
அதிகாரம் மண்டியிடும் அஹிம்சை அவள் 28b
- 1 Oct 2026
- 147 reads
- ★ 5.0 (1)
- 8 min read
EPI 28 b
“வாங்க அதர்வன், எப்போ வந்தீங்க?” எனக் கேட்டபடி பிரியா உள்ளிருந்து வெளியே வர, “இன்னிக்கு அரண்யா குட்டிக்கு வேக்சின் இருக்கு பிரியா,” எனச் சொல்லிக்கொண்டே வந்தான் ஆரியன்.
“இதோ நான் ரெடி! இப்போ அகிம்சா கூட போயிட்டு வந்துடுறேன் ஆரியன்,” என்றாள் பிரியா.
“சாரி பிரியா! நீங்க ஆரியன் கூட போங்களேன். அவளும் நானும் கோவை கிளம்புறோம்,” என்று கூறி டேபிளில் அமர்ந்தான் அதர்வன்.
பிரியா அவளைப் பார்த்து, “இப்போவே ஜாப்ல ஜாயின் பண்ணப் போறியா? ரொம்ப சந்தோஷம்!” என்றாள்.
அதர்வன் சட்டென்று அகிம்சாவைப் புரியாமல் பார்த்தான்; அவனுக்கு எதுவும் தெரியாது. அகிம்சா பிரியாவை முறைத்துப் பார்த்தாள், ‘இதை எதற்கு இங்கே கூறினாய்?’ என்பதைப் போல.
அகிம்சாவின் முகத்தைப் பார்த்ததுமே அவளுக்குத் தன்னிடம் சொல்ல விருப்பமில்லை என்பதை அதர்வன் அப்பட்டமாகப் புரிந்து கொண்டான். அகிம்சா எழுதிய மத்திய அரசுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டாள்; அவளுக்கு ஊட்டி கோத்தகிரியில் உள்ள போஸ்ட் ஆபீஸில் போஸ்டல் அசிஸ்டென்ட் (Postal Assistant) வேலை கிடைத்திருக்கிறது. ரூ. 50,000 சம்பளம், அங்கேயே தங்கும் இடம் எனச் சகல வசதிகளுடன் கூடிய ஒரு மத்திய அரசுப்பணி! பிரியாவும் அந்தப் பரீட்சையை எழுதினாள். அவளுக்கு ராணுவத்தில் வீர மரணம் அடைந்த பார்த்திபன் மூலமாகக் கருணை அடிப்படையில் வேலை கிடைத்திருக்கிறது; அவள் இப்போது குழந்தை பராமரிப்புக்காக விடுப்பு எடுத்திருக்கிறாள்.
“போலாமா?” என அதர்வனின் குரல் கேட்க,
“ஒரு அஞ்சு நிமிஷம்,” என்று தயாராகச் சென்றாள்.
ஆரியன் குழந்தையை வருடிக்கொடுத்தபடி, “மேரேஜ் கிராண்டா பண்றீங்களா? இல்ல நார்மலா?” எனக் கேட்டான்.
அதர்வன் புருவம் சுருக்கியபடி பார்க்க, ஆரியன் குரலைச் சரிசெய்து கொண்டு, “சசிரேகா சொன்னா…” என்றான்.
அதர்வனுக்கு அத்தனை கடுப்பும் கோபமும் வந்தது, அதற்குள் அனைவருக்கும் தெரிந்துவிட்டதே என்று.
“ம்ம்… கிளம்பலாம்,” என அகிம்சா வந்தவள், ஆரியனிடமிருந்து அரண்யாவை வாங்கி கொஞ்சி முத்தமிட்டு, “அத்தை நாளைக்கே வந்துடுவேன்!” என்றாள்.
“உதை கொடுப்பேன்னு சொல்லு அரண்யா குட்டி! உங்க அத்தையை வேலைக்குப் போகச் சொல்லு,” என்றாள் பிரியா. ஏனென்றால் தன்னை ஒரு காரணமாகக் காட்டி அகிம்சா இங்கேயே இருந்துவிடக் கூடாது என்று அவள் நினைத்தாள். அவரவருக்கு அவர் கைதான் உதவி; கிடைத்த வேலையை வேண்டாம் என்று சொல்கிறாளே என அகிம்சாவின் மேல் அவளுக்கு எக்கச்சக்கக் கோபம் வந்தது.
“நான் வருவேன் அரண்யா குட்டி!” என வம்படியாகச் சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
கோயம்புத்தூர் வந்தாகிவிட்டது. அதர்வன் வீட்டின் பக்கம் காரைத் திருப்ப, “ஒரு நிமிஷம்!” என்று தடுத்தாள்.
