
அதிகாரம் மண்டியிடும் அஹிம்சை அவள் 4
- 1 Oct 2026
- 169 reads
- ★ 5.0 (2)
- 10 min read
Epi -4
வரவேற்பறையின் இருளையும், அந்தப் பெரிய பங்களாவின் நிசப்தத்தையும் கிழித்துக்கொண்டு அகிம்சாவைத் தரதரவென இழுத்துச் சென்றான் அதர்வன். அவனது இரும்புப் பிடியில் இருந்து விடுபட அவளது கரங்கள் எவ்வளவோ போராடியும், அந்த இருபத்தொன்பது வயதுடையவனின் அசுர பலத்திற்கு முன்னால் அவளால் எதுவும் செய்ய இயலவில்லை. படியேறி, அவனது பிரம்மாண்டமான தனிப்பட்ட அறையின் கதவை ஒற்றைக் காலால் உதைத்துத் திறந்தவன், அவளை உள்ளே இழுத்துச் சென்று, அங்கிருந்த மெத்தை விரிப்புகள் பரப்பிய அகலமான கட்டிலில் ஆவேசமாகத் தள்ளிவிட்டான்.
பின்னோக்கி விழுந்த அகிம்சா, நிலைதடுமாறி மெத்தையில் சாய்ந்தாள். இதுவரை எத்தனையோ இக்கட்டான சூழ்நிலைகளைத் தன் புத்திசாலித்தனத்தால் கையாண்டிருக்கிறாள்; ஆனால், ஒரு மூர்க்கமான ஒருவனின் முழு ஆளுகைக்குள் இப்படிச் சிக்குவோம் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. சுற்றிலும் இருள் சூழ்ந்த அந்த அந்நியமான அறையும், அவனது கண்களில் தெரிந்த வெறுப்புணர்வும் முதன்முறையாக அவளுக்குள் மரண பயத்தை விதைத்தன. அவளது இதயம் நெஞ்சுக் கூட்டைக் கிழித்துக்கொண்டு வெளியே குதிப்பது போல் படபடவென அடித்துக்கொண்டது.
அவளது பயத்தை உணர்ந்துகொண்ட அதர்வனின் உதடுகளில் ஒரு வில்லப் புன்னகை அரும்பியது. ‘இவளை இப்படியே விடக்கூடாது! இவளுக்கு இன்னும் கொஞ்சம் ஆட்டம் காட்டணும்… என்ன பண்ணலாம், என்ன பண்ணலாம்?’ எனத் தீவிரமாக யோசித்தவன், ஒரு முடிவை எடுத்தவனாக கபோர்டைத் திறந்து, அவளின் முன்னால் ஒவ்வொரு பட்டனாக மேல் சட்டையைக் கழற்றினான்.
அகிம்சாவின் இதயம் வெடித்துவிடும் அளவுக்குத் துடிக்க, அவளின் உடலெல்லாம் வியர்த்து வடியத் தொடங்கியது. ‘இல்லை, கூடாது! இப்படி நடக்கவே கூடாது! அய்யோ…’ என அத்தனை பயத்தில் நின்றிருந்தாள். வார்த்தைகள் வரவில்லை; அழுகை முட்டிக்கொண்டு கண்ணில் இருந்து கண்ணீர் சரியத் தயாராக இருந்தது.
“குளிச்சிட்டு வந்து உன்னை வச்சுக்கிறேன்!” என கதவை லாக் செய்துவிட்டு குளியலறை சென்றான்.
உறைந்த சிலையை போல நின்ற பெண்ணவளின் உள்ளே பெண்மை விழித்துக்கொள்ள, ‘வேகமாக கதவைத் திறந்து தப்பித்து ஓடிவிடலாம்!’ என்ற முடிவுக்கு வந்தவளாகக் கதவைத் திறக்க முயற்சி செய்தாள்.
அதர்வன் குளியலறைக்குள், ‘அது சென்சார் லாக்… என்னோட ஃபங்கர் பிரிண்ட் இருந்தால் மட்டுமே கதவைத் திறக்க முடியும்; இல்லைன்னா பாஸ்வேர்ட் போடணும். மேடம் தலைகீழாக நின்னு தண்ணி குடிச்சாலும் ஒரு இன்ச் இந்த அறையை விட்டுப் போக முடியாது!’ எனத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்.
