கள்ள கணவன் கர்ணன்

by Pradhanya kuzhali
274 views

Epi -26 

உள்ளுக்குள் சிரிப்பும் பூரிப்பும் கொட்டிக் கிடந்தது ஆண் அவனுக்கு. இதை அவளிடம் எப்படிச் சேர்க்கப் போகிறோம் என கர்ணன் யோசிக்கவில்லை.

கர்ணன் உற்சாகமாக வீட்டுக்கு வந்த அதே நேரத்தில், அது வடிவது போல அவனைத் தேடி வந்தான் மணிகண்டன். “துளசி!” என அழைத்தபடி வீட்டுக்குள் நுழைந்தான் கர்ணன்.

“என்ன குரல் கணீர் கணீர்னு வருது?” என்று புன்னகையுடன் தண்ணீர் செம்புடன் வெளியே வந்தாள் துளசி.

“அது ஒரு முக்கியமான விஷயம்,” என கர்ணன் பேச வர, “கர்ணா! கர்ணா!!” என வெளியில் இருந்து ஒரு குரல் கேட்டது.

“யாரது? நீங்க உட்காருங்க, நான் பார்த்திட்டு வரேன்,” என துளசி வெளியே செல்லப் போக, குறுக்கிட்டவன், “நீ இரு, நான் போய் பார்த்திட்டு வரேன்,” என வெளியே வந்தவன், அங்கே மணிகண்டனைப் பார்த்ததும் புரியாமல் விழித்தான்.

“கர்ணா!” என மணிகண்டன் புன்னகையுடன் அழைக்க, அவன் பின்னால் ஆணும் பெண்ணும் தம்பதிகளாக நின்றிருந்தார்கள். அவர்களைப் பார்க்கும் போதே தெரிந்தது, இது மணிகண்டனின் அக்காள் மாலதி என்று.

“வாங்க முதலாளி? வாங்க மா… என்னை பார்க்க இங்கே வரணுமா? ஒரு வார்த்தை சொன்னால் நான் அங்கே வந்திருப்பேனே? என்ன விஷயமுங்க?” என கர்ணன் கேட்டபடி அவர்களை அழைத்தான்.

மாலதியின் கண்களில் நீர் கோர்த்துக்கொள்ள, “கர்ணா, என் தம்பியோட கல்யாணம் மணமேடை வர போய் நின்னுடுச்சு கண்ணு,” என அழுதார். கர்ணனுக்கு இதைக் கேட்டதும் அதிர்ச்சியானது. “என்ன சொல்றீங்க?” என மணிகண்டனின் பக்கம் பார்வையைத் திருப்பினான்.

முகம் சுணங்கி சோகமாக நின்றிருந்தான் மணிகண்டன்.

“என்ன சொல்றீங்க? எப்படிங்க இப்படி?” என வேதனையுடன் கேட்டான் கர்ணன்.

“அந்தப் பொண்ணு ஏற்கனவே காதல்ல இருந்திருக்கு. மணமேடை வரைக்கும் பிடிச்ச மாதிரி பேசிட்டு, தாலி கட்டுற நேரம் எல்லார் முன்னாடியும் உண்மையச் சொல்லிடுச்சு. வீட்ல அந்தப் புள்ளைய வற்புறுத்தி இருக்காங்க கல்யாணத்துக்கு. அதை எப்படிச் சொல்றதுன்னு தெரியாம தாலி கட்டுற சமயமா பார்த்து இப்படி பண்ணிடுச்சு கண்ணு,” என்றார் மாலதி.

கர்ணன் கவலையான முகத்துடன் நின்றிருக்க, மாலதி கண்களைத் துடைத்துக்கொண்டு, “உன்னை பார்க்க எதுக்கு வந்தோம்னா, நீ கூட கோயமுத்தூர்ல ஒரு பொண்ணு சொன்னியே? உன்ற தம்பி பொண்டாட்டின்னு… அந்தப் பொண்ணப் பத்தி கேட்டுட்டுப் போகத்தான் வந்தோம். நான் ஒரு முறை அந்தப் பொண்ணைப் பார்க்கலாமா? என் தம்பிக்கு அந்தப் பொண்ணு மேல் விருப்பம்,” என்றார்.

கர்ணன் என்ன பேசுவது எனத் தெரியாமல் தடுமாறியபடி நிற்க, மாலதி மற்றும் மணிகண்டன் இருவரும் ஒரே நேரத்தில் கர்ணனைப் பார்க்க, அவனுக்கோ விரக்தியின் உணர்வு டன் கணக்கில் பாய்ந்தது. இப்படி நடக்கும் என்று சத்தியமாக அவன் எதிர்பார்க்கவில்லை. காலையில் இருந்த உற்சாகம் மற்றும் கர்ணன் துளசிக்காகப் பார்த்துப் பார்த்துத் தேர்வு செய்த ஆடை அணிகலன்கள் என அனைத்தும் வந்து போக, யாரோ நடு மண்டையில் சுத்தியல் எடுத்து அடித்ததைப் போல சுரீர் வலி.

‘நீயும் இதைத்தானே எதிர்பார்த்தாய்? அவள் நல்ல படியாக வாழ வேண்டும் என்று. இதோ நீ நினைத்ததைப் போலவே அவளை ஏற்றுக்கொள்ள மணிகண்டனே வந்து விட்டான்,’ என்று திரும்பத் திரும்பக் கூறியது அவனது உள்மனம்.

மாலதி தனது தம்பியைப் பார்த்துவிட்டு கர்ணனிடம், “எங்களுக்கு முழு மனசார சந்தோஷம். மணமேடை வரை வந்த கல்யாணம் நின்னுபோனதுல யாரும் என் தம்பியைக் கல்யாணம் பண்றதுக்கு முன் வரமாட்டேன்றாங்க. அதைவிட எங்க குடும்பத்துக்குப் பாங்கான, படிமானமான ஒரு நல்ல பொண்ணுதான் முக்கியம்,” என்றவர் மேலும், “நல்ல பொண்ணுன்னு நினைச்ச ஒருத்தி எங்களை நட்டாத்துல விட்டு ஏமாத்திட்டுப் போயிட்டா. அதனாலதான் நாங்க இந்த முடிவுக்கு வந்தோம். நீ என்ன சொல்ற கர்ணா? எப்ப போய் அந்தப் பொண்ணைப் பார்க்கலாம்? என் தம்பி சொன்னான், அந்தப் பொண்ணு தைரியமா மனசுல இருக்குறத பேசிச்சுன்னு. அப்பவே அந்தத் துளசி பொண்ணு எனக்குப் பிடிச்சது தான். ஆனா எனக்கு அந்தப் பொண்ணு கல்யாணமானது அப்புறம் உன்னோட தம்பி பொண்டாட்டி…” என்று நிறுத்தியவர், “அதுதான் எனக்குக் கொஞ்சம் உறுத்தலா இருந்தது. இருந்தாலும் பரவாயில்லை, நாங்க தகுதி தராதரம் எதுவுமே பார்க்கலை. எங்களுக்கு என் தம்பி கூட அந்தப் பொண்ணு நல்லபடியா வாழ்ந்துட்டா அதுவே போதும்,” என்றார் மாலதி.

கர்ணன் என்ன பேசுவது எனத் தெரியாமல் தடுமாற்றத்துடன் நிற்க, “யாரைப் பார்க்கணும்?” என கேட்டுக்கொண்டு வெளியே வந்தாள் துளசி.

மாலதி, மாலதியின் கணவன் கோபால் மற்றும் மணிகண்டன் என மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நிற்க, துளசி கர்ணனை முறைத்தபடி அவர்களின் முன்னால் தண்ணீர் சொம்பை நீட்டினாள்.

மணிகண்டனின் பார்வை கர்ணனின் மீது அழுத்தமாகப் படிய, “சொல்லுங்க என்ன விஷயம்?” என்று கைகளைப் புடவையில் துடைத்தபடி கேட்டாள் துளசி.

