உறவே உயிரே

by Pradhanya kuzhali
344 views

உயிரே-7

மகேந்திரன் ஒரு கணம் திகைத்துப்போய், “என்ன?” என்று எழுந்து நின்றார்.

அன்பு பதட்டத்துடன், “டாடி, நான் ஒரு பொண்ணைப் பார்த்தேன்!” என்றான்.

மகேந்திரன் அதிர்ச்சியுடன், “என்ன அன்பு, நிஜமாவா சொல்ற?” என்று கேட்டார்.

அன்புசெல்வன் கண்களை மூடிக்கொண்டே போனில், “ஆமா டாடி! அவ மனசிலும் சரி, என் இதயத்திலும் சரி, ஏதோ பண்றா!” என்றான்.

மகேந்திரன் சந்தோஷத்தில் மிதந்தார். சொல்ல வார்த்தைகள் இல்லை. இதைத்தான் அவர் எதிர்பார்த்தார். ஆனால் அந்த மகிழ்ச்சி ஒரு கணம் தான் நீடித்தது. உடனே சுதாரித்து, “அன்பு, ஒருவேளை சவாலில் ஜெயிக்க என் கிட்ட பொய் சொல்றியா?” என்றார்.

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அன்பு, கோபக்காரனாக மாறி, “டாடி!” என்று உரக்கக் கத்தினான்.

மகேந்திரன், “சாரிடா என் செல்லம், சாரி!” என்றார்.

அன்பு கோபமாக, “அம்மா இருந்திருந்தா, நான் உங்ககிட்ட இதைச் சொல்லியிருக்கவே மாட்டேன். எனக்கு இதை யார் கிட்ட சொல்றதுன்னு தெரியல! முதல் தடவையா ஒரு முடிவெடுக்க முடியல!” என்றான்.

மகேந்திரன் வருத்தத்துடன், “சரி, அப்பாவை மன்னிச்சிடுடா!” என்றார்.

அன்பு அமைதியாக இருந்தான்.

உடனே மகேந்திரன் அவனை சமாதானப்படுத்தும் விதமாக, “சரி சொல்லு, எப்படியிருந்தாங்க… தி கிரேட் இந்திரன் குரூப்பின் வாரிசை மயக்கி சாய்த்த அந்தப் பொண்ணு! அவங்க யாரு?” என்று கேட்டார்.

அன்பு புன்னகையுடன் தலையைக் கோதியவாறு, “ரொம்ப அழகி இல்ல, ஆனா எனக்கு ரொம்ப அழகா தெரியுறா! வார்த்தை ஜாலம் பேசுறா! அதைவிட, நான் செஞ்ச விஷயத்துக்கு ‘சாரி’ கேக்குறா டாடி! அப்பவே அவளைத் தூக்கிட்டு போகத் தோணுச்சு! அப்புறம்…” என்று அவன் பேச ஆரம்பித்தான்.

மகேந்திரன் சந்தோஷத்துடன், “போதும் போதும்! இது எந்த மாதிரி விருப்பம்? தீவிரமா இருக்கிறியா, இல்ல சும்மா க்ரஷ் மாதிரிதானா?” என்று கேட்டார்.

அன்பு பூரிப்புடன், “என் பொண்ணு டாடி! அதிலேயே எல்லாம் இருக்கு! வாழ்நாள் செட்டில்மென்ட் எனக்கு அவதான்! இங்கிருந்து வந்தால், அவள் கூடத்தான் வருவேன்.” என்றான்.

மகேந்திரன் ஆவலுடன், “அப்போ கல்யாணம் பண்ணிக்கப்போறியா?” என்றார்.

“ஆமா! இந்த ஊர் எனக்கு ரொம்ப எரிச்சலா இருக்கு, அதான் வரும்போது அவளைத் தூக்கிட்டு வந்துடுவேன்!” என்றான் அன்பு.

“சரிடா கண்ணு! உன் வேலையில கவனம் செலுத்து!” என்றார் மகேந்திரன்.

அன்பு, “சரி டாடி!” என்று போனை வைக்கப் போக…

மகேந்திரன், “அன்பு, ஒரு நிமிஷம்டா!” என்றார்.

“என்ன டாடி!”

“அந்தப் பொண்ணுக்கு இதில் விருப்பமா? உன்னை அவளுக்குப் பிடிச்சிருக்கா?”

அன்பு சாதாரணமாக, “அதெல்லாம் பிடிக்கும் டாடி!” என்றான்.

