மன்னவன் பூங்கொடி மார்பிலே

by Pradhanya kuzhali
826 views

Episode -8

‘எப்படியும் இந்த கல்யாணம் நின்றுவிடும்’ என்ற மனநிலையில் தான் அன்புசெல்வன் இருந்தான். 

‘தன்னை பிடிக்காத ஒருத்தியுடன் எப்படி வாழ முடியும்? அவளால் தன்னுடன் வாழ முடியாது,’ என ஓரிடத்தில் அமர்ந்திருந்தான். 

சங்கீதா மற்றும் மேகலா இருவரும் அன்பு செல்வனைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். 

பூங்கொடி அவனிடம் பேசிய அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தாள் மேகலா. 

மேகலா இப்போது கல்லூரி முதலாமாண்டு. கல்லூரியிலும் சரி, வெளியிலும் சரி அன்புசெல்வனைப் பார்த்திருக்கிறாள். அவனை அவளுக்கு மிகவும் பிடிக்கும். எதையோ யோசித்தவள் நேராக அன்புசெல்வனின் அருகில் வந்தாள். 

“மாமா,” எனக் குழைவாக அழைத்தாள். 

“யார் இது? மேகலா பொண்ணு தான?” என அன்பு சட்டென இயல்பு நிலைக்கு வந்து பேசினான். 

“மாமா, எனக்குத் தெரியும். உங்களுக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்ல, தானே? அக்காவுக்கும் விருப்பம் இல்ல,” என்றாள் மேகலா. 

“அது வந்து பெரியவங்க விஷயம் டா,” என அன்பு கூற…

“எனக்கு எல்லாமே தெரியும் மாமா! நீங்க மழுப்பி பேச வேண்டாம். எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். உங்களையே ‘வேணாம்’னு சொல்ற பூங்கொடி அக்காவை நீங்க எதுக்குக் கல்யாணம் பண்ணனும்? என்னைக் கட்டிக்கோங்க. எனக்கு உங்களை சின்ன வயசுல இருந்தே பிடிக்கும். என்னை எங்கே பார்த்தாலும் நீங்க பேசுவீங்க. நான் எதுவும் கேட்டால் உடனே வாங்கித் தருவீங்க,” என்றாள். 

“அய்யோ! பாப்பு! என்னடா இப்படி எல்லாம் பேசுற? இது சின்ன விஷயம் இல்ல.”

“மாமா! நான் ஒன்னும் சின்னக் குழந்தை இல்ல. நான் மேஜர். எனக்கு 18 வயசு, தெரியுமா?”

அன்புசெல்வன் அவளைப் பார்த்து, “தங்கம், நான் உன்னை அப்படி நினைக்கல, பொண்ணு. எனக்கு நீ குழந்தை டா! இப்படி கண்டதை நினைச்சிட்டு இருக்காத! போ! உன்னை அம்மா தேடப்போறாங்க, ஓடு!” என அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். 

“மாமா! ஒருவேளை இந்தக் கல்யாணம் நின்னுட்டா, நீங்க என்னைக் கட்டிக்கணும்,” எனக் கையைப் பிடித்தாள் மேகலா. 

“பாப்பா, அடி வாங்கப்போற நீ!” எனக் கையை உதறினான் அன்பு. 

மேகலா, ‘எப்படியும் இந்தக் கல்யாணம் நின்றுவிடும்’ என நம்பினாள். கடைசியாகச் சொல்லலாம் எனத் திரும்பியவள், அங்கே அனைத்தையும் சங்கீதா பார்த்துக்கொண்டிருக்க, அவளின் அருகில் சென்றாள். “இதைப்பத்தி யார் கிட்டயும் சொன்ன, அப்புறம் உன்னையும் சேர்த்து மாட்டிவிடுவேன்,” என மிரட்டினாள். 

“எனக்கு எதுவும் தெரியாது. நான் எதையும் பார்க்கலை,” என ஓடி விட்டாள் சங்கீதா. 

