Episode -9
“நீங்க கட்டிக்கப்போற பொண்ணுதான் சார்! தோல் மேல கையைப் போடுங்க! ஒரு கை தோல் மேலே இருக்கணும், இன்னொரு கை இடுப்பைப் பிடிச்சிருக்கணும்,” என ஃபோட்டோகிராபர் கூற,
அன்பு செல்வன் தயக்கத்துடன் தனக்கு அருகில் இருப்பவனைப் பார்த்தான்.
பூங்கொடி முறைத்தபடி நின்றிருந்தாள்.
“பாப்பா!” என அன்பு செல்வன் அழைக்க, “டேய், பாப்பா சொல்லாத! உன்னை…” என்று பற்களைக் கடித்தாள் பூங்கொடி.
“ஃபோட்டோ எடுத்தாச்சா?” என சிவராமன் அவ்விடத்துக்கு வர,
அன்பு செல்வன் நகர, பூங்கொடி சட்டென அவனது கைகளைப் பற்றி இடையில் வைத்தாள்.
அன்பு அவளை அதிர்ந்து பார்க்க, பூங்கொடி தலையைக் குனிந்தபடி நின்றாள். அவளின் நெருக்கம் ஆணவனுக்குப் புதுவித உணர்வைக் கொடுத்தது.
அன்பு தனக்கே தெரியாமல் அவளின் இடையைப் பற்ற, “ஹக்!” என விக்கித்துப் பார்த்தாள் பூங்கொடி வேக மூச்சுடன்.
“ஹான், ஷாட் சூப்பர்! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!” என ஃபோட்டோகிராபர் அழைக்க,
இருவரும் ஒரே நேரத்தில் திரும்பினார்கள். ‘கிளிக், கிளிக், கிளிக்’ எனப் படம் பிடிக்கப்பட்டது.
வேகமாக பூங்கொடி விலகும்முன் அன்பு செல்வன் விலகியிருந்தான்.
“செம்மையா வந்திருக்கு,” என சிவராமனிடம் காட்டியவன், “இதையே ஃபிளெக்ஸ் பிரிண்ட்டுக்குக் கொடுக்கலாம். நல்லாருக்கு,” என்றான்.
சிவராமன் ஃபோட்டோவைப் பார்த்து திருப்திப்பட்டுக்கொண்டவர், “அதை என்னோட செல்லுக்கு அனுப்புங்க தம்பி,” என்று வாங்கிக்கொண்டார்.
“மாமா, அவ்ளோதாங்க! நாங்க புறப்படுறோம்,” என அன்பு செல்வன் கூற,
“இருங்க மாப்ளை! சாப்பிட்டுப்போட்டு ராத்திரி தூங்கப்போங்க!” என சிவராமன் அழைத்துச் சென்றுவிட்டார்.
மேனகா அவளுக்காகக் காத்திருந்தாள். கண்களில் நீர் கோர்க்க அறைக்குள் நுழைந்தாள் பூங்கொடி. மிகவும் வெறுப்பாக இருந்தது.
“அக்கா,” என மேனகா அருகில் வந்து அமர்ந்தாள்.
“ம்ம், என்ன விஷயம்?”
“உனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லன்னு தெரியும். அப்புறம் எதுக்குக்கா ஒத்துக்கிட்ட?” என மேனகா கேட்க,
கண்களைத் துடைத்தவள், “வேறு வழி தெரியல மேனகா! அப்பா உறுதியா சொல்லிட்டாரு!” எனப் பெரிய மூச்சை விட்டாள்.
“அக்கா, என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு. நீ அதை மட்டும் கேளு! அப்புறம் இந்தக் கல்யாணத்தில் இருந்து தப்பிச்சிடுவ! பெரியப்பாவும் எதுவும் சொல்ல மாட்டார்.”
“அப்படியா? என்ன ஐடியா?” என பூங்கொடி ஆர்வத்துடன் பார்த்தாள்.
“அன்பு மாமாவை உனக்குப் பிடிக்கல! ஆனா அவரை…” என மேனகா ஆரம்பிக்க,
“மேனகா, மேனகா,” என சொல்லிக்கொண்டே உள்ளே வந்தாள் சங்கீதா.
“என்னடி? நான் அக்காகிட்ட பேசிட்டு இருக்கேன். நீ வெளியே போ!” எனக் கத்தினாள் மேனகா.
“உன்னை அம்மா உடனே வரச் சொல்லுச்சு! வா!” என சங்கீதா விடாப்பிடியாக நிற்க,
“அக்கா, வந்து சொல்றேன்,” என மேனகா கடுப்புடன் சென்றாள்.
அங்கே ஜெயக்கொடி நின்றிருந்தவர், “அவசரமா வீட்டுக்கு போகணும். வண்டி எடு!” என்று நின்றார்.
“மா, அப்பாவை கூட்டிட்டுப் போயிட்டு வாங்க!” என மேனகா சொல்லிவிட்டுத் திரும்ப,
“உன்ற அப்பாரு பெரியப்பாகூட மண்டபம் வரைக்கும் போயிருக்காரு! நீ வா!” என ஜெயக்கொடி காரின் கீயை எடுத்து நீட்டினார்.
