உயிரே-15
ஜெஸி தூங்கி முழிச்சு எழுந்தப்போ, அவளைச் சுத்தி யாருமே இல்லை. தலை பாரமா இருந்துச்சு. தலையைப் பிடிச்சுக்கிட்டே மெதுவா வெளியே வந்தா. தொண்டை வறண்டு போயிருந்தது. தன்னோட ரூமை ஒரு நோட்டம் விட்டா.
‘அய்யோ! இப்ப அந்த வீட்டுக்குப் போய் தண்ணி கேட்கணுமா? எல்லாம் இந்த அன்பு இருக்கானே, அவனால வந்ததுதான். நானா இருந்தா ஈரோட்டுலயே நிம்மதியா தங்கி இருப்பேன். என்னை இங்க கொண்டு வந்து அனாதையா விட்டுட்டு அவன் பாட்டுக்கு போயிட்டான்… இடியட்!’ மனசுக்குள்ளேயே அவனைத் திட்டிக்கிட்டே மாடிப்படி இறங்கி கீழே வந்தா.
அந்த வீட்டு வாசல்ல நிக்கிறதுக்கு ரொம்பவே தயக்கமா இருந்துச்சு. ஒரு ஆழமான பெருமூச்சை இழுத்து விட்டுக்கிட்டு உள்ளே போனா. “சுதா மா!”ன்னு வீடு முழுக்க கேட்குற மாதிரி கூப்பிட்டா.
“யாரது?” என்ற குரல் பெரிய சாமி அறையில் இருந்து வந்தது. பெரியசாமி வெளியே வந்தார்.
“அது… சுதா மா இல்லையா அங்கிள்? நான் அதோ அந்தத் தெக்கு பக்கம் இருக்கிற வீட்டுல தங்கியிருக்கேன். இந்த சோலார் பிளான்ட் புராஜக்ட் நடக்குதே, அதுல நான் தான் இன்ஜினியர்!”னு ரொம்பப் பொறுமையா தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டா.
பெரியசாமி அவளைப் பார்த்து பிரகாசமா சிரிச்சார். “ஓ… தெக்க வீட்டுல நீங்கதான் தங்கியிருக்கீங்களா கண்ணு! வாங்க வாங்க, உள்ளே வாங்க. என்ன வேணும்? சுதா சொல்லுச்சு. நான் சுதாவோட அண்ணன். சுதாவும் மச்சானும் கொஞ்சம் வெளியே போயிருக்காங்க!”
“அங்கிள், எனக்கு கொஞ்சம் தண்ணி வேணும், தாகமா இருக்கு!”
“அடடா! நான் ஒரு மடையன் கண்ணு! வா வா உள்ளே வா!”ன்னு அக்கறையா கூப்பிட்டு, “அதோ அந்தப் பக்கம் மிஷின் இருக்கு,”ன்னு கூட்டிட்டுப் போனார். ஜெஸி ஒரு பாட்டில்ல தண்ணியை நிரப்பிக்கிட்டு, மடக் மடக்குன்னு கொஞ்சம் குடிச்சா.
“கண்ணு நீ போய் உக்காரு, உனக்கு டீ போட்டு எடுத்துட்டு வரவா?”ன்னு பெரியசாமி கேட்டார்.
“No அங்கிள், எனக்கு டீ, காபி குடிக்கிற பழக்கம் இல்லை.”
“என்ன கண்ணு இப்படி சொல்ற? சரி, அப்ப கொஞ்ச நேரம் உக்காரு. வேற என்ன சாப்பிடுவ? என் பொண்ணு வெளியே போயிருக்கா, இல்லன்னா அவ உனக்கு எல்லாமே செஞ்சு தந்திருப்பா. எதுவும் சாப்பிடாம இருக்காத கண்ணு,”ன்னு பரிவா சொல்லிக்கிட்டே வந்தார்.
“அங்கிள், அப்படின்னா ஒரு பிளாக் காபி மட்டும் வேணும். நானே போட்டுக்கவா?”
“பிளாக் காபியா… அது நம்ம வரக் காபிதானே?”
ஜெஸி சிரிச்சுக்கிட்டே, “ஆமா அங்கிள். எனக்கு லைட்டா தலை வலிக்குது. இங்க பக்கத்துல ஹாஸ்பிடல் எங்க இருக்கு? வண்டி ஏதாவது கிடைக்குமா? போயிட்டு வரணும். ரொம்ப டிப்ரஸ்டா இருக்கு.”
