
அதிகாரம் மண்டியிடும் அஹிம்சை அவள் 10
- 1 Oct 2026
- 106 reads
- ★ 3.7 (3)
- 10 min read
Epi -10
அகிம்சாவின் கையிலிருந்து உதிரம் சொட்டச் சொட்ட, அவள் மயங்கி விழுந்த அந்த நொடி, அதர்வனின் இதயத்தை பலமாகத் தாக்கியது. அவளைப் பார்க்க அத்தனை வேதனையாக இருந்தது ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் ‘இந்நேரம் நாம் சசியைத் திருமணம் செய்திருந்தால், அந்தப் பிரதீப் சசிரேகாவைக் கடத்தியிருப்பான்’ என நினைத்ததும் உள்ளுக்குள் இனம் புரியாத பயமும் வேதனையும் பரவியது.
அந்த நேரம் தான் அவனது போனை கவனித்தான். சசியிடம் இருந்து விடாமல் அழைப்பு வர, உடனே அட்டெண்ட் செய்து விவரத்தைக் கூறினான்.
“அதர்வா, நீ கவலைப்படாதே! நான் இப்போவே வர்றேன்” என அவள் வைக்கப் போக, “சசி, நீ தனியா வராதே. நீ நேரா வீட்டுக்குப் போ. எல்லாத்தையும் பொறுமையாப் பேசிக்கலாம்” என அதர்வன் கூறினான்.
“இல்… இல்லை, இப்போவே நான் அகிம்சாவைப் பார்க்கணும். வருவேன்” என விடாப்பிடியாக நின்றாள். அதர்வன் ஒரு பெருமூச்சை விட்டபடி, உடனே நாகாவுக்கு அழைத்து, சசிரேகாவைப் பத்திரமாக அழைத்து வர ஏற்பாடு செய்தான்.
அவனது இரண்டு கைகளையும் பார்த்தான்; ரத்தக்கறையாக இருந்தது. அவனது வெண்மையான சட்டையில் அகிம்சாவின் காய்ந்த ரத்தக்கறை படர்ந்திருந்தது.
‘யாரோ ஒருத்தி… என் வாழ்க்கையையே அசிங்கப்படுத்த வந்தவள்னு நினைச்சேனே! என் உயிரைக் காப்பாற்ற அவளது உயிரையே கொடுக்கும் அளவுக்கு வந்திருக்கிறாளே!’ அவனது நெஞ்சுக்குள் குற்றவுணர்ச்சியும், இனம் புரியாத ஒரு புதிய உணர்வும் தோன்றியது. நிச்சயமாக அது காதல் இல்லை!
மாஸ்க்கைக் கழற்றிக்கொண்டு வெளியே வந்தான் மருத்துவன் விக்னேஷ். ஆம், அவன் பணிபுரியும் மருத்துவமனைக்குத் தான் அதர்வன் அழைத்து வந்திருந்தான். எதிர்பாராமல் தான் நடந்தது.
“ஹலோ மிஸ்டர் அதர்வன்!” என விக்னேஷின் குரலில் சுயம் தெளிந்த அதர்வன், ஒருவித பதற்றத்துடன், “எப்படி இருக்காங்க டாக்டர்? அவங்களுக்கு ஒன்னும் பிரச்னை இல்லையே?” எனத் துடித்தபடி கேட்டான்.
“கத்தியோட ஆழமான வெட்டுக் காயத்தால நரம்பு லேசாகக் கட் ஆகியிருக்கு. ஸ்டிச்சஸ் போட்டாச்சு. ரத்தப்போக்கு அதிகமா இருந்ததுனால மயக்கத்துல இருக்காங்க. பயப்படுறதுக்கு ஒன்னுமில்லை. இன்னைக்கு நைட்டுக்குள்ள கான்ஷியஸ் வந்திடும். காயம் சரியாக கொஞ்சம் டைம் எடுக்கும். Weekly once dressing இருக்கு. ரெண்டு கையிலயும் காயம்; அதனால ரொம்ப சிரமம் தான், ஆனாலும் போகப் போக சரியாகிடும்” என்று கூறினான் விக்னேஷ்.
