மன்னவன் மயங்கும் மலரவள்

by Pradhanya kuzhali
805 views

அத்தியாயம்- 31

அறைக்குள் தடாலடியாக நுழைந்தான் குரு.

“அம்மா, பேய்!” என அலறியபடி நெஞ்சைப் பிடித்துக் கொண்டவள், அவனைப் பார்த்ததும் “பேய்க்கு உண்டான மரியாதை போச்சு” என வாய்மொழியாகக் கூறினாள் செம்பருத்தி.

“உன்னோட தங்கச்சிக்கு நடக்க இருக்குற கல்யாணத்தை நிறுத்தணும்.”

“எந்தத் தங்கச்சி?”

“திவ்யனுக்கும் சம்பூர்ணத்துக்கும் நடக்க இருக்குற கல்யாணத்தைப் பத்திப் பேசிட்டு இருக்கேன். அந்த திவ்யன் மோசமானவன். அவனை கட்டிக்கிட்டா சம்பூர்ணா ரொம்பக் கஷ்டப்படுவா!”

“எப்படி மோசமானவர்? உங்களை விடவா?” எனச் சிரித்துக்கொண்டே கேட்டாள் செம்பருத்தி.

குருசேத்ரன் கோபத்துடன், “நான் என்ன மோசம்? உன்னை கொடுமைப்படுத்தித் தெருவில் அனுப்பலையே? எங்க பெரியப்பா வீட்டைப் பத்தி உனக்குத் தெரியாதுடி! திவ்யன் நம்மோட உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவன். சொல்லப் போனால் அவனுக்குக் ‘கமிட்மென்ட்’ எல்லாம் ஒத்து வராது. நாளைக்கு அவள் கஷ்டப்படுறத என்னால பார்க்க முடியாது.”

“அவள் கஷ்டப்பட்டால் உங்களுக்கு என்ன?” என செம்பருத்தி கேட்டாள்.

“ஏன்னா அவள் எனக்கு… அவள் உன்னோட தங்கச்சி! நீ கஷ்டப்பட்டால் என்னால தாங்க முடியாது,” என்றான் குரு.

“உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் ரொம்பக் கஷ்டப்படுறேன். அதுவும் உங்க கண்ணு முன்னாடியே! என்னை ஏமாத்தி என்னோட பலவீனத்தைப் பயன்படுத்தி கட்டிக்கிட்டீங்க! இந்த வாழ்க்கைக்கு நானா ஒருவாறு ‘செட்’ ஆக நினைக்கிற நேரத்தில உங்களைப் பத்தித் தெரிஞ்சதும் நான்…” என்றவள் ஒரு பெருமூச்சை விட்டு, “இப்போ கூட உங்களை விட்டுப் போகக் கூடாதுன்னு ஒண்ணுக்கு ரெண்டு கொடுத்து என் வயித்த நம்பி உங்க கண்ணு முன்னாடி நான் இப்படியே காலுக்கு அடியில் இருக்கிற போல பண்ணிட்டீங்க. சோ, இதை விட திவ்யன் மோசமா இருப்பாரா என்ன?” எனக் கேட்டாள் செம்பருத்தி.

“நான் சொல்றதைக் கேளு! உன்னோட கோபத்தை, என் மேலே இருக்குற வெறுப்பை இந்த விஷயத்தில் காட்டாத!” என்றான் குருசேத்ரன்.

செம்பருத்தி தீவிரமாகப் பார்த்தாள். குரு அவளின் அருகில் வந்தவன், “நான் அந்த அளவுக்கு உன்னைக் கஷ்டப்படுத்தினேனா?”

“ஸ்டில் இதோ இந்த நொடி வரைக்கும் என்னைக் கஷ்டப்படுத்துற! உன்னால என் நிம்மதி போச்சு!!” என்றாள் செம்பருத்தி.

“நான் சொல்றத நீ சுத்தமா நம்பலைன்னு தெரியுது. இட்ஸ் ஓகே!” என்றவன் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.

அவன் சென்ற அடுத்த நொடி செம்பருத்தி அவளது அறைக்கதவைச் சாத்திவிட்டு உடனே தன் அன்னைக்கு அழைத்தாள்.

