ரெக்கை கட்டி பறக்குது மனசு

by Pradhanya kuzhali
627 views

Episode -5

மனோஜின் நினைவில் இளவேனில் ஒரு நிமிடம் வந்து போனாள். அதன் பிறகு, அவன் தன் வேலைகளில் மூழ்கிவிட்டான். மாலை ஆனதும், அந்த மருத்துவமனையின் கேன்டீன் வாசலில் ஹேமா இளவேனிலுக்காகக் காத்திருந்தாள்.

இளவேனில் கவலையான முகத்துடன் வருவதைப் பார்த்த ஹேமா, அவளின் முகவாட்டத்தைக் கவனித்து, “என்ன ஆச்சு வேணி? எனக்கு ட்ரீட் கொடுக்கப் பிடிக்கலையா?” என்று கேட்டாள்.

“அப்படி இல்ல டி… இன்னைக்கு என்னோட சித்தி சந்தோஷ்குமார்னு ஒரு பையனை எனக்குப் பொண்ணு பார்க்க அனுப்பி வெச்சிருக்காங்க. இதுல இருந்து எப்படித் தப்பிக்கிறதுன்னு ஒரே டென்ஷனா இருக்கு,” என்றாள் இளவேனில்.

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே கேன்டீனுக்குள் நுழைந்தனர். ஹேமா, “இதுக்கு என்கிட்ட சூப்பர் ஐடியா இருக்கு. நீ ஈஸியா இதுல இருந்து வெளிய வந்துடலாம்,” என்றாள்.

“என்ன அது?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் இளவேனில்.

“பேசாம நீ தினேஷ் அண்ணாவை இப்போவே கல்யாணம் பண்ணிக்க. எல்லாப் பிரச்சினையும் சால்வ் ஆயிடும். தெரியுமா… இந்த வாரத்துல நல்ல முகூர்த்தம் இருக்கு. என்ன சொல்ற?” என்று ஆர்வமாக அவள் முகத்தைப் பார்த்தாள் ஹேமா.

இளவேனில் கோபமாக, “என்னோட மாமாகிட்ட பேசினியா?” என்று கேட்டாள். ஹேமா உடனே, “சத்தியமா இல்ல டி! என் மனசுல பட்டதைத்தான் சொன்னேன். இதைவிட நல்ல ஐடியா வேற இல்ல. அதான்,” என்று சொல்லிவிட்டு ஜூஸ் ஆர்டர் செய்தாள்.

ஹேமாவின் பேச்சில் இருந்த வித்தியாசத்தைக் கவனித்த இளவேனில், “எனக்கு உன்னைப்பத்தியும் தெரியும், என் மாமாவைப் பத்தியும் தெரியும். இது ரொம்பக் கஷ்டம் டி. அதுவும் இல்லாம, என் மாமா உன்கிட்ட போன் பண்ணி விசாரித்தாரா?” என்று கேட்டாள்.

ஹேமா ‘இல்லை’ என்பதுபோல் தலையை இடமும் வலமுமாக அசைத்தாள். இளவேனில், அவளை நம்பாமல், “இல்ல, நான் நம்ப மாட்டேன். இது நடக்காது. என் அத்தை சம்மதத்தோடதான் நான் என் மாமாவைக் கல்யாணம் பண்ணிப்பேன்,” என்று சொல்லி, “இதுக்கு மேல இதைப்பத்திப் பேசினா, நான் உன்கிட்டப் பேசற கடைசி முறையா அதுதான் இருக்கும்,” என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டு ஜூஸைக் குடிக்க ஆரம்பித்தாள்.

ஹேமா மனதில், ‘இவளைத் திருத்த முடியாது. எப்படித்தான் இவளோட சித்தியோட கொடுமையில இருக்காளோ’ என்று நினைத்து சலித்துக்கொண்டே அடுத்து என்ன ஆர்டர் செய்யலாம் என்று யோசித்தாள்.

அப்போது ஏதோ நினைவுக்கு வந்தவளாக இளவேனில் ஹேமாவிடம், “நீ எந்த ஃபுளோர்ல டியூட்டி பார்க்கிற?” என்று கேட்டாள்.

“நான் ‘ஹெமட்’லதான் ஜெனரல் வார்டுல இருக்கேன். என்னாச்சு டி?” என்றாள் ஹேமா.

உடனே இளவேனில், “உனக்கு மிஸ்டர் குமார்னு யாரையாவது தெரியுமா?” என்று கேட்டாள்.

