Epi -14
கதவின் கைப்பிடி அசைந்த அந்த ஒரு விநாடியில், சாவித்திரியின் உடம்பில் இருந்த அத்தனை ரத்தமும் உறைந்து போவது போல இருந்தது. நெஞ்சுக்கூடு ஏகத்திற்கும் அடித்துக் கொள்ள, கையில் இருந்த டைரியை அப்படியே மார்போடு அணைத்தவள், பதட்டத்துடன் படுக்கையை விட்டு எழுந்தாள். நெற்றியில் வியர்வை முத்துக்கள் அரும்பி வழிந்தன. சத்யமூர்த்தி தான் உள்ளே வருகிறானோ என்ற மரண பயத்துடன், பூனை நடை போட்டு விறுவிறுவென்று கதவின் அருகில் சென்றாள்.
அப்போது, கதவின் மறுபுறம் இருந்து மெதுவாகத் தட்டும் சத்தம் கேட்டது. ‘டக்… டக்…’
வியர்த்து விறுவிறுத்து, தொண்டைக் குழி வறண்டு போக, ஒரு மாபெரும் பெருமூச்சுடன் கதவைத் திறந்தாள் சாவித்ரி. ஆனால், எதிரே நின்றிருந்த உருவத்தைக் கண்டதும் அவளது கண்களில் ஒரு நொடியில் ஒட்டுமொத்த நிம்மதியும் பரவியது.
அங்கே நின்றிருந்தது… வீட்டு நிர்வாகி ராஜேஷ்!
“நீ… நீங்கதானா அண்ணா?” எனச் சாவித்ரி தன் நெஞ்சில் கை வைத்து, ஆசுவாசப்படுத்திக் கொண்டு கேட்டாள்.
ராஜேஷ் சுற்றிலும் ஒருமுறை திருடன் போலப் பார்த்துவிட்டு, “போதும் ரோஜா… நேரமாச்சு! ரொம்ப நேரம் சிசிடிவி (CCTV) கேமராவை ஆஃப் பண்ணி வைக்க முடியாது. நீ உடனே கிளம்பும்மா! அந்தச் சத்யமூர்த்திக்குத் தெரிஞ்சா ரெண்டு பேரையும் உயிரோட வைக்க மாட்டான்,” என்றான் பதட்டமான குரலில்.
ஆமாம், சாவித்ரி என்று இந்த விஷ்வ பவனத்திற்குள் வலம் வரும் இவளது நிஜப் பெயர் ‘ரோஜா’!
“அண்ணா… இன்னும் கொஞ்ச நேரம் அண்ணா! முன்னை விட இப்போ விஷ்வா மாமாகிட்ட கொஞ்சம் இம்ப்ரூவ்மென்ட் (Improvement) தெரியுது அண்ணா. அவரோட கல்லூரி நாட்களைப் பத்திப் பேசும்போது அவரோட விரல்கள் லேசாக அசைஞ்சது போல எனக்குத் தோணுச்சு. நானும் வேற ரொம்ப நாள் இந்த ‘சாவித்ரி’ங்கிற போலி முகமூடியோட இங்கே இருக்க முடியாது. அந்தச் சத்யமூர்த்திக்கு என் மேலே சந்தேகம் வர்றதுக்குள்ள நான் இவரை எழ வைக்கணும் அண்ணா,” என்று விஷ்வாவின் கைகளைப் பார்த்தபடி உருகினாள் ரோஜா.
ராஜேஷ் தன் புருவங்களைச் சுருக்கிக்கொண்டு, “அதைப்பத்தி உன்கிட்ட தனியா பேசணும்னு நினைச்சேன் ரோஜா. விவான் இப்போ பேச ஆரம்பிச்சுட்டான். திங்கட்கிழமையில இருந்து அவன் ‘விஷ்வா விகாஸ்’ ஸ்கூலுக்குப் போகப்போறான். நீ பேசாம அவனுக்கு கேர் டேக்கரா அந்த ஸ்கூல்லயே சேர்ந்துக்கோ. சத்யமூர்த்தியே உன்னை அங்கே கூட்டிட்டுப் போவான். அப்படி இருந்தா, உன்னால தினமும் விஷ்வாவை வந்து பார்க்கவும் முடியும், அவனுக்குச் சீக்கிரம் நினைவு திரும்ப ஹெல்ப் பண்ணவும் முடியும்,” என்றான் ஒரு புதிய உபாயத்துடன்.
