Epi -22
சத்யமூர்த்தியின் கோபம், அந்த நடு இரவு அமைதியைக் கிழித்துக் கொண்டு சென்றது. அவனது கண்களில் கொப்பளித்த நெருப்பு, சாவித்ரியின் ஆன்மாவையே சுட்டுப் பொசுக்கிவிடும் அளவுக்குக் கோபத்தில் இருந்தான்.
அவனுக்குப் பின்னால் சென்று கொண்டிருந்த மீரா, சட்டென்று யோசனை வந்தவள் போல், உடனே கலாவதியின் அறைக்குச் சென்று எழுப்ப முயன்றாள். மாத்திரை போட்டுத் தூங்கிக் கொண்டிருந்த கலாவதி, அரைத் தூக்கக் கலக்கத்தில், “என்னாச்சு மீரா? அதுவும் இந்த நேரத்துல?” என எழுந்தார். அவருக்கு அருகில் உறங்கிக் கொண்டிருந்த செவிலிப்பெண் சட்டென்று எழுந்து, “என்ன மேடம்? எதுவும் பிரச்சனை இல்லையே?” என எழுந்தாள்.
மீரா பதட்டத்துடன், “அத்தை! பெரிய பிரச்சனையாகிடுச்சு. அந்த விபச்சாரி… கடங்காரி சாவித்ரி நம்ம விஷ்வா மாமா ரூம்ல இருக்கா! சத்யமூர்த்தி மாமா இப்போ கோவமா அங்கே போயிட்டு இருக்கார். வாங்க அத்தை!” என்று கூற… “என்னடி சொல்ற?!” எனப் பதட்டத்துடன் ஒன்றும் புரியாமல் கலாவதி வேகமாகச் சென்றார்.
கைகளை உதறியபடி, ஆவேசமாகப் பெரும் சத்தத்துடன் நடந்து சென்றான் சத்யமூர்த்தி. அறையின் உட்புறம், சத்யமூர்த்தியின் ஆவேசமான வருகையைக் கண்டு சாவித்ரி நிலை குலைந்து போனாள். சத்யமூர்த்தி அவளுக்கு அருகில் சென்ற வேகத்திலேயே, அவளது கன்னத்தில் ‘பளார்’ என்று ஓங்கி ஓர் அறை அறைந்தான்! அந்த அறையின் சத்தமும், அதன் வலியில் அவள் தள்ளாடிய விதமும் அங்கிருந்தவர்களை ஒரு கணம் உறைய வைத்தன.
“சத்யா! என்ன பண்ற? கொஞ்சம் பொறுமைடா!” என கலாவதி பயத்துடன் தடுக்கப் பார்க்க… அதெல்லாம் சத்யமூர்த்தியின் காதில் விழவே இல்லை. தள்ளாடிய சாவித்ரியின் கழுத்தைப் பற்றிச் சுவரோடு சேர்த்து நெரித்தான் சத்யமூர்த்தி. அவனது கைகள் இரும்பைப் போல அவளது கழுத்தை அழுத்தின.
“யாரைக் கேட்டு இந்த ரூமுக்குள்ள வந்த? முதல்ல உன்னோட திட்டம் என்னடி? யார்டி நீ? என் தம்பியை என்ன பண்ணப் பார்த்தே?!” என்று அவனது கர்ஜனை அறை முழுவதும் எதிரொலித்தது.
“பாஸ்… ப்ளீஸ்… விடுங்க பாஸ்! அவளைக் கொல்லாதீங்க!” என்று ராஜேஷ் பதட்டத்துடன் ஓடிவந்து சத்யமூர்த்தியின் கைகளைத் தடுக்க முயற்சி செய்தான். ஆனால், சத்யமூர்த்தியின் ஆக்ரோஷத்திற்கு முன்னால் அவனது முயற்சிகள் பலனளிக்கவில்லை.
“சத்யா! என்ன பண்ற? விடுடா அவளை! டேய், சொல்றதைக் கேளு; அவளுக்கு எதுவும் ஆகிடப் போகுது. சத்யா, வேண்டாம்டா! விடு!” என்று கலாவதி அதிர்ச்சியில் அலறினார்.
சத்யமூர்த்தி அவளை அப்படியே அறையின் மூலையில் இருந்த சுவரில் ஓங்கித் தூக்கி வீசினான். சுவரில் மோதிய அதிர்ச்சியில் சாவித்ரியின் நெற்றியில் சிராய்ப்புகள் ஏற்பட்டு இரத்தம் கசிந்தது. வலியில் உடல் துடித்தாலும், அவள் தன் கண்ணீரை அடக்கிக் கொண்டு, தளர்ந்த உடலுடன் சுவரில் சாய்ந்து அமர்ந்தாள். தன் கழுத்தைத் தடவியபடி, மூச்சுத் திணற, கண்களில் நீர் கோர்க்க அவனை நேருக்கு நேர் பார்த்தாள்.
சத்யமூர்த்தி மேல்மூச்சு வாங்க, ஆத்திரத்துடன் அவள் பக்கம் ஓர் எட்டு வைத்தான்.
“நான்… நான் எந்தத் தப்பும் பண்ணலை,” என்று அவள் குரல் தழுதழுத்தாலும், தைரியமாகச் சொன்னாள்.
சத்யமூர்த்தி கோபத்துடன், “எந்தத் தப்பும் பண்ணலையா? இந்த நேரத்துல இங்கே என்ன வேலை உனக்கு?” என்றவன், “ராஜேஷ், உடனே போலீஸ்க்கு கால் பண்ணு!” என்றான். அவனது பார்வை, சாவித்திரியின் கையில் இருக்கும் டைரியின் மேல் பதிந்தது.
இங்கே, படுக்கையில் படுத்திருந்த விஷ்வாவின் கண்மணிகள் உருண்டன.
**(கடந்த காலம் / Flashback…)**
“என்னாச்சு விஷ்வா? நான் பேசிட்டே இருக்கேன், நீங்க அமைதியா இருக்கீங்க?” எனப் புருவம் சுருக்கி அவனைப் பார்த்தாள் தாமரை.
“என்னை வெறுத்துப் பிடிக்காம சுத்தும்போது திமிர் தேவதை மாதிரி இருப்ப… அந்தத் திமிர் கூட எனக்குப் பிடிக்கும்… ஆனால் இப்போ…” என்று நிறுத்தினான் விஷ்வா.
“இப்போ என்னவாம்?” எனத் தாமரை கொஞ்சம் எதிர்பார்ப்புடன் அவனைப் பார்த்தாள்.
“உண்மையச் சொல்லவா? பொய் சொல்லவா?” என விஷ்வா, அவனுக்கே உரித்தான காந்தப் புன்னகையைச் சிதறவிட்டுக் கொண்டே கேட்டான்.
“பொய் சொல்லுங்க!” என்றாள் தாமரை.
விஷ்வா புருவம் சுருக்கிப் பார்க்க… தாமரை கீழ் உதட்டைக் கடித்துக்கொண்டு, “தானா உண்மை என்னன்னு தெரிய வருமே, அதுக்காகச் சொன்னேன்,” என்றாள்.
விஷ்வா புருவம் உயர்த்தி, “உனக்காகச் சொல்லவா? என்னோட மனசுல நினைச்சதைச் சொல்லவா?” எனக் கேட்டான்.
“அதென்ன? இப்படிக்கூடக் கேள்வி இருக்கா?” என்று புரியாமல் அப்பாவி போலப் பார்த்தாள்.
“பொய் என்னன்னா நீ பேரழகு… உண்மை என்னன்னா உன்னை விட்டு என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியலை… மத்தவங்களுக்கு எப்படியோ எனக்குத் தேவையில்லை… எனக்கு நீ மட்டும்தான் அழகு பிங்கி! உன்னை நான் காபி ஷாப்ல பார்த்த அந்த நொடி, எனக்கு உன்மேல் ஃபீலிங்ஸ் (Feelings) வந்திடுச்சு,” என்று ஆசையுடன் கூறினான்.
“எனக்காக என்ன சொல்லப் போறீங்க?” என இதயம் படபடக்கக் கேட்டாள் தாமரை.
“நான் ரொம்ப நல்ல, பொறுப்பான பையன்!” என்று சிரித்தபடி அவர்கள் இடத்துக்கு வந்தான். சைட் அப்பர் (Side upper) அவனுடையது; சைட் லோயர் (Side lower) சீட் அவளுடையது… அப்படித்தான் புக் செய்திருந்தான். செகண்ட் ஏசி என்பதால் பிரத்தியேகமாகப் பிரைவஸிக்காகத் (Privacy) திரைச்சீலைகள் கொடுக்கப்பட்டிருந்தன.
