மன்னவன் பூங்கொடி மார்பிலே

by Pradhanya kuzhali
761 views

Episode-18 

பூங்கொடி உற்சாகமாக வந்தவள், அமைதியாக புத்தகத்தை புரட்டினாள். படிக்கவில்லை, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். அனைவரும் வேக வேகமாக படித்துக்கொண்டிருக்க, “ஹே! படிச்சியா டி?” என மணிமேகலை அருகில் வந்தாள்.

“ஹான், அப்படியே பார்த்திருக்கேன்” என பூங்கொடி கூற,

“ஹே, அந்த தியரம் வந்தால் காட்டு, பூங்கொடி” என அனுசுயா கேட்க,

“ம்ம்” என ஒற்றை பதிலுடன் உள்ளே சென்றாள் பூங்கொடி. கடகடவென தேர்வு எழுதினாள். எழுத எழுத வெட்கம் வந்தது. ‘ஏன்டி காதல் கவிதையா எழுதுற?’ என்றுதான் அவளிடம் கேட்க வேண்டும்.

‘காதல் கவிதை இல்ல, உள்ளுக்குள் ஏதோ புத்துணர்ச்சி. அது அவனால் வந்தது. யாரால்? கணவனால்!’ அனுசுயா சொன்ன தியரம் வந்தது. ஆனால் பூங்கொடி அதற்கு பதில் வேறு கேள்வியை தேர்வு செய்து எழுதினாள்.

“ஹே, காட்டுடி பூங்கொடி” என அழைத்தாள் அணு.

“எழுதல” என உதட்டை பிதுக்கியவள், அனைத்து கேள்விகளுக்கும் கடைசி நிமிடம் வரை பதில் எழுதி கட்டி கொடுத்தவள், உற்சாகமாக வெளியே வந்தாள்.

“லயர்!” என கோபத்துடன் வெளியே வந்தாள் அணு.

“வாட்? நான் என்ன பண்ணேன்?”

“என்னை ஏமாத்திட்ட!”

“நீ எழுதவே இல்லையா? நடிக்காத” என பூங்கொடி கேட்க, “பாதிதான் எழுதினேன். எனக்கு சென்டம் மிஸ் ஆகும்” என அனுசுயா சோகத்துடன் அழுதே விட்டாள். “நான் அந்த கொஸ்டின் எழுதவே இல்ல. அப்புறம் எப்படி உனக்கு காட்ட முடியும்? வா, போலாம். அடுத்த எக்ஸாம்ல விட்ட சென்டம பிடி” என்றாள் பூங்கொடி.

“ஹே மைதிலி!” சிரித்துக்கொண்டே “அவளுக்கு மிஸ்டர் ஜெகன் கிட்ட போன் பேசவே டைம் சரியா இருக்குது” என்றாள்.

“அப்படியா? அப்போ எப்படி சென்டம்?” என பூங்கொடி கேட்க,

“அவன் கொஞ்சம் சொல்லி கொடுப்பான். அவன் பில்லியன்ட் தெரியுமா?” என அனுசுயா கூறினாள்.

“அப்படியா! இன்னிக்கும் போய் பேசு! ரெண்டு நாள் கழிச்சு பார்ப்போம்” என்றவள் கீழே சென்றாள். அங்கே அன்பு செல்வன் காத்திருக்க,

“வாடி, பஸ்ல போலாம்” என மணிமேகலை அழைக்க,

“அவன் வந்திருக்கான். நான் அவன் கூட போறேன்” என்றாள் பூங்கொடி.

“எவன்?” என மணிமேகலை கேட்க,

“அதான், ஓம்சக்தி கண்டக்டர்” என சொல்லிக்கொண்டே சென்றாள்.

“ஹான், கேக்கல” என மணிமேகலை சிரித்துக்கொண்டே சத்தமாக கூறினாள்.

“மண்ணாங்கட்டி மாதிரி கண்டத யோசிக்காத!” என சொல்லிக்கொண்டே வந்தவள், பையை முன்னால் கொடுத்தாள். வண்டியை ஸ்டார்ட் செய்தான் அன்பு.

அவள் ஏறிக்கொள்ள, சீராக சென்றது வாகனம்.

கண்ணாடியில் அவன் முகம் பின்னாடியில் இருக்கும் பூங்கொடியின் மீது பதிய,

“என்ன கேக்கணும்? கேளு!” என்றாள் பூங்கொடி.

“எக்ஸாம் எப்படி பண்ண?”

“ம்ம், பண்ணேன்! எனக்கு பயங்கரமா பசிக்குது. வண்டிய மாமன் பிரியாணிக்கு விடு!”