அதர்வன் பேச்சற்று நின்றான். விக்கியின் பார்வை எதிரில் இருப்பவன் மீது ஆழமாக ஆராய்ந்தது. “அதர்வன், என்னை தெரியுதா?” எனக் கேட்டான்.
சட்டென சுயநினைவுக்கு வந்த அதர்வன் புருவம் சுருக்கியபடி, “எனக்கு அவ்ளோவா ஞாபகம் இல்லையே? இதுக்கு முன்னாடி மீட் பண்ணியிருக்கோமா?” எனக் கேட்டான்.
“நான் கந்தர்வனோட கிளாஸ்மேட். உங்களை எனக்குத் தெரியும். அப்புறம் சசிரேகா…” என விக்னேஷ் ஆரம்பிக்க… “அதர்வா!” என கத்திக்கொண்டு ஓடி வந்தாள் சசி.
அவளைப் பற்றிச் சொல்ல வாயெடுத்த விக்னேஷ், அப்படியே அமைதியாகிப்போனான். அதற்கு மேல் என்ன பேச முடியும்? அதர்வாவை இறுக்கி அணைத்துக்கொண்டு அழத் தொடங்கினாள் சசி.
“ப்ச், லூசு! எனக்கு ஒண்ணுமில்லடி” என எவ்வளவோ அவன் எடுத்துக்கூறிட, “உனக்கு ஒன்னுமில்லையே? நான் அங்கிருந்து பார்க்கும்போது உன் மேலே ரத்தக்கறை… அந்த நிமிஷம் எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?” என கலங்கினாள்.
விக்னேஷ் அவ்விடத்தை விட்டு உடனே நகர்ந்துவிட்டான். அவனுக்கு ஒன்று தெளிவாகத் தெரிந்தது; சசியின் மனதில் இன்னும் அதர்வன் தான் இருக்கிறான், ‘நான் நினைப்பது நடக்காது’ என்று. ஒருதலைக் காதல் எவ்வளவு பரவசத்தைக் கொடுக்குமோ, அந்த அளவுக்கு வேதனையையும் வலியையும் கொடுக்கும்!
அதர்வன் அவளைச் சமாதானம் செய்து, “அகிம்சா உள்ளே இருக்கா. போய்ப் பார்த்திட்டு வரலாம் வா” என அழைத்துச் சென்றான்.
கட்டிலில், கையில் தடிமனான வெள்ளைக் கட்டுடன், குளுகோஸ் ஏறிக்கொண்டிருக்க அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள் அகிம்சா.
அந்த நேரம் சசிரேகாவுக்கு கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து அழைப்பு வந்தது. அதர்வன் புருவம் சுருக்கியபடி திரும்பிப் பார்க்க, “டாடி தான் பண்றார். இதுவரைக்கும் நான் எடுக்கவே இல்லை” என மெல்லிய குரலில் அவள் பதில் கொடுக்க, “போய் பேசிட்டு வா” எனச் சொல்லி அனுப்பினான்.
“ஓகே, ஓகே… டென்ஷன் ஆகாதே! நான் பேசிட்டு வர்றேன்” என வெளியே சென்றாள் சசிரேகா.
அவனது கால்கள் தன்னிச்சையாக அவளருகே சென்றன. கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தவன், மெல்லத் தன் கைவிரல்களால் அவளது காய்ந்த உதடுகளையும், முகத்தில் படிந்திருந்த கலைந்த கூந்தலையும் விலக்கிவிட்டான். முகமெல்லாம் வெளுத்துக் காணப்பட்டது. அவளின் இந்த நிலையைக் கண்டு வேதனையுடன் அமர்ந்துவிட்டான் அதர்வன்.
அகிம்சா – ஒரு முன்னணி கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைமை அக்கவுண்டன்ட். தன் சொந்த உழைப்பாலும், கூர்மையான அறிவாற்றலாலும் உயர்ந்த சுயமரியாதை மிக்க பெண். ஆனால், வெளியுலகிற்கு கம்பீரமாகத் தெரியும் அவளது இதயத்தின் ஒரு ஓரத்தில் ஆறாத ஏக்கம் ஒன்று ஒளிந்திருந்தது.
