க கிளம்பலாம்!”னு சொன்னா.
அன்பு அவளோட முகத்தையே பார்த்து, “போறேன். ஆனா போறதுக்கு முன்னாடி உன்கிட்ட முக்கியமா ஒன்னு சொல்லணும்!”
“சீக்கிரம் சொல்லிட்டு இடத்தை காலி பண்ணுங்க!”
“ஐ காண்டாக்ட் மிஸ் ஆகுது! கொஞ்சம் என்னைப் பாரு!”ன்னு அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வெச்சான்.
அவனோட பேச்சில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்தவ, படபடக்குற மனசோட அவனை நிமிர்ந்து பார்த்தா.
அன்பு செல்வன் ஒரு புன்னகையோட இன்னும் கொஞ்சம் அவ பக்கத்துல நெருங்கி வந்து நின்னான்.
அப்பத்தான் செவ்வந்தி அவன் முகத்தை சரியா கவனிச்சா. ‘அடடா, என்ன ஒரு முகம்! பொண்ணுங்களுக்கு இருக்கற மாதிரி வளைஞ்ச புருவம், அந்த ரெண்டு கண்கள்ல ஒரு தீட்சண்யம்… எப்பவும் லேசா விடைச்சுக்கிட்டே இருக்குற நாசி… அந்த ஈரமான இதழ்களுக்கு இன்னும் வசீகரம் கொடுக்க கன்னத்துல விழுகிற ரெண்டு குழிகள்… கழுத்துல ஒரு மெல்லிய செயின், கையில வாட்ச், கச்சிதமான ஃபார்மல் சட்டை, அதுக்கேத்த பேன்ட்… ஆறு அடில ஒரு அரை அடி கம்மியா இருக்கலாம், ஆனா கம்பீரத்துக்கு ஒரு குறையும் இல்ல. ஆமா… எதுக்கு இவனை இப்படி ரசிச்சுட்டு இருக்கோம்?’னு தன் எண்ணத்தை வேகமா மாத்தினா.
இதயம் மட்டும் இன்னும் வேகமா அடிச்சுக்கிட்டே இருந்துச்சு.
“ரொம்ப தேங்க்ஸ்!”னு ஆரம்பிச்சான் அன்பு. “என்னோட வாழ்க்கையோட முதல் தொடக்கத்தை நீதான் ஆரம்பிச்சு வெச்சிருக்க!”
அவன் பேச்சைக் கேட்டு கண்ணு விரிய அவனைப் பார்த்தவ, “என்ன சொல்றீங்க?”ன்னு திடுக்கிட்டுக் கேட்டா.
அன்பு அப்போ அன்பு செல்வனா மாறி, மெல்லிய புன்னகையை உதிர்த்து, “இது நான் தனியா டீல் பண்ற ஃபர்ஸ்ட் ப்ராஜெக்ட் சைட். அதை நீதான் ஸ்டார்ட் பண்ணி குடுத்திருக்க. அதுக்கு என்னோட ஹார்ட்ல இருந்து உனக்கு ஒரு தேங்க்ஸ்!”னு சொன்னான்.
செவ்வந்தி எதுவும் பேசாம அமைதியா நின்னா. அன்பு அந்த இடத்தை ஒருமுறை சுற்றிப் பார்த்துட்டு, “ஓகே, நான் போகட்டா?”ன்னான்.
“ம்ம்!”
‘இதுக்கு மட்டும் உடனே பதில் வருது! என் கூடவே இருக்கணும்னு ஒரு நாள் நீயே சொல்லுவடி!’ன்னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டே காரில் ஏறி கிளம்பினான். அவ வெளிய வரவே இல்ல. அவன் திரும்பித் திரும்பிப் பார்த்தான், ஆனா செவ்வந்தி வரவே இல்லை.
காரில் ஏறுனதும் அவளைப் பார்க்கணும்னு தோண, ரெண்டு மூணு தடவை ஹார்ன் அடிச்சான். அப்பவும் அவ வரல. முகத்துல கோபம் தாண்டவமாட, அதே வேகத்துல காரை எடுத்தான்.
அவன் தூரமா போனதும் மெதுவா வெளிய வந்தா செவ்வந்தி. “இவனோட பேச்சு ரொம்ப வித்தியாசமா இருக்கே! இவனோட பார்வை!”னு நினைக்கும்போதே அவளுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துச்சு.
“ச்சே! எனக்கு என்னமோ ஆகுதே!”னு தலையை உலுப்பிக்கிட்டு வேகமா உள்ள போனா.
இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க். அதை செவ்வந்தியோட அம்மா ராஜமணி பேர்ல பெரிய சாமி டெண்டர் எடுத்து நடத்திட்டு வர்றாரு.
