Epi -2
வீரேந்திரன் தனது நெற்றியில் வீங்கியிருந்த இடத்தை தேய்த்துக்கொண்டே, ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது விழிகளில் அனல் தெறித்தது. “யார் இவள்? எதிர்க்கட்சி சதியா இருக்குமா? எதிரிகளோட சதியா இருக்குமா?” என உள்ளுக்குள் ஆயிரம் யோசனைகள் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு புலி பதுங்குவதைப் போல தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தான்.
அப்போது கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் யுகேந்திரன். வீரேந்திரனின் தம்பி. அண்ணனுக்கு நேர் மாறாக, ஸ்டைலான லினன் ஷர்ட், விலை உயர்ந்த வாட்ச் என ஒரு சினிமா தயாரிப்பாளருக்கே உரிய மிடுக்கோடு வந்தான். ஆம், யுகன் ஒரு தயாரிப்பாளராக இருக்கிறான். வீரா ஒருவித கம்பீரமான அழகு என்றால், யுகன் ஒரு சாந்தமான குணம்; அனைவரையும் ஈர்க்கும் குணம். வீராவைக் கண்டால் அனைவருக்கும் பயம் ஏற்படும், ஆனால் யுகா அப்படி இல்லை; பார்த்ததும் பெண்கள் மயங்கி விடுவார்கள். அப்படி ஒரு குணாதிசயம் கொண்டவன்.
”என்ன அண்ணா… நேத்து அவார்டு ஃபங்ஷன் சூப்பரா முடிஞ்சுது தானே? எந்தக் குறையும் இல்லையே?” என்றவன் தனது அண்ணனைப் பார்த்துக்கொண்டே, “ஆனா நீங்க சீக்கிரமே கிளம்பிட்டீங்க போல? மந்திரி பிஸியா?” எனச் சின்ன சிரிப்புடன் கேட்டான்.
வீரா அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை. “நல்லா முடிந்ததா?” வீராவின் விதியையே நேற்று ஒருத்தி மாற்றி எழுதிச் சென்றுவிட்டாளே? எப்படி அவனால் நிம்மதியாக இருக்க முடியும்? இப்படியான யோசனையில் தனது தம்பி வந்ததையே மறந்திருந்தான்.
”அண்ணா!!” என யுகாவின் கம்பீர குரலில் தான் சுயநினைவுக்கு வந்தவன், “ம்ம்,” என ஒற்றைப் பதில் கொடுத்தான்.
யுகன் தோளைக் குலுக்கிக்கொண்டு, “ஓகே, உன்னோட பிஸி ஷெட்யூல்ல நான் டிஸ்டர்ப் பண்ணல… நீ பாரு, நான் புறப்படுறேன்,” என்று நகர்ந்தான்.
”ஒரு நிமிஷம்,” என கம்பீர குரலில் வீரா அழைக்க, யுகன் “என்ன?” என்பதைப் போல திரும்பினான்.
”சினிமா ஃபீல்டுல இருக்குற எல்லாரையும் உனக்குத் தெரியுமா?”
”கிட்டத்தட்ட எல்லாரையும் தெரியும் அண்ணா. ஏன், திடீர்னு ஒரு டவுட்?” என யுகன் பார்வை இடுங்கியது.
”ஒண்ணுமில்லை… நேத்து வந்திருந்த சில ஆர்ட்டிஸ்ட் பத்தி சரவணன் விசாரிப்பான். அவனுக்கு ஹெல்ப் பண்ணு,” என ஒற்றை வரியில் முடித்துக்கொண்டான் வீரா.
அண்ணனின் முகத்தில் இருந்த அந்த இறுக்கத்தையும், நெற்றியில் இருந்த சிறு காயத்தையும் கவனித்த யுகேந்திரன், ஏதோ விபரீதம் என்று உணர்ந்தாலும், வீராவின் மேனரிசம் தெரிந்தவன் என்பதால் மேற்கொண்டு கேட்காமல், “ஓகே அண்ணே, பார்த்துக்கலாம்,” என இயல்பாகக் கூறிவிட்டு வெளியேறினான்.
சொடக்குப் போட்டபடி அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான் வீரா.
இந்தப்பக்கம் சரவணன், அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளை மிரட்டி, நேற்றைய பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
”சார்… இதோ பாருங்க,” என்று ஒரு செக்யூரிட்டி சுட்டிக்காட்டினான்.
வீடியோவில்… போதையில் தள்ளாடியபடி வீரேந்திரன் அறைக்குள் நுழைகிறான். அடுத்த சில நிமிடங்களில், ஒரு பெண் தள்ளாடியபடியே அந்த அறைக்குள் செல்வது தெரிகிறது. அவளது முகம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அவள் அணிந்திருந்த சுடிதாரும், கையில் வைத்திருந்த மேக்கப் கிட்டும் அவளை அடையாளம் காட்டியது.
”இவள் யாரோ ஒரு நடிகையோட அசிஸ்டென்ட் போல இருக்கே…” என்று சரவணன் முணுமுணுத்தான்.
அடுத்த சில மணி நேரங்களில், ஹோட்டலில் தங்கியிருந்தவர்களின் பட்டியலைச் சரிபார்த்த சரவணன், சீதாவின் புகைப்படத்தைக் கண்டுபிடித்தான். அதை கோப்புகளில் சேகரித்துக்கொண்டு வீராவைப் பார்க்க விரைந்தான்.
”என்னாச்சு?” என்ற கம்பீர குரல் அறையின் நான்கு திசைகளிலும் ஒலிக்க, சரவணன் கோப்பை நீட்டி, “அண்ணா… அந்தப் பொண்ணு பேரு சீதா. நடிகை ஜானவியோட மேக்கப் ஆர்டிஸ்ட். ஏழ்மையான குடும்பம், அம்மா, தம்பி மட்டும்தான். அவள் கோயம்புத்தூர் பக்கம். அவளுக்கு பின்புலம் யாருமே இல்ல. இப்போ ஒரு வுமன்ஸ் ஹாஸ்டல்ல தங்கியிருக்கா,” என முழு விவரத்தையும் ஒப்படைத்தான்.
வீராவின் கண்கள் சுருங்கியது. “ஒரு சாதாரண மேக்கப் ஆர்டிஸ்ட் என் ரூமுக்குள்ள எப்படி வந்தா? அவளுக்கு அவ்வளவு தைரியமா? சரவணா… இப்போ முக்கியமான மீட்டிங் இருக்கு. நாளைக்கு அவள் என் முன்னாடி இருக்கணும். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது. தூக்கிட்டு வா!” என உத்தரவிட்டான்.
மறுபுறம், சீதா தனது ஹாஸ்டல் அறைக்குள் முடங்கிக் கிடந்தாள். படுக்கையில் இருந்து எழுந்து கண்ணாடியின் பக்கம் சென்றவள், தனது தேகத்தைப் பார்த்தாள். நேற்று விடிய விடிய அவளைக் கடித்து முழுங்கிவிட்டான் வீரா. அதில் மிச்சமிருந்தது; அதற்கு ஆதாரமே அவனது பல்தடம்தான். அவனது கத்தி போன்ற பார்வையை நினைக்கையில் இன்னுமே அவளது உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. “அந்த மனுஷன் யாருன்னு தெரிஞ்சா அய்யோன்னு அலறுவாங்களே… எப்படி அந்த ரூமுக்கு போனேன்?” என்று நினைத்தவளுக்கு உடல் வலி கூறு போட்டது. ஆம், அவளுக்கு யாரெனத் தெரிந்துவிட்டது. நேற்று இரவு அனைத்து சின்னத்திரை நடிகர்களுக்கும் விருது வழங்கியது வீரேந்திரன்தான். அவன் ஒரு மத்திய மந்திரி; அதுவும் மிகப்பெரிய செல்வாக்கு, குடும்ப பின்னணி கொண்டவன். “அவனது படுக்கையில் நான்?” அதை விடத் திரும்பி வரும்போது அவனை ஃப்ளவர் வாஷ் கொண்டு மண்டையில் தாக்கிவிட்டு வந்திருக்கிறாள். இதையெல்லாம் நினைத்து அழக்கூட முடியாமல் தவித்தாள். அதே நேரம், அவளின் வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய இடி தனது குடும்பத்தைப் பாதித்துவிட்டால் என்னாகும் என்று பயமும் தொற்றிக்கொள்ள, “எப்படியாவது இந்த ஊரை விட்டு ஓடிவிடலாமா?” என்று கூடத் தோன்றியது.
அடுத்த நாள் வேலைக்குச் சென்ற போதும் அவளால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.
”ஏய் சீதா! அறிவிருக்கா உனக்கு? ஐ-ஷேடோ போடுறதுக்கு பதிலா லிப்ஸ்டிக்கை எடுத்துட்டு வர்ற? என்னடி, கனவுல இருக்கியா?” என ஜானவி எல்லார் முன்னாடியும் கத்தினாள்.
சட்டென்று நிமிர்ந்த சீதாவுக்கு கைகள் நடுங்கியது. “அய்யோ, எவ்வளவு பெரிய தவறு செய்யப் பார்த்தேன்?” என உள்ளுக்குள் பயப்பந்து உருள, வேக வேகமாக, “ஸாரி மேம்… தெரியாம,” எனத் தலை குனிந்து கொண்டாள் சீதா.
ஜானவி அவளைப் பெருமூச்சுடன் கடந்துவிட, சங்கவிதான் பயங்கரமாகத் திட்டினாள். “கொஞ்சம் கூட உனக்கு பொறுப்பே இல்லையா சீதா? உனக்கு இந்த வாய்ப்பு ஜானவி மேடம் தான் கொடுத்திருக்காங்க, உன்னோட கவனம் எங்கே இருக்கு?” என சரமாரியாகக் கேள்வி கேட்டாள்.
”சாரி சங்கவி… பிளீஸ், எனக்கு உடம்பு சரியில்ல…” என்று கூறினாள் சீதா.
சங்கவி சட்டென்று அமைதியாகிவிட, ஜானவி சிகையைச் சரிசெய்துகொண்டு உள்ளே வந்தவள் காதுகளில் சீதா சொன்ன அனைத்தும் விழ, “நேத்துல இருந்து நீ சரியில்ல… போய் ரெஸ்ட் எடுத்திட்டு, உடம்பு சரி செஞ்சுக்கிட்டு வா!” என்று போனஸ் பணத்தை நீட்டினாள்.
சீதா கண்களில் நீருடன் கைகளைக் கூப்பி வாங்கிக்கொண்டவள், “ரொம்ப தேங்க்ஸ் மேடம்,” என்றாள். ஜானவி கண்டிப்புடன் நடந்துகொண்டாலும் மிகவும் நல்லவள்; மிகவும் பெருந்தன்மையான குணம் கொண்டவள்.
சங்கவி பரிவுடன், “போய் ரெஸ்ட் எடு,” என்று அனுப்பி வைக்க, “இல்ல, சாயங்காலம் வரைக்கும் கேரவன்ல ஓரமா கீழே தூங்கிக்கிறேன். சாயங்காலம் போறேன் சங்கவி,” என்றாள் சீதா.
”சரி, டேப்லெட் போட்டியா?” என சங்கவி கேட்டுக்கொண்டிருக்க, “சங்கவி!” என ஜானவியின் குரல் கேட்டது. “இதோ மேடம்,” என்றவள், “மாத்திரை போட்டு படுத்துக்கோ,” என வேகமாக ஓடிவிட்டாள்.
சீதாவுக்கு மிகவும் பயமாக இருந்தது. ஒவ்வொரு நிமிடமும் கண்களை மூடினால் கூட வீராதான் கண் முன் வந்து நின்றான். “அய்யோ!” என கண்களில் நீர் கோர்க்கப் புலம்பியபடி நிம்மதியில்லாமல் தவித்தாள்.
அன்று மாலை வேலை முடிந்து, படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியே வந்து பஸ் ஸ்டாப்பிற்கு நடக்கத் தொடங்கினாள். அவள் தனியாக இருப்பதைக் கவனித்த சரவணன், ஒரு கருப்பு நிற காரை அவளுக்கு அருகில் நிறுத்தினான். கண்ணிமைக்கும் நேரத்தில் காரிலிருந்து இறங்கிய இருவர், சீதாவின் வாயைப் பொத்திக் காருக்குள் இழுத்துப் போட்டனர்.
”யார் நீங்க? அய்யோ, யாரு?” என அழுதபடி அவள் கேட்க, “விசாரிக்கத்தான் கூட்டிட்டுப் போறோம். பயப்பட வேணாம். இது கான்ஃபிடென்ஷியல்,” என்று மட்டும் ஆண் குரல் கேட்டது.
சுமார் ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, கார் ஒரு பண்ணை வீட்டின் வாசலில் நின்றது. கண்கள் கட்டப்பட்ட நிலையில் உள்ளே இழுத்து வரப்பட்ட சீதா, ஒரு நாற்காலியில் அமர்த்தப்பட்டாள். அவளது கட்டுகள் அவிழ்க்கப்பட்ட போது, எதிரே இருந்த பிரம்மாண்டமான சோபாவில் காலின் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான் வீரேந்திரன். அவனது கையில் ஒரு காகிதக் கத்தி (Paper cutter) இருந்தது. அதைக் கூர்மையாகப் பார்த்துக்கொண்டிருந்தவன், மெல்ல நிமிர்ந்து சீதாவைப் பார்த்தான்.
”மீண்டும் சந்திப்போம்னு நினைக்கவே இல்லை… சீதா,” என அவன் குரல் கணீரென்று ஒலிக்க, சீதா பயத்தில் அப்படியே தரை விரிப்பில் சரிந்து விழுந்து கைகூப்பினாள்.
”சார்… தெரியாம நடந்துடுச்சு சார்… என்னை விட்டுடுங்க… என் தம்பி பாவம் சார்,” என விக்கித்து அழுதாள்.
வீரா மெல்ல எழுந்து அவளை நோக்கி நடந்தான். அவளது அருகில் குனிந்து, “தெரியாம நடந்ததுன்னு எதைச் சொல்ற? என் ரூமுக்கு வந்ததையா… இல்லை…” என்று நிறுத்தியவன், இரவில் அவர்களுக்குள் நடந்த விஷயத்தை மறைமுகமாக அவளுக்கு நினைவுபடுத்தி, “…என்னை ஃப்ளவர் வாஷ்ல அடிச்சிட்டு ஓடுனதையா? உன் பின்னாடி இருந்து ஆட்டுவிக்கிறது யாருன்னு சொன்னா… உன்னை உயிரோட விடுவேன்,” என அவளது கன்னத்தை மெல்லத் தட்டினான்.
அந்தத் தொடுதல் சீதாவை இன்னும் நடுங்க வைத்தது.
சீதா…
தொடரும்…