“ஹான்” என அன்பு கேட்க,

“மாமன் பிரியாணி ரெஸ்டாரன்ட் போடா!” என பூங்கொடி கூற,

“ம்ம், போறேன்” என அழைத்து சென்றான். என்ன வேணுமோ அனைத்தையும் ஆர்டர் செய்து சாப்பிட்டாள். அன்பு அவளை ஆசையுடன் பார்த்தான். அவளின் கழுத்தில் இருக்கும் மஞ்சள் பீஸை பார்க்க பார்க்க ஒரு இனம் புரியா சந்தோஷம்.

அனைத்தையும் சாப்பிட்டு முடித்தவள், தாத்தாவுக்கு எதுவும் வாங்கிட்டு போலாம் என மெனு கார்டு எடுத்தாள்.

“அப்பாவுக்கு பண்ணை கோழி பிடிக்காது. பிரியாணி பிடிக்காது, குழம்பு சாப்பாடுதான் பிடிக்கும்” என்றான் அன்பு.

“அப்படியா? சரி, என் அம்மாவுக்கு வாங்கிட்டு போவோம்” என அனைத்தையும் ஆர்டர் செய்தாள்.

“பூங்கொடி, ஒரு பிரியாணி” என சொல்ல, “இல்ல, ரெண்டு பிரியாணி கொடுங்க” என்றான் அன்பு.

“இங்கேயே சாப்பிடேன்” என பூங்கொடி சொல்ல,

“இது அன்னத்துக்கு” என்றான் அன்பு. ‘அன்னம்’ என்றதும் முகம் மாறி போனது அவளுக்கு.

வண்டியில் செல்லும் போது சொக்கி விழுந்தாள் அவன் மேல்.

“அமுலி! கீழே விழுந்துடாத!” என அன்பு சொல்லிக்கொண்டே வர,

“எனக்கு தெரியும். நீ மூடிட்டு ஓட்டு டா! தூக்கம் வருது” என கட்டி கொண்டாள்.

‘நிஜமா இது இவள்தானா?’ என்று இருந்தது அன்புக்கு.

வீட்டுக்கு வந்ததும் அங்கே ஜெயக்கொடி, சந்தனக்கொடி, தனம் என அனைவரும் இருக்க, அவர்களுடன் மேனகா கூட வந்திருந்தாள். கொஞ்சம் கூட பிடிக்கவில்லை அவளுக்கு. ஒவ்வொரு முறையும் பூங்கொடி அன்பு இருவரும் சேர்ந்து இருக்கும் காட்சி, உள்ளுக்குள் எரிச்சலை கொடுத்தது.

“வாங்க” என அனைவரையும் வரவேற்றான் அன்பு.

“மா, சித்தி” என கையை காட்டி சென்றவள், “எனக்கு தூக்கம் வருது மா!” என வேகமாக சென்றாள் அவளது அறைக்கு.

தனம் சிரித்தபடி, “சரி, நீ போய் ரெஸ்ட் எடு” என அவர் அனுப்பி வைக்க,

“அக்கா, இந்தாங்க உங்களுக்கு வாங்கினது. மா, கொஞ்சம் போட்டு கொடு! ஜெயாக்கா? சந்தனா கா? மாமா வரலையா?” என கேட்டான்.

“இல்ல அன்பு. இங்கே வந்து கூட்டி போறேன்னு சொன்னாங்க” என்றார்கள் இருவரும்.

அன்னம் உள்ளே போய் தட்டை எடுத்துக்கொண்டு வந்தார். சக்கரவர்த்தி நிறைவாக தன் மகள்களை பார்த்தார்.

“என்னாச்சுப்பா?” என தனம் கேட்க,

“இனி நான் செத்தாலும் நிம்மதி தனம்” என்றார்.

“பா, என்ன பேசுறீங்க?” என தனக்கொடி கண்களில் நீர் கோர்க்க கேட்க,

“என்னோட பிள்ளைகள் எல்லாரும் இருக்கீங்க. அன்பு கூட நீங்க ராசியானது எனக்கு சந்தோஷம் கண்ணு” என்றார் கமறிக்கொண்டே.

“ப்பா, என்ன இது?” என அன்பு தன் தந்தையின் அருகில் அமர்ந்துகொண்டான்.

சந்தனா தன் தந்தையை பார்த்து, “அமுலி இந்த வீட்டில் இருக்கா. இனி வருவோம்”

“வந்து தங்க மாட்டீங்களா?” என அன்பு கேட்க,

“முறை இருக்குல்ல! அழைச்சா வருவோம்” என்றார் சந்தனக்கொடி.

“அதுக்கென்ன, கூப்பிட்டா போச்சு” என்றவன் அவர்களிடம் தட்டை நீட்டினான்.

“நீ வை, அவங்க அப்புறம் சாப்பிடுவாங்க” என தனக்கொடி இருவரையும் அழைத்துக்கொண்டு தெக்கு வீட்டு பக்கம் சென்றார்.

“எப்போ மா வந்தாங்க? ஒன்னும் பிரச்சனை இல்லையே?” என அன்பு கேட்க,

“எந்த பிரச்சனையும் இல்ல டா! உங்க ரெண்டு பேரையும் ஆக்கி போட அழைக்க வந்திருக்காங்க” என உற்சாகமாக கூறினார் அன்னம்.

“அப்படியா? எதுவும் சாப்பிட்டாங்களா? டீ போட்டு கொடுத்தீங்களா? நான் கறி வேணா வெட்டிட்டு வரவா? மாமா வர்றாங்க தானே?” என அன்பு கேட்க,

“கோழி குழம்பு வச்சிட்டேன் கண்ணு” என அன்னம் கூறினார்.

“சரிம்மா, அப்போ நான் புறப்படுறேன். வேலை இருக்கு” என அன்பு கிளம்ப,

“டேய், இரு டா! உங்க அக்கா புருஷன்மார்கள் வரேன்னு சொல்லி இருக்காங்க. உன்னை அழைக்க, அப்புறம் புறப்படு!” என கூறி அவனை நிறுத்தினார் அன்னலட்சுமி.

“அப்படியா?” என அன்பு பெரு மூச்சுடன் அமர்ந்துகொண்டான்.

ஜெயக்கொடி மற்றும் சந்தனக்கொடி இருவரும் ஆச்சரியத்துடன் பார்க்க, மேனகா வயிற்று எரிச்சலுடன் பார்த்தாள்.

“இது எல்லாமே ஆர்டர் கொடுத்து செஞ்சு போட்டிருக்கான் அன்பு. குட்டி பிரிட்ஜ் இங்கே, வாஷிங் மிஷின், அப்புறம் உள்ளே பாத்ரூம், இங்கே ஏசி, இந்த கட்டில் பெரிய கம்பெனி, அது பேர் என்ன பூங்கொடி?” என தனம் கேட்க,

“தெரியல மா!” என ட்ரையர் கொண்டு முடி காய வைத்தாள் பூங்கொடி.

“இந்த முடி காய வைக்கிறது கூட அவன்தான் வாங்கி கொடுத்தான்.”

“இத்தனை பணம் ஏது?” என ஜெயக்கொடி அங்கலாய்ப்புடன் கேட்க,

“அது ஏதோ வேலை செய்யறான்! அது என்ன அமுலி?” என தனம் கேட்க,

“ஆக்டிவேட்டட் சார்க்கோள்” என்றாள் பூங்கொடி.

“நல்லா சம்பாதிக்கிறான். நல்ல வேளை, மாமனுக்கு புத்தி வந்து அன்புக்கு கட்டிட்டேன். மடிக்கு சோறு வருது. உளுந்து உளுந்து கவனிக்கிறா அந்த அன்னம். எனக்கு சந்தோஷமா இருக்கு” என்றார் தனம்.

மேனகா தன் அன்னையை முறைத்து பார்த்தாள்.

“மா, போதும்! அவன் நிலாவுக்கு ராக்கெட் ஒன்னும் விடல! உன்னோட பில்ட் அப்ப குறை, எனக்கு தூக்கம் வருது” என படுக்கையில் விழுந்தாள் பூங்கொடி.

“சரி, தூங்கு அமுலி!” என சந்தனக்கொடி சொல்லிவிட்டு வெளியே வர,

“கொஞ்ச நேரம் சித்தி, நைட்டு படிச்சேன், அதான் கண்ணு எரியுது. நான் வரேன், தூங்கிட்டு” என கூறிவிட்டு கண்களை மூடினாள்.

“சரி, வாங்க நம்ம போலாம்” என தனக்கொடி முன்னால் செல்ல,

“மேனகா, நீ வரலையா?” என சந்தனக்கொடி கேட்டார்.

“நான் பாத்ரூம் போயிட்டு வரேன்” என வேகமாக உள்ளே சென்றாள் மேனகா.

ஜெயக்கொடி மனதில் பொறாமை கூட பற்றிக்கொண்டது.

மேனகா அந்த அறையை சுற்றி பார்த்தாள். அங்கே ஆங்கரில் அன்பு செல்வனின் சட்டை தொங்கிக்கொண்டிருக்க, அதை வருடி பார்த்தவள், “இதெல்லாம் எனக்கு வர வேண்டியது. மாமா, எனக்குதான். சீக்கிரம் என் மாமாவை சொந்தமாக்குவேன்” என சொல்லிக்கொண்டே சட்டையை முகர்ந்து பார்த்தாள். அன்புவின் வியர்வை வாசம் அப்படியே, சட்டைக்கு முத்தமிட்டு அணைத்துக்கொண்டாள்.

“என்ன பண்ற மேனகா?” என பூங்கொடியின் குரல் கேட்டது.

‘ஐயோ, இவள் பார்த்துட்டாளா?’ என யோசித்துக்கொண்டே திரும்பினாள் மேனகா.

“என்ன பண்றேன்னு கேட்டேன்?” என பூங்கொடி புருவத்தை சுருக்கினாள்.

“மேனகா…?”

தொடரும்.

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment