Epi -1
ஈரோடு மாநகரின் இதயப் பகுதியில், ஆகாயத்தை முத்தமிடுவது போல கம்பீரமாக நிமிர்ந்து நின்றது அந்த வானுயர்ந்த பிரம்மாண்டமான கட்டிடம். அதன் வெளிப்புறக் கண்ணாடிச் சில்லுகள், சுட்டெரிக்கும் மதியச் சூரியனின் ஒளியைத் தன் மேல் வாங்கி, வைரக் கற்களாய் நாலாபுறமும் சிதறடித்துக் கொண்டிருந்தன. ஆனால், அந்தப் பிரம்மாண்டத்தின் உள்ளே… வெளி உலகத்தின் வெப்பம் துளிகூட அண்ட முடியாதபடி, ஏசி குளிர்ச்சி உடலை நடுங்க வைத்துக் கொண்டிருந்தது.
அங்கு, சுற்றியிருந்த அத்தனை சலசலப்புகளையும் தாண்டி, ஒரு தனி ராஜ்ஜியத்தின் சிம்மாசனம் போன்ற அந்த அதிநவீன சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தான் சத்யமூர்த்தி.
யார் இவன்?
‘விஷ்வா விகாஸ் பிரைமரி ஸ்கூல்ஸ்’ – தமிழகமே வியந்து பார்க்கும் முதன்மையான கல்வி நிறுவனங்களின் அதிபதி. அதுமட்டுமா? ‘லிட்டில் ஸ்டெப்ஸ்’ (Little Steps) என்ற பெயரில் ஆரம்பப் பள்ளிகள், பகல்நேரக் காப்பகங்கள் (Daycare) என ஒரு மாபெரும் கல்விச் சாம்ராஜ்யத்தையே தன் ஒற்றை விரல் அசைவில் நிர்வகிக்கும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO). சுருக்கமாகச் சொன்னால், அக்மார்க் ‘ஹீரோ மெட்டீரியல்’.
சத்யமூர்த்தி, தன் கையில் இருந்த ஐபோனின் (iPhone) திரையில், கோவை கிளையின் முந்தைய நாள் வசூல் விபரங்களை விரல்களால் தள்ளிக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய கண்கள் மின்னல் கீற்றைப் போலத் தீவிரமாகவும், கூர்மையாகவும் இருந்தன.
நீல நிற ஆல்பைன் சூட், மில்லிமீட்டர் அளவுகூடக் பிசகாமல் இறுக்கமாக முடிச்சிடப்பட்ட நெக்டை, ஒரு சிறு முடி கூட இல்லாமல் நேர்த்தியாக ஷேவ் செய்யப்பட்ட முகவாய்க்கட்டை – மொத்தத்தில் அவனது தோற்றம், ‘’அதிகாரம்’ என்ற ஒற்றைச் சொல்லுக்கு உயிர் கொடுத்து, ஒரு நடமாடும் உருவமாக அங்கே உலவ விட்டது போல இருந்தது. நாற்பது வயதில் ஒருவன் சாம்ராஜ்யத்தை நிர்வகிக்கிறான் என்றால் அது சாதாரண விஷயமா? சத்ய மூர்த்தி இத்தனை வருடங்களாக உழைத்து உருவாக்கிய அந்த உழைப்பின் பரிசு தான்
தமிழகத்தின் நான்கு முக்கிய தொழில் நகரங்களான ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் ஆகிய இடங்களிலே, தனது கல்விப் பேரரசின் ஒன்பது கிளைகளைப் பரப்பி, கொடிகட்டிப் பறக்கிறான் என்றால்… அவனது தொழில் வேகம் சாதாரணமானதல்ல; அது ஒரு சூறாவளி!