“ஆனா அண்ணா… ஒருவேளை அந்தச் சத்யமூர்த்திக்கு என் மேலே சந்தேகம் வந்துட்டா? அவன் ஏற்கனவே தன் பெர்சனல் டிடெக்டிவ்வை வச்சு என்னை விசாரிச்சுட்டு இருக்கான். உண்மை தெரிஞ்சா என்ன பண்றது?” என ரோஜா கவலை கலந்த யோசனையுடன் அவனது முகத்தைப் பார்த்தாள்.
ராஜேஷ் அவளது தோள்களைப் பற்றி, தன் உறுதியான பார்வையால் அவளுக்குத் தைரியம் ஊட்டினான். “நமக்கு இப்போ விஷ்வா கோமாவில் இருந்து எழுந்துக்கிறது மட்டும்தான் முக்கியம் ரோஜா. அவன் மட்டும் கண் திறந்துட்டா… இந்த விஷ்வ பவனத்துல ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டான். தன் தம்பி விவானையும், உன்னையும் கூட்டிக்கிட்டு, நேரா தன் உயிர் தாமரையைத் தேடி இந்த வீட்டை விட்டு ஒரேடியா கிளம்பிடுவான். அதுவரைக்கும் நாம பொறுமையா இருக்கணும்.”
ரோஜா கண்கள் கலங்க, ராஜேஷின் கைகளைத் தன் இரு கரங்களால் இறுகப் பற்றிக் கொண்டாள். “எங்களுக்குக் கூடப் பிறந்த அண்ணன் இருந்திருந்தா கூட, இந்த அளவுக்கு உயிருக்குத் துணிஞ்சு உதவி செஞ்சிருப்பாரான்னு தெரியலை அண்ணா! நீங்க எங்களுக்குச் செய்யுற இந்த உதவிக்கு…” என்று அவளது குரல் தழுதழுத்து, கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
ராஜேஷின் கண்களும் பனித்தன. அவன் பரிவான குரலில், “எனக்கு இந்த ஈரோட்டுல ஒரு நல்ல வாழ்க்கை கொடுத்ததே தம்பி விஷ்வா தான்மா. நான் காலேஜ் படிச்சதுல இருந்து, இன்னிக்கு இந்த மாளிகையை நிர்வகிக்கிற அளவுக்கு எனக்கு ஒரு கௌரவமான எதிர்காலத்தை அமைச்சு கொடுத்ததும் அவன்தான். அப்படிப்பட்ட தம்பி இன்னிக்கு இப்படிப் படுத்த படுக்கையா அசைவில்லாமக் கிடக்குறதைப் பார்க்க எனக்கு நெஞ்சு வலிக்குது ரோஜா… போதும், மீதியை நாளைக்கு பார்த்துக்கலாம். நீ சீக்கிரம் உன் அறைக்குப் போம்மா,” என்று அவளை அங்கிருந்து அவசரமாக அனுப்பி வைத்தான்.
அடுத்த நாள் காலை… விஷ்வ பவனம் ஒரு புதிய ஆரவாரத்துடன் விடிந்தது. ஜன்னல் வழியே அதிகாலைச் சூரியனின் கதிர்கள் உள்ளே நுழைந்தாலும், அந்த வீட்டின் அஸ்திவாரத்தில் ஒரு மௌனப் போர் நடந்து கொண்டிருந்தது.
கலாவதி தன் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. மீரா கோபித்துக் கொண்டு தன் வீட்டிற்குச் சென்றதிலிருந்து, அவர் சத்யமூர்த்தியின் மேல் கடுமையான வருத்தத்தில் இருந்தார். சத்யமூர்த்தி தன் பக்கா ஃபார்மல் சூட்டுடன், கம்பீரமான ஆளுமையுடன் மாடியில் இருந்து இறங்கி வந்தவன், நேராகத் தன் தாயின் அறைக் கதவை நோக்கிச் சென்றான்.