“யாராவது எனக்கு ஹெல்ப் பண்ணுங்க!” என கூச்சலிட ஆரம்பித்த நொடி, குளியலறையில் இருந்து வெளியே வந்தான் அதர்வன். அகிம்சாவின் சரீரம் மொத்தமும் அந்த நொடி உறைந்துபோனது. “பொண்டாட்டி மேடம்! வாங்க மேடம்!” எனப் பற்களைக் கடித்தபடி அழைத்தான்.
அகிம்சா அதே இடத்தில் சிலை போல நிற்க, “ஹே! வாடி!” என அவளின் கையைப் பற்றி இழுத்துக் கட்டிலில் தள்ளியிருந்தான்.
“நீங்க பண்றது அநாகரிகம்!” என அகிம்சா மெல்ல நகர்ந்தபடி கூற… அவன் மெல்லக் கட்டிலில் ஏறி அவளை நோக்கி நகரத் தொடங்கினான். அவனது அச்சுறுத்தும் நிழல் அவளை முழுமையாக மூடியது. அவளது முகத்திற்கு மிக அருகில், அவளது மூச்சுக்காற்று தன் முகத்தில் படும் தூரத்திற்குத் தன் முகத்தைக் கொண்டுசென்றான்.
“நீ எவ்ளோ பெரிய பாவம் பண்ணியிருக்க தெரியுமா? ஒரு பொண்ணோட வாழ்க்கைய அழிச்சிருக்க? நீ பண்ணது மட்டும் நாகரிகமா? உனக்கெல்லாம் அசிங்கமாவே இல்லையா?”
“எனக்கு உங்க ‘Trending Time Wood’ குழுமம் செஞ்சதை நியாயம்னு சொல்ல வர்றீங்களா?” என கண்களில் ரௌத்திரம் மின்னக் கூறியவளைச் சாதாரணமாகப் பார்த்தவன், “அதுக்குத்தான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அடுத்து உன்னை…” என அவன் மெல்ல நெருங்க… அகிம்சா பயத்தில் தன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு, தன் கைகளை மார்புக்குக் குறுக்கே அரணாக வைத்துக்கொண்டாள்.
அவன் அவளது உடலைத் தீண்டப்போகிறான் என்று அவள் நினைத்த அந்த நொடியில்… சட்டென அவளை விடுத்து வேகமாய் விலகி, கட்டிலில் இருந்து எழுந்து நின்றான் அதர்வன். அகிம்சாவின் கண்களில் இருந்து நீர் தாரை தாரையாகக் கொட்டத் தொடங்கியது. ‘இந்த உலகத்தில் உண்மைக்கு மதிப்பு இல்லை. பணத்தைக் கொண்டு மட்டுமே அனைத்தையும் முடிவு செய்கிறார்கள். எனது வாழ்க்கை அவ்வளவுதான்…’ என்று அவள் விசும்பினாள்.
அதர்வன் விலகியது பெண்ணவளுக்குத் தெரியவே இல்லை. பயத்துடன் கண்களைத் திறந்து பார்க்க, மார்புக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டியபடி அவளையே வெறித்துப் பார்த்தான் அதர்வன்.
அகிம்சா அவனை விதிர்விதிர்த்துப் பார்க்க, “என்னோட விரல் நுனி கூட உன் மேலே படாது! நான் என்னைக்கும் என்னோட சசிரேகாவுக்கு துரோகம் செய்ய மாட்டேன். இந்த அதர்வனோட ஒவ்வொரு அணுவும் சசிக்கு மட்டும்தான் சொந்தம்! இந்த வீட்ல ஆறு மாசம்… எண்ணி ஆறே மாசம்!” எனச் சொடக்கு போட்டபடி கூறியவன், “Get up!” என்று உரக்கக் கத்தினான்.
ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்தவன், கட்டிலில் இருந்த தலையணைகளையும் போர்வையையும் ஒட்டுமொத்தமாக உருவித் தரையில் வீசி எறிந்தான்.
இதற்காகவே காத்திருந்த அகிம்சா, வேகவேகமாகக் கட்டிலில் இருந்து இறங்கி ஓரமாக நின்றுகொள்ள, ‘என்னமோ செய்!’ என்பதைப் போலப் படுக்கையில் விழுந்தான் அதர்வன்.
ஆம்! அவனுக்கு அகிம்சாவின் மேல் எந்தவொரு தவறான எண்ணமும் இல்லை. ஆனால், ஆத்திரமும் கோபமும் அளவுக்கு அதிகமாகவே இருந்தது. அதற்கு காரணம் – நீண்ட நாள் காதலியை வீட்டில் பெற்றோர்களின் சம்மதத்துடன் நண்பர்கள், உற்றார் உறவினர்கள் என அனைவருடனும் கொண்டாட்ட கோலாகலமாகச் சசிரேகாவின் கைகளை வாழ்க்கைத்துணையாகப் பற்றப்போகும் நேரத்தில், எங்கிருந்தோ வந்த அகிம்சா அவனது வாழ்க்கையை ஒரே நொடியில் சின்னபின்னமாக்கிவிட்டாள்.
விட்டத்தைப் பார்த்தபடி கிடந்த அதர்வனின் கண்களில் இருந்து வந்த நீரை, தலையணை யாருக்கும் தெரியாமல் ஏந்திக்கொண்டு நனைந்தது. அவன் சசிரேகாவின் மேல் வைத்திருக்கும் காதல் அளப்பரியது; நெஞ்சமெல்லாம் அடைத்தது. இப்போது நம் கண்களுக்குத் தெரியும் அதர்வன் எப்படிப்பட்டவன் தெரியுமா? அவனையே அழவைத்துவிட்டாள் பெண்ணொருத்தி!
அவனது நெஞ்சு சசியின் ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் எரிமலையாய் வெந்துகொண்டிருந்தது. சட்டென்று எழுந்தான். அகிம்சா திடுக்கிட்டு அவனைப் பார்க்க, அவனோ அவளைத் தனது அறையில் இருக்கும் உயிரற்ற பொருளைப் போல நினைத்தான்; அவ்வளவே, அவளை ஒரு ஆளாகக் கூட நினைக்கவில்லை. அறையின் மூலையில் இருந்த ஒரு விலைமதிப்பற்ற மதுபாட்டிலைக் கையில் எடுத்தவன், கிளாஸ் கூடப் பயன்படுத்தாமல், மூச்சு முட்டும் அளவுக்கு மதுவை அப்படியே வாய்க்குள் சரித்துக் குடித்தான். அந்த உறைப்பான திரவம் அவனது தொண்டையைக் கிழித்துக்கொண்டு உள்ளே இறங்கியது. போதை தலைக்கேற தலைக்கேற, அவனது கண்கள் சொருகத் தொடங்கின.
பாட்டிலைக் கட்டிலின் ஓரத்தில் வீசியவன், அப்படியே படுக்கையில் சுருண்டு விழுந்தான். போதையின் உச்சத்திலும், ஆழ்மனதின் தவிப்பிலும் அவனது உதடுகள் ஒரே ஒரு பெயரை மட்டுமே பிதற்றின. “சசி… சசி பேபி… என்னை மன்னிச்சிடுடி… நீ இல்லாம என்னால இருக்க முடியாது சசி…” என்று உளறிக்கொண்டே, மெல்ல மெல்ல உறக்கத்தின் பிடிக்குள் நழுவத் தொடங்கினான்.
மறுபுறம்…
தரையில் வீசப்பட்ட போர்வையின் மீது சுருண்டு அமர்ந்திருந்த அகிம்சாவின் கண்கள், உறங்கிக்கொண்டிருக்கும் அதர்வனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. அந்த அறையின் ஏசி குளிரையும் தாண்டி, அவளது நெஞ்சு ஒருவித குற்ற உணர்ச்சியால் சுட்டெரித்தது.
‘தவறு செய்துவிட்டோமோ?’ என்று அவளின் அறிவார்ந்த மூளை நிதானமாக, சற்றே அமைதியாகச் சிந்திக்கத் தொடங்கியது. ‘நான் அவசரப்பட்டுட்டேனோ?’ என அவளது உள்மனது அவளைக் கேள்வி கேட்டது.
தன் வாழ்க்கையையும் கௌரவத்தையும் அழித்த இந்த ‘Trending Time Wood’ குடும்பத்தைப் பழிவாங்க வேண்டும் என்ற வெறியில் எத்தனையோ திட்டங்களைத் தீட்டியவள், கடைசியில் உணர்ச்சிவசப்பட்டு இந்தத் திருமண மண்டபத்திற்குள் நுழைந்ததை நினைத்து அவளுக்குள்ளேயே ஒரு ஏமாற்றம் பிறந்தது.
