
அதிகாரம் மண்டியிடும் அஹிம்சை அவள் 16
- 1 Oct 2026
- 104 reads
- ★ 3.7 (3)
- 9 min read
Epi -16
அகிம்சா மெல்லத் தன் தலை அசைத்து, “நான்… நான் நல்லாருக்கேன், இப்போ ஓகே,” என்று வறண்ட குரலில் கூறினாள். இரு கைகளிலும் போடப்பட்டிருந்த தடிமனான கட்டுகள் அவளுக்குப் பெருஞ்சுமையாகவும் இருக்க, அவளது கைகளைப் பார்த்தாள்.
‘தன்னால் தான் அவளுக்கு இப்படி ஒரு நிலை!’ என அதர்வன் அவளது நிலையைப் பார்த்து, மனதுள் எழுந்த ஆழமான வேதனையை வெளியே காட்டிக்கொள்ளாமல், “குட்… டாக்டர் செக் பண்ணிட்டு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்னு சொல்லிட்டாரு. வீட்டுக்குப் போகலாம்,” என்றான் இயல்பாக…
அகிம்சாவின் பார்வை சட்டென்று மாறியது. அவள் தயக்கத்துடன் அமர்ந்திருக்க, “என்னாச்சு? வேற எதுவும் பிரச்சனை இருக்கா? நம்ம வீட்டுக்குக் கிளம்பலாம்ல?” என அதர்வன் கேட்டுக்கொண்டிருக்க…
“நான் எதுக்கு வீட்டுக்கு?”
“அப்புறம்? இங்கேயே இருக்கப்போறியா?” என ஏளமாகக் கேட்டான்.
அகிம்சா பெருமூச்சுடன், “நான் சென்னை கிளம்பலாம்னு இருக்கேன், என்னோட பிரெண்ட் வீட்டுக்கு. நீங்க உங்களோட பிரச்சனையை… அதாவது சசிரேகா மேடம் வீட்ல பேசி, அடுத்ததாக என்ன பண்றதுன்னு பாருங்க,” என்றாள்.
“உன்னை இந்த நிலையில் விட்டுட்டு என்னால என்னோட லைஃப்ல எப்படி போகஸ் பண்ண முடியும்? நீயே சொல்லு?” எனத் திரும்பக் கேட்டான்.
அகிம்சா చిన్న புன்னகையுடன், “என்னோட நிலைக்கு என்ன பிரச்சனை? நான் நல்லாத்தானே இருக்கேன்? ப்ளீஸ், தயவுசெஞ்சு விட்டுடுங்க! இதுக்கும் மேலே என்னால முடியல…” என உடைந்த குரலில் கூறியபடி அவனைப் பார்த்தாள்.
அதர்வன் எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டிருக்க… அகிம்சா தன்னை நிதானித்துக்கொண்டு எழ முயற்சி செய்தாள். உடலில் தெம்பில்லை; கால்கள் இரண்டும் தடுமாற, அதர்வன் கோபத்துடன் அவளைக் கீழே விழாமல் பிடித்து அமர வைத்தவன், போனை எடுத்து, “நாங்க கீழே வரோம், காரை ரெடி பண்ணுங்க,” எனச் சொல்லிவிட்டு ஆஃப் செய்தான்.
“வேண்டாம்… நான் அங்கே வரல!” எனத் தீர்க்கமாகத் தலையசைத்தாள் அகிம்சா.
“நீ வந்துதான் ஆகணும்!” என அதர்வனின் முகம் சட்டென மாறத் தொடங்கியது.
“என்னால முடியாது!” என அகிம்சா அழுத்தமான குரலில் பதில் கொடுக்க…
“என்ன விளையாட்டு காட்டுறியா? ரெண்டு கையிலும் கட்டு போட்டுக்கிட்டு, நரம்பு கட் ஆகி ஸ்டிச்சஸ் இருக்குற நிலைமையில தனியா சென்னை போவியா?”
“அப்படின்னா ஹாஸ்டல் போறேன்!”
“ஓ, ஹாஸ்டலுக்குப் போவியா?” என்றவன் கோபத்துடன், “அப்போ வரமாட்ட, அப்படித்தானே?” என்று அதர்வன் கேட்டுக்கொண்டிருக்க… அந்த நேரம் அலையா விருந்தாளியாக ஆரியன் வந்து சேர்ந்தான்.
“அகிம்சா, எப்படி இருக்க? என்னாச்சு?” என்று கேட்டபடி உள்ளே நுழைந்தான் ஆரியன். ஆரியனைப் பார்த்த அடுத்த நொடி அதர்வன் முறுக்கிக்கொண்டு போனை எடுத்தபடி, “நாகா, இப்போ உடனே ஹாஸ்பிட்டல் என்ட்ரன்ஸ் வந்திடு! வீட்டுக்குக் கிளம்புறோம்,” என்று போனை வைத்தான். அவனது மனதில், ‘இந்தக் கிறுக்கனை எப்படி அகிம்சாவுக்குத் தெரியும்? ரெண்டு பேரும் தெரிஞ்சவங்களா?’ என்று யோசித்தபடி நின்றான்.