“உடனே வந்திடுவோம் தானே?”
“ம்ம், வா போலாம்,” என ஜெயக்கொடி மீண்டும் கூற,
மேனகா ஒரு பெருமூச்சுடன் காரை எடுத்தாள். அடுத்த அரை மணி நேரத்தில் நொய்யல் வந்து சேர்ந்தார்கள்.
ஜெயக்கொடி போனில், “சந்தனம், நான் ரெண்டு பவுன் எடுத்திட்டு வர்றேன். நீ என்ன பண்ற?” எனக் கேட்டார்.
“ஹே, அமுலிக்கு மட்டும் போடப் போறியா? அன்புக்கு? இனி அவன்தான் நம்ம பிள்ளைகளுக்கு தாய்மாமன். அவனுக்கும் நம்ம எதுவும் பண்ணணும்ல.”
“அவனுக்கு பண்றதுல எனக்கு பிரச்னை இல்லை. ஆனால் அந்த அன்னம்! அவளைப் பார்த்தாலே வயிறு வாழுது,” என்றார் ஜெயா.
“அன்புக்கும் அமுலுக்கும் கல்யாணம் மட்டும் முடியட்டும். அப்புறம் மொத்தமா அவனை நம்ம வழிக்குக் கொண்டு வந்துடலாம். இனி அவனை அமுலி புருஷனா யோசி ஜெயா. நான் என்ற வீட்டுக்காரர்கிட்ட பேசிட்டேன். தங்கக் காப்பு செய்யறேன்னு போயிருக்கார். அமுலுக்கு வளையல் செஞ்சு வச்சிருக்கேன். நீ என்ன பண்ணப் போற?”
“உனக்கு ஒரு ஆம்பள பையன் இருக்கான், அதனால நீ காப்பு செய்வ! நான் ரெண்டு புள்ளையை பெத்து வச்சிருக்கேன். அவனுக்கு அரை பவுன் மோதிரம், அமுலுக்கு ரெண்டு பவுன் செயின் போடப் போறேன்,” என்றார் ஜெயா.
“அவன் பேர்லதான் வீடு இருக்குது. அமுலுக்கே பத்து பவுன் கொடி செய்யக் கொடுத்திருக்கான். இந்த அன்னம் நம்ம அப்பாவை மயக்கி ஏதாவது பதுக்கி வச்சிருப்பா! இனி தனம் அப்படியே ஒட்டிப்பா! நம்ம எதுவும் கரக்கணும்னா இதையெல்லாம் செஞ்சுதான் ஆகணும்,” என்றாள் சந்தனம்.
“அப்படியா சொல்ற? பத்து பவுனா? இது முதல்லயே தெரிஞ்சிருந்தா மேனகாவைக் கட்டி வச்சிருப்பேன் அவனுக்கு. என் புள்ளை பெரிய வீட்ல வாழ்ந்திருப்பா!” என்றார் ஜெயக்கொடி.
சந்தனம் சிரித்துக்கொண்டே, “மாமா, அதாவது உன்ற புருஷன்தான் சிவராமன் மாமாவுக்கு யோசனை சொன்னபடியாம் என்ற வீட்டுக்காரர் சொன்னாரு,” என்றாள்.
தலையில் அடித்துக்கொள்ளாத குறையாகக் கோபம் வந்தது ஜெயாவுக்கு.
“சரி சரி, எடுத்திட்டு சீக்கிரம் வா,” என்று விட்டு போனை வைத்தார் சந்தனக்கொடி.
‘அப்போ அம்மாவுக்குக்கூட இதுல இஷ்டம் போலயே! முதல்லபோய் பூங்கொடி அக்காகிட்ட கல்யாணத்தை நிறுத்த சொல்லிட்டு, அம்மாவோட சம்மதத்தின் பேரில் நானே என்ற மாமனைக் கட்டிக்கப் போறேன்,’ எனத் திட்டத்துடன் உற்சாகமானாள் மேனகா.
அன்பு செல்வன் அவனது நட்பு வட்டம் அனைவரையும் திருமணத்துக்கு அழைத்துக்கொண்டிருந்தான்.
மணிமேகலை அவளின் கையில் மெஹந்தி வைத்துவிட்டுக்கொண்டிருந்தாள்.
பூங்கொடி முகத்தைச் சோகமாக வைத்திருக்க, அந்த நேரம் பார்த்து அங்கே அன்னம் வந்தார்.
“அம்மச்சி, உள்ளே வாங்க!” என மணிமேகலை சிரிப்புடன் அவரை அழைக்க,
“ப்ச்,” என பூங்கொடியின் முகம் அஷ்ட கோணலாக மாறியது.
“அமுலு,” என அன்னம் அழைக்க,
“இந்தாருங்க, எனக்கு துளிகூட இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை. என் அப்பா சொன்னதுக்காக மட்டும்தான் உங்க பையன் சீமதுரையைக் கட்டிக்கிறேன்,” என முகத்தில் அடித்தாற்போலப் பேசினாள் பூங்கொடி.