“உங்க மனசுல இருக்கிறது என்ன?” என இதயம் படபடக்க, உள்ளங்கை வியர்க்கக் கேட்டாள்.
“வா, வந்து உட்காரு,” என அவளின் கையைப் பற்றி அமர வைத்தவன், திரைச்சீலையை இழுத்துவிட்டான். அந்த ஏசி காற்றில் அவளது உதடுகள் தந்தியடித்தன. கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவளைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
தாமரைக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நெளிந்தபடி, “எ… என்னாச்சு விஷ்வா? ஏன் அப்படிப் பார்த்திட்டு இருக்கீங்க?”
விஷ்வாவின் கண்களில் காதலும் மோகமும் ததும்ப, “எனக்கு என் கண்ணு முன்னாடி என்னோட வாழ்க்கை துணையானவள் தேவதையா தெரியுறா!” என்றான் காந்தச் சிரிப்புடன்.
சட்டென்று தாமரையின் முகம் ஒரு நொடி வாடிப்போனது. அவளின் முக மாற்றத்தைக் கண்டுகொண்டவன், “என்னாச்சு? நான் எதுவும் தப்பா சொல்லலையே?” என்று கேட்டான்.
“நான் உங்ககிட்ட சில விஷயங்கள் சொல்லணும்,” என்று தாமரை அவனது முகம் பார்க்க… ‘என்ன?’ என்பதைப் போலக் கேட்டான்.
“என்னோட குடும்பத்துல ஐந்து பொண்ணுங்க, ஒரு பையன். எங்க அப்பா ஒரு கட்டிட மேஸ்திரி. என்னோட தம்பி, தங்கச்சிங்க எல்லாரும் படிச்சிட்டு இருக்காங்க,” என்றவள் ஒரு நொடி நிறுத்தி, “எங்க வீட்ல ஒருவேளை சாப்பாட்டுக்குக் கூட ரொம்பக் கஷ்டம். அப்படிப்பட்ட சூழல்லதான் என்னோட படிப்பு மட்டுமே விடிவுகாலம்னு தோணுச்சு. எங்களுக்குச் சொந்த வீடு இல்லை… எனக்கு நிறைய ஆசைகள் இல்லை… நிறையக் கடமைகள் இருக்கு. நான் என்னோட குடும்பத்துக்கு நிறையச் செய்ய வேண்டியிருக்கு. என்னோட அக்காவுக்கு மட்டும்தான் கல்யாணம் ஆகியிருக்கு. வீட்டுச் சுமையை எங்க அப்பா தனியா தூக்கிட்டு இருக்கார். இப்போதான் அவருக்கு உதவியா என் தங்கச்சி ரோஜா வந்திருக்கா; அவ கவர்மெண்ட் ஸ்கூல் டீச்சர்.”
“எங்க வீட்ல ஃபர்ஸ்ட் கிராஜுவேட் (First graduate) யாருமே இல்லை… நான்தான் முதல் பட்டதாரி ஆகப்போறேன். இப்படி இருக்கிற என்னோட குடும்பச் சூழல்ல, நான் எப்… எப்படி, எந்த அடிப்படையில உங்களுக்குப் பொருத்தமா இருப்பேன் விஷ்வா?” என்று கேட்டாள்.
விஷ்வா அடுத்துப் பேச வர… தாமரை குறுக்கிட்டு, “எங்க அப்பா எனக்கு நல்ல ஒழுக்கத்தைச் சொல்லிக் கொடுத்திருக்கார். எனக்கு உங்களோட காதலைக் கொண்டாடிச் சிலாகித்து, திரும்பக் காதலிச்சுச் சுத்தற அளவுக்குத் தைரியமும் எனக்குத் துளிகூட இல்லை. நான் ஒரு கோழை! எனக்கு உங்க காதல் பிடிச்சிருக்கு; ஆனா என்னோட குடும்ப சூழ்நிலையில நான் எப்படி? இந்த உலகத்துல பணத்துக்கும் பணத்துக்கும் தான் தகுதி ஜோடி… நீங்க விஷ்வா விகாஸ் ஸ்கூலுக்கு ஓனர் (Owner); உங்க ஸ்கூலை நான் பார்த்திருக்கேன், கோவையில இருக்கு. அந்த ஸ்கூலுக்குள்ள போக முடியாமல் வெளியே நிக்கிற நான் எங்கே? அந்த ஸ்கூலுக்கே முதலாளியா இருக்கிற நீங்க எங்கே?” எனக் கண்களில் நீர் கோர்க்க… உதட்டைக் கடித்துக் கொண்டாள். “என் மனசுல இருக்கிற எல்லாத்தையும் கொட்டிட்டேன். கூடவே, என்னோட காதல் எனக்கு மட்டுமே தெரிஞ்ச மாதிரியான காதலையும் சொல்லிட்டேன்… இதுக்கு மேலே…” என நிறுத்தினாள்.