அன்பு, அவளோட அலட்சியத்தை நினைச்சுக்கிட்டே பயங்கர கோபத்துல காரை ஓட்டிட்டு வந்தான். ‘நான் அத்தனை தடவை ஹார்ன் அடிச்சும் வெளிய வராம இருக்காளே!’ன்னு கோபத்துல மூக்கு புடைக்க, டீசல் லாஸ்ட் பாயின்டுக்கு வந்திருச்சு.
நேரா பெட்ரோல் பங்க்குக்கு வண்டிய விட்டான். “டேங்க் ஃபில் பண்ணு!”
பணியாள் உடனே ஃபில் பண்ணாரு. அவரிடம் கார்டை நீட்டினான்.
“சாரி சார், கார்டு நாட் அக்சப்டட்!”
“வாட் எ ரப்பிஷ்!”னு திட்டிட்டே பர்ஸைத் திறந்து பணத்தை எடுத்தான். அதுல 3000 ரூபாய்தான் இருந்துச்சு.
“சார், இன்னும் 500 ரூபாய் வரணுமே!”
அன்பு கண்ணாடியைக் கழட்டிட்டு, “வெயிட் எ மினிட்,”னு பர்ஸ் முழுசையும் தேடினான். கேஷ் இல்ல.
சுத்தி முத்தி பார்த்துட்டு, “இங்க பக்கத்துல ஏடிஎம் இருக்கா?”
“இருக்கு சார், கனரா பேங்க் ஏடிஎம் இருக்கு!”
“சரி, நான் பணம் எடுத்துட்டு வர்றேன்.”
அந்தப் பணியாள் கொஞ்சம் தயங்கி, “என்ன சார்… நீங்க வருவீங்கன்னு நான் எப்படி நம்புறது?”
அன்புவுக்கு கோபம் தலைக்கேறுச்சு. “நான் யார் தெரியுமா!”
“நீங்க யாரா வேணா இருந்துட்டுப் போங்க சார்! சில பேர் இப்படி பணம் தரேன்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆகிடுவாங்க. அப்புறம் என்னோட சம்பளத்துலதான் பிடிப்பாங்க.”
“ஹேய்! யாரைப் பாத்து என்ன பேசுற! என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது? கூப்பிடு உன் முதலாளியை!”
பணியாள் வேகமா உள்ளே போய் பெரிய சாமிகிட்ட விஷயத்தைச் சொன்னான்.
பெரிய சாமி, “அட, மூவாயிரம் குடுத்துருக்கார்ல… பரவால்ல விடு கண்ணு. பாக்கி ஐநூறுதானே. அவரைப் பார்த்தா ஏமாத்துறவர் மாதிரியா தெரியுது? எதுக்கு அவங்க மனசு நோகுற மாதிரி நடந்துக்கிற,”ன்னு அன்பு செல்வனோட முகத்தைப் பார்க்காமலேயே அவனுக்கு சாதகமா பேசினாரு.
பணியாள் வெளிய வந்து, “சரிங்க சார், நீங்க போயிட்டு வாங்க,”னு சொன்னான்.
ஆனா அன்பு செல்வன் கோபமா கிளம்பி, ஏடிஎம்ல ஒரு ஐயாயிரம் எடுத்துக்கிட்டு திரும்பவும் பங்க்குக்கு வந்தான்.
அந்தப் பணியாள்கிட்ட வந்து 500 ரூபாயை நீட்டினான்.
“சார், சில்லறை இல்ல. ஒரு நிமிஷம் இருங்க!”னு சொல்லிட்டுத் திரும்ப, பெரிய சாமி உள்ள இருந்து வந்தாரு.
“ஐயா!”னு அந்தப் பணியாள் அவர் பக்கத்துல போக, “ஹேய் மேன்!”னு கத்தினான் அன்பு.
பெரிய சாமி உட்பட ரெண்டு பேரும் அவனைத் திரும்பிப் பார்த்தாங்க.
“ஐயா, இவருதான் பணம் எடுக்கப் போயிட்டு வந்தாரு!”
பெரிய சாமி அன்பு செல்வனைப் பார்த்து ஒரு அசட்டுப் புன்னகையோட, தன் சட்டைப் பையில இருந்து பணத்தை எடுத்தாரு.
அன்பு கடுப்போட, “உங்க சேஞ்ச் எனக்கு வேணாம்!”னு சொன்னான்.
“இப்ப எங்க போறீங்க?”னு அந்தப் பணியாள் கேட்க,
“அந்த ஆள்கிட்ட இருந்து எனக்கு சேஞ்ச் வேணாம்,”னு முகத்துல அடிச்ச மாதிரி சொன்னான்.
“ஐயா, உங்களையே எதிர்த்துப் பேசுறான்!”னு அந்தப் பையன் பாய,
பெரிய சாமி அவனை அமைதிப்படுத்தி, “இளங்கோ, கொஞ்சம் பொறு. சாரு என்ன சொல்றாருன்னு கேட்போம்!”