“என்ன ஆச்சு?” என அதர்வன் அவளிடம் கேட்க,
“நான் வெளியில தங்கிக்கிறேன்… அதுதான் நல்லா இருக்கும்னு தோணுது.”
அதர்வன் கண்ணாடியின் வழியாக அவளைப் பார்த்தபடி, “ரிஷியைப் பாக்கணும், தாத்தாவைப் பாக்கணும், எங்க அம்மாவைப் பாக்கணும்னு ஓவரா சொன்னியே… அதெல்லாம் வெறும் வாய்வார்த்தைதானா?” எனக் கேட்டான்.
“அதெல்லாம் சொன்னேன்தான்… நான்… அதாவது நம்ம இப்போ இருக்கிற சூழ்நிலைக்கு அங்க வர்றது சரிவராதுன்னு தோணுது. அதனால நான்… அதுதான் நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது,” என்று முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டு கூறினாள்.
‘வராட்டி போடி பெரிய இவ!’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவன், அவளை எங்கு சொன்னாளோ அங்கு இறக்கிவிட்டு நேராக வீட்டுக்குச் சென்றிருந்தான்.
மறுநாள் காலை பத்து மணி, கோயம்புத்தூர் குடும்ப நல நீதிமன்றம்.
வழக்கறிஞர் தியாகராஜனுடன் கோர்ட் வராண்டாவில் நின்று கொண்டிருந்தான் அதர்வன். அவனது முகம் மூன்று மாத தாடி வளர்ச்சியுடனும், தூக்கமில்லாத கண்களுடனும் ஒருவித இறுக்கத்தோடு காணப்பட்டது.
திடீரென வராண்டாவின் முனையில் காலடிச் சத்தம் கேட்டது. நிமிர்ந்து பார்த்தான்; அங்கே அகிம்சா நடந்து வந்து கொண்டிருந்தாள்.
மெல்லிய காட்டன் புடவை, தலையில் நேர்த்தியான கொண்டை, நெற்றியில் எந்தப் பொட்டும் இன்றி, முகத்தில் இனம்புரியாத ஒரு கம்பீர அமைதியுடன் அவள் வந்தாள். மூன்று மாதங்களுக்குப் பிறகு அவளைப் பார்க்கும் அதர்வனின் நெஞ்சு கூடுவிட்டுத் துடித்தது. அவளது அழகும், அந்த நிமிர்வும் அவனை ஏதோ செய்தது.
அவள் நேராக இருவரையும் நோக்கி வந்தாள். “வணக்கம் வக்கீல் சார்,” என்றவள், அதர்வனின் முகத்தைக் கூட ஏறிட்டுப் பார்க்கவில்லை. அவன் அங்கே ஒரு மனிதனாக நிற்பதையே அவள் அங்கீகரிக்க மறுத்தாள்.
நீதிமன்ற அறைக்குள் வழக்கு அழைக்கப்பட்டது. நீதிபதியின் முன் இருவரும் நின்றனர்.
“இருவரும் சுமுகமான முறையில் பிரிந்து செல்லச் சம்மதிக்கிறீர்களா?” என்ற நீதிபதியின் கேள்வி காற்றில் மிதந்தது.
அதர்வன் ஒரு கணம் தன் தலையைத் திருப்பி அகிம்சாவைப் பார்த்தான். அவனது கண்கள் ஏதோ ஒரு வார்த்தைக்காக, ஒரு சிறு சலனத்திற்காக ஏங்கின.
ஆனால் அகிம்சாவோ, துளிக்கூடத் தயங்காமல் நீதிபதியைப் பார்த்து, “எஸ் சார், நாங்க மனப்பூர்வமாகப் பிரியச் சம்மதிக்கிறோம்,” என அழுத்தமாகக் கூறினாள்.
நீதிபதி கோப்புகளை நீட்ட, அகிம்சா பேனாவை எடுத்து நொடிப்பொழுதும் யோசிக்காமல் தன் கையெழுத்தைப் போட்டாள். அதர்வனின் கைகள் லேசாக நடுங்கின. அவளது உறுதியைப் பார்த்த அவனது ஆண்மையின் ஈகோவும் இறுகிப்போக, அவனும் தன் கையெழுத்தை இட்டான்.
நீதிபதி விவாகரத்து ஆணையைப் பிறப்பித்துக் கோப்பை மூடினார். அகிம்சா பெருமூச்சை விட்டபடி சுற்றிலும் பார்த்தவள், “இன்னியோட எல்லாமே முடிஞ்சது…” என்று புன்னகையுடன் அதர்வனைப் பார்த்து, “நான் புறப்படுறேன்,” என்று கூறி விடைபெற்றாள்.