அவள் சிறுவயதாக இருக்கும்போதே, பெற்றோர் யாரென்று தெரியாமல் ஆசிரமத்தில் நான்கு சுவர்களுக்குள்ளேயே வளர்ந்தவள். படிப்பில் படுசுட்டி! ‘அவள் உண்டு, அவள் வேலை உண்டு’ எனத் தான் வளர்ந்த சூழலுக்கு ஏற்ப தனக்கென எல்லைகள் வகுத்திருந்தாள்.
மதர் எஸ்தர் மேரிக்கு அவளின் சுட்டித்தனம் மிகவும் பிடிக்கும். அங்கிருக்கும் குழந்தைகள் எல்லாம் அவர்களுக்கு என்று குழுவில் இருப்பார்கள்; நிறைய குழந்தைகளுடன் பேசுவார்கள்; நிறைய பிரச்னை வரும். ஆனால், அகிம்சா அவளது தோழி மதுப்ரியாவுடன் மட்டுமே இருப்பாள்.
ஒரு நாள் அப்படித்தான் சோகமாக அமர்ந்திருந்தாள் அகிம்சா.
“என்னாச்சு? ஏன் சோகமா இருக்கீங்க? எல்லாரும் செடிக்குத் தண்ணி ஊத்திட்டு இருக்காங்க, நீங்க ஏன் இங்கே தனியா உட்கார்ந்து இருக்கீங்க?” எனக் கேட்டபடி அமர்ந்தார் எஸ்தர்.
“எனக்கு என்னோட காவியப்ரியா பேர் பிடிக்கல. நான் ஒன்னும் பிரியாவோட தங்கச்சி இல்லை, நான் பிரியாவோட பெஸ்ட் ஃப்ரெண்ட். அதனால எனக்கு என்னோட பேரை மாத்தணும். ஆனால் பிரியா என்கிட்ட சண்டை போடுறா… அவளோட தங்கச்சி நானாம் அப்படின்னு சொல்றா!”
“தங்கச்சின்னு தானே சொல்றா? அது நல்ல விஷயம் தானே தங்கம்?” என எஸ்தர் சிரித்தபடி, “அவளும் நீயும் ஒரே குடும்பம்” என்றார்.
“இல்லை, இல்லை… நீங்களே சொல்லுங்க மதர்! நான் வேணாம்னு தானே என்னோட அம்மா, அப்பா தொலைச்சாங்க? அதைவிட கணேஷ் இருக்கானே, அவன் என்னை அக்கான்னு சொன்னான்; அவனுக்கு அம்மா, அப்பா கிடைச்சு போயிட்டான் என்னை விட்டு. இந்த ஆகாஷ் என்னை தங்கச்சின்னு சொன்னான்; அவன் சாமிகிட்ட போய்ட்டதா மரியா சிஸ்டர் சொல்றாங்க. இப்போ பிரியா என்னோட காவியப்ரியா பேரைச் சொல்லி, அவளோட தங்கச்சின்னு சொல்றா. அதனால நான் என்னோட பேரை மாத்துற வரை சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருக்கப் போறேன்” என்றாள்.
அவளின் பேச்சைக் கேட்டு அத்தனை வேதனையும் வருத்தமும் நிறைந்தது மதருக்கு! கடவுளிடம் அந்த நொடியே வேண்டினார். ‘இயேசுவே, உன்னுடைய பிள்ளைக்கு ஒரு பெரிய குடும்பத்தையும், நிறைய சந்தோஷத்தையும், அவளின் ஏக்கத்தைப் போக்கும் விதமாக ஒரு குடும்பத்தையும் கொடுக்க வேண்டும் கர்த்தாவே!’ எனப் பிரார்த்தனை செய்தார்.
“மதர்…” என அவரின் உடையைப் பற்றி இழுத்தாள்.
எஸ்தர் புன்னகையுடன், “உண்ணாவிரதம் எல்லாம் இருக்க வேண்டாம். இன்னைக்கு மிகப்பெரிய குடும்பத்தில் இருந்து உன்னை விட பெரிய அண்ணாவுக்குப் பிறந்தநாள். அதனால நம்ம ஆசிரமத்துக்கு வகை வகையா சாப்பாடு வந்திருக்கு. பிரியா உனக்காக இடத்தைப் புடிச்சிட்டு வெயிட் பண்றா. நீ போய் சமத்துக் குட்டியா சாப்பிடுவியாம்” என்றார்.