அன்பு செல்வன் கண்ணாடியை மாட்டிக்கிட்டு, “ஹேய் மேன்! நீயே அந்த சேஞ்சை வெச்சுக்க!”னு சொல்லிட்டு கார்ல ஏறுனான்.
பெரிய சாமி, அன்புவோட காருக்குப் பக்கத்துல போய், “ஹலோ கருப்புக் கண்ணாடி சார்! உங்க பணம் யாருக்கும் வேணாம்!”னு சொல்லிட்டு, மீதி சில்லறையை அவனோட கார் மேல வெச்சாரு.
“யோவ்!”னு அன்பு கோபத்துல சண்டைக்கு வர, பெரிய சாமி அவனை கண்டுக்காம தன் எக்ஸலை எடுத்துட்டு கிளம்பிட்டாரு.
அன்பு அந்தப் பணத்தை முறைச்சுப் பார்த்தான். அதைத் தட்டிவிடப் போகும்போது, மகேந்திரன் கால் பண்ணாரு. அப்பாவோட பேரப் பார்த்ததும், அவரோட செஞ்ச சவால் ஞாபகம் வர, அந்தப் பணத்தை எடுத்து பர்ஸ்ல போட்டுக்கிட்டான். எல்லாம் புதுத் தாள்கள்.
பெரிய சாமி மனசுக்குள்ள, ‘பணத்தை இவ்வளவு மட்டமா நினைக்கிற ஒரு ஆள்… அதைவிட மனுஷனுக்கு மரியாதை கொடுக்கத் தெரியல. இவனை எப்படி வளர்த்திருப்பாங்க! கலிகாலம் இதுதான் போல! முருகா!’ன்னு நினைச்சுக்கிட்டே போனாரு.
“என்ன அன்பு செல்வன் சார், எப்படி இருக்கீங்க?”
“நான் கோபமா, நிம்மதி இல்லாம இருக்கறதைத்தானே நீங்க ரொம்ப விரும்புவீங்க!”
மகேந்திரன் ஒரு பெருமூச்சோட, “டேய், இத்தனை நாள் உன்னைப் பிரிஞ்சு இருந்ததே இல்லடா. அதான் போன் பண்ணேன். நீ என்னடான்னா எடுத்ததுமே எகிறுற? உங்க அம்மா பூ மாதிரி மென்மையானவ. நானும் அப்படித்தான். நீ மட்டும் எப்படிடா இப்படி சிடுமூஞ்சியா பொறந்த?”
“இப்போ என்ன சொல்ல வர்றீங்க? என்ன டென்ஷன் பண்ணாதீங்க!”
“எங்க அப்பா இப்படித்தான் இருந்தார். அவரோட நகலாவே வந்துருக்க! எங்க அப்பா பேர ஆசையா உங்க அம்மா வெச்சா… அப்படியே அவரை மாதிரியே வந்திருக்க.”
“டாடி!”
மகேந்திரன் சிரிச்சுக்கிட்டே, “சரி, வேலை எப்படிப் போகுது?”
“இன்னிக்குதான் பூஜை எல்லாம் பண்ணேன்.”
“சந்தோஷம்! நல்லபடியா வேலை முடியணும். பெஸ்ட் ஆஃப் லக்!”
‘விஷ் பண்ணிட்டு, மனசுக்குள்ள நான் தோக்கணும்னு நினைக்கிறீங்களா!’
“கொஞ்சம் கூட மாற்றம் இல்ல. அதே சந்தேக புத்தி. என்னோட அப்பாதான்டா நீ!”
“டாடி!”னு கத்தினான்.
“நீ எப்படி இருந்தாலும் என்னோட இரத்தம்டா. நமக்குள்ள ஆயிரம் மனக்கசப்பு இருக்கலாம். அதுக்காக உன்னை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன். நீ இதை வெற்றிகரமா முடிக்கணும். என் அழகு நாச்சி விட்டுட்டுப் போன ஒரே சொத்து எனக்கு நீ மட்டும்தான்டா!”
அப்பாவோட பேச்சில மனசு கொஞ்சம் சாந்தமாக, அன்பு மெதுவா சொன்னான்.
“டாடி, உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.”
“என்ன அன்பு?”
“I found my girl!”
மகேந்திரன் ஒரு நிமிஷம் அதிர்ச்சியாகி, “என்ன?”ன்னு கேட்டபடி எழுந்து நின்னாரு.
அன்பு ஒருவித பதட்டத்தோட சொன்னான்…
“டாடி… நான் ஒரு பொண்ணைப் பார்த்தேன்!”
தொடரும்…
do like and share pradhanyakuzhalinovels