
அதிகாரம் மண்டியிடும் அஹிம்சை அவள் 23
- 1 Oct 2026
- 104 reads
- ★ 5.0 (2)
- 9 min read
Epi -23
வழக்கமான மாத மருத்துவப் பரிசோதனைக்காக ஆர்த்தியை அழைத்துக்கொண்டு உஷா ராணி மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். வீட்டில் குட்டி ரிஷியைப் பார்த்துக் கொள்ளும் முழுப் பொறுப்பும் கங்காவின் வசம் இயல்பாகவே வந்து சேர்ந்தது.
கைகளில் கட்டுகள் அவிழ்க்கப்பட்டிருந்ததால், அகிம்சாவிற்கு உடலும் மனமும் நீண்ட நாட்களுக்குப் பிறகு அத்தனை இலகுவாக இருந்தது. சமையலறையில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்த கங்காவின் அருகில் தயக்கத்துடன் சென்றவள், மெல்லிய குரலில் பேச்சுக் கொடுத்தாள்.
“மேம்… நான் ரிஷியைப் பின்னாடி கார்டனுக்குக் கூட்டிட்டுப் போகட்டுமா?”
கங்கா தன் முகத்தில் கனிவான புன்னகையைத் தேக்கியபடி, “தாராளமா கூட்டிட்டுப் போ அகிம்சா. பையன் ஒரே இடத்துல சுத்திட்டு இருந்தான். இந்தா, இந்தத் தொப்பியை மட்டும் அவனுக்கு மாட்டிவிட்டுடு,” என்று அனுப்பி வைத்தார்.
தோட்டத்து மென்புல் தரையில் கால் பதித்த அடுத்த நொடியே, ரிஷி உற்சாகத்தின் உச்சத்திற்குச் சென்றான். அவளது விரல்களைப் பிடித்து இழுத்துக் கொண்டு துள்ளிக்குதித்தான்.
“அகிம்சா… நீ அந்த புளூ காரை எடுத்துக்கோ! நான் இந்த ரெட் காரை ஓட்டுறேன். யார் ஃபர்ஸ்ட் வர்றான்னு பாப்போம்!” என்று மழலையில் சவால் விட்டான்.
அகிம்சா புன்னகையுடன் புல்வெளியில் அமர்ந்து, செடிகளையும் மரங்களையும் காட்டி அவனுடன் மெய்மறந்து கதைகள் பேசிக்கொண்டிருந்தாள். நாட்கள் நகர்ந்த வேகத்தில் அவளது முகத்தில் அப்படியொரு நிம்மதியும் புத்துணர்ச்சியும் தவழ்ந்தது.
அதே நேரம், தோட்டத்துப் பளிங்கு நடைபாதையில் வழக்கமான மாலை நேர நடைப்பயிற்சிக்காகத் தாமோதரனும் பாக்யாவும் வந்து சேர்ந்தார்கள்.
அங்கே ரிஷியோடு கள்ளங்கபடமில்லாமல் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த அகிம்சாவைக் கண்டதும், பாட்டி பாக்யாவின் முகத்தில் கோப ரேகைகள் சட்டெனப் படர்ந்தன. தன் பேரன் அதர்வனின் வாழ்க்கையும், குடும்பத்தின் கௌரவமும் ஊரறியச் சிதைந்துபோனதற்கு இந்தக் காரணகர்த்தாதான் எதிரே அமர்ந்திருக்கிறாள் என்ற எண்ணம் அவரது நெஞ்சில் ஆத்திரமாக மூண்டது.
“என்னங்க, ஒரு நிமிஷம்…” என அவர் நடக்க…
“வேணாம் பாக்யா! நமக்கு எதுக்குத் தேவையில்லாத வேலை?” எனத் தாமோதரன் தனது மனைவியைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்ய, அதையெல்லாம் அவர் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.
கோபத்தில் அவளருகே சென்ற பாக்யா, தன் கடுமையான குரலில் அவளை அதட்டினார்.
“ஏய்! என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல?” என்று கோபமாகப் பேசினார்.
சத்தம் கேட்டு அகிம்சா திடுக்கிட்டு எழுந்து நின்றவள், “என்னாச்சுங்க?” எனத் தயங்கியபடி கேட்டாள்.
பாக்யாவின் கண்கள் எரிச்சலோடு அவளை அளவெடுத்தன.
“உன்னை வீட்ல எப்படித்தான் வளர்த்தாங்களோ தெரியல! ஒரு குடும்பத்துப் பையன் மேல அபாண்டமா பழியைப் போட்டு, வாழ்க்கையையே பாழாக்கி நிக்க வச்சுட்டியே! இல்லாத பொல்லாத கதையெல்லாம் கட்டி விட்டுட்டு, இங்க வந்து மகாராணி மாதிரி என் பேரன் கூட உட்கார்ந்து விளையாடிட்டு இருக்கியா? உங்க அம்மா, அப்பா உனக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுத்துதான் வளர்த்தாங்களா?”
அகிம்சா ரிஷியின் பக்கம் திரும்பி, “நீ உள்ளே போ கண்ணா, நான் வரேன்,” என உள்ளே அனுப்பி வைத்தாள்.
“ஹேய்! உன்கிட்டதான் பேசிட்டு இருக்கேன். பணத்தைப் பறிக்க இப்படி ஒரு திட்டமா? ஏதோ என் பேரன் உயிரை நீ காப்பாத்தினதால உன்னை விடறேன். உண்மையாகவே உன்னை உன் குடும்பம் நல்லா வளர்த்திருந்தா, நீ என் பேரன் கிட்டருந்து தள்ளி இரு!” என்று அவர் சொல்லிவிட்டு நகர…
‘அம்மா, அப்பா’ என்ற அந்த ஒற்றைச் சொல் அகிம்சாவின் அடிவயிற்றில் அமிலத்தை வார்த்தது போலிருந்தது. முகத்தின் ரத்த ஓட்டம் சற்றே குறைந்து வெளுத்தது; விழிகளில் கண்ணீர்த் திரைகள் முட்டின. எனினும், தன் சுயமரியாதையையும் நிதானத்தையும் அவள் தவறவிடவில்லை.
“ஒரு நிமிஷமுங்க…” என பாக்கியலட்சுமியின் முன்னால் சென்று நின்றவள், இரு கரங்களையும் கூப்பியபடி, நடுங்கும் குரலைச் செருமிக்கொண்டு, “என்னை ரொம்ப நல்லாதான் வளர்த்தாங்க… நான் வளர்ந்த ஆசிரமத்துல இருந்த மதர், அங்க இருந்த எல்லாப் பிள்ளைகளுக்கும் நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுத்துதான் வளர்த்தாங்க. என் மேலேதான் தப்பு. அதுக்காக ஒட்டுமொத்தமா சொல்றது கஷ்டமா இருக்கு. அந்த நேரத்துல இருந்த ஆத்திரத்துலயும் பழிவாங்குற வெறிலயும் ஒரு பெரிய தப்பைச் செஞ்சுட்டேன். அதுக்காக உங்ககிட்ட மனசார மன்னிப்புக் கேட்டுக்கிறேன்…” சொல்லி முடித்த கணம், விழியோரம் வழிந்த கண்ணீரைத் தன் விரல்களால் துடைத்தபடி, அங்கிருந்து விறுவிறுவெனத் திரும்பி நடக்க எத்தனித்தாள்.
‘எவ்வளவு பேசுகிறாள்? பெரிய நியாயவாதி போல!’ என்று கோபமாக வந்தது பாக்கியலட்சுமிக்கு.
‘ஆசிரமம்’ என்ற சொல்லைக் கேட்டதும், அதுவரை அமைதியாகக் கல்மேடையில் அமர்ந்திருந்த தாமோதரன் தாத்தாவின் உள்ளுணர்வில் ஏதோ ஒன்று சுரீரெனத் தைக்க, “ஏம்மா… ஒரு நிமிஷம் நில்லு!” என்றார்.