அதர்வன் அங்கு இருப்பதையே மதிக்காத ஆரியன், “இதுக்கெல்லாம் காரணம் யாரு? அவனைச் சும்மா விடமாட்டேன்! என்ன காரியம் பண்ணி வச்சிருக்க நீ? எனக்கு பார்த்தி போன் மேல் போன் பண்றான், நீ எடுக்கவே இல்லையாம்? இதென்ன ரெண்டு கைலயும்?” என கோபமாகக் கேட்டுக்கொண்டிருக்க… அகிம்சா தெளிவான குரலில், “ஒண்ணுமில்லை அண்ணா! நான் இப்போ ஓகே. அது போன் ப்ராப்ளம் ஆகிப்போச்சு… இது கைல எலும்பு முறிவு ஆகிடுச்சு, வேற ஒண்ணுமில்லை,” என்று அவள் விளக்கிக்கொண்டிருக்க…
“பார்த்தி யாரு?” எனச் சம்பந்தமே இல்லாமல் இடையில் வந்தான் அதர்வன்.
ஆரியனும் அகிம்சாவும் ஒருசேரத் திரும்பிப் பார்த்தார்கள். அதர்வாவின் பார்வை அகிம்சாவின் மீதிருக்க… “அகி!” எனச் சொல்லிக்கொண்டு வந்தான் கோபி கிருஷ்ணா.
“எப்படித் தெரியும் உங்களுக்கு?” என அகிம்சா கேட்க… கோபி அவளைப் பார்த்தவன், அங்கேயே ஊன்றியபடி நின்றுவிட்டான்.
“நான் தான் சொன்னேன்!” என ஆரியன் கூறிவிட, அகிம்சா அவனைச் சோர்வுடன் பார்த்தாள். அதர்வாவுக்குத் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப்போல இருந்தது.
ஆரியன் தலையைக் கோதிக்கொண்டு, “பார்த்திபன் எனக்கு போன் பண்ணி விசாரிக்கச் சொன்னான். உன்னோட ஆபீஸ் போனேன், அப்போ இவரை மீட் பண்ணேன். அங்கேயும் நீ இல்லைனு தெரிஞ்சது. அப்போ உன்னை நினைச்சு இவர் ரொம்ப பயந்துட்டாப்ள… அதனாலதான் உடனே உன்னைத் தேடி கிளம்பி வந்துட்டோம்,” என்றான்.
கோபி அவளின் அருகில் வந்தவன், அகிம்சாவைப் பார்க்க முடியாமல் வேறுபுறம் திரும்பி அழுதேவிட்டான்.
இந்த இக்கட்டான சூழ்நிலையைப் பெண்ணவளால் எதிர்கொள்ள முடியவில்லை. “ரெண்டு பேரும் கொஞ்சம் வெளியே போங்க, நான் பேசணும்,” என அகிம்சா கூற…
அதர்வன் முந்திக்கொண்டு, “நீ வீட்டுக்கு வந்து எதுவா இருந்தாலும் என்கிட்ட பேசு. இப்போ நம்ம புறப்படலாம்,” என்றான்.
அகிம்சா அவனைத் திடுக்கிட்டுப் பார்த்தவள், “நான் கோபி கிருஷ்ணன் கிட்ட பேசணும். நீங்க வெளியே போங்க,” என உறுதியான குரலில் கூறினாள்.
இதைக் கேட்டதும் ஆரியனுக்குச் சிரிப்பு வந்துவிட, அதர்வனை கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியே செல்ல… அத்தனை அவமானமாகப் போனது அதர்வனுக்கு! ஆரியனின் பின்னால் அவனும் வெளியே வந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்தபடி நின்றார்கள்.
“எப்படிப் பழக்கம் உனக்கு?”
“எனக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை… கெட்ட சகவாசமும் இல்லை!” என்றான் ஆரியன்.
அதர்வன் பற்களைக் கடித்தபடி, “உனக்கு அகிம்சாவை எப்படித் தெரியும்?”
ஆரியன் உடையைச் சரிசெய்துகொண்டு, “உனக்கும் முன்னாடியே எனக்குத் தெரியும்!” என்றான் குதர்க்கமாக…
அதர்வன் முறைத்துப் பார்க்க… ஆரியன் கேவலமாக பாவனை செய்து, “அநியாயமாக அவளோட வாழ்க்கையை அழிச்சிட்டல்ல?”