அவனைச் சுற்றியுள்ள உலகம் இரண்டு முக்கிய தூண்களால் மிகக் கவனமாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்று, அவனது ரத்தத்திலேயே ஊறியிருந்த அளவிட முடியாத ஆணவம் (Arrogance); மற்றொன்று, எல்லைகளற்ற அவனது தொழில் வேகம். அவனுடைய நிர்வாகத்தின் ஒவ்வொரு அணுவிலும், “நான் தான் தலைவன், நான் சொல்வதே சட்டம்!” என்ற ஆண் ஆதிக்கம் அப்பட்டமாகத் தெரிந்தது. “நான் தான் எல்லாம், எனக்கு மேல் யாரும் இல்லை” என்ற உச்சக்கட்ட மனநிலையில் தான் சத்யமூர்த்தி எப்போதும் இயங்குவான்.
அவனுடைய பிரம்மாண்ட மேசைக்கு முன்னால், அனாவசியமாக யாரும் வந்து நிற்கத் துணிய மாட்டார்கள். அவன் பேசும்போது, எதிரே இருப்பவர் தவறுதலாகவோ அல்லது தற்செயலாகவோ அவனது கண்களை நேருக்கு நேர் பார்த்துவிட்டால் கூட, “என்னை எதிர்த்துப் பார்க்கிறாயா?” என்று கணக்குக் கேட்கும் அளவுக்குக் குரூரமான கண்டிப்பு அவனிடம் இருந்தது.
“சந்திரசேகர்! திருப்பூர் பிரான்ச்ல ஆறு மாதக் குழந்தைகளுக்கான (6 month babies) ‘ரைட் பிரைன் ஆக்டிவேஷன்’ (Right Brain Activation) மார்க்கெட்டிங் ஒர்க் பிராசஸ் ஏன் இன்னும் இரண்டு நாட்களா தள்ளிப் போயிட்டே இருக்கு? எனக்கு இன்னிக்கு அதுக்கு ஒரு எண்ட் கார்டு வேணும்! இன்னிக்கே திருப்பூர் பிரான்ச் சம்பந்தப்பட்ட எல்லா டாக்குமெண்ட்ஸும் என்னோட டேபிள் மேலே இருந்தாகணும்!”
சத்யமூர்த்தியின் அதிகாரக் குரல், அந்த அறையின் குளிர்ந்த அமைதியைக் கண்ணாடி போல உடைத்துச் சிதறடித்தது.
ஏசி குளிரிலும் நெற்றியில் வியர்வை முத்துக்கள் அரும்ப, கால்கள் நடுங்க, சத்யமூர்த்தியை விட வயதில் மூத்தவரான அந்த அலுவலக மேலாளர் சந்திரசேகர், தன் நடுக்கத்தை மறைக்கப் பாடுபட்டார்.
“இ… இதோ இப்போவே போறேன் சார். இன்னும் அஞ்சு நிமிஷத்துல உங்க டேபிள் மேலே எல்லா டாக்குமெண்ட்ஸும் இருக்கும் சார்!” என்று அவசர அவசரமாக அவனிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு, அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று அரக்கப்பரக்க வெளியேறினார்.
அறைக்கு வெளியே வந்த பிறகும், சத்யமூர்த்தியின் கற்சிலை போன்ற முகத்தையும், அதன் தீர்க்கமான பார்வையையும் நினைத்தாலே சந்திரசேகரின் நாடித்துடிப்பு கிடுகிடுவென எகிறியது. அவனுடைய கண்களில் கதிர்வீச்சு இருந்தது; ஆனால், ‘கருணை’ என்ற சொல்லுக்கு அங்கே துளிகூட இடமில்லை.
அடுத்த அரை மணி நேரத்தில், கைகளில் கோப்புகளின் சுமையோடு மூச்சிரைக்க உள்ளே நுழைந்தார் சந்திரசேகர்.
“எல்லாமே ரெடி தானே?” என்று சத்யமூர்த்தி தன் சுழல் நாற்காலியைச் சற்றே முன்னால் நகர்த்தி, அதிகாரத் தோரணையில் கோப்புகளைத் திருப்பிப் பார்க்கத் தொடங்கினான்.