‘அவர்கள் இருவரையும் பிரித்திருக்கக் கூடாது; காதலித்த இரண்டு பேரின் திருமணத்தில் இப்படிப் பகிரங்கமாகப் பிரச்சினை செய்திருக்கக் கூடாது. இதைக் காட்டிலும் புத்திசாலித்தனமாக, சட்ட ரீதியாக அல்லது இவர்களின் பிசினஸை அக்குவேறு ஆணிவேறாக உடைக்கும் வகையில் வேறு மாதிரி இந்த ஆட்டத்தைக் கொண்டுசென்றிருக்க வேண்டும். அதை விடுத்து, இப்படி உணர்ச்சிவசப்பட்டு வந்து நின்றதால்… இன்று எவனோ ஒரு முரடனின் கழுத்துத் தாலியைச் சுமந்துகொண்டு, இந்த இருட்டு அறைக்குள் கைதியாக வந்து நிற்க வேண்டியதாகிவிட்டதே!’ என்று அவள் மனம் முதன்முறையாகக் குமைந்தது.
நடந்த தவறை மாற்ற முடியாது என்றாலும், இனி வரப்போகும் நாட்களைத் தன் புத்திசாலித்தனத்தால் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற புதிய ஆட்டத்திற்கான கணக்குகளை, அந்த நள்ளிரவிலும் அவளது சாணக்கிய மூளை வகுக்கத் தொடங்கியது.
விடியலின் கதிர்கள் அந்தப் பிரம்மாண்ட பங்களாவின் ஜன்னல் கண்ணாடிகளைத் துளைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தன. ஆனால், அந்த வெளிச்சம் அகிம்சாவின் மனதிற்குள் இருந்த இருளைச் சற்றும் விலக்கவில்லை. இரவு முழுக்கத் தரையிலேயே சுருண்டு கிடந்தவள், உடலின் வலியோடும் மனதின் பாரத்தோடும் மெல்லக் கண் விழித்தாள். கட்டிலில் அதர்வன் இல்லை; அவன் எப்போதோ எழுந்து சென்றிருந்தான்.
தன் கலைந்த ஆடைகளையும் மனதையும் சரிசெய்துகொண்டு அகிம்சா அறையை விட்டு வெளியே வந்து, அந்தப் பெரிய பங்களாவின் நடைபாதையில் நடந்தாள்.
அதிகாலை மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது அந்தப் பிரம்மாண்டமான மாளிகை. அறையின் கதவைத் திறக்க முடியாதோ என நினைத்திருந்த வேளையில், அதர்வன் வெளியில் இருந்து உள்ளே வந்தான்; அவளை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை.
அகிம்சா தயக்கத்துடன் வெளியே வந்தாள். அவள் வரும் அரவம் கேட்டதும், ஒட்டுமொத்தக் குடும்பத்தின் பார்வையும் அவளின் மீது படிந்தது. ஒரு நொடி, உஷா ராணி காபியைக் கலக்கிக்கொண்டிருந்தவர், அகிம்சாவைக் கண்டதும் கையில் இருந்த கரண்டியை அப்படியே வைத்துவிட்டு முகம் திருப்பி நகர்ந்தார். அவசர அவசரமாகக் கல்லூரிக்குக் கிளம்பிக்கொண்டிருந்த ஆதினி, உணவு மேஜையில் அமர்ந்திருந்தவள், அங்கே அகிம்சா வருவதைப் பார்த்த அடுத்த நொடி விறுவிறுவென்று வெளியேறினாள்.
சமையலறைக்குள் செல்ல நினைத்தவள் இதயம் சுருக்கென தைத்தது. அனைவரும் அவளைப் பார்க்கும் பார்வையில் அந்நியத்தன்மையும், கூடவே துஷ்டப் பார்வையும் அப்பட்டமாகத் தெரிந்தது. ஒரு பெருமூச்சுடன் அவள் நடுக்கூடத்தின் பக்கம் திரும்பினாள்; அங்கிருந்த தாத்தா தாமோதரனும், பாட்டி பாக்கியலட்சுமியும் வேகமாக எழுந்து சென்றுவிட்டார்கள்.
யாருமே அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை; ஏன், அவளைப் பார்ப்பதைக் கூடத் தங்களின் கண்களுக்கு நேர்ந்த தீட்டாகக் கருதினர். அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தபோது கூட இத்தனை ஒரு ஒதுக்கத்தை அவள் அனுபவித்திராத வலி இங்கு அவளுக்குக் கிடைத்தது. இந்த ஒட்டுமொத்தக் குடும்பத்தின் மௌனமும் புறக்கணிப்பும் நெஞ்சில் ஈட்டியாய்ப் பாய்ந்தது. இந்த உலகத்திலேயே தான் மிகவும் தனித்துவிடப்பட்ட ஒரு அனாதை என்பதை அந்த மாளிகையின் ஒவ்வொரு சுவரும் அவளுக்குச் சவுக்கடியாக உணர்த்தியது. அவளது தொண்டை வரை அழுகை முட்டிக்கொண்டு வந்தது; ஆனால், இந்த அதிகார வர்க்கத்தின் முன்னால் தன் ஒற்றைத் துளிக் கண்ணீரைக் கூடக் காட்டிவிடக் கூடாது என்று தன் உதடுகளை இறுக்கமாகக் கடித்துக்கொண்டாள்.
அதே நேரம், அவளின் அறையில் இருந்து கோட்-சூட் அணிந்து கம்பீரமாக வெளியே வந்தான் அதர்வன். இரவு குடித்த மதுவின் போதையும் தூக்கமின்மையும் அவனது கண்களில் சிவப்பாய் ஏறியிருந்தது. டைனிங் டேபிளின் அருகில் வந்தவன், “அம்மா!” என அதிகாரமாக அழைக்க, மொத்தக் குடும்பமும் வந்து சேர்ந்தார்கள்.
“என்ன நடக்குது இங்கே? இது டிபன் சாப்பிட வேண்டிய நேரம். எல்லாரும் எங்கே போனீங்க? தாத்தா, எங்கே இருக்கீங்க?” என ஒட்டுமொத்தக் கோபத்தையும் அவனது ஓசையில் காட்டினான்.
உஷா ராணி அரக்கப்பரக்க ஓடிவந்தவர், “இதோ கண்ணா, எல்லாமே ரெடி. நீ சாப்பிடு!” என அவனுக்கான உணவுகளைப் பரிமாறினார். அதர்வன் உணவை மிகச்ாதாரமாக எடுத்துச் சாப்பிட்டான்.
அகிம்சா ஒரு பெருமூச்சை விட்டபடி, அந்த வீட்டை விட்டு உடனே புறப்பட்டாள். ‘எப்படியும் இவன் தன்னை வெளியே அனுப்ப மாட்டான்; அவளுக்குத் தேவையான அனைத்து உடைமைகளும் அவள் தங்கியிருக்கும் விடுதியில் இருக்கிறது’ என யோசித்து, உடனே வீட்டை விட்டு வெளியேறியிருந்தாள்.
உஷா ராணி எந்தக் கேள்வியும் கேட்காமல் மகனுக்கு உணவைப் பரிமாறிட, அதர்வன் தனது போனை நேர்த்தியாக எடுத்து நாகாவுக்கு அழைத்து கட்டளையிட்டான். அடுத்த சில நொடிகளிலேயே நாகாவிடம் இருந்து பதில் வந்தது.
“தலை… அவங்க ஹாஸ்டல் வந்திருக்காங்க, நாங்க வெளியேதான் வெயிட் பண்றோம்,” என நாகா சொல்லிக்கொண்டிருந்தவன் திடுக்கிட்டு, “தலை! அவங்க என்னை நோக்கி வர்றாங்க!” எனக் கூறினான்.
“ம்ம்… வரட்டும்!” என அதர்வன் இட்லியைப் பிட்டு வாயில் போட்டான்.
அதே நேரம், அந்தப் பக்கம் அகிம்சா சொன்ன பதில், இங்கே சாப்பிட்டுக்கொண்டிருந்த அதர்வனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது!
நாகா கண்களை அகல விரித்தபடி பார்த்தான்.
அப்படி அகிம்சா என்ன சொல்லியிருப்பாள்?
– தொடரும்.










💬 Be the first to comment