சிவராமன் முன்னால் பூங்கொடி நின்றிருந்தாள். 

“சொல்லு, பொண்ணு. போலீஸ் ஸ்டேஷனுக்குத்தானே போன் பண்ண?” எனக் கேட்டார் சிவராமன். 

பூங்கொடி எதுவும் பேசாமல் நின்றிருக்க…

“உனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்ல. அதானே?”

“அப்பா! எனக்கு அவனைப் பிடிக்கலப்பா! அவன் ஒரு ‘பொம்பளை பொறுக்கி’. அவனை எப்படி?” எனப் பூங்கொடி கோபத்துடன் பார்த்தாள். 

“யாரு? அன்புசெல்வனா? அது மட்டும்தான் உனக்குப் பிரச்சினையா?” எனச் சிவராமன் கேட்க…

“அவன் அன்னலட்சுமி பையன் பா!”

“அவங்க உன்னோட அம்மச்சி. உங்க அம்மா சொல்ற எல்லாத்தையும் மனசுல வச்சிட்டு ‘வேணாம்’னு சொல்லாத. நீ பண்ண எல்லா விஷயத்தையும் சுந்தரேசன் சொல்லிட்டான். பணம் கொடுத்த?” என மேலும் கீழுமாகத் தன் மகளைப் பார்த்தார். 

“ஆமா, போய் சொன்னேன் அவன்கிட்ட… ‘என்னை பிடிக்கலன்னு’ சொல்லச் சொல்லி…” என்றாள் பூங்கொடி. 

“ஈரோடு, கரூர், நாமக்கல் எல்லா டிப்போலயும் அன்புசெல்வன் மாதிரி ஒருத்தனைப் பார்க்கவே முடியாது. சதீஷ் என்ன வேலை செய்யறான்? தண்டத்துக்குச் சுத்திட்டு, பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு, ‘பேருக்கு வேலைக்குப் போறேன்’ அப்டின்னு ஈரோடு போயிட்டு வர்றான். ஒரு வேலைக்கு பிரயோஜனம் இல்லை. சத்யா கண்ட வேலை பார்த்திட்டு வர்றா! அவளை என் பையனுக்கு கட்டிக்கொடுக்க கேட்கிறான் சதீசு.”

“மனோரஞ்சிதம் குடும்பம் சரி இல்லை. உன் மாமன் ரொம்ப நல்ல பையன். அன்னலட்சுமி அத்தை உன்னை, உங்க அம்மாவை விட நல்லாப் பார்த்துக்குவாங்க. நான் சின்ன வயசுல இருந்து பார்த்திருக்கேன். உங்க அம்மாவை வளர்த்தது எல்லாமே அவங்கதான். அது உன்னோட வீடு. உன்னோட தாத்தா இருக்கா. ‘என் கண்ணு முன்னாடி என் பொண்ணு இருக்கா’ அப்டின்னு நான் சந்தோஷமா இருப்பேன்,” என்ற சிவராமன், “இந்தக் கல்யாணம் நின்னுட்டா, என்னை நீ..!!” என்று நிறுத்திவிட்டு வேகமாக நடந்தார். 

“அப்பா!!” என அழைத்துக்கொண்டே ஓடினாள் பூங்கொடி. 

சிவராமன் எதுவும் பேசாமல் கண்கள் கலங்க உள்ளே சென்றார். “டாடி,” என அவரின் கையைப் பிடித்த பூங்கொடி, தன் அப்பாவைக் கட்டிக்கொண்டு, “நான் அவனைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்,” எனக் கூறினாள். 

“நிஜமா? என் மேல சத்தியம் பண்ணு!” எனச் சிவராமன் கேட்க…

“டாடி! என்னை நம்புங்க! நான் அன்பு மாமாவைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்,” என்றாள் பூங்கொடி. 

சிவராமன் முகம் சட்டென மலர… தன் மகளின் கையைப் பிடித்துக் கன்னத்தில் ஒற்றிக்கொண்டவர். “இது போதும் எனக்கு! சரி, வா! எல்லாரும் சாப்பிடுறாங்க. உனக்காக மாப்பிள்ளை காத்திருப்பார்,” என அழைத்துச் சென்றார். 

அன்புசெல்வன் ஓரிடத்தில் நின்றிருந்தான், விட்டோத்தியாக… 

மேகலா வழியச் சென்று அன்னலட்சுமியிடம் பேசி ஒட்டிக்கொண்டிருந்தாள். ‘எப்படியும் நம்ம அன்பு மாமாவைக் கட்டிக்கலாம்’ என்ற எண்ணத்தில் அனைத்து வேலையும் செய்து கொண்டிருந்தாள். 

“மாப்பிள்ளை,” எனச் சிவராமன் உற்சாகத்துடன் அழைக்க, அங்கிருக்கும் அனைவரின் பார்வையும் ஒரே நேரத்தில் சிவராமன் மீது திரும்பியது. 

சக்கரவர்த்தி தன் மகனைப் பார்த்துக்கொண்டிருந்தார். 

“சொல்லுங் மாமா,” என அழைப்புறும் கண்களுடன் அன்பு பார்த்தான். 

சிவராமன் பூங்கொடியைப் பார்க்க… அவள் நேராக அவன் பக்கம் சென்றவள், “வாங்க மாமா, சாப்பிடலாம்,” எனச் சேரை இழுத்துப் போட்டாள். 

மணிமேகலை சிரித்துக்கொண்டே பார்க்க, சங்கீதா தனது அக்கா மேகலாவைப் பார்த்தாள். 

அன்பு திகைத்துப்போய் நிற்க…

“மணி, சீக்கிரம் வா! இலை போடு, நான் பரிமாறேன்,” என்றவள் முந்தியை இடையில் சொருகினாள். 

சந்தனக்கொடி அவ்விடத்துக்கு வந்து, “அமுலி, நீ உட்காரு. நான் வைக்கிறேன்,” என இருவரையும் ஜோடியாக அமர வைத்துப் பரிமாறினார். 

மேகலா வெறுப்புடன் பார்த்தவள் அவ்விடத்தை விட்டுச் சென்று விட்டிருந்தாள். 

அன்பு திகைப்புடன் அமர்ந்திருக்க, பூங்கொடி சுற்றிலும் அனைவரையும் பார்த்துக்கொண்டே உணவை கொஞ்சம் வாயில் வைத்தாள். 

“போலீஸுக்குப் போன் பண்ணலையா?” என அன்புசெல்வன் கேட்க…

பூங்கொடி கோபத்துடன் அருகில் இருப்பவனைப் பார்த்தாள். 

“பாப்பா!!” என அன்புசெல்வன் பேச வர…

“பாப்பா சொல்லாத! என்னைப் பார்த்தால் உனக்கு எப்படித் தெரியுது?” எனப் பூங்கொடி கொந்தளித்தாள். 

“அப்படி என்ன பேசுற? கொஞ்சம் சத்தமா பேசு,” என வந்து நின்றாள் மணிமேகலை. 

“எதையாவது எடுத்து அடிச்சிடுவேன், ஓடிடு,” எனப் பல்லைக் கடித்தவள், அனைவரும் பார்ப்பதை உணர்ந்து சட்டெனச் சிரித்தபடி முகத்தை வைத்துக்கொண்டாள். 

அன்புசெல்வன் அமைதியாக உணவைச் சாப்பிட்டான். அதுவும் நேர்த்தியாக…

“என் அப்பாவுக்காக மட்டும்தான் உன்னைக் கட்டிக்கிறேன். உன்னை எனக்குச் சுத்தமா பிடிக்கல,” எனக் கோபமாகப் பேசினாள். 

“ஓகே, லீவ் இட். உன்னை நான் எதுவும் கேட்க மாட்டேன்,” என்றவன் ஒரு பெருமூச்சுடன் உணவைச் சாப்பிட்டான். 

அனைத்தும் எப்படியோ நல்லபடியாக முடிந்தது. தனக்கொடி தன் மகளை வித்தியாசமாகப் பார்த்தாள். 

“தனம், அமுலியையும் உன் தம்பியையும் வரச் சொல்லு. மண்டபத்துக்கு முன்னாடி ஒரு பேனர் வைக்கணும். அதுக்கு போட்டோ எடுக்கணும்,” என்றார் சிவராமன். 

“என்ன மாமா, அவள் எப்படி இதுக்கு ஒத்துக்கிட்டா?” எனத் தனம் சந்தேகமாகக் கேட்க…

“அவள் என் பொண்ணு!” என்றவர் கர்வப் புன்னகையுடன் முன்னால் சென்றார். 

“அமுலி, போட்டோ எடுக்க அப்பா வரச் சொல்றாரு,” என அழைத்தார் தனம். 

“ம்… மா,” என அவள் போனை நோண்டிக்கொண்டே முன்னால் நடக்க…

“ஹே, அவன் எங்கே?”

“வேற எங்கே இருப்பான்? அன்னலட்சுமி அம்மா கிட்ட உட்கார்ந்து பேசிட்டு இருக்கான்,” எனப் பூங்கொடி சொல்லிக்கொண்டே சென்றாள். 

தனம் நேராகத் தன் அப்பாவின் அருகில் சென்றவள், “மாப்பிள்ளை, பொண்ணை போட்டோ எடுக்கணும். அதனால வரச் சொன்னாங்க,” என்றார். 

“இதோ வரேன்,” என அன்பு எழுந்தான். 

“அதென்ன ‘அன்பு வரேன்னு’ சொல்ற? அவங்க உன்னோட மாமியார். அதனால ‘அத்தைன்னு’ கூப்பிடு!!” என்றார் சக்கரவர்த்தி. 

தனம் கோபத்துடன், ‘இந்த அய்யனுக்கு வாய் கொழுப்பு ஜாஸ்தி போல. அத்தையோ… யாருக்கு யார் அத்தை?’ எனத் தனம் பொங்கிக்கொண்டு பார்க்க…

“அப்பா, கம்முன்னு இருங்கப்பா,” என அன்பு அடக்கப்பட்ட சிரிப்புடன் கூற…

“என்னாச்சு?” என ஜெயக்கொடி மற்றும் சந்தனக்கொடி இருவரும் வந்தார்கள். 

“அந்த அன்புசெல்வனுக்கு நான் ‘அத்தை’யாம்!” எனத் தனக்கொடி பட்டாசு போல வெடித்தார். 

“அதெப்படி அத்தையாக முடியும்? அவன் தம்பி முறைதான! தம்பி எப்படி அக்காவை அத்தைன்னு சொல்ல முடியும்?” என ஜெயக்கொடி கூறிவிட…

சக்கரவர்த்தி சிரித்துக்கொண்டே எழுந்தார். 

அன்னலட்சுமியும் கூட மெல்லிய புன்னகை சிந்தினார். 

“மாப்பிள்ளை,” எனச் சிவராமன் அழைக்க…

“வரேன் மாமா,” என அவன் சென்று விட்டான். 

போட்டோகிராபர் அன்புசெல்வனைப் பார்த்து, “பொண்ணோட இப்படி நில்லுங்க சார்,” எனப் படத்தைக் காட்டினார் இருவரிடமும்…

அன்பு எச்சில் விழுங்கிக்கொண்டே பூங்கொடியைப் பார்த்தான். 

“ஓகே, பொசிஷன் வாங்க!!” 

பூங்கொடி அவனைப் பார்க்க… அன்பு வேறு புறம் திரும்பிக்கொண்டே அவளின் அருகில் நெருங்கியவன், இடையைப் பிடித்தான். 

பூங்கொடி…?

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment