ஈகோ பிடிச்சவனின் இதய தேவதை 26

by Pradhanya kuzhali
246 views

Epi -26 

கலாவதியின் கண்களில் நீர் கோர்க்க, தன் சேலையின் தலைப்பால் மெதுவாகத் துடைத்துக் கொண்டார். அவரது உதடுகள் கடந்த காலத்தின் கசப்பான நினைவுகளால் நடுங்கின.

“என்னோட கணவர் பேரு ராமமூர்த்தி. எனக்குக் குடும்பத்துல பார்த்துதான் கல்யாணம் செஞ்சு வச்சாங்க. என் வீட்டுக்காரர் வீடு கொஞ்சம் வசதியான வீடு. என்னோட அண்ணன்  செந்தில் முருகன். எனக்கு சொந்த ஊர் ஈரோடு பக்கம் எழுமாத்தூர். எனக்குக் கல்யாணமாகி அந்த ஒரு வருஷத்துல சத்யமூர்த்தி பொறந்தான். அவன் ரொம்பச் சமத்து; அவன் சிரிச்சா அவ்வளவு அழகா இருக்கும். என் பையன் அவ்வளவு அறிவு… அவ்வளவு சுட்டி,” என்றவர், சாவித்திரியின் பக்கம் தீர்க்கமாகத் திரும்பி, “நாங்க எல்லோரும் திருப்பூர்ல இருந்தோம். 

சத்யமூர்த்தி பிறந்த நேரத்துல கார்மெண்ட்ஸ் பிசினஸ் (Garments Business) பண்ணார் என் வீட்டுக்காரர். நல்ல வருமானம்; நல்லா இருந்தோம், எதுக்கும் குறையில்லை. சொந்தபந்தம், பகட்டு, பெருமை அப்படின்னு நல்லாத்தான் இருந்தார் என் புருஷன். ஆனால், என்னோட புருஷனுக்குப் பணத்தாசை ரொம்ப அதிகம். எல்லாமே நல்லாத்தான் போயிட்டு இருந்தது. தேவையில்லாத சேர்க்கையால, விஷ்வா பிறந்த நேரத்துல மிகப்பெரிய நஷ்டம் வந்திடுச்சு. விஷ்வாவுக்கும் சத்யமூர்த்திக்கும் எட்டு வருஷம் வித்தியாசம்.”

கலாவதியின் குரல் வேதனையில் கரகரப்பாக மாறியது. “விஷ்வாவை என் வீட்டுக்காரருக்குப் பிடிக்கலை; ‘தரித்திரம் வந்திடுச்சு’ அப்படின்னு சொல்லி, அவனை அறவே வெறுத்தார். ஒரு நாள் சாப்பாட்டுக்குத் திருப்பூர்ல ரொம்பக் கஷ்டப்பட்டோம். பணம் இருக்குற நேரத்துல வந்த சொந்தபந்தம் எல்லாமே, நாங்க நடுதெருவுக்கு வரும்போது யாருமே எங்களுக்கு உதவி செய்ய வரலை. வீடு, கார்மெண்ட்ஸ் வித்த பணத்தை எடுத்துக்கிட்டு, கடைசியில சொந்த ஊர்ல இருக்குற வீட்டுக்கு வந்திட முடிவு செஞ்சார் என்னோட புருஷன். அதே போல வந்துட்டோம்.”

“மறுபடியும் கார்மெண்ட்ஸ் வைக்கிறேன்னு கையில இருக்குற பணமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக் கரைந்தது. என் புருஷன் குடிக்கு அடிமையாக ஆரம்பிச்சார். குடிச்சிட்டு வந்து விஷ்வாவையும் என்னையும் போட்டு அடிப்பார். விஷ்வா குட்டிக்குழந்தை… சத்யமூர்த்தி தடுக்க வந்தா, அவனை எட்டி உதைப்பார்; அவன் முதுகு கதவுல பட்டுப் பெரிய காயம் ஏற்பட்டது,” என்றவர் கண்களில் இருந்து சூடான கண்ணீர் கன்னங்களை நனைத்தது.

சாவித்ரி பதறிப்போய், “மேடம், இதெல்லாம் எதுக்குச் சொல்லி உங்க உடல்நிலையை நீங்க…” என ஆரம்பிக்க…

“இல்லைம்மா, எனக்கு எதுவும் ஆகாது,” என்று அவளது கைகளைப் பற்றித் தடுத்த கலாவதி, சாவித்திரியைப் பார்த்து, “என் வயித்துல வந்து பொறந்ததுக்கு என் சத்யா படாத கஷ்டம் இல்லை அம்மா! அத்தனை கஷ்டப்பட்டான். ஒரு தனியார் பள்ளியில படிச்சிட்டு இருந்தவன், படிக்க வைக்க முடியாத சூழ்நிலையில கவர்மெண்ட் (Government) பள்ளிக்கூடத்துக்குப் போனான். முக்கியமா, அவனை நான் ஸ்கூலுக்கு அனுப்பினதே அந்தச் சத்துணவு சாப்பாட்டுக்காகத்தான்! என் சத்யா நல்லா படிப்பான். அவன் ஆறாவது படிக்கும் போதுதான் அந்த விஷயம் நடந்தது,” என்றவரின் முகம் சடுதியில் இருண்டு போனது.

அப்படி என்ன நடந்தது என்பது போலச் சாவித்ரி அப்பட்டமான தவிப்புடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

கலாவதி மேலும் தொடர்ந்தார். “நான் மூணாவதாகக் கருவாகி இருந்தேன். நான் மாசமா இருக்கேன்னு தெரிஞ்சதும், என்னை விட்டு என் வீட்டுக்காரர் அவரோட குடும்பத்துக்குப் போயிட்டார். என் நாத்தனார், அதாவது சத்யமூர்த்தியோட அத்தை வீட்டுல ரொம்ப வசதியானவங்க. அவளோட வீட்டுக்காரர் இறந்து, அவங்க அண்ணி வாழாவெட்டியா வந்துட்டான்னு கேள்விப்பட்டேன். அவங்களுக்கு வீட்டோட மாப்பிள்ளை வேணும்; கூடவே வெள்ளிப் பட்டறை, நகைக் கடை இதெல்லாம் மாப்பிள்ளை பேருக்கு எழுதித் தர்றதாகச் சொன்னாங்க. இது எதுவுமே எனக்குத் தெரியாது. நான் இங்கே சாப்பாட்டுக்கு வழியில்லாமல் ஒரு டீக்கடையில வேலைக்குச் சேர்ந்துட்டேன்.”

“விஷ்வாவுக்குப் பெருசா விவரம் தெரியாது. சத்யமூர்த்திதான் அவனை ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போவான்; ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல்லதான் படிச்சாங்க. அன்னைக்கு அப்படித்தான், ஸ்கூல் முடிஞ்சு சத்யமூர்த்தி விஷ்வாகூட வரும்போது, அந்த ஸ்கூலுக்கு எதிரில் ஒரு மண்டபத்துல ஒரு ஜோடிக்கு பிரம்மாண்டமாக் கல்யாணம் நடந்தது. அது… அது வேற யாருமில்லை, என்னோட புருஷனுக்கு ரெண்டாவது கல்யாணம்!”

சாவித்ரி ஒரு நொடி அதிர்ந்து பார்த்தாள்; அவளது உடல் சட்டென்று சிலிர்த்தது. இதெல்லாம் அவளுக்கு முற்றிலும் புதிய விவரங்கள்! சத்யமூர்த்தியின் கடந்தகால வாழ்க்கையின் இந்த இருண்ட பக்கங்கள் எதுவுமே அவளுக்குத் தெரியாது.

கலாவதி கண்களைத் துடைத்துக் கொண்டு, “தன்னோட அப்பாவா இதுன்னு பார்த்துச் சத்யமூர்த்தி உடைஞ்சு போகலை; அதுக்கு மாறாக, அவனுக்கு உலகத்தின் மேலேயே வெறுப்பு வந்திடுச்சு. அவன் வேறு விதமாக உடைஞ்சு போனான். ‘அப்பா குடும்பத்துல இருக்குற எல்லாரும் கெட்டவங்க’ அப்படின்னு அப்போ அவன் நம்பினான். மீராவோட அப்பா, என்னோட அண்ணனைத்தான்… எங்க அண்ணன் கல்யாணத்துக்கு முன்னாடி எனக்காக ஓடி ஓடி எல்லாமே செஞ்சான், ரெண்டு பேரையும் நல்லா பார்த்துக்கிட்டான். எத்தனையோ நாள் என்னை நினைச்சு அழுதிருக்கான். ஆனால், அவனுக்குன்னு ஒரு குடும்பம் வந்தது; என் அண்ணி அம்பிகாவுக்கு நான் அந்நியமாகத் தெரிஞ்சிட்டேன். அவளுக்கு அவளோட பிறந்த வீட்டுக்குத்தான் என் அண்ணன் எல்லாத்தையும் செய்யணும்னு ஒரு எண்ணம்.”

“என்னோட அண்ணன் என் வீட்டுக்காரர்கிட்ட முறையீடு செய்யப் போக, அம்பிகாகிட்ட பணத்தைக் கொடுத்து அதை மூடி மறைச்சுட்டாங்க. அந்த நொடியில இருந்து என்னோட அண்ணன் குடும்பத்தைச் சத்யமூர்த்தி வெறுக்க ஆரம்பிச்சான். எங்களுக்குப் பணம் கொடுத்து உதவ யாருமே இல்லை. என்னோட கஷ்டத்தைப் பார்த்த சத்யமூர்த்தி, ஆறாவது காலாண்டுப் பரீட்சையில இருந்து ஸ்கூலுக்குப் போறதை நிறுத்திட்டு, எனக்காக வேலைக்குப்போக ஆரம்பிச்சான். என்ன வேலை கிடைக்குதோ எல்லாமே பண்ணுவான். அப்போ எனக்கு எட்டு மாசமாச்சு… மழையில வழுக்கி விழுந்து, என்னோட பொண்குழந்தையைக் காப்பாற்ற முடியாத சூழல்ல அது இறந்து போச்சு! அந்த நிலமையில உதவிக்கு ஓடி வந்த என்னோட பையன் சத்யமூர்த்தி மொத்தமா உடைஞ்சு போனான். எல்லாரும் எங்களை ஒதுக்கி வச்சாங்க; ‘ராசி இல்லாதவள், கேடுகெட்டவள், கேடுகெட்ட பிழைப்பு பிழைக்கிறேன்’ அப்படின்னு ஊரே எங்களைப் பேசி வேதனைப்படுத்துச்சு. ஒருத்தனை மதிக்க இங்கே பணம் மட்டும்தான் பிரதானமா படுது!”

கலாவதியின் குரல் ஆக்ரோஷமாகவும் வலியோடும் ஒலித்தது. “அந்த 13 வயசுப் பையன் மொத்தமாக வாழ்க்கையின் வெறுப்பின் உச்சகட்டத்துக்குப் போனான். அப்போ சிங்கப்பூர்ல வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னு ஒரு பண்ணையார் குடும்பம் தேடிட்டு இருந்தாங்க. ஒரு மாசம் சத்யமூர்த்தி அவங்ககிட்ட கால்ல விழுந்து கெஞ்சி, அவங்ககூடச் சிங்கப்பூர் போனான்.”

“கான்ட்ராக்ட் (Contract) பணம் மூணு லட்சம் கொடுத்தாங்க; அங்கே என்ன வேலை செஞ்சான்னு எனக்கு இதுவரைக்கும் தெரியாது. ஆனால், அந்தப் பண்ணையார் குடும்பத்துக்கு என் பையனை ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அவங்களே அவனைப் படிக்க வைக்க முன்வந்தாங்க… ஆனால், அவன் வேண்டாம்னு மறுத்துட்டான். அந்த ஐயா சத்யமூர்த்திகிட்ட, ‘உனக்கு ஏதாவது செய்யணும்பா, என்ன வேணும்?’னு கேட்டார். சத்யமூர்த்தி அந்த ஐயாகிட்ட ஈரோட்டுல இருக்குற ஒரு பழைய ஸ்கூலை லீசுக்கு (Lease-க்கு) எடுத்துக் கொடுக்கச் சொல்லி கேட்டான். அந்த ஐயாவுக்கு ஆச்சரியமாகிப் போச்சு; அவர் அதைச் சத்யமூர்த்தி பேருக்கே மாத்திக் கொடுத்துட்டார்! அதுக்குக் காரணம், 15 வருஷம் அவங்க வீட்டுல சத்யமூர்த்தி நேர்மையான வேலைக்காரனா இருந்திருக்கான். அதுக்குப்பிறகு இந்தியா வந்தான். என் பையனோட முகத்தை 10 வருஷம் கழிச்சு அப்போதான் நான் பார்த்தேன். ‘விஷ்வா’ன்னா அவனுக்கு உயிர்… ‘விஷ்வ விகாஸ்’ அப்படின்னு பேர் வச்சுப் பள்ளிக்கூடம் ஆரம்பிச்சான். அப்போ அவனுக்கு வயசு 27. அடுத்த ஒரு வருஷத்துல வேற வாடகை வீடு… அடுத்து மாடிக் குடியிருப்பு வீடு… அடுத்து சொந்த வீடு… அடுத்து பெரிய பங்களான்னு இந்த 13 வருஷத்துல ஒன்பது ஸ்கூல் கொண்டு வந்துட்டான்! ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கோவைன்னு எங்களோட ஸ்கூல் வளர்ந்தது.”

கலாவதி பெருமையோடும் ஆத்திரத்தோடும் மூச்சு வாங்கப் பேசினார். “இந்தப்பணத்துக்காகத்தானே உன்னை விட்டு உன்னோட புருஷன் போனான்; அதே பணம் வந்தது தெரிஞ்சும் உன்கூடச் சேர வந்தான் அந்த ஆளு! யாரை ராசி இல்லைன்னு சொன்னானோ, என் விஷ்வாவை ராசி இல்லைன்னு சொன்னானே… என் விஷ்வா பேர்ல இப்போ ஒரு சாம்ராஜ்யமே உருவாக்கியிருக்கான் என் சத்யா! ‘நான் எல்லாத்துக்கும் காரணம் பணம்தான்… பணம் மட்டும்தான்… இது எல்லாமே என் தம்பிக்கு… இது எல்லாத்துக்கும் சொந்தம் என் தம்பி, என் தம்பி மட்டும்தான்’ அப்படின்னு எல்லாமே விஷ்வா பேர்லதான் இருக்கு. என் சத்யமூர்த்தி சின்ன வயசுல உறவுகளால் பட்ட கஷ்டத்துல கல்யாணமே வேண்டாம்னு இருக்கான். அவன் இப்போ ஓடுறது எல்லாமே விஷ்வாவுக்காகவும், விவானுக்காகவும்தான்! அவனுக்குச் சந்தோஷம் அப்படின்னா விஷ்வாதான்… விஷ்வா அப்படின்னா அவனுக்கு உயிர்!” என்று கூறி முடித்த கலாவதி, சாவித்திரியின் பக்கம் திரும்பினார்.

சாவித்திரியின் கண்கள் அடியோடு கலங்கி இருந்தன; நெஞ்சுக்கூடு ஏறி இறங்கியது. அவளது பழிவாங்கும் வஞ்சக எண்ணங்கள் அனைத்தும் இந்த உண்மைகளைக் கேட்டதும் அப்படியே ஸ்தம்பித்தன. தன் கண்களில் கசிந்த கண்ணீரைச் சட்டெனத் துடைத்துக் கொண்டு, “சொல்லுங்க மேடம்,” என அவரைப் பார்த்தாள்.

“நீ அன்னைக்கு விஷ்வாவோட அறையில இருந்ததும், அவன் விஷ்வா மேலே இருக்குற அதீத பாசத்துலதான் உன்கிட்ட அப்படி அநாகரிகமா நடந்துக்கிட்டான்மா. அது தப்புதான்… அவனுக்குப் பொண்ணுங்ககிட்ட பேசத் தெரியாது; என்கிட்ட கூட அவனுக்குப் பாசத்தை எப்படிப் காட்டணும்னு தெரியாது. ஏன்னா, அவன் சின்ன வயசுல இருந்தே உழைச்சு அப்படியே பழகிட்டான்,” என்றவர், நேராகச் சாவித்திரியின் கைகளைப் பற்றிக்கொண்டு, “அவனுக்குப் பதிலா நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்ம்மா,” என்றார் உடைந்துபோன குரலில்.

“அய்யோ மேடம்! நீங்க எதுக்கு என்கிட்ட மன்னிப்பு கேட்கிறேன்னு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க? அதுக்கு எந்த அவசியமும் இல்லை மேடம்… நீங்க வான்னு சொன்னா நான் வந்துட்டுப் போறேன்,” என்றாள் சாவித்ரி, தன் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகையை வரவழைத்துக் கொண்டு.

“இல்லைம்மா, நல்லவங்க மனசு வேதனைப்பட்டா அது பலிக்கும்னு சொல்லுவாங்க. நீ நல்ல பொண்ணு; நீ எவ்வளவு கருத்தா விவானைப் பார்த்துக்கிட்ட தெரியுமா? உன்னாலதான் இப்போ விஷ்வா எழுந்து நடக்குறான்,” என்றார் கலாவதி நெகிழ்ச்சியுடன்.

“அய்யய்யோ மேடம்! விவானுக்குக் காய்ச்சல்னு சொன்னீங்களே, வாங்க போலாம்!” என்று பதட்டத்துடன் உடனே கலாவதியுடன் புறப்பட்டாள் சாவித்ரி.

ஆனால், இப்பொழுது சாவித்திரியின் மனநிலை மிகவும் மாபெரும் குழப்பத்திலும் வேதனையிலும் சூழ்ந்து கொண்டது. ‘ஒரு நல்ல மனிதனையா, தன் தம்பிக்காகவே தன் வாழ்க்கையைத் தியாகம் செய்த ஒருவனையா ஐந்து வருடமாகக் கெட்டவன், துரோகி என நினைத்திருந்தோம்? தன் அக்கா தாமரை மற்றும் விஷ்வாவின்  வாழ்க்கையைச் சிதைத்தவன் சத்யமூர்த்தி இல்லை என்றால்… அப்போ இதற்கு அர்த்தம் என்ன?’ என்று எண்ணியவள், இப்பொழுது ஒரு புதிய புதிரான சிக்கலில் அவதிப்பட்டாள். அவளது பழிவாங்கும் சபதங்கள் அனைத்தும் திசைமாறி நின்றன.

இங்கே, விஷ்வ பவனத்தின் நிசப்தமான அறையில்…

கண்களை மூடிப் படுத்திருந்த விஷ்வாவின் சிந்தைக்குள், அணைக்க முடியாத அலைகளாகத் தாமரை பற்றிய நினைவுகள் மீண்டும் ஆழமாக ஒட்டிக்கொண்டன! அவளது தீர்க்கமான விழிகளும், அந்தச் சேரன் எக்ஸ்பிரஸின் காதல் தீண்டல்களும் அவனது இதயத்தை வேகமாய் உலுக்கின.

 * (தொடரும்…)

You may also like

Leave a Comment