Episode-20
“ஹே, பாப்பா” என உதட்டில் முத்தமிட்டான் அன்பு. “மாமா” என உருகி அவனுக்கு மயங்கிக் கிடந்தாள் பூங்கொடி. முத்தங்கள் மிகவும் வேகமாக இருந்தன. அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான், கால்கள் பின்னிக்கொள்ள… அன்பு செல்வனின் உதடுகள் இரண்டும் அவளின் நெஞ்சுக் குழியில் முத்தமிட்டுக் கொண்டிருக்க… “ஹாக்” என முனகியபடி மூச்சு வாங்க எழுந்து அமர்ந்தாள்.
“முருகா!!” என அவளை விசித்திரமாகப் பார்த்தான் அன்பு செல்வன். ஆம், அவனும் வந்திருந்தான். ஆனால் அவன் வந்தது அவளுக்குத் தெரியாது. அவளைப் புரியாமல் பார்த்தவன், “என்னாச்சு?” எனக் கேட்டான்.
“ஒண்ணுமில்ல” எனப் பதில் கூறியவள் தன்னிச்சையாகத் திரும்பிப் பார்க்க, படுபாவி நின்றிருந்தான். தூக்கத்துடன் திரும்பினாள் செம்பருத்தி. ‘இதுவும் கனவோட தாக்கமா இருக்கும். அந்த அன்னம் பையன் என்னைத் தேடி வருவானா? என்ன? அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல!’ என முடியை ஒரு பக்கமாகப் போட்டவள் மீண்டும் பார்த்தாள். ‘கனவா? நனவா? எப்படி இந்த அன்னம் பையன் வந்தான்?’ என அவள் நினைத்துக்கொண்டே கண்களைத் தேய்த்தாள்.
“அமுலி, நீ ஓகேதானே? ஒன்னும் பிரச்னை இல்லையே?” என அன்பு செல்வன் கேட்டுக்கொண்டே அவளின் முன் வந்து நின்றான்.
அப்போ அவனேதான்! உள்ளுக்குள் இனம் புரியாத சந்தோஷம் தோன்ற… உதட்டை கடித்துக் கொண்டவள், “அன்னம் பையன் எப்படி இங்கே? ஆச்சரியமா இருக்கு?” எனப் பூங்கொடி கேட்டே விட்டாள் நேரடியாக.
“உண்மையைச் சொன்னால் உனக்கு பிடிக்காது. பொய் சொல்ல எனக்கு வராது” என்றான் அன்பு.
“அப்படியென்ன உண்மை? அவ்ளோ பெரிய பொய் என்ன?” எனப் பூங்கொடி கேட்டுக்கொண்டே தலையணையை எடுத்து கட்டிக்கொண்டாள்.
அன்பு கொஞ்சம் மெல்லிய புன்னகையுடன், “அனுசுயா என்னையும் அழைச்சிருந்தாங்க” என்றான்.
மூக்கு மேல் கோபம் புடைக்க, “அப்போ கெட் அவுட் மை ரூம். இங்கே உனக்கு வேலை இல்ல” எனக் கொந்தளித்தாள்.
“என்னாச்சு? அமுலி?”
“மரியாதையா வெளியே போயிடு! என்கிட்ட அடி வாங்கி சாகாத!!” என வார்த்தைகள் இன்னும் கோபமாக வந்தன. அதைவிட, அந்தச் சிறுக்கி இவனுக்கு அழைப்பு சொல்லி இருக்கிறாள் என்பதை நினைக்க இன்னும் பற்றிக்கொண்டு வந்தது. கைகளைச் சொடக்கு எடுத்தபடி அமர்ந்திருந்தாள். முகத்தில் ஏமாற்றம் கூட இளையோடியது.