இவ்வளவு நேரம் எளிதாகப் பேசிக்கொண்டிருந்த மாலதிக்கு, இப்போது கர்ணன் இருக்கும் அதே வீட்டில் இருந்து துளசி வருவதைப் பார்த்ததும் உள்ளுக்குள் மிகவும் நெருடலாக இருந்தது. தன் தம்பியைப் பார்த்தார்; இப்போது என்ன பேசுவது என்றும் தெரியவில்லை.

சட்டென்று கர்ணன் முன்னாள் வந்து, “அது துளசிக்கு ஒரு டைலரிங் மெஷின் வாங்கலாம்னு அவங்க வீட்ல சொன்னாங்க. நல்லா டைலரிங் பண்ணும். அது வாங்குறதுக்காக நேத்து தான் வீட்டுக்கு வந்தது,” என்று அப்பட்டமாகப் பொய் கூறினான்.

அவனைப் பார்த்ததும் வெட்டவா குத்தவா என்று ஆத்திரமாக வந்தது துளசிக்கு. சட்டென மணிகண்டனின் முகம் மாறி, “அப்படியா?” எனப் புன்னகையுடன் துளசியைப் பார்த்தான்.

“ஆமாங்க முதலாளி! துளசி நல்ல திறமைசாலி பொண்ணு. இங்கேயே திருப்பூரில் இன்னைக்கு கார்மெண்ட்ஸ்ல கொண்டு போய் விடலாம்ன்னு… அதுக்குள்ளாட்டியும் நீங்க வந்துட்டீங்க. நல்லது நடக்குதுல்ல வீட்ல,” என்று தன் மனதில் இருந்த துளசியின் மேல் இருக்கும் ஆசையை வெளிப்படுத்தாமல் மொத்தமாகப் புதைத்துக்கொண்டு பேச்சை மாற்றினான் கர்ணன்.

துளசி அவன் பேசுவதைப் பொறுமையாகக் கேட்டாளே தவிர பதில் பேசவில்லை. மணிகண்டன் துளசியைப் பார்த்து, “நீங்க சொன்ன எல்லா விஷயத்துக்கும் எனக்குச் சம்மதம். நான் எதையும் தப்பா நினைக்கல. நாளை மறுநாள் கல்யாணத்தை வச்சுக்கலாமா?” எனக் கேட்டான்.

இதையெல்லாம் கேட்க கர்ணனின் இதயத்தில் யாரோ ஈட்டியைக் கொண்டு குத்துவது போலத் தோன்றியது. அவனது உணர்வுகள் அனைத்தையும் அடக்கிக்கொண்டான். கர்ணனின் மனதில் இன்னொன்றும் தோன்றியது: ‘துளசி தனக்கு மனைவியாகவோ இல்லை தன்னைத் திருமணம் செய்துகொண்டோ தான் அவள் மீது ஆசைப்பட்டிருந்தாலோ, அது நிறைவேறும் பட்சத்தில் அங்கே இரத்தினத்தின் வீட்டில் அர்ஜுன் அன்று ஊரார் முன் சொன்னது அனைத்தும் உண்மையாகிப் போகும். எனவே அவள் இன்னொரு வீட்டுக்கு வாழப் போவதுதான் சரி,’ என்று நினைத்தான். அதையே செய்யத் தீர்மானித்தான்.

ஆனால் இத்தனை யோசித்த கர்ணனுக்குத் தெரியவில்லை, அவன் யோசிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் அதில் சம்பந்தப்பட்ட துளசி நினைக்க வேண்டும். அவள் என்ன நினைக்கிறாள்? அவள் மணிகண்டனைத் திருமணம் செய்துகொள்வாளா? கர்ணன் என்ன சொன்னாலும் அதை அவள் கேட்பாளா? பார்ப்போம்.

துளசி மாலதியை ஆளப்பார்வை பார்த்துவிட்டு, “உங்களுக்கு எல்லா விஷயமும் தெரியுமா?” எனக் கேட்டாள். கர்ணன் பதட்டப்படுவதற்கு முன் மணிகண்டன் முந்திக்கொண்டு, “அக்காவுக்கு எல்லா விஷயமும் தெரியும். நீ எதுக்கும் கவலைப்படத் தேவையில்லை. உனக்கு சரிதானே?” என்றான்.