“சொல்லுடி!”

“எவ்ளோ பெரிய விஷயத்தை என்கிட்ட மறைச்சுட்டீங்க? என் வீட்டுக்காரர் வந்து சொல்றாரு,” என செம்பருத்தி குதித்தாள்.

“அது எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு சொல்லலாம்னு,” என்றார் செல்வி.

“என்னம்மா நினைச்சிட்டு இருக்க? நீ நினைக்கிற மாதிரி இது சாதாரண விஷயம் இல்லை. சம்பூர்ணம் அந்த வீட்டுக்கு ‘செட்’ ஆக மாட்டாள். கல்யாணத்தை பத்தி இப்போ என்ன அவசரம். நம்ம தகுதிக்கு மீறி தேவையில்லாத ரிஸ்க்ல மாட்ட வேணாம்,” என்றாள் செம்பருத்தி விடாப்பிடியாக.

“செம்பருத்தி, இதைப்பத்தி நீ கவலைப்பட வேணாம். நான் பார்த்துக்கிறேன்,” என்றார் செல்வி.

“இப்போ நீங்க சொல்றதுக்கு அர்த்தம் என்னம்மா?” என செம்பருத்தி கேட்க…

செல்வி கோபத்துடன், “நீ மட்டும் பெரிய குடும்பத்தில் மருமகளா போயிட்ட? உன்னோட தங்கச்சி நல்லா வாழணும்னு ஆசை இல்லையா? சத்தியமா உங்களை எல்லாம் எப்படி கரை சேர்க்கப் போறேன்னு கவலைப்பட்டுட்டு இருந்தேன். ஆனால் இது கடவுளாக அமைச்சு கொடுத்த ஒரு வாழ்க்கை. சம்பூர்ணம் கல்யாணம் முடிஞ்சிடுச்சுன்னா தர்மனுக்கும் அவங்க வீட்டுப் பொண்ணு கீர்த்தனா… பெரிய இடத்துப் பொண்ணு நம்ம வீட்டுக்கு மருமகளா வரப்போகுது. கண்டிப்பா இந்த வாய்ப்பு உன்னால தான் வந்திருக்கு. நான் இல்லைன்னு சொல்லல. ஆனால் அதை கெடுக்குற போல எதையும் பண்ணாத! நீ குழந்தைய நல்லபடியா பெத்தெடுக்கும் வழியை மட்டும் பாரு,” என்றவர் போனை வைத்தார்.

“தம்பி எப்படி இதுக்கு ஒத்துக்கிட்டான்? அய்யோ, இந்த பணம் நமக்கு நிம்மதியைக் கொடுக்காது. மாறாக நம்ம நிம்மதியை அழிக்குமே. ஆல்ரெடி நான் நிம்மதி போய் கிடக்கிறேன். இதைப்பத்தி வெளியே சொன்னா அப்பா கண்டிப்பா வேதனைப்படுவார்,” என போனைப் பார்த்தவள், சட்டென தன் தம்பி தர்மனுக்கு அழைக்கப்போக… மீண்டும் செல்வியிடம் இருந்து அழைப்பு வந்தது.

“ஹலோ, சொல்லுங்க.”

“தயவு செஞ்சு இந்த கல்யாணம் வேணாம்னு சம்பூர்ணம் அப்புறம் தர்மனுக்குப் போன் பண்ணி நீ உன்னோட கருத்தைச் சொல்லி கெடுத்து வைக்காத. நீயும் வரவர அந்த வாயாடி ரோஜா போல ஆகிட்டு வர்ற… எனக்கு தான் தலையெழுத்து இந்த வாடகை வீட்டிலேயே புழுங்கி சாகணும்னு, ஆனால் என்னோட மகன் வழிப் பையன் பெரிய வீட்டில் பிறக்க ஆசைப்படுறேன். என் பையனோட வாழ்க்கை கஷ்டம் இல்லாம சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறேன். உன்னைப் பெத்ததுக்காக ஒண்ணு தான் கேட்கிறேன். அவங்க மனசை மாத்துற போல எதையும் பேசாத,” என்றார்.