மகேந்திரன், “சரிப்பா!” என்றார்.

அன்பு போனை வைத்ததும், புருவங்களை நெருக்கிக்கொண்டு, “என் உதடுகள் வளைஞ்சு சிரிக்க வைப்பேன்! என்னை அவளுக்குப் பிடிக்கணும்!” என்று தாடியைத் தடவியவாறு, அவனுக்கே உரிய தோரணையில் சொல்லிவிட்டு, காரைத் தான் தங்கி இருக்கும் வீட்டை நோக்கிச் செலுத்தினான்.

அடுத்த கட்டமாக, பேஸ்மென்ட் மற்றும் போர் போடும் வேலைகள் ஆரம்பமாயின. ஒவ்வொரு நாளும் அன்பு, செவ்வந்தியின் நர்சரி பக்கம் காரை ஓட்டிச்சென்று, அவளை ஒரு நாளைக்கு இரண்டு முறை பார்த்துவிடுவான்.

ஆனால், செவ்வந்தி அவனைப் பார்த்தும் பார்க்காததுபோல் தவிர்த்து வந்தாள்.

இப்படியே ஒரு மாதம் கடந்துவிட்டது. ஆனால் இவர்களின் கண்ணாமூச்சி ஆட்டம் மட்டும் முடிவுக்கு வரவில்லை.

அன்பு பொதுவாக வெளியே சாப்பிட மாட்டான். இங்கு வந்ததிலிருந்து வேலைப்பளு காரணமாக தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வெளியே உணவுகளைச் சாப்பிட்டதால், ஃபுட் பாய்சன் ஆகி, காய்ச்சலுடன் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

சந்தானம் எப்போதும்போல அன்புவுக்காகக் காத்திருந்தான். அவர் போனை எடுக்கவே இல்லை. நேராக அன்பு தங்கி இருக்கும் இடத்துக்குச் சென்றான்.

“சார்!” என்று காலிங் பெல்லை அடித்தான்.

காலிங் பெல் சத்தம் கேட்கவும், அன்பு சோர்வுடன் கதவைத் திறந்தான்.

சந்தானம் திடுக்கிட்டு, “என்ன ஆச்சு சார்!” என்று கேட்டான்.

“லூஸ் மோஷன் கூடவே ஃபீவர். நீ சைட் பார்த்துக்க… எனக்கு வேலை தாமதமாகக் கூடாது. சாயங்காலம் ரிப்போர்ட் பண்ணு!” என்று கரகரத்த குரலில் அன்பு கூறினான்.

சந்தானம், “இல்ல சார், இப்ப ஹாஸ்பிடல் போலாம்…” என்றான்.

“நான் சொன்னதைச் செய். இதை நான் பார்த்துக்கிறேன்,” என்று கூறிவிட்டு அன்பு உள்ளே சென்றுவிட்டான்.

நர்சரிக்கு செவ்வந்தி கிளம்பிக்கொண்டிருந்தாள். முத்தசாமி கோவில் வேலை, காட்டு வேலை என மிகவும் பிசியாக இருந்தவருக்கு இன்றுதான் வீட்டில் கொஞ்ச நேரம் இருக்கக் கிடைத்தது.

அன்பு மருத்துவமனைக்குச் செல்லத் தயாரானான். எதுக்கும் முத்தசாமியிடம் ஒரு வார்த்தை கேட்டால், நல்ல மருத்துவமனை எது என்று கூறுவார் என்று நினைத்து அழைத்தான்.

“ஹலோ!”

“ஹலோ, யாருங்க!”

“நான் அன்புசெல்வன். சோலார் காம்ப்ளக்ஸ் புராஜெக்ட்!”

முத்தசாமி சிரித்துக்கொண்டே, “தம்பி, எப்படி இருக்கீங்க!” என்றார்.

அன்பு தன் நிலைமையைச் சொன்னான்.

உடனே முத்தசாமி திடுக்கிட்டு, “அச்சோ, இப்ப எப்படி இருக்கு!” என்று கேட்டார்.

செவ்வந்தி பூ வைத்துக்கொண்டே தன் மாமா பேசுவதைக் காதில் வாங்கினாள்.

முத்தசாமி, “ஒண்ணும் பிரச்னை இல்லை தம்பி, நம்ம வீட்டில் இருந்து கொடுமுடி பக்கம் போய் பார்த்துக்கலாம்! என் பேரச் சொல்லுங்க!” என்றார்.

“சரிங்க!”

“கண்ணு, காலையில் சாப்பாடு!” என்று முத்தசாமி கேட்க…

“நான் பார்த்துக்கிறேன்!” என்றான் அன்பு.

“அட என்ன தம்பி நீங்க! வாங்க ஒரு எட்டு வந்து கஞ்சி குடிச்சிட்டுப் போங்க. வெறும் வயிறு ரொம்ப கஷ்டமா இருக்கும்!” என்றார் முத்தசாமி.

அன்பு, “எனக்கு கொஞ்சம் மெய்ட் தேவை, அரேஞ்ச் பண்ண முடியுமாங்க?” என்றான்.

முத்தசாமி, “புரியல தம்பி!” என்றார்.

செவ்வந்தி தன் மாமனுக்குத் தண்ணீர் கொடுத்தவள், “என்னங்க மாமா!” என்று கேட்டபடி கவனித்தாள்.

அன்பு போனில், “மெய்ட்… ஐ மீன்… ஒர்க் லைக்…” என்று திணறினான்.

முத்தசாமி, “கண்ணு, எதோ சொல்றாரு, என்னன்னு கேளு!” என்றார்.

செவ்வந்தி போனை வாங்கி, “ஹலோ, சொல்லுங்க!” என்றாள்.

அன்பு ஒரு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு, “மெய்ட் வேணும்!” என்றான்.

செவ்வந்தி மீண்டும் போனை மாமாவிடம் கொடுத்துவிட்டு, “மாமா, அவங்களுக்கு வேலைக்கு ஆள் வேணுமாம்!” என்றாள்.

முத்தசாமி, “ஓ! சரி தம்பி, சமைக்க நான் ஒரு பண்டாரத்தை ஏற்பாடு பண்றேன்!” என்றார்.

அன்பு, “ஆம்பளையாத்தான் வேணும், பெண்கள் வேண்டாம் சார்!” என்றான்.

முத்தசாமி சிரித்துக்கொண்டே, “சரி தம்பி, இப்ப வீட்டுக்கு வந்திட்டுதான் போகணும்! செவ்வந்தி, சுடு கஞ்சி காய்ச்சி வை கண்ணு!” என்றார்.

“என்ன ஆச்சுங்க மாமா!”

முத்தசாமி, “என்ஜினீயர் தம்பிக்கு உடம்பு சரியில்ல. ஹாஸ்பிடல் போகணும், அதுதான் வந்து கொஞ்சம் சாப்பிட்டுட்டுப் போகச் சொல்லி இருக்கேன்! அத்தை எங்கடா கண்ணு!”

“அத்தை தேங்காய் மட்டை வாங்குற இடத்துல இருக்காங்க மாமா!” என்று வேகமாக உள்ளே ஓடினாள். மனம் ஏனோ சங்கடமாகிவிட்டது. இரண்டு நாட்களாக அவளைப் பார்க்க வரவே இல்லை.

செவ்வந்திக்கு அப்போதே சென்று பார்க்கத் தோன்றியது. ஆனால் அது சரியில்லை என்று மனதுக்குத் தோன்றியது. வேகமாக இட்லிக்கு மாவு எடுத்து அடை ஊற்றினாள். இளம் தேங்காயாகப் பார்த்து அதில் பால் எடுத்து, ஏலக்காய் போட்டு தாளித்துவிட்டு, இன்னொரு கடாயில் அரிசி வறுத்து கஞ்சி தயார் செய்தாள். கடலையில் ஒரு பல் பூண்டு, கறிவேப்பிலை வைத்து, உப்பு சேர்த்து துவையல் செய்தாள்.

அவளுக்குப் பறப்பதுபோல் இருந்தது. ‘எப்பொழுது கண்ணில் படுவான்?’ என்று இருந்தது. இதோ வந்துவிட்டான். முத்தசாமி கொல்லைப்புறத்தில் இருக்க, வேகமாக, “மாமா, அவங்க வந்துட்டாங்க!” என்றாள்.

முத்தசாமி, “என்ன பழக்கம் கண்ணு! உள்ளே கூப்பிட்டு உட்கார வை! வா கண்ணு!” என செவ்வந்தியிடம் கூற, அவள் “வாங்க மாமா!” என அன்பை கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.

முத்தசாமி, “கண்ணு வாங்க! அங்கேயே நின்னுடாதீங்க, தயக்கம் வேண்டாம்!” என்றார்.

செவ்வந்தி காய்ச்சிய வெந்நீரை அவனிடம் நீட்டினாள்.