“அடப் பொண்ணு! இதுக்கு எதுக்கு வெளியே போகணும்? நான் உனக்கு இஞ்சி தட்டி ஒரு வரக் காபி போட்டுத் தரேன் பாரு. அதைக் குடிச்சா எல்லாம் பறந்து போயிடும்!”னு சொல்லிக்கிட்டே சமையலறைக்குள்ள போனார்.
“இல்ல அங்கிள், எனக்கு இன்னைக்கு நாளே சரியில்ல. பயங்கர டென்ஷனா இருக்கு, அதான்,”னு ஜெஸி சலிப்பா சொன்னா.
ஒரு சில நிமிஷத்துல, ரெண்டு கப் காபியோட பெரியசாமி வெளியே வந்தார். “என்னம்மா ஆச்சு? வேலையில எதுவும் பிரச்சனையா? இங்கே எல்லாமே நம்ம ஆளுங்கதான். நீ யாருன்னு மட்டும் சொல்லு, அவங்களை என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும்!”
ஜெஸி ஒரு பெரிய பெருமூச்சை விட்டு, அவருக்கிட்ட மனசு விட்டுப் பேச ஆரம்பிச்சா. “என் அப்பா கூடப் பிரச்சனை அங்கிள்.”
“என்னம்மா சொல்ற? அப்பாவா?”
அவ காபியை ஒரு மிடறு குடிச்சுக்கிட்டே, “அது பெரிய கதை அங்கிள்,”னு சொன்னா.
“என்ன விஷயமா இருந்தாலும் சொல்லு கண்ணு. நான் உன் அப்பாகிட்ட பேசுறேன்.”
ஜெஸி இன்னொரு பெருமூச்சை விட்டு, சசியோட வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்புன விஷயத்தை, அவன் பேரைச் சொல்லாம, தனக்கு நியாயம் இருக்கிற மாதிரி விவரிச்சு சொன்னா.
இதைக் கேட்டதும் பெரியசாமிக்கு கோபம் வந்துருச்சு. “இப்போ இருக்கிற பசங்களுக்கு திமிர் ரொம்ப அதிகமாயிடுச்சு கண்ணு! நான் கூட இதே மாதிரி ஒருத்தனைப் பார்த்தேன். ஒரு தடவையா, ரெண்டு தடவையா… என்கிட்டயே வம்படியா சண்டைக்கு நிக்கிறான்,”னு அன்பு செல்வன்கூட நடந்த ரெண்டு சந்திப்புகளையும் கோபமா சொல்லிக்கிட்டு இருந்தார்.
ஜெஸி திடுக்கிட்டுப் போனா. “அங்கிள்! அதே மாதிரி ஒரு ராஸ்கல்தான் என்கிட்டயே ரெண்டாவது தடவையா பிரச்சனை பண்ணான். நான் வேலை விஷயமா கரூர்ல இருந்து வந்துட்டு இருந்தேன். அப்போ வேணும்னே என் கார் மேல மோதி டேமேஜ் பண்ணிட்டான். இறங்கிப் பார்த்தா, அன்னைக்கு பணப் பிரச்சனையில என்கிட்ட வம்பு பண்ண அதே ரவுடிதான்!”னு சசியோட நடந்த ரெண்டாவது சந்திப்பையும் சொன்னா.
பெரியசாமி ஆச்சரியமா, “எனக்கும் இதே மாதிரிதான் கண்ணு ஆச்சு,”ன்னு அன்பு செல்வன் கார்ல அவர் மோதிய கதையைச் சொன்னார்.
ஜெஸி கையிலிருந்த டீயை எடுத்து, “இவனுங்க எல்லாம் இதுக்குன்னே கிளம்பி வர்றானுங்க அங்கிள். என்ன பண்றது? ஆனா நான் அவனைச் சும்மா விட மாட்டேன்,”னு சொல்லிக்கிட்டே அந்த வரக் காபியை, அன்னிக்கு அன்பு செல்வன் முன்னாடி குடிச்ச மாதிரியே ஒரே மூச்சுல குடிச்சு முடிச்சா.
‘பெரிய குடிகாரியா இருப்பா போல! இந்த டீயை இப்படி ஒரே மடக்குல அடிக்கிறா!’ன்னு இதை வாசல்ல இருந்து பார்த்துக்கிட்டு நின்னான் சசி. அவன் பின்னாடியே செவ்வந்தியும் ஜெஸ்ஸியைத்தான் பார்த்தா. ‘என்ன இவ? அச்சு அசலா அண்ணன் குடிச்ச மாதிரியே குடிக்கிறா!’ன்னு ரெண்டு பேரும் திகைச்சுப் போய் நின்னாங்க.
“ஹேய் கம்முன்னு இரு டி! உன் அக்காவும் அண்ணனும் நிக்கிறாங்க பாரு. கொஞ்சம் கொஞ்சினா பத்தாதா? வந்து கம் மாதிரி ஒட்டிக்குவ!”ன்னு அருண் சொல்ல, “டேய் மாமா!”ன்னு சத்யா அவன் சட்டையைப் பிடிச்சு இழுத்தா.
“செவ்வந்தி! என்ன வெளியவே நிக்கிற? உள்ள வா,”ன்னு பெரியசாமி வாசல் பக்கம் பார்த்து குரல் கொடுத்தார்.
“அங்கிள், இவங்க?”னு ஜெஸி தயக்கமா கேட்டா.
பெரியசாமி சிரிச்சுக்கிட்டே, “கண்ணு, இவ தான் என்னோட ஒரே மகள். பேரு செவ்வந்தி.”
உடனே ஜெஸி எழுந்து நின்னா. செவ்வந்தியோட பார்வை ஜெஸ்ஸியை மேலும் கீழுமா அளவெடுத்துச்சு.
“டேய் சசி! இங்க உள்ள வாடா!”
“சொல்லுங்க பெரியப்பா,”ன்னு வார்த்தைகளை அழுத்தியபடி உள்ளே வந்து நின்னான்.
அவன் பின்னாடியே அருணும் சத்யாவும் வந்தாங்க. சத்யா நேரா செவ்வந்தி பக்கத்துல போய் நின்னுக்கிட்டா.
“போடி போய் டிரெஸ்ஸ மாத்து! தொப்புள் எல்லாம் தெரியுது. அப்படி உள்நீச்சல் கேட்குதா மேடம்க்கு!”னு செவ்வந்தி மிரட்டினாள்.
சசி முறைச்சுப் பார்க்கவும், சத்யா தன் அண்ணன் பார்வையில பயந்துபோய், “பெரியப்பா…”ன்னு சிணுங்கினாள்.
“என்னடா சசி, குழந்தையை மிரட்டுறியா? வெளுத்துடுவேன் ராஸ்கல்!”னு பெரியசாமி செல்லமா அதட்டினார்.
சத்யா சிரிச்சுக்கிட்டே, “பார்த்தியா அண்ணா! பெரியப்பாகிட்ட நான் சொல்லிடுவேன்,”னு சொல்லிக்கிட்டே உள்ளே ஓடினாள்.
“நானும் பிரெஷ் ஆகிட்டு வர்றேன்,”னு நைசா நழுவினான் அருண்.
ஜெஸி மட்டும் அங்கே தனியா நின்னுட்டு இருந்தா.
பெரியசாமி ஜெஸி பக்கம் திரும்பி, “கண்ணு, உன்னை யாரோ பிரச்சனை பண்ணதா சொன்னியே! இங்க எந்தப் பிரச்சனையும் வராது, ஏன்னா என் தம்பி பையன் இருக்கான். நீ யாருன்னு மட்டும் சொல்லு. அந்த ஆள் இங்கதான் சுத்திட்டு இருக்கானா? வயசு என்ன இருக்கும்? கரூர் மார்க்கமா வந்தான்னு சொன்னதானே… இவனும் கரூர் மார்க்கம்தான் போயிட்டு வர்றான்,”னு சொல்லிக்கிட்டே சசியைப் பார்த்தார்.
ஜெஸிக்கு தூக்கிவாரிப் போட்டது. ‘அச்சச்சோ! இது தெரியாம அவனைப் பத்தி எல்லாத்தையும் இவர்கிட்ட சொல்லிட்டோமே! பரவால்ல, நான் யாருன்னு அவனுக்கு இப்ப தெரியும். இனிமேலாவது நம்மகிட்ட வாலாட்டாம இருப்பான். நான் யாரு? சும்மாவா? அவன் ஏதாவது ஓவரா செஞ்சா, அன்பு கிட்ட சொல்லி இவனோட கையையும் காலையும் உடைச்சுப் போடச் சொல்ல வேண்டியதுதான்!’னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டா.
“சசி!”
“என்ன பெரியப்பா சொல்றீங்க? என்ன விஷயம்?”னு எதுவுமே தெரியாத மாதிரி கேட்டான் சசி.
உடனே பெரியசாமி, ஜெஸி சொன்னதை எல்லாம் ஒண்ணு விடாம அப்படியே ஒப்பிக்க, அவளோ, அங்க நடக்குறதுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத மாதிரி கைகளைக் கட்டிக்கிட்டு நின்னுட்டு இருந்தா.
சசி பற்களை நறநறன்னு கடிச்சுக்கிட்டே ஜெஸ்ஸியை முறைச்சான்.
“என்னடா சசி?”ன்னு பெரியசாமி கேட்க, “ஒண்ணுமில்ல பெரியப்பா. அது எப்படி நீங்க எல்லா தப்பும் அந்தப் பையன் மேல இருக்கிற மாதிரி சொல்றீங்க? அங்க என்ன நடந்திருக்கும்னு நமக்கு என்ன தெரியும்? காதுல கேட்கிறதெல்லாம் உண்மையில்ல பெரியப்பா!”னு சசி பதிலுக்குப் பேசினான்.
“அங்கிள், நான் கிளம்பட்டுமா?”னு ஜெஸி அந்த இடத்தை விட்டு நகரப் பார்த்தா.
பெரியசாமி செவ்வந்தியைப் பார்த்து, “என்ன பொண்ணு இன்னும் நின்னுட்டு இருக்க? நம்ம வீட்டுக்கு வந்த விருந்தாளியை இப்படித்தான் நடத்துவியா? அவங்க உடம்புக்கு முடியலன்னு முகம் சொல்லுது பாரு. அவ்வளவு டென்ஷன் பண்ணி வச்சிருக்காங்க. தலைவலிக்குதுன்னு இந்தப் பக்கம் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போகணும்னு சொன்னாங்க. நான்தான் வரக் காபி போட்டுக் கொடுத்தேன்.”
‘எங்க பெரியப்பா இவளுக்கு டீ போட்டுக் கொடுக்கணுமா?’ன்னு சசி மனசுக்குள்ளேயே திட்டிக்கிட்டு ஜெஸ்ஸியை முறைச்சான்.
செவ்வந்தி ஜெஸி பக்கத்துல போய், “உங்களுக்கு என்ன வேணும்? என்ன சாப்பிடுறீங்க?”ன்னு கேட்டா.
“என்ன பழக்கம் கண்ணு இது! வீட்டுக்கு வந்தவங்ககிட்ட என்ன வேணும்னு கேட்கக் கூடாது. எல்லாத்தையும் செஞ்சு கொண்டு வந்து வைக்கணும்,”னு பெரியசாமி செவ்வந்தியை அதட்டினார்.
செவ்வந்தி ஆச்சரியமா தன் அப்பாவைப் பார்த்தா.
“என்ன பெரியப்பா நம்ம பாப்பாவைத் திட்டுறீங்க? வீட்டுக்கு வந்தவங்ககிட்ட என்ன வேணும்னுதான் கேட்க முடியும். எல்லாத்தையும் எப்படி செஞ்சு கொண்டு வந்து வைக்க முடியும்? என் தங்கச்சி இங்க யாருக்கும் வேலைக்காரி இல்லை. அவளுக்கு எல்லாமே செஞ்சு கொடுக்க நாங்க இருக்கோம்,”னு சசி தங்கச்சிக்காகப் பேசினான்.
“நான் யாருக்கும் சிரமம் தர விரும்பல அங்கிள்,”னு ஜெஸி நகரப் போனா.
“கண்ணு, எந்திரிச்சிட்டியா? இப்போ உடம்பு எப்படி இருக்கு? தம்பி சொல்லிட்டுப் போச்சு,”ன்னு சுதாவும் முத்துச்சாமியும் உள்ளே நுழைஞ்சாங்க. செவ்வந்தி சமைக்க உள்ளே போக, பெரியசாமி, “இப்ப பாப்பா பரவாயில்ல, உக்காருமா,”ன்னு அவங்களை அமரச் சொன்னார்.
“நான் வீட்டுக்குப் போறேன், அப்புறமா வர்றேன்,”னு ஜெஸி சொல்ல, சசி அவளை முறைச்சுக்கிட்டே இருந்தான்.
“சசி!”ன்னு முத்துச்சாமி கூப்பிட, “மாமா, சொல்லுங்க,”ன்னு திரும்பிப் பார்த்தான்.
“பூஜைக்கு அப்புறம் பத்து நாளைக்கு தினமும் பூஜை பண்ணணும். அப்புறம் கடைகளுக்கெல்லாம் சொல்லணும். மாவிளக்கு, முளைப்பாரி எல்லாம் போடறதுக்கு நோட்டீஸ் அடிக்கணும் சசி. இந்த அருணுக்கு கொஞ்சம் கூட வேலை ஓடாது. அதனாலதான் உன்கிட்ட இதைப் பத்திப் பேசலாம்னு நினைச்சேன்.”
“அது ஒண்ணும் பிரச்சனை இல்லீங்க மாமா. எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். போன வருஷம் தேருக்கு அடிச்ச பிளக்ஸ் விவரம் எல்லாம் என்கிட்ட இருக்கு. கொண்டு வரட்டுமா?”
“சரி கண்ணு, கொண்டு வா,”ன்னு முத்துச்சாமி சொன்னார்.
சுதா ஜெஸ்ஸியோட கையைப் பிடிச்சுக்கிட்டு, “சரிம்மா, இங்கேயே இரு. மூஞ்சி ஒரு மாதிரியா இருக்கு. புள்ளைக்கு என்ன ஆச்சு?”ன்னு விசாரிச்சாங்க.
“சரி விடு சுதா, பாப்பா ரெஸ்ட் எடுக்கட்டும். நீ போ கண்ணு,”ன்னு பெரியசாமி ஜெஸியை அனுப்பி வைச்சார்.
சசி எல்லா விவரத்தையும் எடுத்துட்டு வந்து முத்துச்சாமியிடம் கொடுத்தான். அவர் எல்லாத்தையும் பார்த்துட்டு, அடிக்க வேண்டிய பிளக்ஸ், நிகழ்ச்சி நிரல் எல்லாத்தையும் தயார் செஞ்சு, “இதை பெரிய மனுஷங்ககிட்ட எல்லாம் பேசி கொடுத்துடலாமா?”ன்னு சசிகிட்டயும் பெரியசாமிகிட்டயும் கேட்டார்.
“கொடுத்துடலாம்,”னு ரெண்டு பேரும் சொன்னாங்க.
அதுக்கப்புறம் பெரியசாமியும் சசியும் கோவில் வேலை சம்பந்தமா, தங்களோட பெட்ரோல் பங்க், தேங்காய் மண்டி, தோப்பு, செக்கு எண்ணெய் குடோன் பத்தின விளம்பரம் கொடுக்கறதுக்கான விவரங்களை எடுக்க சசி போனான். பெரியசாமி பெட்ரோல் பங்க் கலெக்ஷனை சரிபார்க்க கிளம்பிட்டார்.
இப்போ சுதாவும் செவ்வந்தியும் சமையல் அறையில இருந்தாங்க. கொஞ்ச நேரத்துல சத்யாவும் வந்து அவங்க கூட ஒட்டிக்கிட்டு சமையல் செய்ய ஆரம்பிச்சா.
அருண் மட்டும் தனியா உக்காந்து, ஆத்தங்கரையில நடந்ததை யோசிச்சுட்டு இருந்தான். ‘எதுக்குடா இப்படி மந்திரிச்சு விட்ட மாதிரி உக்காந்துட்டு இருக்க? நீ இப்படி மூஞ்சியை வச்சுக்கிட்டு இருந்தாலே காட்டிக் கொடுத்துடுமே! இனிமேல் அந்த சத்யா இருக்கிற பக்கமே போகக் கூடாதுடா!’ன்னு அவன் மனசு அவனையே திட்டிக்கிட்டு இருந்துச்சு. சத்யா உள்நீச்சல் அடிக்கிறேன்னு சொல்லி அவனை இழுத்துட்டுப் போய் ரொம்ப நேரம் முத்தம் கொடுத்துக்கிட்டே இருந்தது அவன் நினைவுக்கு வந்தது.
சத்யா சமையல் வேலையை முடிச்சுட்டு, சாப்பாட்டை எடுத்து டைனிங் டேபிளுக்கு கொண்டு வந்து வைக்க, அங்கே அருண் உக்காந்திருந்தான். அவனைப் பார்த்ததும், “மாமா,”ன்னு கண்ணடிச்சா.
“ஹேய், உன்னைக் கொன்னுடுவேன் டி!”னு சொல்லிக்கிட்டே அருண் வேகமா வெளியே போனான்.
சரியா அந்த நேரத்துல அன்பு செல்வன் கார்ல வந்து இறங்கினான். அவன் நேரா ஜெஸியைப் பார்க்கத்தான் போனான். அருண் வெளியிலேயே உக்காந்து இயற்கை காட்சிகளைப் பார்த்துட்டு இருந்தான்.
கொஞ்ச நேரத்துல அன்பு வெளியே வர, ஜெஸியும் கூடவே வந்தா. அவனை வழியனுப்பி வச்சுட்டுத் திரும்பவும், அவ வீட்டுல இருந்து போன் வந்துச்சு. அவ அப்பா ‘மரியார்’தான் கால் பண்ணியிருந்தார்.
“இப்போ எதுக்கு போன் பண்ணீங்க?”ன்னு அவ கத்த ஆரம்பிச்சா.
‘இதுக்கு மேல இங்க நின்னா நல்லதுக்கு இல்ல. அவங்க குடும்ப விஷயத்தைப் பத்திப் பேசுறாங்க போல,’ன்னு நினைச்சு அருண் வேகமா வீட்டுக்குள்ள போயிட்டான்.
“அருணு, பாப்பாவைக் கூட்டிட்டு வா,”ன்னு சுதா சொன்னாங்க.
உடனே அருண், “அத்தை, அவங்க வெளிய நின்னு போன் பேசிட்டு இருக்காங்க. அவங்களே வருவாங்க. கொஞ்ச நேரம் கழிச்சுப் போய்க் கூப்பிடலாம்,”னு சொல்லி சமாளிச்சான்.
அந்த நேரம், எல்லா வேலையையும் முடிச்சுட்டு சசி வரவும், அவ போன் பேசி முடிச்சுட்டுத் திரும்பவும் சரியா இருந்துச்சு. சசி அவளை அங்கே எதிர்பார்க்காம ஒரு பார்வை மட்டும் பார்த்துட்டு நேரா உள்ளே போகப் பார்த்தான்.
“நில்லுடா,”ன்னு ஜெஸி அதிகாரமா கூப்பிட்டா.
சசி திரும்பி, “என்ன ‘டா’ வா? ஒழுங்கா மரியாதையா கூப்பிடத் தெரியாதா டி உனக்கு?”னு அதட்டினான்.
“உனக்கெல்லாம் என்னடா மரியாதை? நான் இங்க நின்னு பேசிட்டு இருந்ததை ஒட்டுக் கேட்டுட்டுதானே நின்ன?”
“இது என்னடா கொடுமையா இருக்கு? நான் இப்பதான் வெளிய இருந்து வர்றேன். நீ எப்போ டி என்னைப் பார்த்த?”
“நடிக்காதடா!”
“உன்கிட்ட எதுக்கு டி நான் நடிக்கணும்? நீ எப்பேர்ப்பட்ட தில்லாலங்கடி, எவ்வளவு பெரிய பிராடுன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்! பாவம், உன்கிட்ட போன் பேசினவங்க நல்லா மாட்டிக்கிட்டாங்க. உன் கூட யாருமே இருக்க மாட்டாங்களே! எப்படி இருக்க முடியும்? இந்த மாதிரி ஒரு வாயை வச்சுக்கிட்டு இருந்தா உன் கூட எவனும் இருக்க மாட்டான்!”
அதை கேட்டதும் அவளுக்கு கோபமும் அழுகையும் ஒண்ணா சேர்ந்து வந்துச்சு. அதை அடக்கிக்கிட்டு அடுத்த வார்த்தை பேசறதுக்குள்ள, “கண்ணு,”ன்னு சுதா வெளியே வந்தாங்க.
ஜெஸ்ஸியோட முகம் உடனே இயல்பு நிலைக்கு மாறிடுச்சு.
சசி சட்டென குரலை மாற்றி, “வாங்க மேடம், உங்களை சாப்பிடறதுக்கு அத்தை கூப்பிடுறாங்க,”ன்னு சமாளிச்சான்.
“நானும் அதான் சொல்ல வந்தேன், வாங்க,”ன்னு சுதா கூப்பிட, சசி மெதுவா, “போடி போய் கொட்டிக்க,”ன்னு அவ காதுல மட்டும் கேட்குற மாதிரி மிரட்டினான்.
‘உன்னை என்ன செய்றேன் பாருடா,’ன்னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டே ஜெஸி சுதாவின் பின்னாடி போனா.
இங்கே அடுத்த காட்சி, பெரியசாமி மற்றும் அன்பு செல்வன் மோதல்…
தொடரும்…
do like and share pradhanyakuzhalinovels