அப்போது கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த செவிலி (Nurse), சத்யமூர்த்தியைக் கண்டதும் தன் கைகளைத் பிசைந்து கொண்டு, “சார்… அம்மா காலைல சாப்பாடு சாப்பிட்டாங்க. ஆனா, அவங்களுக்கு இப்போதைக்கு யாரையும் பார்க்க விருப்பமில்லைன்னு சொல்றாங்க சார். மேடம் உள்ளே ரொம்ப வருத்தமா அழுதுட்டு இருக்காங்க…” என்று தன் தலையைச் சொரிந்து கொண்டே கூறினாள்.
சத்யமூர்த்தி தன் இரும்புத் தோரணையில் இருந்து துளிகூட மாறவில்லை. அவனது கூர்மையான நாசியும், இறுக்கப்பட்ட தாடையும் எப்போதும் போல விறைப்பாக இருந்தன.
“சாப்பிட்டாங்கதானே? டேப்லெட் (Tablet) எல்லாம் கரெக்டா எடுத்துக்கிட்டாங்களா?” அவனது குரல் அறையின் குளிர்ந்த அமைதியில் கணீரென்று ஒலித்தது.
“ஹாங்… சார், அதெல்லாம் கரெக்டா குடுத்துட்டேன்,” என்று செவிலி தலையாட்டினாள்.
“That’s okay! அவங்க இப்போதைக்கு வெளியே வர எந்த நீடும் (Need) இல்லை. அவங்களை டிஸ்டர்ப் (Disturb) பண்ண வேண்டாம்,” என்று சலிப்போ, ஆறுதலோ இல்லாமல் கறாராகச் சொல்லிவிட்டு டைனிங் ஹாலை நோக்கி நகர்ந்தான் சத்யமூர்த்தி.
அறையின் உள்ளே அமர்ந்து, தன் மகன் கதவைத் தட்டித் தன்னைச் சமாதானப்படுத்துவான் என்று ஆவலோடு காத்துக் கொண்டிருந்த கலாவதிக்கு, அவனது இந்த அலட்சியமான பதில் மாபெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. ‘தன் பாசத்திற்கு முன்னால் கூட இந்த இரும்பு மனிதன் வளைந்து கொடுக்க மாட்டானா?’ என்று அந்தத் தாய் நெஞ்சம் அந்தோ பரிதாபமாக நொந்து போனது.
மறுபுறம், டைனிங் டேபிளில் விவானுக்கு உணவை ஊட்டித் தயாரித்துக் கொண்டிருந்தாள் ரோஜா (சாவித்ரி).
சத்யமூர்த்தி அங்கே வந்ததும் அவனது புருவங்கள் சற்றே சுருங்கிப் போனன. அங்கே விவானுக்கு ரோஜா தோசையை ஊட்டி விடவில்லை; மாறாக, விவானே தன் குட்டி விரல்களால் தோசையைப் பிட்டு, மிகச் சமத்தாகத் தானே எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்!
“வெரி குட் விவான் குட்டி! சூப்பர் கண்ணா!” என்று ரோஜா அவனது கன்னத்தைக் கிள்ளிப் பாராட்டி, கொஞ்சிக் கொண்டிருந்தாள். அவர்கள் இருவரையும் பார்க்கும்போது, ஒரு உன்னதமான தாய்-மகன் பந்தம் அங்கே அப்பட்டமாகத் தெரிந்தது.
“பிரேக்ஃபாஸ்ட் (Breakfast) ரெடியா?” என்று சத்யமூர்த்தி தன் அதிகாரக் குரலில் சத்தமிட்டான்.
அப்போதுதான் ரோஜா திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். அவளது கரும்பச்சை நிற காட்டன் புடவையும், நெற்றியில் இருந்த அந்தச் சிறிய பொட்டும், அவளது கனிவான தேவதை முகமும் சத்யமூர்த்தியின் கண்களுக்குள் ஒரு புதிய பிரகாசத்தைக் கொடுத்தன.
“அப்பா!!” என்று விவான் தன் குட்டித் தலையைச் சாய்த்து, கண்களைச் சிமிட்டியபடி, “குட் மார்னிங் (Good morning)…” என்றான் மிகத் தெளிவான தமிழில்!