“இல்ல டி, அப்படித் தெரியாதே… யார் அது?” என்று கேட்ட ஹேமாவிடம், தன்னைச் சுதாரித்துக்கொண்ட இளவேனில், “அவரோட முழு பேரு மனோஜ் குமார்!” என்றாள்.

இந்த பெயரை கேட்டதும் ஹேமா கொஞ்சம் அதிர்ச்சியாகி, “அவரா! சரியான சிடுமூஞ்சி. யார்கிட்டயும் பேசவே மாட்டாரு. ஏதாவது சின்ன தப்பு நடந்தால் நேரா எங்க ஹெட் நர்ஸ்கிட்ட போய் சொல்லிடுவார். சரியான டெரர் பீஸ் டி! நான் கூடப் பரவாயில்லை. என் கூட வேலை பார்க்கிற முல்லைனு ஒரு பொண்ணு, பேஷன்ட்டுக்குத் தண்ணி பத்தி ‘இன்புட்-அவுட்புட்’ பார்க்கும்போது தப்பா கால்குலேட் பண்ணிட்டா. அவ்வளவுதான்… நேரா போய் இன்ஃபார்ம் பண்ணிவிட்டார்,” என்று சொல்லி முடித்தவள், “இப்போ திடீர்னு எதுக்கு அவரைப்பத்தி கேட்கிற?” என்று கேட்டாள்.

“அது ஒன்னும் இல்ல. சும்மாதான்,” என்று கேட்டுவிட்டு இளவேனில் அந்த விஷயத்தை அத்துடன் விட்டுவிட்டாள். ஆனால், அதுதான் அவளது விதியை மாற்றி அமைத்தது. இளவேனில் எது சொன்னாலும் அதை அப்படியே தினேஷ்கிட்ட ஒப்பித்து விடுவது ஹேமாவின் வழக்கம். இளவேனில் – தினேஷ் காதல் கை கூட வேண்டும் என்று அதிகமாக ஆசை வைத்திருப்பது ஹேமாதான்.

இந்த விஷயத்தை மட்டும் சொல்லியிருந்தால், ஹேமா அதை தினேஷ்கிட்ட சொல்லி, அவன் இவள் மேல உள்ள உரிமையில வந்து தூக்கிக்கொண்டு போய் கல்யாணம் பண்ணியிருப்பான். இப்படியே ஒரு வாரம் சென்றது. அந்த நேரத்தில் தான் கொரோனா வைரஸ் சீனாவில் அதிகமாகப் பரவி வருவதாகவும், அதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் செய்திகளில் வந்துகொண்டிருந்தன.

அந்த வாரத்தில், வெளிநோயாளிகள் பிரிவான OPD-யில், MRO கவுண்டரில் வேலை செய்யும் ஊழியர் ஏதோ ஒரு காரணத்திற்காக திடீரென்று வீட்டுக்குச் சென்றுவிட்டார். உடனே மக்கள் தொடர்பு துறை அதிகாரிக்கு போன் வந்தது. ஏனென்றால், அதிகப்படியான ஊழியர்கள் பணிபுரிவதால், அவசரத்திற்கு ஆட்களை எளிதாக மாற்றிக்கொள்ள முடியும்.

கீதாவுக்கு போன் வரவும், அவள் உடனே இளவேனிலை அழைத்தாள். “மேடம்” என்று அவள் வந்து நின்றாள். “ம்ம்… நீ வந்து MRO கவுண்டர்ல இன்னைக்கு பார்க்க வரும் OPD நோயாளிகளுக்கும், அவங்களுக்கு ஏற்படுற சந்தேகங்களுக்கும் பதில் சொல்லி வை. உடனே போ,” என்று சொல்லிவிட்டாள்.

ஆனால் இது எதுவுமே அவளுக்குப் புரியவில்லை. முதல் முறையாக இப்படி ஒரு திடீர் வேலையில் அவளைப் போட்டனர். இளவேனில் ஒரு பெருமூச்சு விட்டு அமர்ந்தாள். அவளுக்கு ஒன்றுமே தெரியாது. ஆனாலும், சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தாள்.

மொத்தம் 15 அறைகள். ஒரு அறைக்கு கணினி வசதியுடன் இரண்டு மருத்துவர்கள். இரண்டு அறைகள் மட்டும் மருத்துவ உதவியாளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன. நோயாளிகளின் தேவை, சந்தேகம், மருத்துவக் குறிப்புகளைப் பதிவேற்றம் செய்யும் வேலைகளை அவர்கள் செய்வார்கள். இன்னொரு அறை ஆலோசகர் மற்றும் கவுன்சிலிங் கொடுக்கும் அறையாக இருந்தது.