அதர்வன் அதே இடத்தில் சில நொடிகள் நின்றவன், எதுவும் பேசாமல் வீட்டை அடைந்தான்.
“மாமா! மாமா!” என ரிஷி வேகமாக உற்சாகத்துடன் ஓடிவந்தான்.
அதர்வன் மௌனமாகத் தனது அக்கா மகனைப் பார்க்க, ரிஷியின் கண்களோ அதர்வனுக்குப் பின்னால் யாராவது வருகிறார்களோ என்று தேடியது.
“என்னாச்சு ரிஷி?”
“அம்மாச்சி சொன்னாங்க நீ வரும்போது அகியைக் கூட்டிட்டு வருவேன்னு… அவ வரலையா? அவ போய் மூணு மாசம் ஆச்சு. அவளுக்கு நான் பாப்பாவைக் காட்ட நினைச்சேன்; அவளைக் கார்ல உட்கார வைக்க நினைச்சேன். யூ நோ, எனக்கு இங்கே யாருமே ஃப்ரெண்ட் இல்ல; எப்பவுமே அவள்தான் ஃப்ரெண்ட்,” என்றான் வருத்தமான குரலில்.
அதர்வன் உள்ளுக்குள் இனம்புரியாத வலியுடன் ரிஷியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“அதர்வா! எல்லாமே முடிஞ்சதுதானே?” எனச் சூர்யநாராயணன் உற்சாகமாகக் கேட்டுக்கொண்டே வந்தவர் முகம் சடுதியில் மாறிப்போனது.
“ஹாய் ரிஷி!” என்று வாசலில் அகிம்சாவின் குரல் கேட்க,
“அகிம்சா!” என உஷாராணி, கங்கா, பாக்கியலட்சுமி, தாமோதரன், ஆர்த்தி என அனைவரும் வெளியே வந்தார்கள்.
“என்ன நடக்குது இங்கே?” என சூர்யநாராயணன் குரலை உயர்த்தி கர்ஜித்தார்.
அகிம்சா நிதான குரலில், “நீங்கள் நினைக்கிற மாதிரி ஒண்ணும் இல்ல. நான் ஜஸ்ட் எல்லாரையும் பார்க்க வந்தேன்; இந்த வீட்டுக்கு சொந்தமான ஒரு பொருளைக் கொடுக்க வந்தேன்,” என்று தாலியை கையில் ஒரு சின்னப் பெட்டியில் வைத்திருந்தவள், அதனை மேஜையின் மீது வைத்தாள்.
ரிஷி ஓடிச் சென்று அகிம்சாவின் காலைக் கட்டிக்கொள்ள, இன்னொரு பக்கம் அதர்வன் எதுவும் பேசாமல் அமைதியாக நின்று இருந்தான்.
“இதுல என்ன இருக்கு?” என்று சூர்யநாராயணன் கோபத்துடன் கேட்க,
“இதுல தாலி இருக்கு,” என்று மெல்லிய குரலில் கூறியவள், ரிஷியைக் கட்டி அணைத்து முத்தமிட்டு அவனை இறக்கிவிட்டு, “நான் மேல விளையாட வர்றேன்; இப்ப போய் நீங்க கார் எடுங்க,” என்று கூறினாள்.
“அப்படியா? ஓகே!” என்று குழந்தை வண்டி ஓட்டும் சத்தத்தை வாயில் சொல்லிக்கொண்டே வேகமாக ஓடினான் ரிஷி.
வீட்டில் அனைவரும் இருக்க, சூர்யநாராயணன் பக்கம் திரும்பிய அகிம்சா, “இந்த வீட்டுக்கு நான் வந்தது ஒரு விபத்தான விஷயம்தான். அதுக்கு நான் யாரையும் குறை சொல்லல; அது ஒரு சூழ்நிலையால நடந்துடுச்சு. நான் இங்க இருக்கிற யாராவது மனசைக் கஷ்டப்படுத்துற மாதிரி நடந்துகிட்டு இருந்தா என்னை மன்னிச்சிடுங்க, நான் பண்ணது தப்புதான்,” என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.
அதர்வன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, தாமோதரன், “என்னம்மா இதெல்லாம்?” என்று தடுக்க வர,
“தாத்தா, ஒரே நிமிஷம்!” என்றவள் சூர்யநாராயணன் பக்கம் திரும்பி, “‘டிரெண்டிங் டைம் அவுட் டெய்லி’ இந்த மாதிரி பெரிய நியூஸ் கம்பெனி நடத்துற உங்ககிட்ட ஒரு சின்ன ரெக்வெஸ்ட். நீங்க எந்த அளவுக்கு வெளியில ரொம்பப் போல்டா ஜொலிக்கிறீங்களோ, அந்த அளவுக்கு உங்க குடும்பத்தைப் பத்தி உங்களுக்குத் தெரியலன்னு நினைக்கிறேன். உங்க குடும்பத்துல எல்லாருக்கும் உங்களோட அட்டென்ஷன் தேவைப்படுது,” என்றாள்.
“என்ன பேசிட்டு இருக்க?” என்று பற்களைக் கடித்தபடி சூர்யநாராயணன் முன்னுக்கு வர, உஷாராணி தயக்கத்துடன், “அகிம்சா, என்ன பண்ற?” என்று கேட்டார்.
அகிம்சா சூர்யநாராயணனைப் பார்த்து, “உங்க மனைவிக்கு பூஜை பண்றதும், இந்த வீட்ல சமைக்கிறது மட்டும் அவங்க வேலை கிடையாது. அவங்க வந்து ஒரு ஷோகேஸ் கிடையாது. அவங்களுக்குன்னு நிறைய ஆசைகள் இருக்கு, நிறைய திறமைகள் இருக்கு. நீங்க ‘டிரெண்டிங் டைம் அவுட்’ல வந்து பெண்களுக்கான பிரத்தியேக வார இதழில் பெரிய பெரிய சாதனைப் பெண்களைப் பத்திப் போடுறீங்க; ஆனா உங்களுக்குத் தெரியல, இந்த வீட்ல ரெண்டு சாதனைப் பெண்கள் இருக்காங்க… ஒண்ணு உஷாராணி மேடம், இன்னொன்னு கங்கா மேடம்!” என்றாள்.
அனைவரும் அதிர்ந்து பார்க்க, அதர்வன்கூட அதிர்ச்சியாகத் தனது அன்னையைப் பார்த்தான். பூஜா, பூர்வஜா, ஸ்ரீதர், வெங்கட்ராமன் என அனைவரும் புரியாமல் பார்த்தார்கள். கங்கா கைகளைப் பிசைந்தபடி உஷாராணியைப் பார்க்க, உஷாராணியும் கலக்கத்தில், “என்னை மன்னிச்சிடுங்க…” என்று பேச வர, அதற்குள் அகிம்சா சூர்யநாராயணனிடம் தொடர்ந்தாள்:
“இவங்க ரெண்டு பேரும் செமையா சமைப்பாங்க. இவங்களுக்குள்ள நிறைய திறமைகள் இருக்கு. இவங்க நிறைய ஃபுட் டிஃபரென்ட் டிஃபரெண்டா பண்றாங்க. இவங்களுக்குன்னு சரியான ஒரு இடம் கிடைச்சா, இவங்க பெரிய சாதனைப் பெண்களா, பெரிய லெவல்ல வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு. முடிஞ்சா அவங்ககிட்ட மனசு விட்டுப் பேசுங்க. உங்க பேரன் ரிஷி கூட விளையாடுங்க. இந்த வீட்ல பாத்தா, நான் தான் ஒரு அனாதை ஆசிரமத்துல வளர்ந்தவ. ஆனா நான் அம்மா, அப்பா வேணும், எனக்குக் குடும்பம் வேணும்னு ஏங்குறதுல ஒரு அர்த்தம் இருக்கு. ஆனா, இந்த வீட்ல பிறந்த ரிஷி ஏன் அந்த ஏங்கத்தை உணர வைக்கணும்? அவனைச் சுத்தி தாத்தா, பாட்டி, அம்மா, சித்தி, சித்தப்பா, மாமான்னு எல்லாரும் இருக்கீங்க; குழந்தை கூட விளையாடுங்க! இன்னும் நிறைய சொல்லிட்டே போகலாம்… உங்க அம்மா, அப்பா கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க. மூஞ்சியை சிடுசிடுன்னு வெச்சிருக்காதீங்க!”
நீளமாகப் பேசியவள், “நான் எதையும் தப்பா சொல்லல, எல்லாத்தையும் சரியாத்தான் சொன்னேன். ஏன்னா நான் யோசிக்காம பேச மாட்டேன்,” என்றாள்.
நேராக தாமோதரன் மற்றும் பாக்கியாவிடம் சென்று, “என்னோட எஸ்தர் மதர், என்னோட ஃபேவரிட் அண்ணா… நீங்க அவங்ககிட்ட பிளஸ்ஸிங்ஸ் வாங்குன மாதிரி இருக்கு. என்னை பிளஸ் பண்ணுங்க தாத்தா, பாட்டி,” என்று உருக்கமாகப் பேசி அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டவள், அனைவரிடமும் விடைபெற்று வீட்டை விட்டு வெளியேறினாள்.










💬 Be the first to comment