
அதிகாரம் மண்டியிடும் அஹிம்சை அவள் 18
- 1 Oct 2026
- 110 reads
- ★ 4.7 (3)
- 8 min read
Epi -18
மாடிக்கு வந்ததும், அகிம்சா தன் மொத்தப் பலத்தையும் திரட்டி அவளது தோள் பிடித்திருந்த அதர்வனின் கரங்களை ஆவேசமாகத் தட்டிவிட்டாள். அவளது கண்கள் கோபத்தில் சிவந்திருந்தன.
“என்னாச்சு? எதுவும் கை வலிக்குதா?” என அதர்வன் திடுக்கிட்டுக் கேட்க…
“என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க? அறிவிருக்கா உங்களுக்கு? கீழ சசிரேகாவோட அப்பா வந்து நிக்குறாரு… அவரு என்ன நினைச்சிருப்பார்? எதுக்கு எல்லாரும் முன்னாடியும் அப்படி சொன்னீங்க?!” என ஆத்திரமாகக் கத்தினாள்.
அதர்வன் அவளது கொதிப்பைக் கண்டு திகைக்கவில்லை. பிடரி முடியைக் கோதியபடி சோர்வுடன் அவளைப் பார்த்தான்.
“எனக்கு இப்போவே இங்கிருந்து போகணும்!” என அகிம்சா சொல்லிக்கொண்டிருக்க… ஒரு கணம் அவளை ஆழமாகப் பார்த்தான். அவனது அச்சுறுத்தும் கம்பீரத்திற்கு முன்னால் எந்தப் பெண்ணும் நிமிர்ந்து பேச அஞ்சும் நிலையில், தன் காயப்பட்ட கைகளின் வலியை மறந்து தன்னிடம் சண்டையிடும் இந்த அகிம்சாவின் துணிவு அவனுக்குள் விசித்திரமான ஒரு மரியாதையை உருவாக்கியது.
“இங்க பாரு அகிம்சா…” என்றான் குரலை நிதானித்து.
“அதர்வன், நான்…”
“ப்ச்! எனக்கு யாரை எப்படி ஹேண்டில் பண்ணணும்னு தெரியும். நீ உன்னோட ஹெல்த்த பத்திரமா பார்த்துக்கிறது மட்டும்தான் உன் வேலை…”
“நான் தான் இங்கிருந்து போறேன்னு சொல்றேன்ல?”
“நீ இங்கிருந்து போகக் கூடாது!”
“நான் இங்க இருந்தா உங்களுக்குத்தான் தேவையில்லாம பிரச்சனை வரும். சசிரேகாவோட அப்பா…” என்று அவள் ஆரம்பிக்க…
“அவங்க அப்பா என்ன நினைக்கிறாருங்கிறது எனக்குத் தேவையில்லை. சசிரேகா என்னைப் பற்றி என்ன நினைக்கிறான்றதுதான் முக்கியம்… அவள் என்னைப் புரிஞ்சுகிட்டா அது போதும். உன்னை இந்த நிலைமையில வெளியில அனுப்புறது மனுஷத்தனமே இல்லை. உன் கைகள் சரியானதுக்கு அப்புறம், நானே உன்னை உன்னோட ஃபிரெண்ட் வீட்ல கொண்டு போய் விட்டுடுவேன். அதேபோல, இந்தக் கல்யாணம் பத்தி கவலைப்படாதே… நாளைக்கே அட்வகேட்டை வரவச்சு லீகலா விவாகரத்து ப்ராசஸை ஸ்டார்ட் பண்ணிடலாம். ஆனா, ஆயிரம் பேர் முன்னாடி பிரம்மாண்டமா நடந்த கல்யாணம் இது. இப்போ உடனே உன்னை வீட்டை விட்டுத் துரத்துனா சமுதாயத்துல இன்னும் ஆயிரம் பேச்சு வரும்,” என்று மிகவும் நியாயமான, நிதானமான காரணத்தைக் கூறினான்.
ஆம், அதர்வன் சொல்வதில் உண்மை இருந்தது. ஆயிரக்கணக்கானோரின் முன்னிலையில் ஊடகங்கள் அறிய நடந்த திருமணம் அது. சூர்ய நாராயணனுக்கு இருந்த மாபெரும் பயமும், அகிம்சாவின் மீது இருந்த ஆறாத வெறுப்பும்தான் அவரை நிதானமாக யோசிக்க விடாமல், அவளை உடனே வீட்டை விட்டுத் துரத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் இயங்க வைத்தன.