அவள் அமர்ந்ததும், நோயாளிகளுடன் வந்தவர்கள் டாக்டரைப் பற்றி விசாரிக்க வந்துவிட்டனர். இளவேனில் பொறுமையாக, “ஐயா, கொஞ்சம் காத்திருங்கள். டாக்டர் இப்போ வந்துடுவாங்க,” என்று பதில் சொல்லி, அவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு இருந்தாள்.

அங்கே ஒரு பெரிய LED திரையில், டோக்கன் எண்கள் வரிசையாக 13 அறைகளுக்கும் போடப்பட்டிருந்தன. அதில் ஒரு நோயாளியைப் பார்த்ததும், மருத்துவர் அடுத்த டோக்கனைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்படி இருக்க, அறையின் எண் 14 மட்டும் ஆரம்பிக்காமலே இருந்தது. அது மனோஜ் குமாரின் அறை. அதில் இருவரும் அமர்ந்திருப்பார்கள். ஒருவர், ரவிகுமார் (14A), நோயாளிகளை கவனித்துக்கொண்டிருந்தார்.

14B மனோஜ் குமார் அமரும் இடம். அனைவரும் அந்த அறையில் மனோஜைப் பார்க்கப் போடப்பட்டிருந்த டோக்கன் நோயாளிகள். மணி மதியம் 11.30 தாண்டியதால், மிகவும் சிரமமாக இருப்பதாக நினைத்து, அவர்களுக்குள் பேச ஆரம்பித்தனர்.

இளவேனிலுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அகிலாவுக்குப் போன் செய்து கேட்க, அங்கே இருக்கும் MRO கவுண்டர் போனில் எடுத்துப் பேசச் சொல்லிவிட்டு வைத்துவிட, இளவேனில் போன் செய்தாள்.

“ஹலோ சார்… இங்க MROல இருந்து பேசுறேன். இன்னும் என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” என்று கேட்டாள். “I’m on the way!” என்று சொல்லிவிட்டு போனை கட் செய்யப் போனவன், அவள் அடுத்து சொன்ன வார்த்தையில் கோபம் வந்தது. அவள் கட் செய்யாமல் தவறாக போனை வைத்திருக்கிறாள். அப்படி என்னதான் சொன்னாள்?

“டாக்டருக்காகத்தான் நோயாளி காத்துக்கொண்டிருக்கணும். ஆனா இந்த டாக்டர் ரொம்ப ரொம்ப பெரிய டாக்டர்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க. ஹெட் வெயிட் பிடிச்ச ஆளுங்க,” என்று சொல்லிவிட்டு வேலையைத் தொடர்ந்தாள்.

மனோஜ் கோபமாக, ‘நான் இங்க சும்மா சுத்திட்டு இருக்கிறதா நினைக்கிறாங்க போல. இப்போதான் ஒரு அவசர கேஸைப் பார்த்து, பெட் ஏற்பாடு பண்ணிவிட்டு வந்தேன். வாரத்துல இந்த ரெண்டு நாள் வேலை செய்யுறதுக்கு என்ன சலிப்பு?’ என்று நினைத்துக்கொண்டே தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு நேராக அவன் அறைக்கு வந்தான்.

அதன் பின் நகர நேரம் இல்லை. காலையில் 14 டோக்கன், மதியம் ரத்தம் மாற்றுவது தொடர்பான டோக்கன் எனப் பார்த்து சோர்ந்துவிட்டான்.

அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாகத் தலைவலி கூடியது. போனில் கேன்டீனில் ஒரு பைன் ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் செய்தவன், வேலையைப் பார்த்துக்கொண்டிருக்க, அந்த நேரம் ஒவ்வொரு மருத்துவரிடமும், “அனைத்து நோயாளியும் சரியாக வந்துவிட்டனரா?” என்று கேட்டு குறித்துக்கொண்டே வந்தாள்.

அப்போது, அடுத்ததாக 14ஆம் அறைக்கு வந்தவள், அறையைத் திறந்து உள்ளே வந்தாள். அருகில் இருந்த மருத்துவரிடம் விவரத்தைப் பெற்றுக்கொண்டு, 14B பக்கம் பார்வையைச் செலுத்தினாள். தன் தலையைக் கோதிக்கொண்டே, கண்ணாடியைச் சரிசெய்தபடி மனோஜ் குமார் நிமிர்ந்து பார்க்க, அங்கே இளவேனில்….!

தொடரும்…

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment