Episode -55
எதுக்கு டி உங்க வீட்ல போய் உட்கார்ந்திருக்க? என மணிமேகலை கண்டபடி திட்டி கொண்டிருந்தாள். ஆனால் பூங்கொடி? அவள் டெஸ்க்கில் சாய்ந்து கொண்டு அழுதாள்.
என்னாச்சு பூங்கொடி? என கேட்டு கொண்டே வந்தாள் அனுசுயா. வேகமாக கண்களை துடைத்து கொண்டவள். ஒன்றுமில்லை என கூறினாள்.
என்ன ஒண்ணுமில்ல? முதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லு. அப்போ தான எதாவது ஒரு முடிவு எடுக்க முடியும்? என தர்ஷனா, தேஜு என அனைவரும் சூழ்ந்து கொண்டார்கள்.
அனுசுயா தன் நண்பியின் அருகில் அமர்ந்தவள். என்ன விஷயம்னு சொல்லு டி! சொன்னா தானே எதுவும் பண்ண முடியும்? இப்போ நீ சிங்கிள் இல்ல. உன்னோட வயித்துல பாப்பா இருக்கு. என்னன்னு சொல்லு பேபி என பரிவுடன் கேட்டாள் அனு.
பூங்கொடி கண்ணை துடைத்து கொண்டு பெரு மூச்சை விட்டவள். மேனகா விசயம், வீட்டில் நடந்த பிரச்னை, அன்பு செல்வன் அனைவரின் முன்னும் குற்றமற்றவன் என நிரூபித்தது. அதன்பின் பூங்கொடி அவனை சமாதானம் செய்ய முற்பட்டது, அதன் பின் பேருந்தில் திவ்ய பாரதியின் சேட்டைகள் என அனைத்தையும் எளிமையாக கூறி முடித்தவள் தனது தோழியை பார்த்து, என்னோட கல்யாணம் ஒரு இக்கட்டான சூழலில் தான் நடந்தது. இருந்தாலும் நான் பண்ணிக்கிட்டேன் டி!! என்றாள்.
அனுசுயா தன் தோழியிடம், “உனக்கு எதுக்கு அன்பு செல்வன் மம்மி மேலே வெறுப்பு?, அதுக்கு என்ன காரணம்?” என கேட்டாள்.
ஏன்னா அன்பு செல்வன் என்ற அம்மா கூட பிறந்தவன் இல்ல. அவன் எங் தாத்தாவுக்கு ரெண்டாவது தாரத்து மகன். சின்ன வயசுல இருந்தே என் அம்மா சொல்லி வளர்த்தாங்க. என் அம்மாச்சி சாவுக்கு அன்பு அம்மா தான் காரணம்னு, ஆனால் இப்போ எங்க அம்மா அப்படியே மாறி அவங்க கூட சேர்ந்துட்டாங்க. எனக்கு அதுல எந்த பிரச்னையும் இல்ல. ஆனால் எனக்கு கொஞ்சம் ஸ்பேஸ் வேணும்ல.”
“நான் அவங்க கிட்ட மன்னிப்பும் கேட்டுட்டேன். எனக்கு சட்டுன்னு மிங்கில் ஆக முடியல. நான் பேசினது பண்ணது அதிகபடி தான். அதை நான் ஒத்துக்கிறேன். ஆனால் அவன்? அவனுக்கு என்னைக்கும் நான் முக்கியமா இருந்ததில்லை. எதுக்கு டா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு இருக்கு” என விசும்பி கொண்டே கூறினாள் பூங்கொடி.
அப்போ உனக்கு அன்பு மேலே இஷ்டம் இல்லையா? அப்புறம் எப்படி குழந்தை? என அனு கேட்க..
ஹே அதையெல்லாம் எதுக்கு கேட்கிற? என மணிமேகலை முன்னால் வர, அனுவோ அவளை தடுத்து, “சொல்லு பூங்கொடி உனக்கு இஷ்டம் இல்லையா? எப்படி அவ்ளோ பெரிய பழிய அன்பு மேலே மேனகா போட்டதும் நீ சும்மா இருந்த? அவருக்காக நீ பேசியிருக்கணும் தானே? அவரு உன்மேல் கோபமா இருக்கிறது சரி தான?”
“அவன்கிட்ட நான் பேசினது இல்ல. பழகினது இல்ல. அவன் யாரு என்ன எதுவுமே எனக்கு தெரியாது. மேனகா போட்டோ காட்டி சொன்னா, என்னால எப்படி நம்பாமல் இருக்க முடியும்? அவனும் என்னை இஷ்டப்பட்டு கட்டிக்கல, அவங்க அம்மா அப்பாவுக்காக தான் கல்யாணம் செஞ்சுக்கிட்டான்” என முடித்தாள் பூங்கொடி.
அப்போ பிடிக்காம தான் குழந்தையா? என அனு சிரித்து கொண்டே கேட்க,
பிடிச்சு தான் குழந்தை போதுமா? எனக்கு பிடிச்சது. நான் இன்சிஸ்ட் பண்ணேன். என்னால தான் குழந்தை போதுமா? அவனை எனக்கு பிடிக்கும் போதுமா என கத்தி விட்டாள் பூங்கொடி.
ஹே பூங்கொடி அழாத டி! என தோழிகள் அனைவரும் சமாதானம் செய்தார்கள்.
அப்புறம் எதுக்கு டி இந்த குழப்பம்? என அனு விடாமல் கேட்க, மணிமேகலை திவ்ய பாரதியை பற்றி கூறினாள்.
அவள் விளையாட்டுக்கு பண்றா பூங்கொடி. நீ ஃப்ரீயா விடு! என அனு கூறி விட, வேகமாக எழுந்தவள் எது விளையாட்டு? அது விளையாட்டா? ஆமா அவள் பண்ணிட்டு இருக்கிறது விளையாட்டு தான். நீ பேசுவ? உனக்கென்ன ஜெகன் அண்ணா ஒரு இப்படி பஸ் கன்டெக்டர்ரா இருந்து நாலு பிள்ளைங்க வட்டமடிச்சா உனக்கு அப்போ தெரியும்.
எனக்கு என் ஜெகன் மேலே நம்பிக்கை இருக்கு உன்னை போல நான் சந்தேகப்படலையே? என அனு கூற..
ஹே என்னடி எதுக்கு இப்படி பேசுற? என மணிமேகலை கோபத்துடன் கேட்க, பூங்கொடி நடுங்கும் குரலில் ஆமா நான் நம்பிக்கை இல்லாம இருந்தேன் அது என்னோட தப்பு தான். இப்போ கூட எனக்கு அவன் மேலே கோபம் இல்ல. என் மேல் கோபம். உங்க யாருக்கும் என்னோட கவலை புரியாது. என்றவள் கண்களில் நீர் கொட்டிட, அந்த பஸ்ல ஆள் ஆளுக்கு அவனையும் அந்த திவ்ய பாரதியையும் சேர்த்து வச்சு அசிங்கமா பேசினாங்க தெரியுமா? அப்போ எனக்கு எவ்ளோ வேதனையா இருந்ததுன்னு அனுபவிச்சு பார்த்தால் தான் தெரியும். என் புருஷனை பத்தி ஊரே பேசுது. அவள் கூட சேர்த்து. பஸ்சுல நம்ம எதுக்கு போறோமோ அந்த வேலைய மட்டும் பார்க்கணும் அதை விட்டுட்டு.. என்றவள் நிறுத்தி விட்டு, என்னோட கஷ்டம் என்னோட போகட்டும். நான் எது நடக்க கூடாதுன்னு நினைச்சு பயந்தேனோ அதுவே நடந்திடுச்சு. இனி பேசி பிரயோஜனம் இல்ல என்று விட்டு லைப்ரரி சென்றாள் பூங்கொடி.