அகிம்சா அவனையே கூர்மையாகப் பார்த்தாள். அவளது கூர்மையான அறிவு அதர்வன் சொல்வதில் இருக்கும் நியாயத்தைப் புரிந்துகொண்டது.
அதர்வன் தொடர்ந்து, “என் கூட இருக்கறதால உனக்கு எந்த ஆபத்தோ, தப்போ நடக்காது. நீ பயப்படாம இருக்கலாம்,” என்று கூறிவிட்டு, அவளுக்கு உணவு ஏற்பாடு செய்வதற்காக வெளியே சென்றான்.
அகிம்சா பெருமூச்சு விட்டாள். கூண்டுக்குள் அடைபட்ட கிளி போல இருந்தது அவளது வாழ்க்கை! தனது இரண்டு கைகளையும் பார்த்துக்கொண்டாள்; ‘எப்போதடா இரண்டு கைகளும் சரியாகும்?’ என்று இருந்தது அவளுக்கு. இந்தக்காயம் பட்ட வலியை விட, வீட்டிலிருந்து கிளம்புவதே முக்கியமாகப் பட்டது.
அறைக்கதவு மெல்லத் திறக்கும் சத்தம் கேட்க, ‘அதுக்குள்ள வந்துட்டானா?’ என்னும் ரீதியில் பார்த்தாள் அகிம்சா. ஆனால், அங்கு வந்தது என்னவோ உஷா ராணி!
அவரது முகத்தில் அன்று இருந்த கோபமும் பழி உணர்வும் மறைந்து, ஒருவித அடக்கமும் குற்ற உணர்ச்சியும் நிறைந்திருந்தன. நேற்று காலைதான் அகிம்சாவைத் தடுத்து நிறுத்தி, இல்லாத வார்த்தைகளைச் சொல்லித் திட்டியதும், அதற்குப் பின்னே அகிம்சா கடத்தப்பட்டுக் காயங்களுடன் திரும்பியதும் உஷா ராணியின் மனசாட்சியைக் கொல்லாமல் கொன்றுகொண்டிருந்தது.
“அது வந்து… நான் எவ்வளவோ மறுத்தும் அதர்வன் சார் கூட்டிட்டு வந்துட்டாரு மேம். நான் சீக்கிரமே இங்கிருந்து போக முயற்சி பண்றேன்,” என அவள் வருத்தமான குரலில் பேச… இதைக் கேட்டதும் அவரது மனம் சற்றே கனத்துப் போனது.
“அகிம்சா… நான் உன்னை வீட்டை விட்டுத் துரத்த வரலைம்மா! அன்னைக்கு நான் அப்படி பேசியிருக்கக் கூடாது. என்னை மன்னிச்சுடும்மா… நான் ரொம்ப மோசமா நடந்துக்கிட்டேன்,” என்று குரல் தழுதைத் தழுக்கக் கூறினார்.
அகிம்சா திடுக்கிட்டு, “நீங்க மன்னிப்பு கேட்க எந்த அவசியமும் இல்லை மேம்… உங்க இடத்துல எந்த அம்மாவா இருந்தாலும் தன் மகனுக்காக இப்படித்தான் பேசிருப்பாங்க. நான் அதையெல்லாம் அப்பவே மறந்துட்டேன்,” என அவரை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயற்சி செய்தாள்.
அவளின் இந்த பெருந்தன்மையான மனப்பான்மை உண்மையிலேயே அவளின் முன்னால், உஷா ராணியைத் தனக்கு முதிர்வு இல்லையே என வருத்தப்பட வைத்தது. அகிம்சா தன் மகனுக்கு மனைவியாக வருவது அவருக்கு விருப்பமில்லை என்றாலும், ஒரு தனிப்பட்ட மனிதராக, ஒரு நல்ல குணவதியாக அகிம்சாவைப் பிடித்துப் போனது.
அதர்வன் உணவை எடுத்து வந்து அவளுக்கு ஸ்பூனில் ஊட்ட வர, “சசிரேகா மேடம் கிட்ட பேசினீங்களா சார்?” என எடுத்ததும் கேட்டாள்.