சந்திரசேகர் தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு, பதட்டமான குரலில், “சார்… இதுல பெரும்பான்மையான குழந்தைகளோட பேரண்ட்ஸ் வந்து… அவங்களுக்கு இதுல என்ன பயன்னு…” என்று இழுத்தார்.
“Stop it!” என அந்த மாபெரும் அறையே அதிரும் வண்ணம் கத்தினான் சத்யமூர்த்தி.
சந்திரசேகரின் வாய், சட்டென்று பசை போட்டது போல ஒட்டிக்கொண்டது. அவர் அப்படியே உறைந்து போய் நின்றார்.
சத்யமூர்த்தி தன் இருக்கையை விட்டு எழுந்து நின்று, தெளிவான பேச்சில், திட்டமான பார்வையுடன் பேசத் தொடங்கினான்: “என் பிசினஸ் உத்தி ரொம்ப தெளிவா இருக்கு சந்திரசேகர். உங்களுடைய கேன்வாஸிங் (Canvas) டீம் மேலே தான் பெரிய ஓட்டை இருக்கு! இந்த விஷ்வா விகாஸ் ஸ்கூல்ஸும், லிட்டில் ஸ்டெப்ஸும் அறிவை விற்கிற இடம் இல்லை… நாங்க இங்கே நம்பிக்கையை விற்கிறோம்! ஒவ்வொரு குழந்தையோட பேரண்ட்ஸ் மனசுலயும் ஆணித்தரமா ஒண்ணைப் பதிய வைக்கணும். ‘உங்க குழந்தை தான் இந்த உலகிலேயே ஆகச்சிறந்த புத்திசாலி’ என்ற மாயை கலந்த நம்பிக்கையை நம்ம கேன்வாஸ் டீம் அவங்க மனசுல விதைக்கணும்.”
அவன் ஜன்னல் வழியே வெளியே தெரிந்த நகரத்தைப் பார்த்தபடி தொடர்ந்தான்: “அந்த அசைக்க முடியாத நம்பிக்கை தான் என் பிரம்மாண்டமான பள்ளியின் பிரதான அஸ்திவாரம். ஆறு மாசக் குழந்தைக்கு கிளாஸ் எடுக்கிறதுங்கிறது வெறும் மார்க்கெட்டிங் உத்தி மட்டும்தான். இதைச் சரியா கொண்டு போய் மக்கள்கிட்ட சேர்க்கலன்னா, நீங்க இங்கே வேலை செய்யுறதே வேஸ்ட்! அதுல எனக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை!” என்று ஒவ்வொரு வார்த்தையையும் நெருப்புக் கங்குகளைப் போல சந்திரசேகரின் முகத்தில் வீசினான்.
சந்திரசேகர் தலையைக் குனிந்தபடி மௌனமாக நின்றார். அவனால் அந்த அதிகாரத்தின் முன்னால் எதிர்த்து ஒரு வார்த்தைகூடப் பேச முடியவில்லை.
சத்யமூர்த்தி தன் குரலைச் சற்றே நிதானித்து, ஆனால் அதே அதிகாரத் தொனியுடன், “நம்ம ஸ்கூல்ஸுக்கும் மத்த சாதாரண ஸ்கூல்ஸுக்கும் இருக்கிற வித்தியாசத்தை முதல்ல நீங்க மனசுல நல்லா புரிஞ்சுக்கணும். மத்த ஸ்கூல்ஸ்ல ஜூன் ஃபர்ஸ்ட் (June 1st) அல்லது அக்ஷய திருதியை… இந்த ரெண்டு நாளையும் நம்பித் தான் அட்மிஷனுக்குக் குழந்தைகள் வருவாங்க. ஆனா, நம்ம ஸ்கூல் அப்படி இல்லை. பிறந்த குழந்தை ஆறு மாசமாக இருக்கும்போதே நம்மகிட்ட வந்திடுது. அந்த அளவுக்கு இங்கே டிமாண்ட் (Demand) இருக்கு. அதைத் தெரிஞ்சுக்கிட்டு வேலை பண்ணுங்க,” என்றான் தீர்க்கமாக.