அவரது கம்பீரமான குரல் கேட்டதும் அகிம்சாவின் கால்கள் தானாகவே நின்றன.
தாமோதரன் தன் கைத்தடியை ஊன்றியபடி மெல்ல அவளருகே வந்தவர், “நீ ஆசிரமத்துல வளர்ந்தியாமா? எந்த ஊரு ஆசிரமம் அது?” எனக் கேட்டார்.
“இங்கே கோயம்பத்தூரில் இருக்கிற செயின்ட் மேரிஸ் ஆதரவற்றோர் இல்லம் தாத்தா…” என்றாள் அகிம்சா தணிந்த குரலில்.
அந்தப் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் தாமோதரனின் உடல் ஒரு கணம் அதிர்ந்தது. நடுக்கத்துடன் தன் ஜிப்பாப் பையிலிருந்து போனை எடுத்தவர், கண்ணாடியை மூக்குக்குத் தள்ளிக்கொண்டு, கைகள் நடுங்க போனிலிருந்து படத்தை எடுத்து அவளிடம் காட்டியவர், “இந்தப் படத்துல இருக்கிறவங்களைத் தெரியுமாமா?” எனக் கேட்டார் ஆர்வத்துடன்.
அகிம்சாவின் முகம் ஒரு நொடி பளிச்சிட, “இது மதர் எஸ்தர்… இவங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்கு அகிம்சான்னு பேர் வச்சதே அவங்கதான்!” என்றவள் புன்னகையுடன், “உங்களுக்கு இவங்க ஃபிரெண்டா தாத்தா?” என்று சொன்னவள், தயங்கியபடி, “சார்…” என மாற்றினாள்.
தாமோதரனின் கண்கள் கலங்கின. அந்த போட்டோவை ஜூம் செய்து பார்த்தவர், “இவளோட உண்மையான பேரு சரஸ்வதி. இவள்… என்னோட தங்கச்சி கண்ணு!” என்றார் உருக்கமாக.
அகிம்சாவுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக இருந்தது.
“மதர் எஸ்தர் உங்க தங்கச்சியா?” எனத் திடுக்கிட்டுக் கேட்டவள், “அந்த போட்டோ கொடுங்களேன், என்கிட்ட அவங்க போட்டோ இல்ல,” என உருக்கமாகக் கேட்டாள். தாமோதரன் அனைத்துப் படங்களையும் அவளுக்குப் போட்டுக் காட்டினார்.
அகிம்சா அவரின் முன்னால் அமர்ந்து படங்களைப் பார்த்தபடி, கண்களில் நீர் கோர்க்க, “அவங்களை எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து தெரியும். அவங்க எல்லாக் குழந்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பாங்க. எங்க ஆசிரமத்தில் இருக்கிற எல்லா குழந்தைகளுக்குமே ரொம்பப் பிடிச்சது யாருன்னா மதர் எஸ்தர்தான்… எல்லாரையும் ஹேப்பியா வச்சுப்பாங்க,” என்றவள், மூச்சுவாங்க ஏதோ நினைவு வந்தவளாக அவளது அறைக்கு ஓடிச் சென்று வந்தாள்.
“இந்த பைபிள் எனக்காகக் கொடுத்தாங்க… அது கூட இந்த சில்வர் ரிங் நான் 10th-ல ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்ததுக்குக் கொடுத்தாங்க. இது நானும் அவங்களும் இருக்கிற போட்டோ… நான் மார்க் எடுத்தபோது நியூஸ் பேப்பர்ல போட்டோ எடுத்தாங்க, அதைக் கட் பண்ணி அவங்க ஞாபகமா வச்சிருக்கேன்,” எனப் புன்னகையுடன் காட்டியவள், “என்னைக்காவது எனக்கு வீட்டு ஞாபகம் வந்தால் இதைப் பார்த்துப்பேன்,” என்று கூறினாள் கண்களில் நீர் கோர்க்க.
தாமோதரன் மோன நிலைக்குச் சென்றார். தனது தங்கை கன்னியாஸ்திரி ஆனதில் துளிகூட விருப்பம் இல்லை அவருக்கு. அவரும் எவ்வளவோ தடுத்துப் பார்த்தார்; அவரால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால் சரஸ்வதி விடாப்பிடியாகச் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். தனது மொத்த வாழ்க்கையையும் கர்த்தருக்காக, ஏழைக் குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகளுக்காகத் துணையாக நின்று கழித்து, இயற்கை எய்தினார்.
“மன்னிச்சிடுங்க சார்… நான் என்னை வளர்த்து ஆளாக்கிய என்னோட மதர் எஸ்தர் குடும்பத்துக்கு இத்தனை பெரிய அவமானத்தைத் தேடித் தந்துட்டேன்,” என கையெடுத்துக் கும்பிட்டவள், எதிர்பாராத நேரத்தில் அவரது காலிலேயே விழுந்துவிட்டாள்.
பாக்கியலட்சுமி பதறிப்போய், “கண்ணு, எழுந்திரு கண்ணு! உன்னோட கையே அடிபட்டிருக்கு. நீதான் என் பேரனைக் காப்பாத்தியிருக்க… இதெல்லாம் நடக்கணும்னு இருக்கு. இனிமே நடந்து முடிஞ்சதைப் பத்திப் பேசி என்ன பிரயோஜனம்? விடு கண்ணு. நானும் உன்னை மனசு கஷ்டப்படுற மாதிரி பேசியிருந்தால் என்னை மன்னிச்சிடு கண்ணு,” எனக் கூற…
“இல்ல, பரவாயில்ல மேம்,” எனக் கண்களைத் துடைத்துக் கொண்டாள் அகிம்சா.
இந்த வாழ்க்கை நமக்கு இன்னும் எத்தனை அதிசயங்களைத் தன்னகத்தே வைத்திருக்கிறது என்று யாருக்கும் தெரியாது; அந்த அளவுக்குச் சுவாரசியமான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம் அனைவரும்.
அதர்வன் அவனது வேலைகளை முடித்து, இன்று நேரத்திலேயே வீடு வந்து சேர்ந்தான்.
ஆர்த்தி உறங்கிக் கொண்டிருப்பதால், ரிஷி அவனது பொம்மைகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு, உஷா ராணியிடம் சொல்லிவிட்டு அகிம்சாவின் அறைக்கு விளையாடச் சென்றுவிட்டான்.
அதர்வன் எப்பொழுதும் போல ஃப்ரெஷ்ஷாகிவிட்டு அகிம்சாவைக் காண அறைக்குள் நுழைந்தவனுக்கு, அங்கே அதிர்ச்சி காத்திருந்தது!
கார்களை அடுக்கி வைத்த ரிஷி, “அய்யோ அகி! உனக்குக் கொஞ்சம் கூட அறிவு இல்லையா?” எனக் கேட்டான்.
“என்னாச்சு ரிஷி சார்? நான் என்ன பண்ணேன்?” என அகிம்சா அவனிடம் கேட்க…
“ஃபர்ஸ்ட் எல்லோ கார், தென் எனக்குப் பிடிச்ச ப்ளூ, தென் பிளாக் கார், அப்புறம் ட்ரக், தென் பைக்… இப்படித்தான் வைக்கணும்!” என அவன் அவளைக் கண்டபடி திட்ட…
“ஓகே ஓகே! இப்போ பாருங்க, சரியா உங்களுக்கு எடுத்துக் கொடுக்கிறேன்,” என ஒவ்வொரு கார்களாக அவனுக்குத் தள்ளி வைத்தாள்.
“உனக்கு எப்போ இது சரியாகும்? அப்போதான் நம்ம ரேஸ் கார் விளையாட முடியும்… ஜாலியா இருக்கும்!”
“ரிஷி சார், நீங்க ஒண்ணும் ஃபீல் பண்ண வேணாம்… இந்த முறை நான் டாக்டர்கிட்ட கேட்டுட்டு வந்துடறேன். ஜாலியா விளையாடலாம்,” என்றாள் அகிம்சா புன்னகையுடன்.
“அகி, அந்த பைக் எடு!” எனப் பெயரைச் சொல்லி, அதுவும் செல்லப் பெயர் வைத்து அவளை அழைக்கும் அளவுக்கு வந்துவிட்டான் ரிஷி.
‘அப்போ இதெல்லாம் நிறைய நாட்கள் நடந்திருக்க வேண்டும்! எப்படி என் கண்ணில் படவில்லை? இந்த அளவுக்கு இவன் அகிம்சாவுடன் இணக்கமாக இருக்கிறான்?’ என்பதை மார்புக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொண்டு, வாசற்கதவில் சாய்ந்தபடி பார்த்தான் அதர்வன்.
“அகி, வெரி குட்!” என அனைத்தையும் அடுக்கி வைத்தவன், “ரேஸுக்கு முன்னாடி போட்டோ எடுக்கணும்… உன்னோட போன் எங்கே?” எனக் கேட்க…
“டேபிள்ல இருக்கு,” என அனைத்தையும் சரியாகத் தள்ளி வைத்தாள் அகிம்சா.
திடீரென ரிஷி அனைத்துக் கார்களையும் வேகவேகமாக எடுத்துக்கொண்டு திரும்ப…
“ரிஷி சார், உங்களுக்கு என்னாச்சு?” எனக் கேட்டபடி திரும்பிய அகிம்சாவுக்கு, அப்பொழுதுதான் தெரிந்தது அதர்வன் வந்திருக்கிறான் என்று.
அதர்வன் வில்லங்கப் புன்னகையை உதிர்த்துப் புருவம் தூக்கியபடி, “ஆர்த்தி! உன் பையன் என்ன பண்றான்னு பாரு?” என கொஞ்சம் சத்தமாகக் கூவினான்.
ரிஷி பொம்மைகளைப் பயத்தில் கீழே போட்டுவிட்டு, அழுகையுடன் வெளியே ஓட முயற்சி செய்ய… அதர்வன் அவனைத் தடுத்து, “டேய்! நில்லுடா,” எனப் பிடித்துக் கொண்டான்.
“அதர்வன், குழந்தையை விடுங்க… என்ன பண்றீங்க?” என வேகமாக எழுந்து வந்தாள்.
“ச்ச்! உன் வேலையை நீ பாரு,” என அதர்வாவின் பார்வை ரிஷியின் மீதிருக்க… ரிஷி அழுதுகொண்டே நெளிந்தவன், “விடுடா என்னை! விடுடா என்னை!” என அழ ஆரம்பித்தான்.
“டேய்! நான் உனக்கு ‘டா’வா?” என அதர்வன் மிரட்ட… “விடுடா விடுடா!” என ரிஷி சொன்னதையே திரும்பக் கேவி அழுதபடி கூறினான்.
அகிம்சா சட்டெனச் சிரித்துவிட… அதர்வன் புருவம் சுருக்கி, “ஓ! சிரிக்கிறியா நீ?” எனப் பற்களைக் கடித்துக்கொண்டே பார்த்தவன், ரிஷியைக் கீழே இறக்கிவிட… அவன், “போடா பேட் பாய்!” எனச் சொல்லி ஓடியே விட்டிருந்தான்.
“எத்தனை நாளாய் நடக்குது இந்த மீட்டிங்?” எனக் கேட்டபடி அவளை நோக்கி வந்தான் அதர்வன்.
“அகிம்சா…?”
– தொடரும்.










💬 Be the first to comment