“எதுவும் பேச மாட்டேன்,” என அவள் போனை வைக்கப்போக…

“செம்பருத்தி தங்கம். நான் வேணும்னு பேசலடி! பெரிய இடம்னா முன்ன பின்ன அப்படி தான் இருக்கும். ஆனால் நம்ம வீட்டுப் பிள்ளைகள் இரண்டும் பொறுப்பா இருந்தால் அவங்களும் நாள பின்ன மாறிடுவாங்க. இப்போதைக்கு நான் நிம்மதியா இருக்கிறது உன்னையும் துளசியையும் நினைச்சு தான்… ஆனால் இவங்க ரெண்டு பேரையும் தாட்டி விடுறதோட என்னோட கடமை முடியலையே! தாமரை இருக்கா! ரோஜா இருக்கா!” என வருத்தத்துடன் பேசினார் செல்வி.

“நான் எதையும் சொல்ல மாட்டேன். சம்பூர்ணம் கிட்ட கல்யாணத்தைப் பத்தி எதுவுமே பேசமாட்டேன். உங்க விருப்பப்படி நீங்க பண்ணுங்க. நான் கேட்கல. நீங்க வரச் சொன்னால் நான் கல்யாணத்துக்கு வர்றேன். இல்லைன்னா வேணாம் அப்படின்னு சொன்னா வரல,” என்று செம்பருத்தி சொல்லிக்கொண்டிருக்கவே போனை வைத்தார் செல்வி.

செம்பருத்தி ஒரு பெருமூச்சை விட்டவள், தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

“செம்பருத்தி!” என கதவைத் தட்டினார் மணியம்மை.

“இதோ வர்றேன் அத்தை!” என மெல்ல எழுந்து கதவைத் திறந்தாள்.

“உன்கிட்ட கொஞ்சம் பேசணுமா!”

“சொல்லுங்க அத்தை!”

“அவனோட முகமே சரி இல்லை. உனக்கும் அவனுக்கும் பிரச்னையா? சொல்லுமா சரி பண்ணிடலாம். என் பையனை நான் பிறந்ததிலிருந்து பார்க்கிறேன். இப்படி அவன் இருந்தது இல்லை. அவன் மத்த குழந்தைகள் போல இல்லை. யார் கிட்டயும் பேச மாட்டான். தவமிருந்த பெத்த பையன். அவன் ஆறு வயசு வரைக்கும் பேசலை! நானும் என் வீட்டுக்காரரும் போகாத கோயில் இல்லை; வேண்டாத தெய்வம் இல்லை. பேசச் சொல்லி கொடுக்கக் கிளாஸ் கூட்டிப் போய்தான் பேசினான். ஆனால் அறிவு ஜாஸ்தி. அதனாலேயே நான் அவனை மிரட்ட மாட்டேன் சின்ன வயசில இருந்து,” என்றார்.

“இல்லை அத்தை, அப்படி எல்லாம் எதுவும் இல்லை. நான் எப்போதும் போலதான் இருக்கேன். அப்புறம் கொஞ்சம் பேசினா அவரு என் பக்கத்தில் நெருங்கிடுவார். அதனால தான் விலகிப் போறேன்,” என்றாள் செம்பருத்தி.

“நிஜமாவா சொல்ற?” என மணியம்மை கேட்க…

“எதுக்கு அத்தை எமோஷனல் ஆகுறீங்க? நிஜமா தான் சொல்றேன்,” என சமாதானம் செய்தாள் செம்பருத்தி.

மணியம்மை கண்களைத் துடைத்துக் கொண்டு நகர…

“அந்த அளவுக்குப் பாசமா?” என சிரித்துக்கொண்டே கேட்டாள்.

“ஆமா, என் பையன்! அவன்! என்னோட எல்லாமே அவன் தான்,” என மணியம்மை கூற…

“ம்ம், உங்க பையனுக்கும் நீங்க தான் உயிர். உங்களுக்காக என்ன வேணாலும் செய்வாரு,” என செம்பருத்தி சொன்னாள்.

மணியம்மை சிரித்துக்கொண்டு, “அவனை பங்கு போட தான் நீ வந்துட்டியே! உன் பக்கம் சாய்ஞ்சுட்டான். பேசாமலேயே அவனை உன் பக்கம் கொண்டு வந்துட்ட!” என்றார்.

“காமெடி பண்ணாதீங்க!” என்று விட்டு உள்ளே சென்றாள் செம்பருத்தி.

குருசேத்ரன் மிகவும் சோர்வுடன் காணப்பட்டான். அவளின் விலகல் அப்பட்டமாகப் பாதித்திருந்தது.

“என்னடா குரு, நீ ஒண்ணுமே சரியில்லையே?” என மணியம்மை சொல்லிக்கொண்டே கஷ்டப்பட…

“ஒண்ணுமில்லம்மா,” என அவனறைக்குச் சென்றான்.

மணியம்மை புலம்பியபடி அமர்ந்திருந்தார்.

செம்பருத்தி வயிற்றை நீவியபடி, “அத்தை, அவரை கீழே வரச் சொல்றீங்களா?”

“குரு! டேய் குரு! உன்னை செம்பருத்தி கூப்பிடுறா!” என வாய் வார்த்தை வாயில் இருக்கும்போது ஓடி வந்தான்.

“என்ன?”

“எனக்கு நைட்டு தூங்கக் கொஞ்சம் சிரமமா இருக்கு. பாத்ரூம் போக… அதனால என் கூடத் தூங்குங்க. கீழே ‘ஷிஃப்ட்’ ஆகிக்கோங்க,” என்று விட்டுச் சென்றாள்.

“இதோ,” என அடுத்த அரை மணி நேரத்தில் மணியம்மையின் பக்கத்து அறைக்கு வந்து சேர்ந்தான்.

செம்பருத்தி புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தாள்.

“எதுவும் பழி வாங்க வரச் சொல்லியிருக்கியா?” எனக் கேட்டுக்கொண்டே கதவைச் சாத்தினான்.

செம்பருத்தி அவனைப் பார்த்தவள், “உன்னால தானே இந்தக் குழந்தை? அப்போ வந்து பாங்கு பாரு. வா, வந்து கால் பிடிச்சு விடு!” என்று அழைத்தாள்.

குருவும் அவளை ஏதாவது ஒரு விதத்தில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என நினைத்தான். இதோ அவளே காலைப் பிடித்து விடச் சொல்கிறாள். சென்று பிடித்துக்கொண்டான். மெதுவாக…

“ம்ம், கை நல்லா ‘சாப்டா’ இருக்கு. பசங்க கை போல இல்லை! அப்புறம் சிக்ஸ் பேக் இல்லை.”

“ஹே, ‘கிஸ்’ பண்ணிக்கட்டா? ‘கிஸ்’ மட்டும்!”

“ம்ம், பண்ணிக்கோ!”

அவன் உதடு காலைத் தொடும் முன் இழுத்துக்கொண்டவள், அவனைப் பார்த்தாள்.

குருசேத்ரனை இப்படி காலைப் பிடிக்க வைப்பாள் என அவளே எதிர்பார்க்கவில்லை.

குருசேத்ரன் அவளின் முகத்தைப் பார்க்க முடியாமல் வேறு புறம் திரும்பிக்கொள்ள…

“என்கிட்ட ‘பெக்’ பண்ணு! அப்போ ‘கிஸ்’ கிடைக்கும்,” என்றாள் செம்பருத்தி.

“What?”

“ம்ம், ‘beg’ means… அதைச் சொல்லணுமா தமிழில்? ஓகே சொல்றேன். ‘beg’ means…”

“ப்ளீஸ், ஐ வான்ட் கிஸ் யூ என்றவன் ஆர் யூ சாட்டிஸ்ஃபைட்?” என குருசேத்ரன் கேட்க…

“இதை விட இன்னொரு விஷயம் இருக்கு. அதை மட்டும் உன்னோட வாயில் இருந்து நீ சொல்லிட்டா நமக்குள் சண்டையே இல்லை. ‘ஒன்லி’ சமாதானம் மட்டும் தான்.”

“என்ன அது?” என குருசேத்ரன் கேட்க…

செம்பருத்தி…?

தொடரும்…

You may also like

Leave a Comment