Epi -25
கலாவதி பூரண குணமடைந்து அன்று மாலையே விஷ்வ பவனத்திற்கு வந்து சேர்ந்தார். அடுத்த நாள் காலை, சத்யமூர்த்தி எப்பொழுதும் போல அன்னையின் அறைக்கு வந்தவன், “அம்மா, சாப்பிட்டீங்களா? இனிமே டேப்லெட் (Tablet) ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ (Strict-ஆ Follow) பண்ணனும். நர்ஸ் இன்னும் வரலையா?” எனச் சுற்றிலும் தேடிப் பார்த்தவனுக்கு, உடனே கோபம் தொற்றிக்கொண்டது.
கலாவதி அவனைப் பார்க்கப் பிடிக்காமல் வேறுபுறம் திரும்பிக்கொண்டவர், “தயவுசெஞ்சு ரூமை விட்டு வெளியே போ; உன்னை எனக்குப் பார்க்கப் பிடிக்கலை,” என்றார்.
“அம்மா, நான் என்ன பண்ணேன்?” எனச் சத்யமூர்த்தி எதுவுமே நடக்காதது போலக் கேட்க…
“அந்தப் பொண்ணை அடிச்சிருக்க நீ!!” என்றவர், “எனக்கு வாழணும்… என்னோட பேரன் கூடவும், என்னோட பையன் கூடவும் வாழணும். என்னைக்கோவப்படுத்தாமல் போயிடு,” என்று கூறிவிட்டுத் தன் கண்களை மூடினார்.
சத்யமூர்த்தி அசைவற்று அதே இடத்தில் நின்றான்; என்ன பேசுவது என்று தெரியவில்லை. அங்கும் இங்கும் நடந்தான். கோபத்தில் பெருமூச்சை விட்டபடி, “சரி சொல்லுங்க, நான் என்ன பண்ணனும்?” எனக் கடுப்புடன் கேட்டான்.
கலாவதியிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. “அம்மா!” என அதிகாரமாக அழைத்தவன், “இப்போ விஷ்வா அஞ்சு வருஷம் படுக்கையில இருந்து கண் விழிச்சிருக்கான்; நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? ப்ளீஸ்மா, படுத்தி எடுக்காதீங்க, சொல்லுங்க!” என்றான் கடுப்புடன்.
கலாவதி கண்களைத் திறக்காமல், “அந்தச் சாவித்ரி பொண்ணுகிட்ட மன்னிப்பு கேட்கணும் நீ!! ஆனால் நீ கேட்க மாட்டே… அவ்வளவு அகங்காரக்காரன் நீ! உன்னோட சந்தோஷத்துக்குக் காரணம் அவள்தான்… அவளால்தான் நம்ம விஷ்வா நமக்குக் கிடைச்சிருக்கான். ஆனால், நான் சொல்றதை நீ என்ன செஞ்சிடவா போற? நீ என்னமோ பண்ணு,” என்று சலித்தபடி உறங்கிப்போனார்.
சத்யமூர்த்தி கைகளை இறுக்கி மடக்கியபடி அதே இடத்தில் நின்றான். அனைத்துத் திசைகளில் இருந்தும் பிரஷர் (Pressure) அவனது மூளையைக் குடைந்தது. ஒருபுறம், ஐந்து வருடங்களுக்குப் பிறகு உயிர் பெற்று எழுந்திருக்கும் தம்பி விஷ்வாவிற்குத் தீவிர பிசியோதெரபி (Physiotherapy), முழு உடல் பரிசோதனைகள் (Full body checkup) என ஒரு மருத்துவப் பட்டாளமே வீட்டைச் சூழ்ந்திருந்தது. இன்னொரு புறம் தன் முகத்தைப் பார்க்கக் கூட மறுக்கும் அன்னை கலாவதி, பரபரக்கும் விஷ்வா விகாஸ் சர்வதேசப் பள்ளியின் நிர்வாக வேலைகள், விவான் குட்டி இன்னொரு பக்கம் அவனைக் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு… என அத்தனையுமாய் அவனை அசுரத்தனமாக அழுத்தின.
ஆனால், இவை எல்லாவற்றையும் விட அவனது ஆண்மையின் நெஞ்சக்கூட்டைத் துளைத்த பெரும் பாரம்—அன்று இரவு ஆத்திரத்தின் உச்சத்தில் சாவித்திரியின் கன்னத்தில் அவன் வைத்த அந்த முரட்டுத்தனமான ‘பளார்’ அறைதான்! ஏதோ ஒரு குருட்டு ஆவேசத்தில் அவளது மென்மையான நெற்றியைச் சுவரில் முட்டி ரத்தம் வரச் செய்துவிட்டான். அவளது அந்தச் சிவந்த நெற்றியும், கண்களில் நீர் கோர்க்க, ‘நான் எந்தத் தப்பும் பண்ணலை’ என்று அந்த வலியிலும் தீர்க்கமாகச் சொன்ன அவளது சிங்கம் போன்ற பார்வையும் அவனது தூக்கத்தை அடியோடு பறித்திருந்தன.
அவளை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சுக்குள் ஏதோ ஒரு விசித்திரமான வலி பரவியது. அவளிடம் நேராகச் சென்று ‘மன்னிப்பு’ கேட்க அவனது அசைக்க முடியாத ஈகோ தடுத்தது. கலாவதி சொன்ன அனைத்தும் உண்மைகள் தான்; மகனை அவர் அவ்வளவு துல்லியமாகக் கணித்து வைத்திருந்தார். சத்யமூர்த்தி அங்கும் இங்கும் நடந்தபடி, ‘அடுத்து என்ன செய்வது? சாவித்திரியை எப்படி அருகில் அழைத்து வருவது?’ என யோசித்தான். தன் அசாத்திய அதிகாரத்தையும் பதவியையும் பயன்படுத்தி, அவளை மீண்டும் தன் பள்ளிக்கு வரவழைத்து, தன் பாணியில் அவளது அருகில் நின்று மன்னிப்பு கேட்க முடிவு செய்தான் ஆடவன்.
சாவித்ரி நிலைக்கண்ணாடியில் வலது கையை ஊன்றித் தன்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். “சத்யமூர்த்தி, சத்யமூர்த்தி… உன்னை…” என மூச்சு வாங்கியவள், “உன்னை உன் விஷ்வாகிட்டருந்து பிரிப்பேன்; உன்னை விவான்கிட்டருந்து பிரிப்பேன்! நீ எப்படித் தகுதியையும் பணத்தையும் கௌரவத்தையும் காரணம் காட்டி, உயிருக்குப் போராடும் நிலையிலிருந்த என் அக்காவை அம்போன்னு விட்டுட்டு உன்னோட தம்பி வாரிசைத் தூக்கிட்டுப் போனியே… ஒரு தாயையும் சேயையும் பிரிச்சியே… அதே போல உன்னையும் உங்க அம்மாவையும் பிரிப்பேன்டா!! இது சத்தியம்டா… உன்னை இந்த ரோஜா, பாச முட்களால் துடிக்கத் துடிக்கக் குத்தப் போறா…” என்று ஆவேசமாகக் கூறி, ஒவ்வொரு நாளும் சபதம் எடுத்துக்கொண்டிருக்கிறாள் சாவித்ரி என்னும் ஆடு தோல் போர்த்திய புலி. இவள் ரோஜா மலரைப் போல மென்மையானவள் இல்லை!
கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் சாவித்ரி பள்ளிக்கு வரவில்லை. அவளது இருப்பு இல்லாத அந்த ‘விஷ்வா விகாஸ்’ வளாகம் சத்யமூர்த்திற்கு ஒரு வெட்டவெளியைப் போலப் பாழடைந்து தெரிந்தது. பொறுமை இழந்தவன், அவளது பெர்சனல் ஃபைலை (Personal File) ஆராய்ந்து, அவள் தங்கியிருக்கும் அந்த எளிய பெண்கள் ஹாஸ்டலைத் தேடித் தன் பிரம்மாண்ட ரோல்ஸ் ராய்ஸ் காரில் நேராகச் சென்றுவிட்டான்.
மாலை நேரம்… ஹாஸ்டலின் வாசலில் அந்தப் பிரம்மாண்ட கார் வந்து நின்றதும், அங்கிருந்த பெண்கள் அனைவரும் திகைத்துப் பார்த்தனர். கறுப்பு நிற ஆல்பைன் சூட்டின் கம்பீரத்தோடு, கார் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த சத்யமூர்த்தியினுடைய அசாத்திய ஆளுமை, அந்த எளிய வீதியையே ஸ்தம்பிக்க வைத்தது.
“சாவித்ரி, உன்னைப் பார்க்க ஸ்கூலில் இருந்து வந்திருக்காங்க,” என வார்டன் வந்து சொல்லிவிட்டுப் போக… சாவித்ரி சாதாரண தொனியில், “எனக்கு யாருன்னே தெரியாது மேடம். நான் ஸ்கூல்ல ஒர்க் பண்ணலை (Work பண்ணலை); நான் சுமதி டாக்டர்கிட்ட ஒர்க் பண்றேன்,” எனக்கதவைப் பூட்டிக்கொண்டாள்.
வார்டன் நேராகச் சத்யமூர்த்தியிடம் அனைத்து விவரங்களையும் கூற… “3, 2, 1…” எனத் தனது கோபத்தைக் கட்டுப்படுத்தியவன், “நான் உள்ளே இப்போ போலாமா?” எனக் கேட்டான்.
“ஸாரி சார், இது லேடீஸ் ஹாஸ்டல் (Ladies Hostel)… ஜென்ட்ஸ் நாட் அலவ்டு (Gents not allowed),” என்று வார்டன் மறுத்துவிட… சத்யமூர்த்தி பற்களைக் கடித்துக்கொண்டு, “மிஸ் சாவித்ரி! இரண்டு நாளா ஏன் ஆபீஸ்க்கு வரலை? லீவ் லெட்டர் (Leave Letter) கூடத் தராமல் இருக்காங்க. அடுத்த இரண்டு நாளும் இது நடந்ததுன்னா, அடுத்து கோர்ட்ல வந்து அவங்க பதில் சொல்லணும்னு சொல்லிடுங்க,” என்றவன் பாக்கெட்டுக்குள் கையை விட்டுக்கொண்டு நேர்த்தியாக விறைப்பாகப் புறப்பட்டிருந்தான்.
வார்டன் அனைத்து விவரங்களையும் கூறிவிட, உள்ளுக்குள் கோபம் கனன்று அதிகமானது பெண்ணவளுக்கு. ராஜேஷ் இன்னொரு பக்கம் விடாமல் அவளுக்குப் போன் செய்ய, அனைத்தையும் புறக்கணித்து ஒதுக்கித் தள்ளினாள்.
இந்த நிலையில், இரண்டு நாட்கள் பள்ளிக்குச் சோர்வுடன் சென்ற விவானுக்குத் தீராத காய்ச்சல் வந்து அவதிப்பட்டான். சத்யமூர்த்திக்குப்பைத்தியம் பிடிப்பதைப்போல ஆனது; என்ன செய்வதென்று தெரியவில்லை. அவளது எண்ணுக்கு அழைத்து ஓய்ந்து போனவன், மருத்துவர் சுமதியிடம், “சாவித்ரி வீட்டுக்கு வர எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்,” எனக் கூறினான்.
இதற்கு மேல் சரிவராது என நேரடியாகக் கலாவதி, சாவித்திரியைப் பார்க்க முடிவெடுத்தார். சுமதியின் முன்னால் அழுகையுடன் அமர்ந்திருந்தாள் சாவித்ரி; அவளுக்கு இப்போதே விவானைப் பார்க்க மனம் துடித்தது. ஆனால், போக முடியாத சூழ்நிலை… அதை நினைத்து அழுது கொண்டிருந்தாள்.
சுமதி ஒரு பெருமூச்சுடன், “நான் சொல்றதைக் கேளு சாவித்ரி, உனக்கு விவான்தானே…” என்று அவர் கூறிக்கொண்டிருக்க… “டாக்டர், விஷ்வா விகாஸ் ஸ்கூலோட ஓனர் (Owner) மேடம் வந்திருக்காங்க,” எனச் செவிலிப்பெண் ஓடி வந்து கூறினாள்.
சுமதி தனக்கு எதிரில் இருப்பவளைப் பார்த்தபடி, “உள்ளே வரச் சொல்லும்மா,” என்றார்.
“வணக்கம் டாக்டர்,” என்ற கலாவதி, “சாவித்ரி, ஒரே ஒரு நிமிஷம் நான் சொல்றதை மட்டும் கேளும்மா; உன்னை கெஞ்சிக் கேட்கிறேன். என் மகனுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். என் பேரன் சதா பொழுதும் ‘சாவி, சாவி, சாவி… எப்போ வருவா?’ அப்படின்னு கேட்டு அவனுக்குக் காய்ச்சலே வந்திடுச்சுமா,” என்றார்.
“அய்யோ மேடம், என்ன நீங்க பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்டு இருக்கீங்க?” எனச் சாவித்ரி கூற… கலாவதி அவளை வெளியில் அழைத்து வந்தவர், கையைப் பற்றிக்கொண்டு, “என்னோட பையன் உன்னை அடிச்சது பெரிய தப்புதான்; அதுக்கு நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். உன் கால்ல கூட விழத் தயார்,” என முதிய பெண்மணி காலில் விழச் செல்ல… வேகமாகப் பின்னால் நகர்ந்த சாவித்ரி, “மேடம், என்னை தர்மசங்கடத்துக்கு ஆளாக்காதீங்க… உங்க மேலே எனக்கு எந்தக் கோபமும் இல்லை. உங்க பையன் மிக மிக மோசமானவர்,” எனச் சாவித்ரி அவளுக்கு இருக்கும் உச்சபட்சக் கோபத்தில், ‘இவர் இதுக்குக் கண்டிப்பா அனுபவிப்பார்’ என்று சாபம் விடும் நோக்கில் பேசினாள்.
கலாவதி கையெடுத்துக் கும்பிட்டபடி, “வேண்டாம்மா, சாபம் கொடுக்காதே! என் மகனுக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகலை… தயவுசெஞ்சு நான் கெஞ்சிக் கேட்கிறேன், என் பையன் அவ்வளவு கெட்டவன் இல்லை… அவன் இப்படி ஆகக் காரணமே அவனோட சிறுவயது வாழ்க்கைதான்மா,” என்றார்.
“என்ன சொல்றீங்க?” எனச் சாவித்ரி சுரத்தே இல்லாமல் கேட்டாள்.
கலாவதி சொன்ன விஷயங்களைக் கேட்கக் கேட்க, அவளின் கண்கள் அப்பட்டமான அதிர்ச்சியில் விரிந்தன!
அப்படி என்ன நடந்திருக்கும்?
* தொடரும்.