துளசி ஒரு சின்ன புன்னகை உதிர்த்துவிட்டு, “என்னோட முந்தின வாழ்க்கையில எனக்குப் பிரச்சனையா வந்ததே என்னோட நாத்தனாலால்தான். அவள் என்னை நம்பலை. அதே போல இவங்களும் நாளைக்கு என்னைக் கேள்வி கேட்டா என்ன பண்றது? அந்த வாழ்க்கையில தான் நான் ரொம்ப அம்மாஞ்சியா, யார் எது சொன்னாலும் அதைக் கேட்டு மாடு மாதிரி உழைச்சுக் கொட்டி எல்லாத்துக்கும் உண்மையா இருந்தேன். ஆனால் அப்படி இருந்தும் என் மேல பழி போட்டுட்டாங்க. உத்தம மனுஷன் கூட சேர்த்து வச்சுப் பேசி பழி போட்டுட்டாங்க,” என்றவள் ஒரு நொடி நிறுத்தி, “அதேபோல இந்த வாழ்க்கையும் எனக்கு அமைஞ்சிடக் கூடாது.”

“அதனால,” என்ற துளசி தீர்க்கமாக மாலதியைப் பார்த்து, “எனக்கும் கர்ணனுக்கும் தொடர்பு இருக்கிறதா சொல்லி என்னை வீட்டை விட்டுத் துரத்தினாங்க. கர்ணன் என்னோட கள்ள புருஷன்னு சொன்னாங்க. அந்த ஊர்ல யாரு கேட்டாலும் கர்ணனை நான் வச்சிருக்கிறதா சொன்னாங்க. இப்பவும் சொல்லுவாங்க. நீங்க இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு என்னைக் கல்யாணம் பண்றதுக்கு முன் வந்திருக்கீங்களா? உங்க தம்பிக்கு என்னைக் கட்டிக் கொடுப்பதில் உங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லையா?” என்று கேட்டாள்.

துளசி பேசுவதைக் கேட்கக் கேட்க மாலதிக்கு உள்ளுக்குள் பிரளயத்தைக்கொடுத்தது. தனது தம்பியைத் தீயாக முறைத்தவர், “என்ன சொல்ற?” என்று அதிர்ச்சியுடன் கேட்டார். மரியாதை கொஞ்சம் கொஞ்சமாகச் சரிய ஆரம்பித்தது.

“ஆமா, நான் சொன்னதுதான் உண்மை. இது அவங்க தம்பி சொல்லி இருக்க மாட்டார்ன்னு எனக்குத் தோணுது. அவரு கல்யாணம் நின்னதுனால எப்படியாவது கல்யாணம் பண்ணணுன்ற வேகத்துல கல்யாணம் பண்ணிட்டு, நாளைக்கு என்னை சந்தேகக் கண்ணோடு பார்த்தா நான் பொல்லாதவள் ஆகிடுவேன்,” என்று முடித்தாள் துளசி.

எப்படி வந்தார்களோ அதைவிட வேகமாகச் சென்றுவிட்டார்கள். மணிகண்டன் எவ்வளவோ எடுத்துக் கூற, மாலதி தன் தம்பியை முறைத்து, “வாய மூடிட்டு வாடா! நீ பிரம்மச்சாரியாகக் கூட இருந்துக்க. இப்படிப்பட்ட ஒருத்தி நம்ம குடும்பத்துக்குத் தேவையில்லை,” என்று திட்டிக் கொண்டே சென்றார்.

செல்லும் அவர்களை நிம்மதியுடன் பார்த்த துளசி ஒரு பெருமூச்சுடன் திரும்ப, அங்கே கர்ணன் நின்றிருந்தான். வந்தது அவளுக்கு ஆத்திரம்; அவனை முறைத்துவிட்டு வேகமாக உள்ளே செல்ல, “துளசி! நான் சொல்றதைக் கேளு,” எனப் பின்தொடர்ந்தான் கர்ணன்.

“துளசி..?”

தொடரும்…

You may also like

Leave a Comment