‘ச்ச, தேவையில்லாத விஷயத்தைச் சொல்லி அவளை இன்னும் கோபப்படுத்திவிட்டேனோ?’ என நினைத்தவன், அவளின் முன்னால் வந்து, “அது எனக்கு உன்னை விட்டு இருக்க ஒரு மாதிரி இருந்தது. அதான் வந்துட்டேன். இத்தனை நாள் எப்படின்னு தெரியல! பட் கல்யாணம் ஆகி இந்த ரெண்டு மாசமும் ஒரே ரூமில் தானே இருக்கோம். உன்னோட நினைப்பு வந்தது. அதான் வந்தேன். இதைச் சொன்னால் உனக்கு பிடிக்காது, என் மேலே கோபம் வருமே, அதான் சொல்றதா வேணாமா அப்படின்னு எனக்குள்ளேயே ஒரு குழப்பம்” என்றான் அன்பு.
உள்ளுக்குள் நான்கு, ஐந்து ஐஸ்கட்டிகளை வைத்ததைப் போல ஒரே குளுமையாக இருந்தது அவளுக்கு. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மீண்டும் வம்பிழுத்தாள். “பொண்ணுங்களை மயக்க சொல்லியா தரணும்? அதுதான் சாருக்கு கை வந்த கலையாச்சே! ஆனால் அதுக்கு மயங்குற ஆள் நான் இல்ல.”
“இதுக்குத்தான் சொல்ல வேணாம்னு நினைச்சேன். இப்படி நீ பேசுவன்னு எனக்குத் தெரியும். இட்ஸ் ஓகே, நான் புறப்படுறேன்” என அன்பு திரும்பினான்.
“டேய், நில்லுடா!!” என்றாள் வேகமாக.
உண்மையைச் சொல்லப்போனால், அவனைப் பார்க்காமல் ஒரு நொடி அவளால் இருக்க முடியவில்லை. எதிரும் புதிருமாக அவனை அதட்டிப் பேசுவாள். ஆனாலும் அவனை விட்டு இருக்க முடியவில்லை. தனக்குள் இருக்கும் உணர்வை மறைத்துக்கொண்டு இருக்கும்போதே இந்த அளவுக்கு என்றால், அவள் வெளிப்படுத்திவிட்டால் அன்பு செல்வன் அவளைக் கொண்டாடுவான்.
“என்ன விஷயம்?” என அன்பு கேட்க…
“அதான் வந்துட்டியே அப்புறம் என்ன? இப்போ சார் கிளம்பிட்டா எல்லாரும் ‘சண்டை’ன்னு நினைச்சுக்குவாங்க. அங்கே என்ன கழட்டி மாட்டுற வேலை இருக்கு?” எனக் கேட்டாள்.
அன்பு செல்வன் விரக்தியாக, “உன் டாடிக்காக தானே வேண்டா வெறுப்பா கட்டிக்கிட்ட! என் கூட இருக்க விருப்பம் இல்ல. இங்கே உன்னோட விருப்பத்துக்கு, உன்னோட ‘இன்டிபென்டன்ஸ்’க்கு நீ இருந்திட்டு வா! நான் தொந்தரவு பண்ணல” என்றான்.
‘இவனை!’ எனப் பற்களைக் கடித்துக் கொண்டவள், “இங்கே வா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள்.
“என்ன?”
“அந்த அனுசுயா எப்போ போன் பண்ணா? நீ என்கிட்ட சொல்லவே இல்ல. உன்னோட மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? என்ன திமிரா? வாடா இங்கே வா! எப்போ அவள்கிட்ட பேசின, எனக்கு எக்ஸ்பிளைன் பண்ணு” என கோபத்துடன் பார்த்தாள்.
அந்த நேரம் கதவு தட்டப்பட்டது. “இப்போ பதில் சொல்லட்டுமா? இல்ல கதவை திறக்கட்டுமா?”
“கதவைத் திற” என அடக்கப்பட்ட சிரிப்புடன் கூறினாள்.
வெளியே மணிமேகலை, லலிதா, வினு, ஜியா என அனைவரும் நின்றிருந்தார்கள்.
“எல்லாரும் எப்படி இருக்கீங்க மா?” என அன்பு கேட்க… அதற்குள் “யாரு?” எனக் கேட்டுக்கொண்டே கோபத்துடன் வந்தாள் பூங்கொடி.