“மைண்ட் யுவர் வாய்ஸ்!” என கைமுஷ்டியை மடக்கியவன்… “உன்னோட ரிப்போர்ட்டர் பண்ண தப்பை மறைக்க அவளோட கழுத்துல தாலி கட்டிட்டல்ல… உனக்கு வெட்கமாகவே இல்லைல?” என அடுக்கடுக்காகப் பேசிக்கொண்டே சென்றான் ஆரியன்.
“உனக்கெல்லாம் விளக்கம் கொடுக்கிற அவசியம் எனக்கு இல்லை!” என்று அதர்வன் அதே சீற்றத்துடன்…
“உன்னை யாருடா அவள் கழுத்துல பெரிய இவன் மாதிரி தாலி கட்டச் சொன்னது?” என ஆரியன் அவனது சட்டையைக் கோபமாகப் பற்றிட… “நீ யாருடா என்னைக் கேட்க?” என்று இருவரும் கழுத்தை இறுக்கிப் பிடித்துச் சண்டை போட்டார்கள்.
“வெட்கம்கெட்டவனே!” என ஆரியன் கூற… “நீதான்டா வெட்கம்கெட்டவன்!” என அதர்வன் பற்களைக் கடித்தபடி கழுத்தை இறுக்கினான்.
“ஆர்யன்! என்ன பண்ற? அதர்வனை விடு!” என கோபமாக அதர்வனைக் காக்க வந்துவிட்டாள் சசிரேகா. சத்தம் அதிகமாக இருக்க, கோபி கிருஷ்ணா வேகமாக வெளியே வந்தவன், “என்னாச்சு? என்ன சத்தம்?” என்று அவர்கள் இருவரையும் பார்த்தான்.
அதர்வன் ஆரியனை முறைத்தபடி அகிம்சாவைப் பார்க்க உள்ளே சென்றான்.
“ஹே அகிம்சா! நீ இப்போ ஓகே தானே?” எனச் சசிரேகா அவளின் கைகட்டைப் பார்த்து வருத்தப்பட… “எல்லார்கிட்டயும் பேசினது போதும், நம்ம இப்போவே புறப்படலாம் வா,” என அதர்வன் அவளின் அருகில் சென்று இறங்க உதவி செய்ய முயன்றான்.
அந்த நேரம், “தல!” என அழைத்தபடி மூச்சுவாங்கிக் கொண்டு நாகா ஓடிவர, அவனுக்குப் பின்னால் ஆரியனும் வந்தான்.
“அகிம்சா, பில் செட்டில் பண்ணிட்டேன். டிஸ்சார்ஜ் சம்மரி என்கிட்டதான் இருக்கு, வா கிளம்பலாம்,” என ஆரியன் அழைத்தான்.
இதைக் கேட்டதும் அதர்வன் பற்களைக் கடித்தபடி, “நீ யார்ரா? உன்னை யார்ரா அவளுக்குப் பே பண்ணச் சொன்னது?!” எனக் கோபமாகத் திரும்பிக் கேட்க…
ஆரியன் அவனைக் கண்டுகொள்ளாமல் அகிம்சாவிடம், “நான் உன்னை இப்போவே பார்த்திபன் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்,” என மீண்டும் கூறினான்.
“டேய்!” என அதர்வன் ஒரு பக்கம் எகிற… இன்னொரு பக்கம் ஆரியன் சட்டைக் கையை மடித்தபடி பார்க்க…
“ரெண்டு பேரும் ஒரு நிமிஷம் அமைதியா இருக்கீங்களா?” எனச் சோர்வை மீறிக் கத்தியிருந்தாள் அகிம்சா.
இரண்டு ஆண்களும் அதிர்ச்சியுடன் பார்க்க, அகிம்சா அதர்வனைப் பார்த்தபடி, “சார், நான் ஆர்யா அண்ணா கூட கிளம்புறேன். பிரச்சனை வேண்டாம்… இதுக்கும் மேல நான் இங்கே இருந்தா அது சரிவராதுன்னு தோணுது…” என அவள் சொல்லி முடிப்பதற்குள்…
“நீ என் கூடத்தான் வரணும்! அவ்வளவுதான், சொல்லிட்டேன். சசி, நான் சொல்றது சரிதானே?” என அதர்வன் கேட்க…
சசிரேகாவும் உறுதியாக, “ஆமா, அதர்வா சொல்றது கரெக்ட் தான்!” என விடாப்பிடியாகக் கூறினாள்.
ஆரியன் ஏளனமாகச் சிரித்தபடி, “அவளுக்கு நான் இருக்கேன், பார்த்திபன் இருக்கான்!” எனச் சொல்ல…
“முதல்ல நீ யாருடா? அந்தப் பார்த்திபன் எவன்டா? உங்களுக்கு முன்னாடி நான் தான் அவளுக்கு ஃபர்ஸ்ட்… ஏன்னா, நான் அவளோட புருஷன்!”
அவன் சட்டெனக் கூறிய இந்த வார்த்தைகள்… அது வாய்வார்த்தையாகக் கூறினானோ அல்லது உண்மையிலேயே கூறினானோ தெரியவில்லை; ஆனால், அங்கிருந்த இரண்டு பெண்களுக்கும் சுருக்கென்று இருந்தது. ஒன்று அகிம்சா, இன்னொன்று சசிரேகா!
ஆரியன் மனதுக்குள், ‘மாட்டினடா பம்பரக்கட்டை மண்டையா!’ என நக்கலாக நினைத்தபடி பார்க்க… அதர்வன் சட்டென்று இரண்டு பெண்களையும் பார்த்தான். சசிரேகா வெளியில் எதுவும் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும், அவளது முகத்தில் ஒருவிதச் சிறு கவலை தோன்றி மறைந்தது. அப்படியே அதர்வன் அகிம்சாவைப் பார்க்க, அவள் தர்மசங்கடமாக வேறுபுறம் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
அதர்வன் குரலை நிதானித்து, உறுதியான தொனியில், “என்னாலதான் அவளுக்கு இப்படி ஆச்சு! என் உயிரைக் காப்பாத்தப் போனதுனாலதான் இவ்வளவு பெரிய விஷயம் அவளுக்கு நடந்திருக்கு. அதனால அவ என்னோட பொறுப்பு! நிச்சயமா இது என்னோட கடமையும் கூட. அவ என் கூடத்தான் வரணும். காயம் சரியானதுக்கப்புறம் அவளை நான் பத்திரமா அவளோட பிரெண்ட் பிரியா வீட்ல கொண்டு போய் விட்டுடுவேன். ஒரு வயசுப் பொண்ணை எவனோ ஒரு பையன் வீட்ல, அதாவது பார்த்திபன் கிட்டயோ அவளை அனுப்ப முடியாது!” எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டான்.
அகிம்சா அதர்வனை ஒரு மாதிரியாக ஏறிட்டுப் பார்க்க… ஆரியன் உதட்டோரம் பரவிய ஏளனப் புன்னகையுடன், “பார்த்திபனும் பிரியாவும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்! அங்கேதான் நான் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னேன் மிஸ்டர் அதர்வன். நீங்க எப்போவாச்சும் இப்படித்தானா… இல்லை எப்பவுமே இப்படித்தானா?” எனக் கேட்டான்.
“அவ என் கூடத்தான் வருவா! இதுல எந்த மாற்றமும் இல்லை…” என்றவன், நடக்க உதவி செய்ய அருகில் சென்றான். அகிம்சா கலவரத்துடன் அவனைப் பார்க்க… அதர்வன் குரலைச் செருமிக்கொண்டு, “சசி, அவளுக்கு ஹெல்ப் பண்ணுடி,” என்று கூறி போனை எடுத்தான்.
வரிசையாகச் சூர்ய நாராயணனிடமிருந்து அழைப்பு வந்து குவிந்தது. “தல, உங்களை ஐயா எங்கே இருந்தாலும் உடனே வீட்டுக்கு வரச் சொன்னாரு. நீங்க போன் எடுக்கவே இல்லையாம், அதனால ரொம்ப கோபத்தில் இருக்காரு,” என்றான் நாகா.
“நான் பார்த்துக்கிறேன், நீ வண்டி எடுப் போ!” என அதர்வன் போனை எடுத்து, ஆரியன் அகிம்சாவுக்கு அனுப்பிய அனைத்துப் பணத்தையும் மொத்தமாக வட்டியுடன் திருப்பி அனுப்பியவன், கூடவே நான்கு ஐந்து கெட்ட வார்த்தைகளையும் சேர்த்து அனுப்பிவிட்டான்.
அகிம்சா மெல்ல நடந்து வெளியே வர, அதர்வன் கதவைத் திறந்து அவர்கள் செல்ல வழிவிட்டான். “அகிம்சா…” என்று அழைத்தபடி அங்கே கோபி கிருஷ்ணா வேறு காத்திருக்க… அதர்வாவின் பார்வை இருவரின் மீதும் இருக்க… “சொன்னது சொன்னதுதான்! ப்ளீஸ் கிருஷ்ணா, புரிஞ்சுப்பன்னு நம்புறேன்,” எனக் கூறிவிட்டு மெல்ல நடந்தாள்.
இங்கே சூர்ய நாராயணன் கடும் கோபத்தில் அமர்ந்திருக்க, அதர்வன் அகிம்சாவை அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
– தொடரும்.










💬 Be the first to comment