சத்யமூர்த்தியின் இதயம் அந்த ஒற்றை வார்த்தையில் அப்படியே உருகிப் போனது. நாற்காலியில் அமர்ந்தவன், “ஹலோ விவான்! என்ன சாப்பிடுறீங்க? ரொம்ப ஸ்பெஷலா (Special) இருக்கு போலயே?” என்று விவானின் தட்டைப் பார்த்துக் கேட்டான்.
“இது தோசை… எனக்குச் சாவி செஞ்சு செஞ்சு நிறைய…” என்று தன் மழலை மொழி மாறாமல் கைகளை அசைத்துச் சொன்னான் விவான்.
ரோஜா தன் உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகையை ஏந்தி, “அது… அவனையும் சமையல் அறைக்குக் கூட்டிட்டுப் போய், நாங்க ரெண்டு பேரும் தமிழ் பாட்டுப் பாடிக்கிட்டே ஜாலியா சமைச்சு எடுத்துட்டு வந்தோம் சார்,” என்றாள் கனிவோடு.
சத்யமூர்த்தியின் கூர்மையான பார்வை, மேசையின் மேல் இருந்த கிண்ணத்தில் இருந்த அடர் சிவப்பு நிற சட்னியின் மீது படிந்தது. “அதென்ன?” என்று தன் நீண்ட விரலால் சுட்டிக் காட்டிக் கேட்டான்.
“இது பூண்டுத் துவையல் சார்,” என்றாள் ரோஜா.
“அப்பா! நல்லாக்கு… கொஞ்சம் காக்கு (காரம்)…” என்று விவான் தன் நாற்காலியை விட்டு இறங்கி, ஒரு துண்டு தோசையை அந்தப் பூண்டுத் துவையலில் தொட்டு, சத்யமூர்த்தியின் வாயருகே கொண்டு சென்றான்.
ரோஜா தன் கைகளைப் பிசைந்தபடி பதட்டத்துடன் நின்றாள். கார்ப்பரேட் உலகில் அசைக்க முடியாத சக்கரவர்த்தியாக வலம் வரும் சத்யமூர்த்தி, ஒரு குழந்தையின் கையால் இந்தச் சாதாரண உணவைச் சாப்பிடுவானா என்ற தவிப்பு அவளிடம் இருந்தது.
சத்யமூர்த்தி ரோஜாவை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தான். பின், “ம்ம்… போதும், நீங்க சாப்பிடுங்க விவான்,” என்று சொல்லியபடியே, விவானின் கையில் இருந்த அந்தத் தோசைத் துண்டை வாயில் போட்டுக் கொண்டான்.
அவ்வளவுதான்! அந்தப் பூண்டுத் துவையலின் காரசாரமான சுவையும், தோசையின் மென்மையும் அவனது நாவிற்குள் ஒரு மாபெரும் சுவை அலைகளை ஏற்படுத்தின. ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கூடச் சாப்பிட முடியாத அசாத்திய சுவையுடன் அது இருந்தது. சத்யமூர்த்தியே அதை எதிர்பார்க்கவில்லை. அவன் எதையும் காட்டிக் கொள்ளாமல், அந்தத் தோசையை முழுமையாகச் சாப்பிட்டு முடித்தான். பின், ஒரு ஆரஞ்சு பழத்தைச் சாப்பிட்டுவிட்டு, தன் பள்ளிக்குக் கிளம்பத் தயாரானான்.
அப்போது விவான் தன் குட்டிப் புத்தகப் பையைத் தூக்கிக்கொண்டு, “அப்பா! நானுக்கு இனி தின தினம் படிக்கப் போறேன்… உன் கூட…” என்று வார்த்தைகளைக் கோர்த்துப் பேசினான்.
சத்யமூர்த்தி வெடுக்கென்று திரும்பிப் பார்த்தான். அவனது கண்களில் ஆச்சரியமும் விசித்திரமான ஒரு நிம்மதியும் தெரிந்தன.
ரோஜா விவானின் புத்தகப் பையைச் சரிசெய்து, சத்யமூர்த்தியிடம் நீட்டினாள். “கூட்டிட்டுப் போங்க சார். இனி விவான் கண்டிப்பா ஸ்கூலுக்கு வருவான். அங்கே எந்தத் தொந்தரவும் பண்ண மாட்டான்,” என்றாள் தன் தீர்க்கமான குரலில்.
சத்யமூர்த்தி அவளையே வைத்த கண் வாங்காமல் ஊடுருவிப் பார்த்தான். அவனது கதிர்வீச்சுப் பார்வைக்கு முன்னால் அவள் சற்றும் அசையாமல் நின்றாள்.
“இனி விவானுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை சார். அவன் ஸ்கூலுக்குப் போக பக்கா ரெடி (Ready) ஆகிட்டான். நல்லாவே பேசக் கத்துக்கிட்டான். ஸ்கூல்ல மத்த பசங்க கூட அவனை ஒரு அரை மணி நேரம் விளையாட விடுங்க. அதே போல அவனுக்குத் தமிழும் சொல்லிக் கொடுங்க சார்…” என்று கூறிய ரோஜாவின் குரலில் ஒருவிதப் பிரிவின் வேதனை மறைந்திருந்தது. அவளது கடமை முடிந்து, அவள் அந்த வீட்டை விட்டுத் தற்காலிகமாகக் கிளம்பும் விஷயத்தை அவள் சொல்லாமல் சொன்னாள்.
“சாவி… நான் படிச்சு முடிப்பேன், வருவேன்… அப்புறம் நாம விளையாடணும்,” என்று விவான் ரோஜாவின் புடவையைப் பற்றி ஆசையாகக் கூறினான்.
“கண்டிப்பா கண்ணா… போயிட்டு வாங்க,” என்று ரோஜா கண்களில் தேங்கிய கண்ணீரை மறைத்துக் கொண்டு அவனுக்குக் கைகளை அசைத்தாள்.
சத்யமூர்த்தி எதுவும் பேசவில்லை. அவளது அந்தத் தீர்க்கமான பார்வையும், அவளது தொழில்முறை நேர்மையும் அவனது ஈகோவை மீண்டும் ஒருமுறை மண்டியிட வைத்திருந்தது. விவானைக் கூட்டிக் கொண்டு அவன் காரில் ஏறிப் புறப்பட்டான்.
கார் வாசலைக் கடந்த அடுத்த நொடி… ரோஜா தன் முகமூடியைக் கழற்றினாள். ராஜேஷிடம் பேசி, இந்த இரண்டு மாத காலத்திற்கான தன் கணக்கு வழக்குகளை முடித்து, தனக்குக் கொடுக்கப்பட்ட சம்பளப் பணத்தைப் பெற்றுக் கொண்டாள். பின், அறைக்குள் சென்று கலாவதியிடம் மரியாதை நிமித்தமாகத் தான் விடைபெற்றுக் கிளம்புவதாகக் கூறிவிட்டு, விஷ்வ பவனத்தின் கோட்டையை விட்டு வெளியேறினாள். அவளது கால்கள் நேராக விஸ்வாவின் அறையை ஒரு நொடி பெரு மூச்சுடன் நோக்கியவள் அங்கிருந்து சென்றாள்.
அன்று மதியம்… ‘விஷ்வா விகாஸ்’ சர்வதேசப் பள்ளியின் தன் பிரம்மாண்டமான ஏசி அறையில் அமர்ந்திருந்த சத்யமூர்த்திக்கு, அன்றைய நாள் நாழிகை ஓடவே இல்லை. அவனது முன்னால் இருந்த கோப்புகளிலோ, லேப்டாப்பிலோ அவனால் கவனம் செலுத்த முடியவில்லை. அவனது சிந்தனை முழுவதும் விஷ்வ பவனத்தின் அந்தத் தோட்டத்திலும், டைனிங் ஹாலிலும் தான் சுற்றிக் கொண்டிருந்தது.
பொறுக்க முடியாமல் தன் ஐபோனை எடுத்து, வீட்டு மேலாளர் ராஜேஷிற்கு அழைத்தான்.
“ஹலோ ராஜேஷ்… சத்யமூர்த்தி ஸ்பீக்கிங். வீட்டில் அம்மா எப்படி இருக்காங்க? விவான்…” என்று இழுத்தான்.
“சார்… விவான் ஸ்கூல்ல இருந்து வந்துட்டான் சார். ஆனா… சாவித்ரி மேடம் தன் கணக்கு வழக்குகளை முடிச்சுட்டு, சம்பளத்தை வாங்கிட்டு இந்த வீட்டை விட்டு ஒரேடியா கிளம்பிட்டாங்க சார்!” என்று ராஜேஷ் தங்களுக்குள் திட்டமிட்டபடி கூறினான்.
“வாட்?! கிளம்பிட்டாங்களா?!” சத்யமூர்த்தியின் கையில் இருந்த பேனா நழுவி மேசையின் மேல் விழுந்தது. அவனது நெஞ்சுக்கூட்டிற்குள் ஏதோ ஒரு மாபெரும் அங்கம் குறைந்துவிட்டது போன்ற ஒரு விசித்திரமான தனிமை சட்டென்று வந்து சூழ்ந்தது.
அவன் தன் கைகளைத் தூக்கிப் பார்த்தான். நேற்று ஸ்டடி ரூமில் அவள் நிலைதடுமாறி விழுந்தபோது, அவளது மெல்லிய இடையைத் தன் வலுவான கரங்களால் இறுக்கிப் பிடித்த அந்த நொடி அவனது நினைவுக்கு வந்தது. அவனது உள்ளங்கைகளில் இன்னும் அவளது அந்தத் தனித்துவமான மல்லிகைப் பூ வாசனை வீசுவது போல அவனது ஆண்மை உணர்ந்தது. அவளது அந்த காந்தப் பார்வையும், அடங்காத துணிச்சலும் அவனது நாற்பது வயது இதயத்திற்குள் ஒரு மாபெரும் சூறாவளியைக் கிளப்பியிருந்தது.
மாலை ஐந்து மணி இருக்கும். சத்யமூர்த்தியின் சொகுசு கார் விஷ்வ பவனத்தின் வாசலில் வந்து நின்றது.
அவன் காருக்குள் இருந்து இறங்கி ஹாலுக்குள் நுழைந்த அடுத்த நொடி… அங்கே ஒரு மாபெரும் போர்க்களமே நடந்து கொண்டிருந்தது!
“எனக்குச் சாவி வேணும்! சாவி எங்கே? சாவி வரலன்னா நான் சாப்பிட மாட்டேன்! இந்த வீட்டையே உடைப்பேன்!” என்று விவான் ஹாலில் இருந்த பூந்தொட்டிகளையும், ஷோகேஸ் (Showcase) பொம்மைகளையும் தரையில் தூக்கிப் போட்டு உடைத்துக் கொண்டு, மூர்க்கத்தனமாக அலறிக் கொண்டிருந்தான். இதெல்லாம் சாவித்ரி வீட்டை விட்டு போனதால் நடந்த விபரீதங்கள் ஆகும்.
கலாவதி அழுதுகொண்டே அவனைக் கட்டியணைக்க முயல, விவான் அவரை உதறிவிட்டுத் தரையில் படுத்துக் கால்களால் உதைத்தான். அவனது முகம் ஆத்திரத்தில் சிவந்திருந்தது.
“விவான்! ஸ்டாப் இட்!” என்று சத்யமூர்த்தி அதட்டினான்.
ஆனால், விவான் தன் தந்தையின் முகத்தைப் பார்த்து, “சாவி வேணும்! சாவி இல்லன்னா டாடி வேணாம்! போங்க!” என்று கத்தினான்.
சத்ய மூர்த்தி பெரு மூச்சுடன் ராஜேஷ் கார் சாவி எடு என்று உத்தரவை பிறப்பித்து கொண்டே கிளம்ப, அப்பா சாவி வேணும் சாவிதிரி வேணும் என குதித்தான் விவான்.
அவங்களை கூட்டிட்டு வரேன். என சொல்லிவிட்டு சத்ய மூர்த்தி வெளியேற, ராஜேஷ் நிம்மதி பெரு மூச்சுடன் உற்சாகமாக தள்ளி சென்றவன். ரோஜாவுக்கு அழைத்து சத்ய மூர்த்தி வருவதை கூறி இருந்தான்.
சாவித்ரி..?
தொடரும்..