“இன்னிக்கி ஈவினிங்குக்குள்ள எல்லாத்தையும் பக்கா ரெடி பண்ணிடுறேன் சார்,” என்று சந்திரசேகர் தட்டுத்தடுமாறிச் சொன்னார்.
அதற்கு சத்யமூர்த்தி வெறும் ஒற்றைத் தலையசைப்பை மட்டுமே பதிலாகத் தந்தான்.
இத்தனை அதிகாரத்தையும், அளவிட முடியாத செல்வத்தையும் தன் காலடியில் குவித்து வைத்த பின்னாலும், சத்யமூர்த்தியின் கண்களுக்குள் ஒரு நிரந்தரமான வெறுமையும், ஆறாத கோபமும் எப்போதும் குடியிருந்தன. அவன் காட்டும் இந்த அதீத அதிகாரம் அவனுடைய தன்னம்பிக்கையின் வெளிப்பாடு அல்ல; மாறாக, அவன் இந்த உலகத்தை துளிகூட நம்பாமல் இருப்பதற்காகத் தனக்குத்தானே மாட்டிக்கொண்ட ஒரு இரும்புக்கவசம்!
ஏனெனில், அவனுடைய கசப்பான கடந்தகாலம் அவனுக்கு அடித்துச் சொல்லிக் கொடுத்த ஒரே பாடம்: **”இந்த உலகத்தில் உறவுகளை விடப் பணம் மட்டுமே நிரந்தரம்!”
ஆமாம், அது என்ன ‘ரைட் சைடு பிரைன் ஆக்டிவேஷன்’ (Right Side Brain Activation)? அதுவும் வெறும் ஆறு மாதக் குழந்தைக்கு? யோசித்தால் சாமானியர்களுக்கு ஒன்றும் புரியாது தான். ஆனால், இன்றைய நவீன உலகத்தில், தாயின் கருவில் இருக்கும் குழந்தைக்குக் கூட ‘அ, ஆ, இ, ஈ’ மற்றும் ‘A, B, C, D’ சொல்லிக் கொடுக்கும் கார்ப்பரேட் காலம் வந்துவிட்டது.
பெருகி வரும் இந்த இயந்திரத்தனமான வாழ்க்கையில், நிற்கவும் நேரமில்லாமல், நிமிரவும் நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் புதுமணத் தம்பதிகள் பெரும்பாலும் இருவருமே வேலைக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ‘அப்பர் மிடில் கிளாஸ்’ (Upper Middle Class) மற்றும் பணக்கார வசதி படைத்த மக்கள் செய்யும் ஆடம்பரமான விஷயங்களை, நாமும் ஒரு முறையாவது நம் குழந்தைகளுக்குச் செய்துவிட வேண்டும் என்ற ஏக்கத்தில் இருக்கும் நடுத்தர வர்க்கத்தினர் தான் இவர்களின் முக்கிய இலக்கு.
கொஞ்சம் ஆடம்பரமாக, பெரிய அளவில் தனது எண்ணங்களைச் சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்குப் புகட்டி வளர்த்தினால், வருங்காலத்தில் அவன் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்குவான் என்ற பெற்றோர்களின் பேராசையையும், வேலைக்குச் செல்லும் தங்களின் அவசரத்தையும் மூலதனமாக வைத்து, சத்யமூர்த்தியால் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த ‘லிட்டில் ஸ்டெப்ஸ்’. அதன் அடுத்த கட்டப் பாய்ச்சல் தான் பிரம்மாண்ட ‘விஷ்வா விகாஸ்’.