அவன் எதுவும் பேசாமல் அவளின் முகம் பார்க்க, “ப்ச்! உங்ககிட்டதான் கேட்கிறேன், பேசினீங்களா?”
“ம்ம்… பேசிட்டேன், அவள் மெசேஜ் பண்ணா. அவங்க அம்மா பக்கத்திலேயே இருக்காங்க போல. பத்து மணிக்கு மேலே கால் பண்றேன்னு சொன்னா. இப்போ சாப்பிடு!” என உணவை நீட்டினான்.
அகிம்சா சட்டென்று தனது கையைப் பார்த்துக்கொண்டு அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
“உன் கை ரெண்டும் டேமேஜ்! சோ ஓவரா சீன் போடாத, ஆ காமி!” என நீட்டினான்.
வேறு வழியில்லாமல் உணவை வாங்கிக்கொண்டாள் அகிம்சா.
இரண்டாவது வாய் போகும்போது கேள்வி கேட்க ஆரம்பித்தான் அதர்வன். “ஆரியனை எப்படித் தெரியும்?”
பார்த்திபன், ஆரியன் பற்றி விசாரித்தான். அவனது துருவல் கேள்விகளுக்குப் பதில் சொல்லி ஓய்ந்துபோன பெண்ணவள், “போதும்!” என்று முடித்துக்கொண்டாள்.
அவளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய மாத்திரைகள் அனைத்தையும் சாப்பிடவைத்துவிட்டு அவன் நகர… அகிம்சாவின் முகம் கலவரமாக இருந்தது.
“என்னாச்சு, மாத்திரை கசக்குதா?” என்று அதர்வன் அவளையே தீவிரமாகப் பார்த்தான்.
அகிம்சா தயக்கத்துடன் பாத்ரூமைப் பார்க்க… அதர்வன் எதுவும் பேசாமல் வெளியே சென்றான். அதே நேரம் ஒரு பணிப்பெண் உள்ளே வந்தார். அவளுக்கான உதவிகளைச் செய்துவிட்டு அங்கேயே இருந்தார்.
“நீங்க போகலையா?” என்று அகிம்சா கேட்க…
“இல்லைம்மா, நான் இங்கேயே இருக்கேன். அதர்வன் தம்பி சொல்லிட்டு போனாப்ள,” என்றுவிட்டு அவர் நின்றிருக்க… “நீங்க சோஃபாவில படுத்துக்கோங்க,” என்று அவள் உறங்கச் செல்ல, அந்தப் பணிப்பெண் அவளுக்குப் படுக்க உதவி செய்துவிட்டு சோஃபாவில் அமர்ந்துகொண்டார்.
அதர்வன் பால்கனியில் இரவு வானத்தைப் பார்த்தபடி நின்றிருந்தான். இந்த நான்கு நாட்கள் அவனது வாழ்க்கையில் அத்தனை விஷயங்கள் நடந்துவிட்டன. அந்த நேரம் பார்த்து போன் அலறியது.
“ஹலோ, தலை…”
“ம்ம்… சொல்லு நாகா,” எனப் பிடரி முடியைக் கோதிக்கொண்டு பேசினான்.
“அந்த கோபி கிருஷ்ணா கூடத்தான் அகிம்சா மேடத்துக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருக்கு. அதுக்குப் பிறகு உங்க நியூஸ் பேப்பர்ல…” என்று ஆரம்பித்து, சகல விஷயங்களையும் கூறி முடித்தான்.
“ம்ம்… சரி, இனி எப்பவும் அகிம்சாவுக்கு நீ பாதுகாப்பு கொடுக்கணும். விவாகரத்து வாங்குற வரைக்கும் அவளுக்கு எதுவும் ஆகக் கூடாது,” என்று போனைக் வைத்தவன், சசிரேகாவுக்கு அழைத்தான்.
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது.
கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் வழக்கத்திற்கு மாறாக ஒரே பரபரப்பு. சசிரேகா கோபமாகத் தந்தையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆம், அவளின் போனைக் பிடுங்கி சுவிட்ச் ஆஃப் செய்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டவர், அவளை உடனடியாகத் தயாராகச் சொன்னார்.
சசிரேகாவிற்கு வரன் பார்க்கும் படலம் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. இன்று அவளைப் பெண் பார்ப்பதற்காக வரதராஜன் தன் மகன் விக்னேஷுடன் வந்திருந்தான்.
வரதராஜனுக்குச் சசிரேகாவைத் தன் மகனுக்குத் திருமணம் செய்துவைக்க அத்தனை ஆர்வமாக இருந்தார். ஏனென்றால், விக்னேஷிற்குச் சிறுவயதிலிருந்தே சசிரேகா மீது ஒருதலைக் காதல் உண்டு என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.
ஆனால், சசிரேகாவிற்கோ இந்த நிச்சயத்தில் துளிக்கூட விருப்பமில்லை. தன் அறையில் அமர்ந்து கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தவள், கோபமாகத் தனது அன்னை சுமித்ராவைப் பார்க்க… அவரோ கண்டிப்பான தோரணையில், “ஒழுங்கா நகையெல்லாம் போட்டுக்கோ! இன்னும் ஆட்டம் காட்டினா கன்னம் பழுக்கும்!” என மிரட்டிவிட்டுச் சென்றார்.
சசிரேகா என்ன செய்வதென்று புரியாமல் கண்களில் நீருடன் அமர்ந்திருந்தாள். அவளால் அதர்வனைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ள முடியாது.
இந்தப் பக்கம் அதர்வன் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான், கட்டுக்கு டிரஸ்ஸிங் செய்ய! கூடவே ஒரு செவிலிப் பெண் அகிம்சாவுக்குத் தேவை எனச் சொல்லி, அதற்காக ஒரு ஆளைத் தேர்வு செய்தான்.
“அய்யோ, எதுக்கு இதெல்லாம்?”
“உன்னோட வேலையைப் பாரு! எல்லாம் எனக்குத் தெரியும்,” என்றுவிட்டு, அனைத்தையும் அவனது இஷ்டத்திற்குச் செய்தான் அதர்வன். அதற்கு மேல் அவனிடம் பேசிப் போராட முடியவில்லை; அகிம்சா விட்டுவிட்டாள்.
அதர்வன் அவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைய… ஃபேமிலி லாயர் தியாகராஜனை வரவழைத்திருந்தார் சூர்ய நாராயணன்.
அதர்வன் பெருமூச்சுடன் அகிம்சாவைப் பார்க்க, அவளுக்கு உள்ளுக்குள் ஒருவித நிம்மதி பரவியது. ‘அப்பாடா, சீக்கிரமே இதுக்கு முடிவு கட்டிட்டா ரொம்ப நல்லாருக்கும்!’ என்று நினைத்தாள்.
“அதர்வா, நீங்க ரெண்டு பேரும் இப்படி வந்து…” என வெங்கடராமன் அழைக்க… சூர்ய நாராயணன் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.
“இல்லை சித்தப்பா, நான் நிக்கிறேன். சொல்லுங்க சார் நீங்க? எனக்கு கம்ஃபர்டபிள் தான்,” என்றிட…
தியாகராஜன் ஆவணங்களைப் பரிசீலித்துவிட்டு, “மிஸ்டர் சூர்ய நாராயணன்… இது பெரிய பிரச்சனை இல்லை. ரெண்டு பேரும் பரஸ்பரம் சம்மதிச்சு விவாகரத்து கேட்குறதுனால (Mutual Divorce), கேஸ் ரொம்ப சிம்பிள் தான். ஆனா, சட்டப்படி மனு தாக்கல் செஞ்சதுக்கு அப்புறம் ஆறு மாசம் கெடு (Cooling period) தருவாங்க. அந்த ஆறு மாசம் கழிச்சுத்தான் அதிகாரப்பூர்வமா விவாகரத்து கிடைக்கும்,” என்று விளக்கமாகக் கூறினார்.
அந்த விவாகரத்துப் பத்திரங்கள் மேஜை மீது வைக்கப்பட்டன. அதர்வன் சாதாரணமாக விவாகரத்துப் பத்திரங்களில் கையெழுத்திட்டான். தியாகராஜன் அந்தப் பத்திரங்களைச் சரிபார்த்துக்கொண்டு அகிம்சாவைப் பார்க்க… “கையில அடிபட்டிருக்கு, நான் ஃபிங்கர் பிரிண்ட் வச்சுடுறேன்,” என கைரேகை வைத்து நீட்டினாள்.
– தொடரும்.










💬 Be the first to comment