Episode -29
டேய் என்ன கோலம் இது? என சிவராமன் தனது மகனை அதிர்ச்சியுடன் பார்த்தார்.
மகிழ் கோபத்துடன் அவரது கழுத்தை இறுக்கி பிடித்தான். அவனது செய்கையை பார்த்த மூர்த்தி பதட்டத்துடன் அருகில் வந்து, தம்பி!! என்ன பண்றீங்க? விடுங்க தம்பி அவரை!! என கஷ்டபட்டு விலக்கினார்.
எல்லாத்துக்கும் காரணம் நீ தான் யா!! எல்லாத்துக்கும் காரணம் நீ மட்டும் தான் என மகிழ் கத்தி கொண்டிருந்தான்.
மூர்த்தி நீங்க போங்க என சிவராமன் கழுத்தை நீவியப்படி கூற, மூர்த்தி அவர்களை திரும்பி பார்த்து கொண்டே சென்று விட்டார்.
யோவ்!! அவள் அவள் இப்போ விதவையா அனாத கோலத்தில் நிக்கிறா!! நீயெல்லாம் பெரிய மனுஷனா? த்தூ என காரி உமிழ்ந்தான்.
ஏதாவது தகிடுதத்தம் பண்ண!! அப்புறம் உயிரோட இருக்கிறது பொட்டுன்னு போயிடும் என்றார் கொஞ்சம் கூட சலிக்காமல்..
மகிழ் அங்கிருக்கும் அனைத்து பொருட்களையும் தள்ளி உடைத்து சிதறிடித்தவன். அதே கோபத்துடன் சென்றான் மது கடைக்கு, சட்டை பாக்கெட் கிழிய நின்றிருந்தார் சிவராமன்.
இருவருக்குள்ளும் என்ன ஓடி கொண்டிருக்கிறது? வேறு என்ன? எல்லாமே காதல் விவகாரம் தான். சவுதர்யாவை ஒரு தலையாக காதலித்தான் மகிழ். அவன் காதலை சொல்ல போன தருணத்தில் சிவராமனால் மடக்கப்பட்டு அங்கு தான் பிரச்னை ஆரம்பித்தது. ஆம் சிவராமனுக்கு கவுர பிரச்னை, அதனுடன் தகுதி என்று ஒன்று இருக்கிறதே. சவுந்தர்யாவின் அப்பா சமையல் செய்பவர். சொத்து பத்து நில புலன் என எதுவுமே இல்லை. தன்னை விட அனைத்திலும் தாழ்ந்து இருக்கும் ஒரு குடும்பத்தில் இருந்து எப்படி பெண் எடுப்பார். மகிழ் திருமணத்தை வைத்து ஒரு அரசியலே இருக்கிறது அவருக்கு.
ஆம் சிவகிரி ஊரின் பிரசிடன்ட் மகளை எப்படியாவது மகிழுக்கு கட்டி வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அவருக்கு இடைஞ்சலாக இருந்தது சவுந்தர்யா வின் மேல் இருக்கும் மகிழின் காதல். அதற்கு அவள் வேறு ஒருவனை திருமணம் செய்தால் பிரச்னை இல்லை என நினைத்தவர் மூன்றாம் நபரை வைத்து சவுந்தர்யாவை மனோகரன் கட்டி கொள்ள ஏற்பாடு செய்தார். ஆனால் அவனது வாழ்க்கை இப்படி அல்ப ஆயிசில் அதுவும் தனது பேருந்தில் முடியும் என கொஞ்சக் கூட எதிர்பார்க்கவில்லை.
இனி மகனை கவனமாக கண்காணிக்க வேண்டும் என முடிவெடுத்து விட்டு மஞ்சள் நீராட்டு விழாவுக்கு சென்றார்.
பட்டு வேஷ்டியில் அழகாக வந்து இறங்கிய அன்பு செல்வனை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் மேனகா. அவளின் கண்ணுக்கு பூங்கொடி என்று ஒருவர் வருவதே தெரியவில்லை.
அம்மா சித்தி என அவள் நேராக தன் அம்மாவின் பக்கம் சென்றாள்.
அன்பு என புன்னகையுடன் அன்னலட்சுமி தனது மகனின் பக்கம் சென்றவர் எல்லாத்தையும் வாங்கிட்டியா கண்ணு? என கேட்டார்.
ம்ம் எல்லாமே இதுல இருக்கு மா! இது பாப்பாவுக்கு புடவை சுடிதார், இதுல கொலுசு, ஜிமிக்கி தோடு ஒரு நெக்லஸ். இதுல பூ பத்து முலம் இருக்கு என நீட்டினான்.
ஹே புடவை நல்லாருக்கு! இது என்ன கைல? உனக்கு வளையல் வாங்கி கொடுத்தாரே அப்பா? அதை போட்டுட்டு வந்திருக்கலாமே? என தனம் கேட்க..
இது உன் தம்பி வாங்கி கொடுத்தாப்டி!! புதுசு என கையை நீட்டி காட்டினாள் பூங்கொடி.
ஹே அழகா இருக்குதே எத்தனை பவுனு? என சந்தனகொடி கேட்க..
சங்கீதாவுக்கு நகை வாங்கும் போது எனக்கும் சேர்த்து வாங்கிட்டு வந்தான். என காட்டினாள்.
மேனகா தனது அன்னை ஜெயாவை முறைத்து பார்த்தாள். ஜெயாவுக்கு பொறாமை அதற்கு மேல் பொங்கியது.
ம்ம் நல்லாருக்கு என சந்தனம் பார்த்து கொண்டிருக்க,
ஏன் டா அன்பு எப்படி நீ பூங்கொடிக்கு மட்டும் பிரேஸ்லெட் வாங்கி போடலாம்? இன்னிக்கி திரட்டி வச்சிருக்கிறது என் புள்ளைக்கு தான? அதுக்குள்ள ஒண்ணு கூடி என்ற அக்காவை உன்ட்ர அம்மா இழுத்துகிச்சு போலயே? என் புள்ளைக்கு தண்ணி ஊத்தி புது துணி எடுத்து கொடுத்து வெள்ளில கால் கொலுசு மாட்டுறதாக இருந்தால் உன்னோட சீறு எனக்கு வேணாம் என அனைவரின் முன்னும் ஆற்றாமையில் பேசி விட்டார் ஜெயா.
சித்தி என பூங்கொடி புரியாமல் விழித்தாள். இப்படி பேசும் குணம் இருக்கிறதா என ஆச்சரியம் தான் அவளுக்கு.
சந்தனம் மற்றும் தனம் இருவரும் அதிர்ச்சியுடன் பார்க்க, சக்கரவர்த்தி தன் மகளை பார்த்து, என்ன வாய் இது வரைக்கும் நீளுது? திமிரா ஜெயா? உன் மண்டையில அறிவு இருக்கா இல்லையா? என்ற பையன் அவனோட பொண்டாட்டிக்கு தனிப்பட்ட முறையில் வாங்கி இருக்கான். இதுல என்ன இருக்கு? சீர் எவ்ளோ வேணும்னு கேட்டு வாங்கிக்கோ என திட்டினார்.
முனுக்கென கண்ணீர் கோர்க்க ஜெயா அடுத்து பேச வர, அக்கா ஒரு நிமிசம் இருக்கியா? நீ தேவையில்லாம அழற? எனக்கு என்னைக்கும் நீ ஸ்பெஷல் தான். அதுக்கு காரணம் எனக்கு தாய்மாமனா மதிச்சு நீ தான் முதல்ல சடங்கு பண்ண கூப்பிட்டு இருக்க! என்ற அக்கா பொன்னை நான் அப்படியே விட்டுட மாட்டேன். கால் கொலுசு, ஜிமிக்கி தோடு, நெக்லஸ், கூரையில் பட்டு புடவை வாங்கி இருக்கேன். இதையெல்லாம் உன்னை கேட்காம நான் வாங்கிட்டு வந்துட்டேன். வேற எதுவும் வேணும்னா கேளு கா என்றான்.
அது அதெல்லாம் நான் கேட்கல!! எனக்கு தெரியும். ஆனால் வீட்ல ரெண்டு பொண்ணு இருக்குது. நீ சங்கீதாவுக்கு வாங்கின போல மேனகாவுக்கு அந்த பிரேஸ்லெட் இல்லன்னா கம்மல் எதுவும் வாங்கி இருக்கலாம். அவள் பொக்குன்னு போயிடுவா!! என ஜெயா கூற..
சடங்கு யாருக்கு? சங்கீதா குட்டியா? இல்ல மேனகாவா? என சக்கரவர்த்தி கோபத்தில் கேட்டார்.
அப்பா சொல்றது சரி தான் இதை நான் உன்கிட்ட எதிர்பார்க்கல ஜெயா என தனத்தின் முகம் மாறி போக..
ஹே அறிவு கெட்டவளே என முன்னால் வந்த முருகேசன், எங்கே எதை பேசணும்னு விவஸ்தை இல்லையா? என திட்டினார்.
அக்கா இப்போ உனக்கு என்ன மேனகாவுக்கு வாங்கி தரணும் அவ்ளோ தானே! என அன்பு அழைக்க,
தம்பி நீ இரு!! என்ற தனம் அவரது கையில் இருந்து வளையலை கழட்டி, இந்தா மேனகா இதை போட்டுக்க? என கூற..
அய்யோ பெரிமா! வேணாம் பெரிமா!! இந்த அம்மா எதுக்கு இதை பிரச்னை பண்ணுதுன்னு தெரியல எனக்கு வேணாம் பெரிமா என அவள் பின்னால் நகர்ந்து செல்ல..
