Epi -3
வீராவின் விரல்கள் சீதாவின் கன்னத்தில் பட்டபோது, அவளுக்கு ஒரு மின்சாரம் பாய்ந்தது போன்ற நடுக்கம் ஏற்பட்டது. அந்தத் தொடுதலில் அரவணைப்பு இல்லை; ஒரு வேட்டைக்காரன் தன் இரையைச் சோதிக்கும் வன்மம் இருந்தது.
“சொல்லு சீதா… நீ யாருக்காக வேலை செய்ற? அந்த ரூமுக்கு உன்னை அனுப்பிச்சது யாரு?” வீரா குனிந்து அவளது கண்களை உற்றுப் பார்த்துக் கேட்டான். அவனது மூச்சுக்காற்று அவளது முகத்தில் பட்டது.
சீதா விக்கித்து அழுதவள், “யாரும் இல்லை சார்… சத்தியமா யாரும் இல்லை. நான் ஜானவி மேம்க்கு மேக்கப் போட்டுட்டு, அவங்க அவார்ட் வாங்குறதை பார்த்திட்டு இருந்தேன். அப்போ அசிஸ்டென்ட்ஸ் எல்லாருக்கும் ஜூஸ் கொடுத்தாங்க. நான் எனக்கு ஒன்னு எடுத்துக்கிட்டு மேடமுக்கு கொண்டு போய் கொடுத்திட்டு, பின்னாடியே வேடிக்கை பார்க்க உட்கார்ந்துகிட்டேன். அதுக்கு பிறகு சாப்பிட கூப்பிட்டாங்க. நான் அங்கே போய் சாப்பிட்டது எதுவும் நினைப்பில் இல்ல. எப்படி உங்க ரூமுக்கு வந்தேன்னு கூட சத்தியமா தெரியல சார்,” என கையெடுத்து கும்பிட்டாள்.
“கடைசியா நீ யாரை பார்த்த? யாரோட முகம் உனக்கு ஞாபகத்தில் இருக்கு?” என வீரா கூர்மையான பார்வையுடன் கேட்டான்.
இதை கேட்டதும் சீதாவின் முகம் பதட்டமானது. “ப்ச், கேட்கிறேன்ல?..” என்று உறுமினான்.
“அது… அது வந்து… எனக்குத் தெரிஞ்சதெல்லாம்… நான் காலையில எழுந்ததும் அந்த ரூம் தான். அதாவது அங்கே நீங்க…” என்று மேற்கொண்டு சொல்ல முடியாமல் தலையைக் குனிந்து கொண்டாள். அவளது கழுத்தில் இருந்த அந்தப் பல்தடம், அவள் சொல்ல வந்ததை மௌனமாக உறுதிப்படுத்தியது.
வீராவின் பார்வை இத்தனை நேரமும் அவளது முகத்தில் நிலைத்திருக்க, எதேச்சையாக அவன் கண்கள் அந்தத் தடத்தில் ஒரு கணம் நிலைத்தது. நேற்று நடந்த நினைவுகள் சிறிய துணுக்குகளாக கண் முன்னால் திரையிட்டு ஓடிக்கொண்டிருந்தது. இருவரும் சுய நினைவில்லாமல் தான் தழுவிக்கொண்டார்கள். வீராவின் கண்கள் இறுக்கமாக மூடி இருந்தாலும், அவனது கைப்பிடியில் ஒரு அழுத்தமும் ஆளுமையும் குடிகொண்டிருந்தது. முந்தைய இரவு அவளின் உதட்டை முற்றுகையிட்டு, சிறைக்கைதி போல அவஸ்தையில் சிக்க வைத்து, விடிய விடிய ஆண்டுகொண்டிருந்தான்.
அவ்விடத்தில் நிசப்தம் குடிகொண்டது. சீதா தலையை குனிந்தபடி அமர்ந்திருந்தாள். வீராவின் கண்களை பார்க்க திராணி இல்லை.
அந்த நேரம் பார்த்து சரவணனின் போன் சினுங்க, “ச… சாரி அண்ணா,” என வேகமாக போனை எடுத்துக்கொண்டு வெளியே ஓடிவிட்டான். அந்த நேரம் தான் வீராவும் சுய நினைவுக்கு வந்திருந்தான். இத்தனை நேரமும் அந்த இரவில் நடந்த நினைவுகள் அவனை மொத்தமாக சூழ்ந்திருந்தது. அவனது ஆளுமைக்குத் தகுந்தாற்போல, ஒரு கணம் அவனது உள்ளுக்குள் ஏதோ ஒரு குற்ற உணர்வு தலைதூக்கியது. ஆனால், அதைத் தன் அதிகாரத்தால் இல்லாமல் ஆக்கிவிட நினைத்தான்.
சீதா மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தவள், “சார், சத்தியமா எனக்கு தெரியாது. அதை கெட்ட கனவு போல மறந்திடுறேன். உங்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டேன்,” என்று கெஞ்சியபடி கையை கூப்பினாள்.
“நீ சொல்றதை நான் எப்படி நம்புறது? என் எதிரிகள் உன்னை ஏவி விட்டிருக்கலாம் இல்லையா? ‘மத்திய அமைச்சர் ஒரு பெண்ணுடன்…’ அப்படின்னு நியூஸ் வந்தா என் கரியரே முடிஞ்சுடும். அதுதான் உன் பிளானா?” என மீண்டும் துருவி கேட்டான் வீரா. அவனுக்கு இது மிகவும் முக்கியமான விஷயம். கொஞ்சம் தவறு நடந்தாலும், அது அவனுக்கும் இப்பொழுது அவனை சார்ந்த கட்சிக்கும் பெரிய இழுக்கை கொடுக்கும்.