படிப்புக்கு ஒரு ‘அக்மார்க்’ தரமுத்திரை குத்த வேண்டும் என்று யாராவது நினைத்தால், அவர்களின் முதல் சாய்ஸ் சத்யமூர்த்தியின் பள்ளியாகத்தான் இருக்கும். மக்களின் பலவீனங்களையும், நவீன எண்ணங்களையும் மிகத் துல்லியமாக மூளைச்சலவை (Brainwash) செய்து, கல்வியை அக்மார்க் வியாபாரமாக்கும் ஒரு பக்கா பிசினஸ்மேன் (Typical Businessman) தான் இந்த சத்யமூர்த்தி தான் நம் கதையின் நாயகன்.
‘லிட்டில் ஸ்டெப்ஸ்’ பள்ளியில் ஒரு சீட் (Seat) வாங்குவதற்காக, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ முதல் எதிர்க்கட்சி எம்.பி வரை ஒரு பக்கம் சிபாரிசுக்காகக் கியூவில் நிற்க, இன்னொரு பக்கம் பெரும் தொழிலதிபர்கள், பிரபல நடிகர்களின் வாரிசுகள் எனப் பண முதலைகளின் கூட்டம் அலைமோதும். இப்படி அவனது சாம்ராஜ்யத்தின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
சந்திரசேகர் வெளியேறியதும், சத்யமூர்த்தி தனது சொகுசு இருக்கையில் சற்றே பின்னோக்கிச் சாய்ந்து கொண்டான். அவனது அத்தனை அதிகாரப் பாவனைகளும் அடுத்த நொடியே மறைந்து, அவனது மொத்த சிந்தனையிலும் ‘விவான்’ என்பவனின் முகம் மட்டுமே வந்து சூழ்ந்தது. அவனது நெற்றியில் லேசான கவலைக் கோடுகள் விழுந்தன.
அவனது இந்தத் தீவிர சிந்தனையைக் கலைக்கும் விதமாக, மேசையின் மேல் இருந்த அவசர அழைப்பு மணி (Intercom) அலறியது. சத்யமூர்த்தி உடனே அழைப்பை ஏற்றான். அது ஒரு அவசர மருத்துவமனை அழைப்பு (Hospital Phone Call).
மறுமுனையில் கேட்ட தகவலைக் கேட்ட அடுத்த நொடி, சத்யமூர்த்தியின் முகம் மாறியது. தன் ஒட்டுமொத்த கல்விச் சாம்ராஜ்யத்தையும், அதிகாரப் பெருமைகளையும் அப்படியே அந்த மேசையிலேயே ஓரங்கட்டி வைத்துவிட்டு, அவன் பதட்டத்துடன் அங்கிருந்து புறப்பட்டான். விவானைப் பார்ப்பதற்காக!
அடுத்த சில நிமிடங்களில், சத்யமூர்த்தியின் சொகுசு கார் அந்தப் பிரபல மருத்துவமனையின் வாசலில் வந்து நின்றது. அவன் புயல் போல காருக்குள் இருந்து இறங்கி, மருத்துவமனைக்குள் அவசர அவசரமாக நுழைந்த அதே விநாடி…
அதே மருத்துவமனையின் மறுபுறம் இருந்த வெளிச்செல்லும் வழி வழியாக, தன் கையில் சில மருந்துப் பைகளுடன் அமைதியாக வெளியே வந்தாள் சாவித்ரி.
காலத்தின் கணக்குப்படி, அந்தப் பிரம்மாண்டமான மருத்துவமனை வளாகத்தில் இருவரும் ஒரே நேரத்தில் தான் இருந்தார்கள். ஆனால், இருவரின் பார்வைகளும் சந்தித்துக் கொள்ளவில்லை; அவர்கள் ஒருவரையொருவர் கடந்து சென்றதை அவர்களே அறியவில்லை.
இருப்பினும், சத்யமூர்த்தியின் அந்த இருள் சூழ்ந்த, ஈகோ நிறைந்த வாழ்க்கையில்… எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல், ஒரு பெரும் புயலாகவோ அல்லது வசந்தமாகவோ நுழையப் போகிறாள் சாவித்ரி!
தொடரும்.