Episode -12
“மாமா,” எனப் புன்னகை மிளிர அழைத்தாள் பூங்கொடி.
அன்புசெல்வன் ஒரு நொடி அதிர்ந்து பார்த்துவிட்டு அவளின் பார்வை சென்ற திசையைப் பார்க்க, அங்கே சிவராமன் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
“அதுதானே பார்த்தேன், எப்டி திடீர்னு காதுல தேன் வந்து பாயுதுன்னு,” எனத் தலையைக் கோதிவிட்டபடி நின்றான் அன்பு.
“சார், கொஞ்சம் ஃபோட்டோ எடுக்கணும். மேடம், நீங்க அவரோட நெஞ்சுல சாய்ந்து நில்லுங்களேன்,” என்றார் போட்டோ எடுப்பவர்.
“இப்போதைக்கு வேணாம்ங்க,” என அன்புசெல்வன் கூற, “மாப்ள! அமுலு ஃபோட்டோ எடுத்திட்டு சாப்பிடலாமா, இல்ல சாப்பிட்டுட்டு போட்டோ எடுக்கலாமா?” என்று கேட்டார்.
“மாமா, அதை நீங்க பாப்பா கிட்டயே கேளுங்க. அவளுக்கு எது ஓகேவோ அதுவே எனக்கும் ஓகே,” என்றான் அன்பு.
“அமுலு? என்ன பண்ற?”
“எனக்கு பயங்கரமா பசிக்குதுப்பா! மாமா, நம்ம சாப்பிட்டு போட்டோ எடுப்போம்,” என்றாள் சிணுங்கியபடி.
“அப்டியா, அப்போ சாப்பிட போலாம் வாங்க!!” என சிவராமன் அழைத்துச் சென்றார்.
பூங்கொடி தன் மாமனின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
அன்பு அவளின் கையைப் பார்க்க, “எனக்கு ஒண்ணும் உன்னோட கையைப் பிடிக்க விருப்பமில்ல. வேற வழியே இல்லாமதான் புடிச்சிருக்கேன்,” என்றவள் சாப்பிடும் இடத்துக்கு வந்ததும் கையை விட்டாள்.
அன்புசெல்வன் அவள் சொல்வது எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இருவரும் உணவு உண்டார்கள். அங்கேயே போட்டோ எடுக்கப்பட்டது. “அன்னம் எங்கே போன? உனக்கு ஃபோன் எதுக்கு வாங்கி கொடுத்திருக்கேன்? வா, அப்பாவைக் கூட்டிட்டு நம்ம போட்டோ எடுத்துக்கணும்,” என்றான் அன்புசெல்வன்.
“அன்பு, எனக்கு முக்கியமா வேலை இருக்கு கண்ணு.”
“இப்போ நீ வரப் போறியா இல்லையா?” என மிரட்டினான் அன்பு.
சக்கரவர்த்தி வேஷ்டியைக் கட்டிக்கொண்டு மேடையில் ஏறினார். அன்னம் தயக்கத்துடன் பின்னால் வர, அன்புசெல்வன் சிரித்தபடி தன் அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டவன், சக்கரவர்த்தி மற்றும் அன்னலட்சுமி இருவரையும் அமரவைத்து பூங்கொடியுடன் பின்னால் நின்றான்.
“பூங்கொடி, கொஞ்சம் சிரிமா! இல்லன்னா உங்க அப்பாவைக் கூப்பிடுவேன்,” என மிரட்டினான் அன்புசெல்வன்.
சக்கரவர்த்தி பின்னால் திரும்பிப் பார்க்க, “தாத்தா,” எனச் சிரித்தபடி நின்றாள். அவளுக்கு எப்பொழுதும் சக்கரவர்த்தியைப் பிடிக்கும்.
“பூங்கொடி வா, ஆசீர்வாதம் வாங்கலாம்,” எனக் கைகோர்த்துக்கொண்டவன் அவளை இழுத்துக்கொண்டு செல்ல, “கைய விடு ராஸ்கல்! உன் அம்மாவோட காலில் என்னால விழ முடியாது. உன்னையே நான் எவ்ளோ வெறுக்கிறேன். உங்க அம்மாவை எனக்குப் பிடிக்காதுடா!” என்று எறிந்து விழுந்தாள்.
இவ்வளவு நேரமும் கனிவுடன் பார்த்தவன் விழிகள் கடுமையாக மாறிப் போய், “எனக்கும் இதுல விருப்பம் இல்ல. உங்க அப்பா சொன்னதுக்காகத்தான் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். எனக்கு எல்லாரை விட என் அய்யனும் அம்மையும் தான் முக்கியம். அவங்க காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கணும், அவ்ளோதான் சொல்லிட்டேன்,” என விடாப்பிடியாகக் கூறியிருந்தான் அன்பு.