அன்பு வாங்காமல் அப்படியே இருக்க…

செவ்வந்தி, “இது ஆத்து தண்ணி இல்லைங்க, நீங்க குடிக்கும் RO வாட்டர் தான்!” என்றாள்.

முத்தசாமி சிரித்துக்கொண்டே, “கண்ணு, நீ கஞ்சி சூடா எடுத்து வா!” என்றார்.

அன்பு, “வேண்டாம் சார், நான் ரொம்ப சிரமம் கொடுக்கிற மாதிரி இருக்கு!” என்றான்.

முத்தசாமி, “அப்படிச் சொல்லக் கூடாது. நீங்க எங்க விருந்தாளி. உங்களை உபசரிப்பது எங்க கடமை!” என்று சொன்னவருக்குத் தென்னைத் தோப்பிலிருந்து போன் வந்தது.

“பொண்ணு!” என்று அவர் அழைக்க…

“மாமா!” என்று செவ்வந்தி பார்த்தாள்.

“நீ அவரை கவனி மா! தம்பி, இதோ வரேன்!” என்று சொல்லிக்கொண்டே அவர் பின் பக்கம் சென்றார்.

செவ்வந்தி அவனை அழைத்து, “வாங்க சாப்பிடுங்க!” என்றாள்.

“நோ தேங்க்ஸ் மேடம். அவங்ககிட்ட சொல்லிடுங்க, நான் கிளம்புறேன்.” என்றான் அன்பு.

செவ்வந்தி, “காய்ச்சல் அடிக்குது, கண்ணு எல்லாம் கிறங்கி கிடக்கு. கீழே விழுந்துடப் போறீங்க! வாங்க!” என்றாள்.

அன்பு அவளைக் கண்டுகொள்ளாமல் வெளியே சென்றுவிட்டான்.

“என்ன ஆச்சு இவருக்கு?” என செவ்வந்தி வேகமாக அனைத்தையும் பேக் செய்தாள்.

அன்பு காரை எடுத்துக்கொண்டு கிளம்பத் தயாரானான்.

செவ்வந்தி அனைத்தையும் பேக் செய்தவள் வெளியே வர, அதற்குள் அவன் கிளம்பி இருந்தான்.

முத்தசாமி உள்ளே வர, “எங்கே கண்ணு!” என்றார்.

செவ்வந்தி, “அவருக்கு போன் வந்தது… அதனால கிளம்பிப் போய்ட்டாருங்க மாமா!” என்றாள்.

“சரி கண்ணு, நான் பேசிக்கிறேன்,” என போனை வைத்துவிட்டு, அவர் குளிக்கச் சென்றுவிட்டார்.

செவ்வந்தி முத்தசாமியின் போனை எடுத்தவள், அதில் இருந்து அன்புசெல்வனின் எண்ணைத் தனது போனில் ‘இந்திரன்’ எனப் பதிவு செய்துகொண்டாள்.

அன்பு மருத்துவமனைக்குச் சென்று டாக்டரைப் பார்த்துவிட்டு மாத்திரைகள் மட்டும் வாங்கிக்கொண்டான். வெளி உணவுகளைத் தவிர்த்துவிடும்படி டாக்டர் கூறி அனுப்பினார்.

அதன்பின் அன்பு காரில் வந்துகொண்டிருக்க, புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

அன்பு புன்னகை சிந்தி கொண்டே போனை காதில் வைத்து, “மேடம்! உங்களுக்கு என்ன வேணும்? என்னால் உங்களுக்குத் தொந்தரவு வேண்டாம்!” என்றான்.

செவ்வந்தி வாயடைத்து, “நான் செவ்… செவ்வந்தி பேசுகிறேன்!” என்றாள்.

“தெரியும்! அதுதான் தெரியுமே! உங்க வேலையை நீங்க பாருங்க!” என வைத்துவிட்டு, “அவ்ளோதான் செவ்வந்தி பேபி என் கிட்ட ஃப்ளாட் ஆகிவிட்டாள்!” எனப் புன்னகையுடன் காரை ஓட்டினான்.

செவ்வந்தி…?

(எனக்கு ஒரே குழப்பமா இருக்கே! என மகேந்திரன் மனதுக்குள் நினைக்க… எனக்கும் அப்படித்தான் இருக்கு. நிஜமாவே அன்பு, செவ்வந்தியை விரும்புறானா? பார்ப்போம்!)

தொடரும்..

You may also like

Leave a Comment