விஷ்வாவின் முகம் இறுகிப்போனது. அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.
“விஷ்… விஷ்வா! நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா?” என அவள் உடைந்துபோய்க் கேட்டாள்.
விஷ்வா தீர்க்கமான பார்வையுடன், “உனக்கு நான் வேணும்னு தோணவே இல்லையா? அதுக்கு மட்டும் பதில் சொல்லு. ஏழை, பணக்காரன் எல்லாத்தையும் தாண்டி, உனக்கு நான் வேணுமா, வேண்டாமா? உன்னோட வாழ்க்கையில எனக்கு இடம் இருக்குமா, இல்லையா? அதை மட்டும் சொல்லு. நீ உன்னோட குடும்பத்தைத் தூக்கிப் போட்டுட்டு வான்னு நான் சொல்லலையே?”
“உங்க வீட்ல இதுக்கு ஒத்துக்குவாங்களா?” எனத் தாமரை திட்டமாகக் கேட்டாள்.
விஷ்வா தீர்க்கமான பார்வையுடன், “என் அண்ணாவுக்கு என்னோட சந்தோஷம்தான் முக்கியம்; நிச்சயமா ஒத்துக்குவான்,” என்றான்.
தாமரை வாய்விட்டுச் சிரிக்க… விஷ்வா புரியாமல், “இப்போ எதுக்குச் சிரிக்கிற?” எனக் கேட்டான்.
“சினிமாவில கூட இப்படி நடக்காது; கனவிலும் நடக்காது. நிச்சயமா உங்க வீட்ல இதுக்குச் சம்மதிக்க மாட்டாங்க,” என்றாள்.
“அப்போ இதுக்கு என்னதான் தீர்வு?” என விஷ்வா கோபத்துடன் கேட்க…
“நான் என்னோட வாழ்க்கையில முதன்முதலாக மொத்த குடும்பத்துக்கிட்டயும் ஒரு விஷயத்தை மறைச்சு, பொய் சொல்லிட்டு இப்படி வந்திருக்கேன். என்னோட நெஞ்சு குத்துது விஷ்வா. என்னோட காதலுக்கு ஒரே ஒரு தீர்வு… நீங்க என்னை மறந்திடுங்க,” எனக் கண்களில் நீர் கொட்டப் பார்த்தாள்.
விஷ்வாவுக்குக் கோபம் பொங்க, “அப்புறம் எதுக்குடி போன் பண்ண?!” என்று அவனது கண்களில் கண்ணீர் தேங்கியது. “எதுக்கு எனக்கு பிலீஃப் (Believe) கொடுத்த? எதுக்கு எனக்காக வந்து வெயிட் பண்ண?!” என அவளது கையைப் பற்றி இழுத்து, நேருக்கு நேர் முகம் நோக்கி, உருகித் திணறித் தவித்தபடி அவளது முகத்தைப் பார்த்தான்.
கேவி அழுதபடி, சிவந்த விழிகளில் ஏறிட்ட தாமரை விசும்பிக்கொண்டு, “ஏன்னா, நான் உங்களைக் காதலிக்கிறேன் விஷ்வா! எனக்கு இங்கே வலிக்குது விஷ்வா. உங்க முகம் பார்த்தால் என்னால இயல்பா இருக்க முடியலை. எனக்கு வேற வழி தெரியலை விஷ்வா!! Love is killing me…” என்று முடித்தவளின் உதடுகளைக் காதலுடன் கவ்விக்கொண்டான்.
தாமரையின் உடலெங்கும் காதல் ஹார்மோன் பரவ… உடலெல்லாம் மின்சாரம் பாயவில்லை, அவன் மீதான காதல் தீ பரவியது!
* (தொடரும்…)