“இல்லை, எனக்கு வேண்டாம்! என்னோட பேரை மாத்தும் வரை உண்ணாவிரதம் தான்” என முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்தாள்.
எஸ்தர் பெருமூச்சுடன் மெல்லத் திரும்ப, அங்கே காந்தியின் படம் இருந்தது. புருவம் உயர்த்தியவர், “அகிம்சா, போய் சாப்பிடு” என்றார்.
அவள் அப்படியே அமர்ந்திருக்க, “இனி காவியப்ரியா பேரை மாத்தி ‘அகிம்சா’ அப்படின்னு வச்சுட்டேன்” என அவரின் குரல் கேட்டதும், “மதர்!” எனத் துள்ளிக்குதித்தபடி அவரைக் கட்டிக்கொண்டாள் அகிம்சா.
“ஹே பிரியா! என் பேர் புதுப்பேர்… என்னோட பேரு அகிம்சா! என்னோட பேரு அகிம்சா!” எனத் துள்ளிக்குதித்தபடி தனது தோழி பிரியாவைக் காண ஓடினாள் அகிம்சா.
பிரியா, அகிம்சா இருவரும் ஒன்றாகத்தான் பள்ளி படிப்பை முடித்தார்கள். பிரியா, ஆசிரமத்திலேயே வளர்ந்த பார்த்திபனைக் காதல் திருமணம் செய்துகொண்டாள். பிரியா சென்னையில் செட்டில் ஆகிவிட்டாள். இருந்தாலும் தினமும் போன் செய்து, “வீட்டுக்கு வாடி, வீட்டுக்கு வாடி” என அழைத்துக்கொண்டே இருப்பாள் பிரியா. அகிம்சாவுக்கு ஒரே உயிர்த்தோழி யார் என்றால் பிரியா மட்டுமே! அவளுக்குச் சொந்தம், உறவு என அனைத்துமே பிரியா ஒருவள் மட்டும் தான். அதற்கு அடுத்து அவளின் வாழ்வில் நுழைந்தான் கோபி கிருஷ்ணா.
சிறுவயதில் இருந்தே ஒரு கூட்டுக்குடும்பத்தில் வளர வேண்டும், வாழ வேண்டும் என கற்பனையில் தனக்குத்தானே பேசிக்கொள்வாள் அகிம்சா. ‘நம்ம வீட்ல ஒரு பெரிய வீடு இருக்கணும். தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, அக்கா, தம்பி, அம்மா, அப்பா எல்லாரும் இருக்கணும். கணேஷ்க்கு ஒரு அம்மா, அப்பா கிடைச்ச போல எனக்கும் கிடைக்கணும்’ என அகிம்சா வேண்டுவாள். ஆனால் பிரியாவோ, “இல்லை, அகிம்சா எப்பவும் என் கூட இருக்கணும்” என்று வேண்டுவாள்.
அவளது இந்தக் கனவுக்கு வண்ணங்கள் பூச வந்தவன் தான் கோபி கிருஷ்ணா. கல்லூரிக் காலத்திலிருந்தே இருவரும் இணைபிரியா தோழர்கள். அகிம்சாவுக்குக் காதல் உணர்வுகள் என்றால் எப்படி இருக்கும் என்று தெரியாது; குடும்ப உறவுகள் என்றாலும் எப்படி இருக்கும் என்று தெரியாது. அனைத்தையும் கற்பனையில் வைத்து யோசித்துப் பார்த்தவளுக்கு, கோபி கிருஷ்ணா தனது அழகான குடும்பத்தைக் காட்டினான். அவளின் நீண்டநாள் ஏக்கங்களைப் போக்க நினைத்தான்.
அகிம்சா ஆசிரமத்தில் வளர்ந்தவள் என்ற தயக்கம் கோபியின் வீட்டில் தொடக்கத்தில் இருந்தபோதிலும், “அகிம்சா இல்லைனா என் வாழ்க்கையே இல்லை!” என்று கோபி பிடிவாதமாக நின்றதால், மகனின் ஆசைக்காக அவளது குணத்தைப் பார்த்து அந்த மொத்தக் குடும்பமும் அகிம்சாவைத் தங்கள் வீட்டு மகளைப் போலத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடியது.
கோபி உற்சாகத்துடன், “அகிம்சா… வீட்ல எல்லாரும் சம்மதிச்சுட்டாங்கடி! நாம சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கலாம்னு அப்பாகிட்டயும் பேசிட்டேன்!” என்று பரவசத்துடன் சொன்ன அந்த நொடியில், அகிம்சாவின் உலகம் பேரானந்தத்தில் திளைத்தது. அகிம்சாவுக்கு இறக்கை கட்டிப் பறப்பது போல ஒரு உணர்வு தோன்றியது; அத்தனை சந்தோஷம்! கோபியின் குடும்பத்தின் ஒரு முகத்தை மட்டுமே பார்த்தாள் பெண்ணவள். ஒரு பிரச்னை வந்தால் அதே குடும்பம் எப்படி மாறும் என்று அறியவில்லை அவள். இதோ, ‘நிச்சயதார்த்தம் முதலில் செய்யலாம்’ என முடிவெடுக்கப்பட்டது.
அடுத்த சில நாட்களிலேயே, இரு வீட்டார் மற்றும் ஆசிரமப் பெரியோர்களின் ஆசியோடு ஒரு விநாயகர் கோவிலில் மிகவும் எளிமையாகவும் அழகாகவும் நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டது. பார்த்திபன், பிரியா இருவரும் நிச்சயத்துக்கு வந்தார்கள். பிரியாவுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
“சொன்னதை நடத்திக் காட்டிட்டீங்க மேடம்!” எனத் தனது சிறுவயது தோழியை அணைத்தாள் பிரியா.
“என்ன?” என அகிம்சா அவளைப் புருவம் சுருக்கி, பொய்க்கோபத்துடன் பார்க்க, பிரியா சிரித்தபடி, “நீ தானே சொல்லுவ எப்பவும்… ‘எனக்கு வீட்ல நிறைய பேர் இருக்கணும், எனக்கு வீடே கொண்டாட்டமா இருக்கணும், தாத்தா வேணும், பாட்டி வேண்டும்’ அப்படி இப்படின்னு? நீ ஏசப்பாகிட்ட வேண்டுன போல எல்லாரும் உனக்கு கிடைச்சிட்டாங்க” என்றாள் பிரியா சந்தோஷமாக!
அகிம்சா, பிரியாவின் கையைப் பற்றி, “எல்லாரும் இருந்தாலும் எனக்கு என்னைக்கும் நிரந்தரம் நீ மட்டும் தான் பிரியா!” என முத்தமிட்டாள். இப்படி பல பாசப் போராட்டங்களுக்குப் பிறகு நல்லபடியாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
அந்த ஒரு வாரம் பிரியா, பார்த்திபன் இருவருடனும் நேரத்தைச் செலவிட்டாள் அகிம்சா. கூடவே கோபியும் சேர்ந்துகொண்டான். “நீ எப்பவும் இப்படியே இருக்கணும். கோபி கிருஷ்ணா உன்னை நல்லாப் பார்த்துப்பான்” என்று இருவரும் விடைபெற்றார்கள்.
அவர்களை வழியனுப்பிவிட்டு, ஸ்கூட்டியில் அகிம்சா தனது ஹாஸ்டல் நோக்கிப் புறப்பட்டாள். அவளது மனதுக்குள் புது வாழ்வின் வசந்த நினைவுகள் இளையோடியது. கோபியின் குடும்பத்தினர் காட்டிய அன்பு, கோபி தன்னிடம் நடந்துகொள்வது, பிரியா மற்றும் பார்த்திபன் இருவரும் கூறிய விசயங்கள் என அந்த அழகான நினைவுகளை ஓட்டிப் பார்த்துக்கொண்டே கவனக்குறைவாக வண்டியை ஓட்டி வந்த நொடி…
“டமார்…!”
– தொடரும்.










💬 Be the first to comment