“என்னாச்சு? அன்பு? என்ன பண்ணிட்டு இருக்க? எங்களை உட்கார வச்சுட்டு நீ பாட்டுக்கு போயிட்டியே?” எனக் கேட்டார் சக்கரவர்த்தி.
“இதோ வரேன் பா!” என்றவன் அவளைப் பார்க்க, எதுவும் பேசாமல் அவன் பின்னால் சென்றாள். இருவரிடமும் ஆசீர்வாதம் வாங்கினார்கள்.
திருமணம் நல்லபடியாக முடிந்தது. அவர்களின் நட்பு வட்டங்கள் அனைவரும் “டாட்டா, பாய்” சொல்லி கிளம்பி இருந்தார்கள்.
அன்பு தனது அன்னையைப் பார்த்தான். முகம் வாடியிருந்தது.
“என்னாச்சு அன்னம்?”
“ஒண்ணுமில்ல தங்கம்,” என அவர் சமாளிக்க, “உங்களைப் பூங்கொடி எதுவும் சொல்லிட்டாளா?” என நேரடியாகவே கேட்டான் அன்பு.
“இல்ல பா, அவள் சின்ன பொண்ணு! அவளுக்கு என்ன தெரியும். நீ அவள்கிட்ட எப்பவும் கோபமா நடந்துக்கவே கூடாது, சொல்லிட்டேன் நான்,” என்றார் அன்னம்.
“மா!!” எனக் கையைப் பிடித்துக் கொண்டவன், “நீங்க பெருசா வருத்தப்பட வேணாம். நம்ம யாரு கூடவும் அவ பழகினதில்ல. கொஞ்சம் கொஞ்சமா சரியாகிடும். அவ எது சொன்னாலும் அமைதியா இருக்க வேலை வேணாம் மா! நீ பதில் சொல்லணும். அவ ஒண்ணும் இனி மூணாவது மனுஷி இல்ல. உன்னோட மருமகள், உன்னோட பேத்தியும் கூட. அவளைக் கண்டிக்கும் உரிமை உனக்கு இருக்கு,” என்றான் அன்பு.
“கண்டிப்பா தங்கம்,” என அன்னம் சமாதானம் செய்ய, “என் அம்மாவைப் பத்தி எனக்கு தெரியும். நான் அப்படியே சும்மாவும் இருக்க மாட்டேன்,” என்றான் அன்புசெல்வன்.
அன்னலட்சுமிக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்க, அவர் புன்னகையுடன், “சரி! நான் எதை நினைச்சும் கவலைப்படல. நீ பாப்பா கூட இரு!” என்றார்.
“அவளுக்குப் ‘பாப்பா’ன்னு சொன்னாப் பிடிக்காதாம்.”
“அப்போ, ‘அமுலி’ன்னு சொல்லு!”
“அதென்ன அமுலி? யார் இப்படி ஒரு செல்லப் பேர் வச்சது?”
“உன்ற அப்பன்தான்!! சின்ன குழந்தையில விளம்பரம் வருமே, அதே போல இருக்கும் பாப்பா! அதனால அமுலி,” என்றார் அன்னம்.
“அதுவும் பிடிக்காதாம்? என்ன பண்றது அன்னம்?” என அன்பு கேட்க, “பூங்கொடி அப்டின்னு கூப்பிடு,” என்றார் அன்னம்.
“அவள் என்னை மிரட்டுறா மா! விட்டா அடிப்பா போல!! அடிச்சா நீ யாருக்கு ஸப்போர்ட் பண்ணுவ?” என அன்பு விளையாட்டாகக் கேட்டான்.
“கண்டிப்பா!!”
“ம்ம்… என் அன்னம் எனக்குத்தான் சப்போர்ட் பண்ணும், எனக்குத் தெரியும்,” என அன்பு கூற, “நான் பாப்பாளுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவேன்,” என்றார் அன்னம்.
“ஓ, இப்போவே மருமகளுக்கு சப்போர்ட்டா? இருக்கட்டும், இருக்கட்டும்,” என முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றான் அன்பு. இப்பொழுது உண்மையாகவே அன்னம் இயல்பாக இருந்தார்.
மங்களவாத்தியம் முழங்க, நேராகக் குலதெய்வக் கோவிலுக்குச் சென்றார்கள். சாமி கும்பிட்டுவிட்டு மாப்பிள்ளை மற்றும் மணப்பெண் இருவரும் புறப்பட்டுச் சக்கரவர்த்தியின் பெரிய வீட்டுக்கு வந்தார்கள்.
தனக்கொடி, ஜெயக்கொடி, சந்தனக்கொடி மூவருக்கும் தாங்கள் பிறந்து வளர்ந்த பழைய நினைவுகள் வந்துபோக ஒருவித ஆசையுடன் உள்ளே நுழைந்தார்கள்.
வீடு முன்பை விட மிகவும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. சாணம் மெழுகி கரை கட்டியிருக்க, வீட்டைச் சுற்றி நிறையச் செடிகள். ஒரு நந்த வனத்துக்குள் வந்ததைப்போல ஒரு உணர்வு.
சக்கரவர்த்தி வெளியே கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருக்க, உறவினர்கள் அனைவரும் அங்கேயே இருந்தார்கள்.
அன்புசெல்வனின் கையுடன் அவளின் விரல்கள் கோர்த்திருந்தது.
நேராக பூஜை அறைக்குள் கூட்டிச் சென்றார் அன்னம். அங்கே சாமி படம், அதனுடன் விஜயலட்சுமியின் படமும் இருந்தது.
அதைப் பார்த்ததும் ஜெயக்கொடி, தனக்கொடி, சந்தனக்கொடி மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. “என் அம்மா இருந்திருக்க, இந்த வீட்டுக்கு வந்துட்டு போயிருப்போம். இவள் என் அம்மாவைப் போட்டோ ஆக்கி மாலை போடுறா!” என நினைத்துக் கொண்டார்கள்.
பூங்கொடி அன்புசெல்வனை முறைத்துப் பார்த்தாள். வெறுப்பாக இருந்தது.
“அன்பு, கிழக்கு பார்த்து விளக்கை ஒளிர வைக்க சொல்லு கண்ணு,” என அன்னம் கூற, தனக்கொடி தன் மகளின் பக்கம் சென்றவர், “அமுலி, விளக்கு ஏத்து. குடும்பம் செழிக்கணும், குலம் தழைக்கணும், சீக்கிரமே வரம் கொடு,” என்று சொல்லி விளக்கு ஏத்தக் கொடுத்தார்.
அன்னம் ஒரு ஓரமாக நின்றுகொள்ள, “மா, வா போலாம்,” என அன்புசெல்வன் வெளிய வந்துவிட்டான்.
பூங்கொடி விளக்கு ஏற்றிச் சாமி கும்பிட்டாள். அவளின் அம்மா சொன்னதை போலவே…
“என்ன மா, பண்ற?”
“இது சடங்கு கண்ணு,” என அப்பளம் மற்றும் பூப்பந்து என சாங்கிய விளையாட்டுகளுக்குத் தேவையான அனைத்தையும் எடுத்து வைத்தார்.
சிவராமன் பெரிய வீட்டைப் பார்த்தார். “எல்லாமே என் பொண்ணுக்குத்தான். எப்படியும் இந்த வீடு ஒரு கோடிக்குத் தேறும்,” என கணக்கு போட்டது அவர் மூளை.
அனைத்து விளையாட்டிலும் அவளையே ஜெயிக்க வைத்தான் அன்பு.
அன்புசெல்வன் மற்றும் பூங்கொடி இருவரும் வெளியே வர, அன்னலட்சுமியின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.
“என்ன அன்னம், இப்போ எதுக்கு அழற?”
“இல்லைங்க மாமா! இத்தனை நாளும் கைக்குள்ள வச்சிருந்தேன் என் பையனை! இப்போ கல்யாணம் ஆகிடுச்சு. இது ஆனந்தக் கண்ணீர்,” என்றார் அன்னலட்சுமி.
“உங்க பையனை நாங்க ஒண்ணும் கடத்திட்டு போகல,” எனப் பூங்கொடி துடுக்குடன் கூறிவிட, அனைவரும் ‘களுக்’ எனச் சிரித்தார்கள்.
“என்னடி பேசுற? பெரியவங்க முன்னாடி?” என தனக்கொடி மிரட்டினார்.
அன்பு சிரித்தபடி, “அன்னம்!! என்ன நீ? எதுக்கு அழற? இங்கே ஒரு மைல் நடந்தா தெக்கு புதுப்பாளையம். நான் ஒண்ணும் தூரமா போகலையே, அக்கா வீட்டுக்குத்தானே போறேன்,” என்றான்.
“ம்ம்… சிவராமன் மச்சான், இல்லல்ல… மருமகன் ரொம்ப பொறுப்பா பேசுறார். அம்மாவையே இப்படித் தாங்குறார், அப்போ பொண்டாட்டிய சொல்லவே வேணாம். அதும் இல்லாம பொண்டாட்டி அக்கா மகள் வேற… சக்கரவர்த்தி அவரோட பேத்தியவே தன் பையனுக்கு மருமகள் ஆக்கிட்டார்,” எனப் பேசினார்கள்.
அனைத்தும் நல்லபடியாக முடிய, இரவு சடங்கு வந்தது.
அன்புசெல்வன் அங்கே அலமாரியில் இருக்கும் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தான்.
இதோ, தடாலடியாக உள்ளே நுழைந்தாள் பூங்கொடி.
“அன்பு…?”
தொடரும்…
do like and share pradhanyakuzhalinovels