ஹே மேனகா இப்போ இது தானே வேணும். இந்தா என பிரேஷ்லட்டை கழட்டி அவளின் கையில் போட்டு விட்டாள்.
ஜெயா எதுவும் பேசாமல் பார்க்க, அக்கா எதுக்கு கா!! நீ போட்டுக்கோ! மாமா உனக்காக வாங்கி கொடுத்திருக்கார் அய்யோ எனக்கு வேணாம் சொன்னா கேளேன் என மேனகா எவ்வளவோ மறுக்க.. அவளின் கையில் பிரேஸ்லெட் வந்திருந்தது.
அன்பு செல்வன் சந்தோசமாக பூங்கொடியின் அருகில் சென்று அவளின் கையை பிடித்து கொண்டான்.
பூங்கொடி அவனை பார்த்து, இந்த நகையில என்ன இருக்கு என கேட்க..
நான் ரெண்டு புள்ளைய பெத்து வச்சிருக்கேன். நகை போட்டு கட்டி கொடுக்கிறது எவ்ளோ கஷ்டம் அப்டின்னு எனக்கு தான் தெரியும். என்னை யாரு தப்பா நினைச்சாலும் கவலை இல்லை என்று சொல்லி கொண்டே சென்றார் ஜெயா.
தனம் கொடுத்த வளையலை கழட்டிய மேனகா தனது பெரியம்மாவின் கையில் கொடுத்து விட்டு பிரேஸ்லெட் போட்டு கொண்டு நகர்ந்தாள்.
சந்தனக்கொடி, தனக்கொடி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள்.
ம்ம் சரி அன்பு ரொம்ப கருக்கலா வானம் மின்ற போல இருக்குது. வாங்க கண்ணு நீயும் பூங்கொடியும் சேர்ந்து சீற கொடுத்திட்டு சாப்பிட்டு கிளம்புங்க என அழைத்தார்.
அதன் பின் அனைவரும் சடங்கு நடக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். ஜெயக்கொடி, முருகேசன் இருவரும் நிற்க, இன்னொரு பக்கம் சீர் தட்டுகள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தது அனைத்தையும் கொடுத்து சாங்கியம் சடங்கு என அனைத்தையும் தாய் மாமன் மனைவியாக முன் நின்று பூங்கொடி செய்தாள்.
அங்கு இருக்கும் அனைவரும் அன்பு செல்வன் மற்றும் பூங்கொடியின் ஜோடி பொருத்தத்தை பற்றி தான் பேசி கொண்டிருந்தார்கள். பூங்கொடியா இது? எவ்ளோ பொறுப்பா இருக்குது? மாமனயே விரும்பி கட்டிக்கிச்சா? ரொம்ப சந்தோசம். பார்க்க நிறைவா இருக்கு. இத்தனை வருஷமும் பிரிந்திருந்த குடும்பம் இவங்க கல்யாணத்துல இணக்கம் ஆகிடுச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு பார்க்க என ஆள் ஆளுக்கு ஒவ்வொருவர் பேசி கொண்டிருந்தார்கள்.
அன்னலட்சுமி தனது மகனையும் பேத்தியையும் அப்படி உபசரித்தார்.
மேனகா ஜெயாவிடம், இங்கேயே இருக்க சொல்லு மா!! கறி விருந்து முடிச்சிட்டு போக சொல்லு!! ரெண்டு பேரையும் தனியா அனுப்ப வேணாம். அவங்க சேர்ந்து இருக்கிறது எனக்கு சுத்தமா பிடிக்கல என்று எரிச்சலுடன் கூறினாள்.
ஜெயக்கொடி அவளையே பார்க்க,
இது நான் வாழ வேண்டிய வாழ்க்கை! இப்போ பாரு அவள் எவ்ளோ சொகுசா இருக்கான்னு. சீக்கிரம் அவங்களை பிரிக்கணும். தனத்துக்கு ஒண்ணுன்னா மகிழ் இருக்கான். சந்தன சித்திக்கு பரணி இருக்கான். ஆனால் நம்ம வீட்டுக்கு யாரு இருக்கா? இன்னொரு வீட்டு பையன் நமக்கு எதுவும் செய்வானா? இதுக்கு ஒரே வழி நான் அன்பு செல்வன் பொண்டாட்டி ஆகணும் என்றாள் தீவிரமாக..
ஹே பொறுமையா இரு டி கொஞ்சம் என ஜெயக்கொடி கூற..
சீக்கிரம் அவங்களை தடுத்து நிறுத்து போ!! என அனுப்பினாள் மேனகா.
ஜெயக்கொடி சென்றதும் கையில் இருக்கும் பிரேஷ்லெட்ட பார்த்தவள். இதே போல அன்பு செல்வனையும் எனக்கு தூக்கி கொடுத்துட்டா போதும் என சிரித்தாள் மேனகா.
தொடரும்.
do like and share pradhanyakuzhalinovels