Devil dessert பொண்டாட்டி 1

by Pradhanya kuzhali
682 views

Episode -1 

அந்த பிரம்மாண்டமான மணமேடையில் இரண்டு திருமணங்களுக்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தது. மீனாட்சி ஸ்வீட்ஸ் உரிமையாளர் சவுந்தர பாண்டியன் குடும்பத்தில் இருந்து, பிரபல ஜவுளிக்கடை ராமலிங்கம் குடும்பத்தில் இருந்து ஒரு மருமகள்; அதாவது, கொண்டான் கொடுத்தான் போல பெண் எடுத்து பெண் கொடுக்கிறார்கள்.

குருக்கள் மந்திரம் சொல்லிக் கொண்டிருக்க, ஒரு பக்கம் முத்து பாண்டியன். பார்த்தாலே தெரியும் Anti-hero நாயகன் என்று.  மது போதையில் கண்ணாடியை மூக்குக்குத் தள்ளியவாறு நெருப்பையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். பட்டு வேஷ்டி சட்டையில் அத்தனை கம்பீரமாக இருந்தான், தோற்றத்திலும் சரி, தொழிலிலும் சரி. வாத்தியார் ஆயிற்றே? அப்புறம் ஏன் மது போதை? “ஒருவேளை பேச்சுலர் பார்ட்டியாக இருக்குமா?” என்று கேட்டால், நமது வாத்திக்கு நண்பன் என்று எவனும் இல்லை. வியர்த்து கொட்டியது அவனுக்கு; கண்கள் சொருக, கண்ணில் கொஞ்சம் தெளிவைக் காட்டியபடி அமர்ந்திருந்தான்.

இன்னொரு பக்கம் ராமலிங்கத்தின் மகன் நகுலன், நல்ல வாட்டசாட்டமாகப் பார்க்கவே அத்தனை அழகாக, அம்மாஞ்சி முகமாக இருந்தான்; சினிமாவில் காட்டப்படும் NRI மாப்பிள்ளையைப் போல…

“என்ன, மாப்பிள்ளை வர்ணிப்பு படு ஜோராக இருக்கிறது? Where is பாயசம்? பாயசம் எங்கேடா?” எனக் கேட்பதைப் போல, “பெண் எங்கேடா?” எனக் கேட்டால்… இதோ ஒரு அறையில் ராமலிங்கத்தின் மகள் மதுமிதா தயாராகிக் கொண்டிருக்க, சவுந்தர பாண்டியனின் மகள் மீனாட்சி. நம் லட்டுநாயகி, லட்டு குட்டி—அவர்கள் வீட்டில் இருக்கும் அனைவரின் வாயிலும் பூந்தி கொடுத்துவிட்டு கம்பி நீட்டிவிட்டாள்!

பட்டுப் புடவை, ஹீல்ஸ். கூந்தல் கொஞ்சம் சிதறி இருந்தது. முகம் வியர்வையால் பளபளத்தது. கண்கள் பெரிதாக இருந்தன; பயம் தெரிந்தது. உதடுகள் உலர்ந்திருந்தன. அழகாக இருந்தாள், ஆனால் அழகு பற்றி யோசிக்கும் நிலையில் இல்லை. ஆம், அவளின் காதலன் அசோக் என்பவனைக் கரம் பிடிக்க, ஹீல்ஸ் செருப்பில் பட்டுப் புடவையுடன் ஓடிக் கொண்டிருந்தாள்.

“மீனு, வந்திட்டியா? காந்திபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு பின்னாடிதான் நான் இருக்கிறேன். இதோ கொஞ்ச நேரத்தில் வந்துடுறேன், உடனே மருதமலை கோவிலில் கல்யாணம் பண்ணிக்கலாம்டி என் மீனு குட்டி!” என அசோக் கூறிட, மீனாட்சி மூச்சு வாங்கியபடி, “சீக்கிரம் வாங்க அசோக், உடனே ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்!” எனக் கூறிக்கொண்டே ஆட்டோவில் ஏறினாள்.

“அண்ணா, காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் போங்க உடனே!” என வழியும் வியர்வையைத் துடைத்தபடி, அவள் போனில் நேரத்தைப் பார்த்து, “அசோக், நான் ஆட்டோவுல ஏறிட்டேன், சீக்கிரம் வந்திடு!” என அவள் மூச்சு வாங்கப் பேச… “எந்த ஊருக்குப் போறீங்க அம்மணி? போகும்போது எங்கே போறீங்கன்னு கேட்கக் கூடாதுங்க, ஆனாலும் கேட்கறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க,” என்றார் ஓட்டுநர். அந்த ஆட்டோவின் பின்பக்கத்தில், ‘லட்டுன்னா அது மீனாட்சி ஸ்வீட்ஸ்தாங்க… கோவையின் அடையாளம் மீனாட்சி ஸ்வீட்ஸ்’ பேனர் மின்னி்க் கொண்டிருந்தது.

“என்னங்க, மீனாட்சி ரூமில் இல்ல… எப்படி இங்கிருந்து போனாள்ன்னே தெரியல,” என கைகளைப் பிசைந்தபடி வீரலட்சுமி கூறிக் கொண்டிருக்க, சவுந்தர பாண்டியன் நிதானமாக, “பதட்டத்தைக் காட்டி உன்ற அப்பன் குதிருக்குள்ள இருக்கான்னு காட்டிக் கொடுத்திடாதே… அவளை எப்படி கூட்டிட்டு வரணும்னு எனக்குத் தெரியும். நீ ஆக வேண்டியதப் பாரு,” என்றவர், மீசையை முறுக்கிக்கொண்டு தனது தம்பி கிருஷ்ணமூர்த்தியை அழைத்தார்.

“அண்ணா, நான் ஆல்ரெடி ஆளை அனுப்பிட்டேனுங்க. லட்டு குட்டி இன்னும் அஞ்சு நிமிசத்தில வந்துடுங்க,” என்றார்.

“ச்ச்ச்ச்… அண்ணா, நான் 500 ரூபா கூடத் தரேன், பிளீஸ் தயவுசெஞ்சு கேள்வி கேட்காதீங்க! எவ்ளோ வேகமா போக முடியுமோ அவ்ளோ வேகமா போங்க!” என மீனாட்சி நகத்தைக் கடித்தபடி திரும்பிப் பார்த்துக்கொண்டே பதட்டத்துடன் அமர்ந்திருக்க, ஆட்டோவைச் சுற்றி வளைத்தது மீனாட்சி ஸ்வீட்ஸ் வண்டி… ஆவேசமாக வண்டிக்குள் இருந்து இறங்கினான் சிவானந்தம்; கிருஷ்ணமூர்த்தியின் மகன், மீனாட்சியின் அண்ணன், வக்கீலுக்குப் படித்துக் கொண்டிருக்கிறான்.

“பாப்பு, இறங்கி அமைதியா வண்டியில வந்து ஏறு!” என கம்பீரக் குரலில் அதட்டினான்.

“அண்ணா, நான்… எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்ல… எனக்கு… நான் லவ் பண்றேன்,” என அவள் சொல்லி முடிக்கவில்லை, கையில் இருந்த போனைப் பிடுங்கி, “டேய் ரமேசு, இதைக் கொஞ்சம் செக் பண்ணு. எவன் பாப்பு பின்னாடி சுத்துறான்னு கொஞ்சம் தூக்கிட்டு வா!” என மீசையை முறுக்கியபடி அவன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கைகளைப் பற்றினான்.

“சிவா, பிளீஸ்!” என அவள் கெஞ்சிட, “அவன் யாருன்னு ட்ராக் பண்ணாம இருக்க பட்டன் செல்ல போன் பேசிட்டு இருக்கியா நீ?” எனப் பற்களைக் கடித்தபடி கூறியவன், அவளை இழுத்துக் கொண்டு மண்டபத்துக்கு வந்து சேர்ந்தான்.

வீரலட்சுமி பதட்டத்துடன் கைகளைப் பிசைந்தபடி அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்.

“சிங்கம், அங்கே கேசரி வாசம் ஆளைத் தூக்குது, சாப்பிட போலாமா?” என சம்சுதீன் ஒரு பக்கம் கேட்க, “சிங்கம், மெது வடை மெத்து மெத்துன்னு இருக்கு, முறுகல் வாசனை மூக்கைத் துளைக்குது, வாங்களேன் போலாம்!” என தீபக் எழுந்தான்.

“அய்யோ சிங்கமே, மீனாட்சி ஸ்வீட் அப்டின்னா லட்டுதானே? ஆளைத் தூக்குது சிங்கம் லட்டு… நம்ம டெல்லி போகும்போது, லட்டு உங்க மாமாகிட்ட சொல்லி, ஒரு பேக் எடுத்திட்டுப் போலாம். என்ன சொல்றீங்க?” என அருண் இன்னொரு பக்கம் உசுப்பிக் கொண்டிருக்க.. இப்படியாக அந்த மண்டபத்தின் ஓரத்தில் உற்சாகமாக அமர்ந்திருந்தது ஒரு ராணுவ வீரர் குழு.

“என்னடா, சாப்பாடு எல்லாம் எப்டி?” எனக் கேட்டான் ரணசிங்கம்.

“சிங்கம், வாசம் அப்படியே நம்மள சுண்டி இழுக்குது!”

“அப்போ சாப்பிடலாமா?” என மீசையை முறுக்கி விட்டபடி எழுந்தான் சிங்கம் என்னும் செல்ல பெயர் கொண்ட ரணசிங்கம்.  ராணா!

ஆறடிக்கு மேலான கட்டுக்கோப்பான தேகம், கரும்பாறையைக் குடைந்து செதுக்கியது போன்ற அகன்ற தோள்கள், கூர்மையான தாடை அமைப்பு. எல்லைப்புறத்து வெயிலிலும் பனியிலும் பக்குவப்பட்ட அவனது மாநிற மேனியும், மிரட்டலான முறுக்கு மீசையும், எவரையும் சட்டென்று ஊடுருவிப் பார்க்கும் கழுகுப் பார்வையும் அவனது ராணுவ மிடுக்கை அப்பட்டமாகப் பறைசாற்றின. தோழர்களின் சீண்டல்களுக்கு மத்தியில் அவன் இதழோரம் சிந்திய ஒற்றைப் புன்னகையே அவனது அத்தனை முரட்டுத்தனத்திற்கும் நடுவே ஒரு வசீகர அழகைச் சேர்த்தது.

“வாங்க சிங்கம்! அப்படியே பிச்சுப் போட்டு லைட்டா சாப்பிட்டு வந்திடலாம். கூடவே ஒரு ரீல் எடுத்து Insta-ல இந்த ஆர்மி யூனிஃபார்ம்ல போட்டால் லைக் சும்மா பிச்சுக்கும்!” என முனிராஜ் கூறிட…

“அப்படிங்கற?” என உடலை முறுக்கிக் கொண்டு எழுந்தான் ராணா.

“வாங்க போவோம்!” என மொத்த ராணுவப் பட்டாளமும் சாப்பிடச் சென்ற அதே வேளையில், மீனாட்சியை டைனிங் ஹாலுக்குள் இருந்து செல்லும் மணமகள் அறைக்கு அழைத்துச் சென்றான் சிவா.

இதோ, முதல் பந்தியில் நம் ராணா பந்திக்கு ரெடியான நேரத்தில், அங்கே திருமணம் நின்றது!

(தொடரும்…)

You may also like

Leave a Comment