“ஹே பூங்கொடி, அறிவு இருக்காடி! எதுக்கு அப்படிப் பேசுற! அவங்க உன்னோட அம்மச்சிடி!”
“யாரு எனக்கு அம்மச்சி? ‘அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை பிடிப்பானாம்.’ இங்கே அற்பன் அன்னலட்சுமி, அப்புறம் அது பெத்த அன்பு செல்வன். என் பக்கத்துல நிக்க அந்த பஸ் கண்டக்டருக்கு என்ன தகுதி இருக்குது? என்ற அம்மச்சி இடத்தை பிடிச்ச,” என பூங்கொடி பேசிக்கொண்டே செல்ல,
அன்ன லட்சுமியின் கண்களில் நீர் கொட்டியது. அந்த வயதான பெண்மணி நிலைகுலைந்து போனார்.
“ஹே வாயை மூடு பூங்கொடி,” என மணிமேகலை அவளை அடக்கிவிட்டு, “அம்மாச்சி, நீங்க வாங்க! அவள் கொஞ்சம் அப்படிதான். நீங்க எதையும் மனசில வச்சிக்காதீங்க அம்மாச்சி,” எனச் சொல்லி சக்கரவர்த்தி இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றாள் மணிமேகலை.
சக்கரவர்த்தி ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு சங்கீதா, பிரியா, பரணி என அனைவருடனும் பேசிக்கொண்டிருந்தார். பிரியா தன் தாத்தாவின் கையில் இருக்கும் முடியைச் சீப்பு வைத்து சீவிக்கொண்டிருக்க, பரணி தன் தாத்தாவுடன் கதையளந்துகொண்டிருந்தான்.
அன்னலட்சுமி தனக்கு அருகில் வந்ததை இப்போதுதான் கவனித்தார்.
“அன்னம், என்னாச்சு?” என சக்கரவர்த்தியின் புருவம் இடுங்கிப் போக,
“இத்தனை நாள் நான் உங்களைக் கட்டிக்கிட்டதுக்கு வருத்தப்படல மச்சான். ஆனா இன்னைக்கு வருத்தமா இருக்குங்க மச்சான்,” என கண்களில் நீர் கோர்க்க விம்மிக்கொண்டே கூறினார் அன்னலட்சுமி.
“என்ன அன்னம், உளறிட்டு இருக்க? யாராவது எதுவும் சொன்னாங்களா?” என சக்கரவர்த்தி கேட்க,
“இல்லைங்க மச்சான். ஒண்ணுமில்ல,” எனச் சேலையின் தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டவர் அமைதியாக எழுந்தார்.
“அன்னம்!” என எழுந்த சக்கரவர்த்தி தன் மனைவியைத் தனியாக அழைத்துச் சென்று விசாரித்தார்.
“என்னாச்சு அன்னம்?”
“நீங்க என்னை கட்டியிருக்கக் கூடாது மச்சான்.”
சக்கரவர்த்தி தன் மனைவியின் கையை கோர்த்துக்கொண்டவர், “பல்லு போன வயசுல கூட இன்னும் பழைய பஞ்சாங்கத்தைப் பேசாத அன்னம்,” எனக் கோபமாக கூறினார்.
அன்னம் கண்களைத் துடைத்துக்கொண்டு வேறு புறம் திரும்பிக்கொள்ள,
“எனக்குத் தெரியும். அக்காகாரிங்க மூணு பேரும் சாதாரணப்பட்டவகள் இல்ல. அதுக்குத்தான் நான் இந்தக் கல்யாணம் வேணாம்னு சொன்னேன்,” என்றார் சக்கரவர்த்தி.
“மச்சான்,” என அன்னம் அழைக்க,
“உன்னைக் கட்டிக்க விஜயா தானே சொன்னாள். விஜயாவோட சம்மதத்தின் பேர்ல தானே நம்ம கட்டிக்கிட்டோம். அப்புறம் என்ன அன்னம்? இருபத்தி எட்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயத்தை இப்போ பேசுற? நான் முதல்ல யாரை பரிசம் போட வந்தேன்னு இந்த ஊர்ல இருக்க தம்பிதுரை, வெள்ளியங்கிரி எல்லாருக்கும் தெரியும். இப்போகூட என்னால இவளுங்க வாயை அடக்க முடியும்.”
“மச்சான், அப்படிப் பண்ணிடாதீங்க!” என இன்னும் அழுதார் அன்னம்.
“என் வீட்டுக்காரி அழறத என்ற பையன் பார்த்தானா இந்தக் கல்யாணம் நிக்கணும்,” என சக்கரவர்த்தி சொல்ல வேகமாக கண்ணைத் துடைத்தார் அன்னம்.
“நீ ஓவரா பேசுற பூங்கொடி,” என மணிமேகலை கொதித்து எழுந்தாள்.
“அந்தப் பொம்பளைகிட்ட அப்படித்தான் பேசணும்,” என்று சொல்லி படுத்துக்கொண்டாள் பூங்கொடி.
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. இதோ மேனகா என்ன செய்யப்போகிறாள்?
தொடரும்…
do like and share pradhanyakuzhalinovels