விதர்ஷனா, பிரியங்கா இருவரும் அவளின் பின்னால் சென்றார்கள்.
ஹே அறிவு இருக்கா டி உனக்கு? அவள் எவ்ளோ உடைஞ்சு போய் பேசுறா! அவளை ட்ரிக்கர் பண்ற மாதிரி பேசி இருக்க? என்னடி இதெல்லாம் என மணிமேகலை அங்கலாய்ப்புடன் கேட்டாள்.
அனுசுயா கைகளை முறுக்கி கொண்டு, ஹே நாளைக்கு ரெடியா இருங்க. பூங்கொடிய அழ வச்சவளை சும்மா விட கூடாது. கூடவே அந்த அன்பு செல்வனுக்கு இருக்கு. என கூறினாள்.
ஹே அனு பிரச்சினையை பெருசு பண்ணாத டி!! என மணிமேகலை பயத்துடன் கூற, எல்லாம் எனக்கு தெரியும். இதை இப்படி தான் டீல் பண்ணனும் என்ற அனுசுயா, அந்த திவ்ய பாரதிய பத்தி சொல்லு. என கேட்டாள் கோபத்துடன்..
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிய எப்பொழுதும் போல காலேஜ் வந்தாள் பூங்கொடி. அவளின் வகுப்பு தோழிகள் யாருமே வரவில்லை. அனைவருக்கும் போன் செய்தாள். மணிமேகலை கூட இன்று கல்லூரி வரவில்லை.
என்ன ஆச்சு? இவங்களுக்கு? என யோசித்தவள். பெரிதாக அலட்டி கொள்ளாமல் அவளது படிப்பில் கவனம் செலுத்தினாள். இப்போதைக்கு அவளுக்கு இருக்கும் ஒரே ஒரு எண்ணம் மாற்றி படிப்பு மட்டுமே.
***
வளைகாப்பு வேணாம்னு ஏன் கண்ணு சொன்ன? என தனம் கேட்க, மகிழை மனதில் அர்ச்சித்த சவுந்தர்யா, அத்தை வளைகாப்பு பண்ணா உங்க குடும்பத்தை பத்தி தான் இங்கே எல்லாரும் பேசுவாங்க. அதாவது என தயங்கியவள். உங்க வீட்டுக்காரருக்கு ஒரு மரியாதை இருக்கு. என்னால் அதுக்கு பிரச்னை வரக்கூடாதுன்னு தோணுச்சு. அதனால தான் அப்படி சொன்னேன். நீங்க தப்பா எடுத்துக்க வேணாம். என கூறி விட்டாள்.
அதற்கு மேல் தனக்கொடியால் எதுவுமே பேச முடியவில்லை. உன்னோட பிரியம் கண்ணு என்று விட்டு சக்கரவர்த்தியின் வீட்டுக்கு புறப்பட்டார்.
வீட்டு சாமான்கள் தேவைப்பட பணத்தை எடுத்து கொண்டு கடைக்கு வந்தாள் சவுந்தர்யா. எதிரில் இருக்கும் விநாயகா மெசின் முன்னால் வண்டியை நிறுத்தினான் மகிழ். காலை சாப்பாட்டை பார்சல் கட்ட நிறுத்தினான். பள்ளி வாகனத்தில் டிரைவராக ஓட்டி கொண்டிருந்தான்.
பொருட்களை வாங்கி கொண்டு திரும்பியவளினின் கண்ணில் மகிழ் பட்டான்.
சீக்கிரம் கட்டுங்க அண்ணா! ஸ்கூலுக்கு நேரமாச்சு என மகிழ் சொல்வது காதுக்குள் விழுந்தது. அப்பொழுது தான் அவளுக்கு தெரிய வந்தது. அவன் நிஜமாகவே ஊதாரிதனம் செய்யவில்லை வேலைக்கு செல்கிறான் என்று.
சட்டென சுயநினைவுக்கு வந்தவள். அவன் மேலிருந்து பார்வையை விலக்கி கொண்டு சென்று விட்டாள் வீட்டுக்கு. இப்படியே நாட்கள் நகர்ந்தது.
கோவிலில் திருவிழா ஆரம்பித்தது. அன்னலட்சிமி சக்கரவர்த்தியிடம், மச்சான் நோம்பி போட்டாச்சுல்ல. அமுலி இங்கே நம்ம வீட்டுக்கு வந்தா நல்லாருக்கும் மச்சான். என்னமோ வீடே பொக்ன்னு இருக்குது. சங்கீதா குட்டி இருக்குறதால நமக்கு பெருசா எதுவும் தெரியல. இல்லன்னா வீடு வெறிச்சோடி இருக்கும் தெரியுமா உங்களுக்கு என கூறினார்.
நான் இதை பத்தி தனக்கொடி கிட்ட பேசறேன் என கூறி விட்டு யோசனையில் ஆழ்ந்தார் சக்கரவர்த்தி.
பூங்கொடி எதை பற்றியும் கண்டு கொள்வதில்லை அவளுண்டு அவள் வேலையுண்டு என இருந்தாள். அவள் சமைத்து முடித்து சிவராமனை சாப்பிட அழைத்தாள்.
சாப்பிட்டபடி தனது மகளை பார்த்தவர். அமுலி பண்டிகை வருது கண்ணு.
வரட்டுமே!! எனக்கு செம் எக்ஸாம் இருக்கு டாடி! நான் ஒரு நாள் வீட்ல இருப்பேன். என பூங்கொடி சொல்லி கொண்டே சாப்பிட்டாள்.
அது சரி கண்ணு. உன்ற தாத்தா என்னை பார்க்க வந்தாப்டி. நீ வீட்டுக்கு வரணுமாம் என்றவர் தனது மகளை பார்க்க, சாப்பிடுவதை நிறுத்தி விட்டு ஏறிட்டு பார்த்தாள்.
என்னாச்சு அமுலி என சிவராமன் தீவிர முகத்துடன் கேட்க,
இல்ல உங்களுக்கு சாப்பாடு? என பூங்கொடி தன் தந்தையை பார்த்தாள். ஏதாவது ஒரு சாக்கு சொல்லிவிட்டு இங்கேயே இருந்து விட்டால் நன்றாக இருக்குமே என பார்த்தாள்.
உங்க அத்தைய வர சொல்லியிருக்கேன். நோம்பிக்கு அழைச்சு இருக்கேன். சதீஷ் மூணு நாளில் துபாய் கிளம்புறான். அவனுக்கு ஆக்கி போட்டு துணி எடுத்து கொடுக்க திட்டம் வச்சிருக்கேன்.
அப்போ நான் இங்கேயே இருக்கேன் உங்களுஜு உதவியா.
இல்ல கண்ணு நீ புறப்படு அது தான் சரி நான் இங்கே பார்த்துக்கிறேன் என சிவராமன் கூறிட..
கண்டிப்பா போறேன். ரெண்டே நாள்தான். போயிட்டு வந்துடுவேன். என்றவள் சாப்பிட்டு முடித்து விட்டு சென்றாள்.
அனைத்து கம்பங்களிலும், ரேடியோ கட்டப்பட்டு, சீரியல் செட்டுகள், கலர் லைட்டுகள் என ஊரே விழாக்கோலத்தில் கொண்டாட்டமாக இருந்தது.
ஜெயக்கொடி, சந்தனக்கொடி, தனக்கொடி என மூவரும் தன் பிறந்த வீட்டில் இருந்தார்கள். ஒட்டு மொத்த குடும்பமும் ஒன்றாக இருந்தார்கள் கவலைகள் மறந்து.
தாத்தா என அழைத்து கொண்டே வீட்டுக்கு வந்தாள் பூங்கொடி.