“இல்லை சார்… எனக்கு அரசியல்னா என்னன்னே தெரியாது. நீங்க நினைக்கிற போல எனக்கு பின்னாடி யாரும் இல்ல சார். என்னை நம்புங்க. நான், எங்க அம்மா, எனக்கு ஒரு தம்பி… அவங்க ரெண்டு பேரும் ஊரில் இருக்காங்க சார். நான் வேலை செஞ்சு தான் என் குடும்பம் சாப்பிடுறாங்க. நீங்க நினைக்கிற மாதிரி நான் கெட்ட பொண்ணு இல்ல சார்,” என்று சொல்லியபடி எழுந்தவள், “நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்,” என அவனது கால்களைப் பற்றிக் கெஞ்சினாள்.
அதே நேரம், பண்ணை வீட்டின் வாசலில் ஒரு கார் வந்து நின்றது. யுகேந்திரன் தனது அண்ணனைப் பார்க்க வந்திருந்தான். சரவணன் அவனைத் தடுக்க முயன்றான்.
“தம்பி… அண்ணன் உள்ளே முக்கியமான விஷயமா இருக்காரு,” என்றான் சரவணன்.
“என்ன சரவணன்? அண்ணன்கிட்ட நான் பேசக் கூடாதா? என்ன ரகசியம்?” எனச் சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தான் யுகன்.
சரவணன் தயங்கியபடி, “ஒரு நிமிசம் இருங்க தம்பி, நான் அண்ணா கிட்ட கேட்டுட்டு வரேன்,” என உள்ளே சென்றான்.
யுகனுக்கு சட்டென்று, ‘நம்ம எதுக்கு அண்ணனோட அரசியல் விசயத்துல தலையிடனும்’ என்று நினைத்தவன், “ஒரு நிமிசம் சரவணா!” என்று அழைத்தான்.
“சொல்லுங்க தம்பி?” என சரவணன் நின்றான்.
“இல்ல, வேண்டாம் விடுங்க. நான் வெயிட் பண்றேன். அண்ணன் அவரோட வேலைய முடிச்சிட்டு வரட்டும்,” என்று போன் நோண்டிக்கொண்டே கூறினான்.
“சரி,” என்று சரவணன் உள்ளே சென்று யுகன் வந்திருப்பதை கூற, நாற்காலியில் சாய்ந்து கொண்டே எதிரில் அமர்ந்திருக்கும் சீதாவை இமை வெட்டாமல் பார்த்தான் வீரா.
அவனது பார்வையே கடித்து தின்றுவிடும் மிருகம் போல இருந்தது. சீதா குனிந்த தலை நிமிராமல் அப்படியே அமர்ந்திருந்தாள். அவளுக்கு இங்கிருந்து எப்படியாவது செல்ல வேண்டும் என்ற விசயம் தான் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
“என்ன வேலை செய்யிற?” என வீரா கேட்க…
“மேக்கப் ஆர்டிஸ்டாக இருக்கேன் சார்,” என்றாள் சிறிய குரலில்.
வீரா ஒரு பெருமூச்சுடன் எழுந்தவன், “நீ இப்போ கிளம்பலாம்,” என்றான்.
“சார், ரொம்ப நன்றி,” என்று சொன்ன சீதாவின் முகத்தில் தேஜஸ் தெரிய, வீரா கூர்மையான விழிகளுடன் அவளைப் பார்த்து, “நான் உன்னை அப்படியே விடுறேன்னு மட்டும் நினைக்காத,” என்றான்.
“சார், என்ன சொல்றீங்க?” என குரல் தழுதலுக்க சீதா நம்ப இயலாமல் பார்த்தாள்.
வீரா அவளை உறுத்துப் பார்த்துக்கொண்டே, “நீ இன்னும் சஸ்பெக்ட் லிஸ்ட்ல தான் இருக்கிற. அதனால என்னோட ஆளுங்க உன்னை கண்காணிச்சிட்டு தான் இருப்பாங்க எப்பவும். நீ சிட்டிய விட்டு வெளியே போக கூடாது. அப்படியே போறதாக இருந்தாலும், என்னோட அனுமதி இல்லாம நீ எங்கேயும் போக கூடாது,” என்று கர்ஜனையுடன் கூறி முடித்தான்.
சீதாவுக்கு அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியவில்லை; அமைதியாக தலையை ஆட்டினாள். வேறு என்ன செய்ய முடியும்? வீராவை எதிர்க்கத்தான் முடியுமா? தனக்கு முன்னால் இருப்பவன் சாதாரண ஆள் இல்லையே; அவன் இந்த நாட்டின் முக்கிய புள்ளி.
“என்ன தீவிர யோசனை?” என வீரா கேட்க…
“ஒன்… ஒண்ணுமில்ல சார்! ந… நான் நீங்க சொன்னதை போலவே செய்றேன். இப்போ போலாமா… நான்?” என கேட்டாள் சீதா.
வீரா எதுவும் பேசாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். சீதா ஒரு பெருமூச்சுடன் அவ்விடத்தை விட்டு வெளியே சென்றாள்.
“சரவணன்!” என வீரா அழைக்க…
“அண்ணா!” என பதில் கொடுத்தான் அடுத்த நொடி.
“இவள் என்ன பண்றா? எங்கே போறா? யார் கிட்ட பேசுவா? எல்லாத்தையும் கண்காணி. நம்ம கவனமா இருக்கணும்,” என்று விட்டு முன்னால் நடந்தான்.
அவளை பார்த்துக்கொண்டே வீரா சரவணனிடம் சில கட்டளைகளை கூறினான்.
தொடரும்…
அடுத்த சந்திப்பு விரைவில்… வீரா ராவணனாக மாறி அவளை சிறை வைக்கும் நாள் தொலைவில் இல்லை.