“சாரி, டிஸ்டர்ப் பண்ணிட்டோம் போலயே!” என ஜியா கூற…
“வந்த விஷயத்தைச் சொல்லுங்க” என அன்புசெல்வனின் அருகில் நின்றாள்.
“கீழே கேம்ப் ஃபயர் போட்டிருக்காங்க. உன்னோட நம்பருக்குக் கூப்பிட்டோம், நீ எடுக்கல, அதான் நாங்களே வந்தோம்” என்ற லலிதா அன்புவின் பக்கம் திரும்பி, “அண்ணா, நீங்களும் வாங்க, அனுசுயா எல்லாருக்கும் வெயிட்டிங்” என்றாள்.
“ஹான், வரோம், நீங்க போங்க!!” எனப் பூங்கொடி சொல்லிவிட்டு கதவை லாக் செய்தாள்.
தோழிகள் அனைவரும் கீழே சென்றிருந்தார்கள். “ட்ரெஸ் எடுத்திட்டு வந்தியா?” எனப் பூங்கொடி அவனிடம் கேட்க…
“ம்ம்” என்றான்.
“இங்கே எடுத்து காட்டு” எனப் பூங்கொடி கேட்க… அனைத்து உடையையும் எடுத்து காட்டினான்.
“இது எதுவும் நல்லா இல்ல. நம்ம டிரஸ் எடுக்கப் போலாம்.”
“இப்போவா?” என அன்பு கேட்க…
“ம்ம், இப்போதான்! வாடா, போலாம்” என உடையை மாற்றினாள் பத்து நிமிடத்தில்… அன்பு ஒன்றும் புரியாமல் அவளின் பின்னால் சென்றான்.
ஜெகன் இருக்கும் இடத்துக்குச் சென்றவள், “டேய், கார் ஓட்டுவ தான!” எனப் பூங்கொடி கேட்க…
ஜெகன் அன்புவைப் பார்த்தான். ‘இவள் எல்லார் முன்னாடியும் இப்படி கூப்பிட்டு மானத்தை வாங்குறா!’ என நினைத்தான் அன்பு.
“டேய், உன்னைத்தான் கேட்கிறேன்” என மீண்டும் பூங்கொடி கேட்க…
“ம்ம், டிரைவிங் லைசென்ஸ் இருக்கு” என்றான்.
“சரி” என்றவள், “அண்ணா, போயிட்டு வந்திடுறோம்” எனச் சாவியை வாங்கிக்கொண்டு அவள் முன்னால் செல்ல… அன்பு ஜெகனைப் பார்த்து புன்னகையுடன் “வரேங்க” என நடந்தான்.
“அன்பு வந்தாரா மாமா?” என அனுசுயா கேட்க…
“ம்ம், பூங்கொடி அன்பு ரெண்டு பேரும் வெளியே போறாங்க” என்றான்.
“இதுல உங்களுக்கு என்ன மாமா சோகம்?” என அனுசுயா கேட்க…
“ப்ச், நீ ஓல்டா இருக்க டி! அந்த ‘மாமா’ வேர்ட் இரிடேட்டிங் ஆக இருக்கு. ஆனால் பூங்கொடி ட்ரெண்ட்டா ‘வாடா, போடா’ன்னு சொல்றா! ப்ளீஸ், அனு, நீயும் ‘வாடா, போடா’ சொல்லு டி, இந்த மரியாதை வேணாம். அந்த ‘மாமா’ அப்படின்ற வார்த்தை ஆக்வடா இருக்கு” என்றான் ஜெகன் தலையைக் கோதிக்கொண்டே.
அனு அவனை முறைத்துப் பார்த்துவிட்டு முன்னால் சென்றாள்.
“ஹே, நில்லு டி!!” என ஜெகன் கையைப் பிடிக்க…
“உனக்கு அந்த வார்த்தையோட டெப்த் புரியல! அது ரொமான்டிக் வேர்ட். இப்போ உனக்குத் தெரியாது. நாளைக்கு நீயே என்கிட்ட எக்ஸ்பெக்ட் பண்ணுவ! உனக்கு அப்போ இருக்கு” என்று விட்டுச் சென்றாள் அனுசுயா.
“என்னடி சொல்ற?” என ஜெகன் அவளின் பின் சென்றான்.
அவனுக்காகப் பார்த்துப் பார்த்து உடையைத் தேர்வு செய்தாள் பூங்கொடி.
அவனும் அவளுக்காகத் தேர்வு செய்தான். அதில் ஒரு அடர்பச்சை நிற ஷிஃபான் புடவை மிகவும் அழகாக இருக்க…
“அமுலி, இது உனக்கு அழகா இருக்கும்” என அன்பு செல்வன் எடுத்து வைக்க…
“எனக்கு பிடிக்கல” என ஒரே வார்த்தையில் ஒதுக்கி வைத்தாள்.
ஒரு பெரு மூச்சு விட்டுக்கொண்டவன் அவளின் பின்னால் சென்றான். “ட்ரையல் பாரு! எனக்குப் போட்டு காட்டு” என அவனை ஒரு வழி ஆக்கினாள். அவன் வெளியே வர, அவளும் அவனைப் போலவே ஒரு உடையில் வந்தாள். இருவரையும் பார்த்தால் இளம் ஜோடிகள் போல இருக்கும். கூந்தலை விரித்துவிட்டவள் கண்ணாடியின் முன் அவனுக்கு அருகில் வந்து நின்றாள்.
“எப்டி இருக்கு?”
“அமுலி எப்பவும் அழகுதான்.”
“டேய், ‘அமுலி’ன்னு கூப்பிடாத!!”
“அப்போ வேற எப்டி கூப்பிட?”
“எனக்கு அதெல்லாம் தெரியாது. நீ ‘அமுலி’ன்னு கூப்பிடாத” என அவள் முன்னால் நடந்தாள்.
வெளியே வந்ததும் குளிர் அதிகமாக இருக்க… “டேய், குடிப்பியா?” என்று கேட்டாலே பார்க்கலாம்.
“ம்ம், ஹிம்” என உடுக்கை போல மண்டையை ஆட்டினான்.
“எனக்குக் குடிக்கணும்போல இருக்கு, குளிருக்கு இதமா! ஒயின் குடிச்சா எப்டி இருக்கும்?”
“பூங்கொடி” எனக் குரலை உயர்த்தினான். அதில் ஒரு நொடி பயந்துபோனவள் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒரு உணவகத்தில் இரவு உணவைச் சேர்ந்து சாப்பிட்டார்கள். அன்பு அவள் இழுத்த இழுப்புக்குச் சுற்றினான்.
பெண்கள் ஆளுமையுடன் இருப்பது ஒருவகை அதிகாரம் என்றால், ஆண்கள் அதில் தாராளமாக அடங்கிப் போகலாம், தப்பில்லை. இங்கே ‘ஆளுமை’ எனக் குறிப்பிடுவது அவனுக்காக அவள் பார்த்துப் பார்த்துச் செய்யும் விஷயங்களும், அவளின் சலனமில்லாத, பயமில்லாத பேச்சுக்களும் தான்.
இருவரும் ஒருவழியாக 11:00 மணிக்கு வந்து சேர்ந்தார்கள். குளிர் நடுங்கிக் கொண்டிருக்க… அறைக்குள் வந்ததும் கை கால்கள் எல்லாம் குடைய ஆரம்பித்தது பூங்கொடிக்கு.
“பாப்பா, என்னாச்சு?” என அன்பு அவளின் பக்கம் நெருங்கினான்.
“குளிருது, கை கால் குடையுது” என அவளின் உதடுகள் டைப் அடித்துக்கொண்டே கூற… “ஒண்ணுமில்ல, ஒண்ணுமில்ல” என பெட் ஷீட்டை எடுத்தவன் அவள் மேல் போர்த்திவிட்டான்.
“அன்பு, ரொ… ரொ… ரொம்ப குளி… குளிர்… குளிர்து” என அவனது கையைப் பிடித்துக்கொண்டாள் பூங்கொடி. அன்பு அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.
தொடரும்.
do like and share pradhanyakuzhalinovels