அமுலி என உற்சாகமாக அழைத்தார். பூங்கொடி மெதுவாக நடந்து வந்தவள். ம்ம் எப்படி இருக்கீங்க? நிறைய படிப்பு வேலை. அதில் நான் கொஞ்சக் பிசி என்றவள். அனைவருடனும் கலகலவென பேசினாள்.
சரி வா கண்ணு புதுத்துணி எடுத்து வச்சிருக்கோம் அதை கட்டிக்க என்ற அன்னம் அவளுக்கு பட்டு புடவையை நீட்டிட, பசிக்குது சாப்பிட்டு ரெடி ஆகுறேன் என அங்கேயே அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள் மெதுவாக..
இங்கேயே இருக்கலாமே அமுலி! என அன்னம் வந்து கேட்க..
எங்க அப்பா தனியா இருக்காரு. அம்மா அங்கே போகட்டும் நான் இங்கே வரேன். என விடாப்பிடியாக மருத்து விட்டாள் பூங்கொடி.
அன்பு செல்வன் டியூட்டி முடித்து விட்டு மதியம் போல வந்தான்.
சங்கீதா, பரணி, பிரியா என அனைவரும் அவனது அறையில் விளையாடி கொண்டிருந்தார்கள்.
ஹே சுடு!! அந்த பழத்தை சுடு என பரணி சொல்லி கொண்டிருக்க, பிரியா சங்கீதா இருவரும் போனில் விளையாடி கொண்டிருந்தார்கள்.
அன்பு செல்வன் புன்னகையுடன் பையை வைத்து விட்டு குளிக்க சென்றான். அவனுக்கு பூங்கொடி வந்தது தெரியாது.
ஹே அமுலி அக்கா போன் அடிக்குது. பெரியப்பா கூப்பிடுறார் என சங்கீதா சொல்ல, பரணி நீ போய் அமுலி அக்கா கிட்ட கொடுத்து அக்கா பேசி முடிச்சதும் போனை வாங்கிட்டு வா என அனுப்பி வைத்தாள் பிரியா.
வெளியே வந்த அன்பு செல்வனின் காதில் பூங்கொடி வந்து விட்டாள் என்ற விவரம் தெரிய, பிரியா பொண்ணு, சங்கீதா குட்டி! அமுலி அக்கா வந்திருக்காளா? என அன்பு திகைப்புடன் கேட்டான்.
அக்கா காலையிலேயே வந்துட்டாங்க மாமா! என இருவரும் கோரஸ்சாக கூற, சட்டையை மாற்றி கொண்டு சென்றான் வேகமாக.. திவ்யபாரதி செய்தது அதிகப்படி என அதற்கு பிறகு வந்த நாட்களில் அவனுக்குமே தோன்றியது. சவுந்தர்யா விஷயத்தில் அவள் உதவி செய்யும் காரணத்தினால் தான் எதுவும் சொல்லாமல் விட்டிருந்தான். அதே போல திவ்யாவின் மனதில் அன்பு செல்வன் மீது பெரிதாக எந்த எண்ணமும் இல்லை என தெரியும். தேவையில்லாமல் எதற்கு சொல்ல வேண்டும் என தோன்றியது.
பூங்கொடி சென்ற இந்த இரண்டு வாரங்களில் அவன் துவண்டு விட்டான். பேசி கொன்றாள். முன்பு என்றால் அதன்பின் பேசாமல் கொன்றாள். கடைசியில விட்டு சென்று விட்டாள். உள்ளம் கனத்து போனது. வீட்டுக்கு வந்து விட்டாள் என தெரிந்ததும் ஆசையாக ஓடினான்.
அன்பு செல்வன் பெரிய வீட்டுக்குள் நுழைய, சந்தனக்கொடி அன்புவை பார்த்து புன்னகையுடன், பூங்கொடி அந்த ரூமில இருக்குது போடா தம்பி என்றார்.
இதோ போறேன் கா!! என சொல்லி விட்டு மெல்ல தயங்கியபடி உள்ளே நுழைந்தான்.
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels