
அதிகாரம் மண்டியிடும் அஹிம்சை அவள் 30
- 1 Oct 2026
- 103 reads
- ★ 5.0 (2)
- 10 min read
Epi -30
பச்சைப்புல் போர்த்தியது போன்ற மலைச்சரிவில், அடர்ந்த பனிப்புகைக்கு நடுவே அமைந்திருந்தது அந்த ‘ஈகோ-நர்சரி அண்ட் ரோஸ் கார்டன்’.
அங்கு, சாயம் போன ஒரு சாம்பல் நிற டி-சர்ட்டும், முழங்கால் வரை மடிக்கப்பட்ட ஜீன்ஸும் அணிந்து, கைகளில் மண்வெட்டியோடு செடிகளுக்கு உரம் வைத்துக் கொண்டிருந்தான் அதர்வன். அந்த ‘trending timewood’ மீடியா சாம்ராஜ்யத்தின் அதிபனுக்கே உரிய திமிரும் கம்பீரமும் இன்னும் அவனது கூரிய நாசியிலும், அடர்ந்த தாடியிலும், அகன்ற தோள்களிலும் மிச்சமிருந்தது. ஆனால், அவனது கண்களில் முன்பு இருந்த அகந்தை மறைந்து, ஒரு தவவாசியின் அமைதியும், தீராத ஏகாந்தமும் குடியேறியிருந்தது.
அங்கே மூச்சிரைக்க ஓடி வந்தான் அஜய் தேவ்.
“டேய் மச்சி!”
“ச்ச்ச்ச்… என்னடா?”
“அகிம்சாவைப் பார்த்தேன்டா! நீ இங்கே இருக்கிற விஷயத்தைச் சொல்லிட்டேன்!” என்றான்.
அதர்வன் தன் கையில் இருந்த மண்வெட்டியை நிறுத்தவே இல்லை. செடியின் வேரைச் சுற்றிலும் மண்ணை அணைத்தபடி, “ம்ம்… அதுக்கு நான் என்ன பண்ணட்டும்?” என மிக அலட்சியமாகப் பதிலளித்தான்.
அஜய்க்கு ஆத்திரம் பொங்கியது. “டேய்! என்னடா?”
“என்ன பண்ண சொல்ற?”
அஜய் பெருமூச்சுடன் அப்படியே முறைத்துப் பார்த்தான்; கோபமாக வந்தது. “எதுக்கு இங்கே இருக்க? யாருக்காக இங்கே இருக்க? எல்லாம் அவளுக்காகத் தானே?”
அதர்வன் முறைத்துப் பார்த்தான்.
“ம்ம்… இப்படி ஆவுன்னா முறை,” எனக் கைகளைத் தேய்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
“நீ கிளம்பலையா?”
“நான் கிளம்புறது இருக்கட்டும், இப்படியே எத்தனை நாளைக்கு இருக்கப் போற? அவகிட்ட உன் விருப்பத்தைச் சொல்லு மச்சி!”
அதர்வன் நிதானமாக நிமிர்ந்தான். தன் வியர்வை படிந்த நெற்றியை முழங்கையால் துடைத்துக் கொண்டு, அந்த ரோஜா மலர்களை வெறித்துப் பார்த்தான்.
“மச்சான்!”
“எனக்கு அவள் பக்கத்துல இருக்கணும், அவ்ளோதான்… எனக்கு வேற எதுவும் வேணாம்… என்னை விட்டுடு, ப்ளீஸ்,” என்று திரும்பி அவனது வேலையில் கவனம் செலுத்தினான்.
அஜய் தேவுக்கு அத்தனை ஆச்சரியமாகப் போனது; ‘இவன் என்னுடைய நண்பன் அதர்வனா? இப்படி அதர்வன் பேசுவானா?’ என்னும் ரீதியில் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்னடா அப்படிப் பார்க்கிற?”
“அடேய் லூசுப் பயலே! போய் ட்ரை பண்ணுடா… கண்டிப்பா அவள் ஒத்துக்குவா. அவளுக்காக நீ உன்னோட மொத்தக் குடும்பம், உன்னோட வேலை, சொத்து, பணம், பதவி எல்லாத்தையும் விட்டுட்டு வந்திருக்க!” என்றான்.
“No need!” என ஒரே வார்த்தையில் முடித்துவிட்டான்.
அதர்வன் தன் ஒட்டுமொத்தப் பங்கையும் சாம்ராஜ்யத்தையும் உதறித் தள்ளிவிட்டு, அகிம்சா பணிபுரியும் கோத்தகிரிக்கே வந்து, அவளுக்குப் பின்னால் இந்த நர்சரியை ஆரம்பித்து அவளது காவலனாக வாழ்ந்து வருகிறான்.
அகிம்சாவுக்குத் தெரியாது. அவள் தினமும் காலை அஞ்சல் அலுவலகத்திற்குச் செல்லும் போதும், மாலையில் வீடு திரும்பும்போதும், தூரத்துத் தேயிலைப் புதர்களுக்குப் பின்னாலோ, பைன் மரங்களின் மறைவிலோ நின்று பார்ப்பான்.
அவள் எளிய காட்டன் சுடிதாரில், காதில் குட்டி கம்மல், சில சமயம் பொட்டு வைத்திருப்பாள்; சில நேரங்களில் இருக்காது. ஒப்பனை இல்லாத அழகு தேவதை; நெருக்கமான முடிகள், கண் இமைகள்; நீண்ட கூந்தல் இல்லை; அவளுக்குக் குட்டி குட்டி பூனை முடிகள் ஏராளம். பேரழகி இல்லை… ஈர்க்கும் அழகி இல்லை. ஆனால், அவனுக்கு அவள் அழகோ அழகு! சிடுசிடுவென முகத்தை வைத்தே அவனை மயக்கியிருந்தாள்.
நெற்றியில் ஒற்றைப் பொட்டோடு நடந்து செல்லும் அந்த எழில் தோற்றம் அவனுக்குள் அத்தனை பேரழகு! திருமணத்தின் மறுநாள் பட்டுப் புடவையிலும் நகைகளிலும் ஜொலித்தவளை விட, இந்த எளிய சுடிதாரில் மிளிரும் அகிம்சாதான் அவனது உயிரை உருக்கும் தேவதை!
‘இப்படியே விட்டால் அதர்வன் எப்பொழுதும் அவளிடம் விருப்பத்தைக் கூற மாட்டான்’ என நேரடியாகவே களத்தில் அவனே இறங்கினான். அஜய், அகிம்சா வீட்டுக்குச் சென்றான்.
வாசலில் நின்ற அஜயைக் கண்டு திடுக்கிட்டாள் அகிம்சா. “நீங்க எதுக்கு இங்க வந்தீங்க?” என முகத்தைச் சுருக்கினாள்.
அஜய் எதையும் மறைக்காமல் படபடவெனப் பேசினான்: “அகிம்சா! அதர்வன் மனசுல நீதான் இருக்க, உனக்காகத்தான் இங்கே வந்திருக்கான். அவனை நீ புரிஞ்சுக்கணும்.”
“சரி, புரிஞ்சுகிட்டேன்; இப்ப நீங்க கிளம்பலாம்,” என்றாள் சாதாரண தொனியில். அஜய் அதிர்ச்சியாகப் பார்க்க…
“உங்க வேலையை நீங்க பாருங்க… முடிஞ்சா உங்க ஃபிரண்ட்ட இங்கிருந்து கூட்டிட்டுப் போயிடுங்க,” என்று கதவை ‘டமார்’ என முகத்திற்கு நேரே சாத்தினாள்.
அடுத்த சில நாட்களில், கோவையிலிருந்து அவளது அலைபேசிக்கு அழைப்புகள் வரிசைகட்டின.
முதலில் உஷாராணி பேசினார். “மேடம்…” என்று அவள் ஆரம்பிக்க…
“அகிம்சா… அதர்வா உனக்காகத்தான் சசியை வேணாம்னு சொல்லிட்டுப் போயிட்டாம்மா. உன் மேலே அவனுக்கு அவ்ளோ விருப்பம். இனி என்னை மேடம்னு சொல்லாத; நான் உன்னோட அத்தை, புரியுதா?” என்றார்.
அடுத்து தாத்தா தாமோதரன், பாக்கியா என ஆளாளுக்கு அதர்வன் காதலுக்காகப் பேசுகிறேன் என்று அகிம்சாவின் மனதில் இருப்பதை குற்ற உணர்ச்சியாக மாற்றினார்கள்.
தாமோதரன் அவளிடம், “உனக்குத் துரோகம் பண்ணிட்டதா குற்ற உணர்ச்சியில தவிக்கிறான். அவன் உன்னை எவ்ளோ நேசிச்சா விருப்பப்பட்ட காதலியை வேணாம்னு சொல்லியிருப்பான்? அவனைப் புரிஞ்சுக்கம்மா!” என்றார்.
“நீதான் அகிம்சா அவனுக்குப் பொருத்தமான பொண்ணு; அவனோட உயிரை நீ காப்பாத்தியிருக்க,” எனத் தன் பங்குக்குக் கூறினார் பாக்யா.
அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அகிம்சாவின் மனதில் தவறான அர்த்தத்தையே விதைத்தது. இதையெல்லாம் கேட்டு இயலாமையில் சுய பச்சாதாபமும் கோபமும் வந்து சேர்ந்தது.
‘குற்ற உணர்ச்சி… தியாகம்… இரக்கம்! ஆம், நான் அவனது உயிரைக் காப்பாற்றினேன், ஆர்த்தியைக் காப்பாற்றினேன்… அதற்காக நன்றிக் கடனாகவும், இரக்கப்பட்டும்தான் அவன் எனக்கு இந்த வாழ்க்கையைக் கொடுக்க வருகிறானா? நான் கேட்டேனா? ஓர் அனாதைக்குக் கருணை காட்டும் அதிகார வர்க்கத்தின் திமிர் இது!’ என நினைத்த அகிம்சா, தன் பிடிவாதத்தை இன்னும் பலமாக இறுகப் பற்றிக் கொண்டாள். யாருடைய அழைப்பிற்கும் அவள் செவிசாய்க்கவில்லை.
கோத்தகிரியின் பனி படர்ந்த மலைப்பாதையில் அதர்வனின் ஜீப் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. காரின் முன் இருக்கையில் ரிஷி, தன் சின்னஞ்சிறு கைகளைத் தட்டியபடி உற்சாகத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தான்.
“மாமா! நிஜமாவே அகிகிட்டதான் போறோமா? பொய் சொல்லலையே? நான் அவளுக்கு என்னோட புது காரெல்லாம் காட்டணும்!” என இடைவிடாமல் பேசினான்.
அதர்வனின் உதடுகளில் மெல்லிய புன்னகை நெளிந்தாலும், அவனது நெஞ்சுக்குள் இனம்புரியாத ஒரு நடுக்கம் அலைமோதியது.
கோவையில் ஆர்த்திக்கு இவனால் பெரும் தலைவலியாகிப் போயிருந்தது. “எனக்கு அகி வேணும்! நான் அவகிட்டதான் போவேன்!” என ரிஷி தரையில் உருண்டு அழுது, அடம்பிடித்து ஆர்ப்பாட்டம் செய்திருந்தான்.
சில குழந்தைகளுக்கு யாரோ ஒருவர் மீது இனம்புரியாத பாசம் வரும். அது உருவாக்கப்படுவதில்லை; தானாக உருவாகும் அன்பின் வெளிப்பாடு. அப்படித்தான் ரிஷிக்கு அகிம்சா.
அவனது பிடிவாதத்தைத் தாங்க முடியாத ஆர்த்தி, வேறு வழியின்றி அதர்வனுக்கு போன் போட்டு, “டேய் அதர்வா! ரிஷி பண்ற அலப்பறை தாங்க முடியலடா… பேசாம அவனை வந்து கூட்டிட்டுப் போய் அந்த அகிம்சா கூட விளையாட வச்சுட்டுக் கூட்டிட்டு வா!” எனப் பொரிந்து தள்ளியிருந்தாள்.
அதர்வன் எவ்வளவோ மறுக்க, ஆர்த்தியின் கோபத்தால் வேறு வழியில்லாமல் “சரி” என ஒப்புக்கொண்டான். எட்டு மாதங்களுக்குப் பிறகு அகிம்சாவை நேருக்கு நேர் சந்திக்கப் போகிறோம் என்ற படபடப்பு உள்ளுக்குள் ஒரு மூலையில் இருந்தது. அரசாங்கக் குடியிருப்பின் வாசலில் ஜீப் வந்து நின்றது.
கதவைத் தட்டியதும், மெல்லிய மஞ்சள் நிறக் காட்டன் சுடிதாரில், தலை கலைந்திருக்க, அதை நீவிக்கொண்டே வந்து கதவைத் திறந்தாள் அகிம்சா.
எட்டு மாதங்கள்!
சரியாக 240 நாட்களுக்குப் பிறகு இருவரின் விழிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
அந்த நொடி… நேரம் தன் ஓட்டத்தை நிறுத்தியது போலிருந்தது. மெலிந்த தேகமும், அடர்ந்த தாடியும், தூக்கமில்லாத கண்களுமாக எதிரே நின்றிருந்த அதர்வனைக் கண்டதும் அகிம்சாவின் மூச்சுக்குழல் ஒரு கணம் அடைத்தது. அவள் உதடுகள் லேசாக அதிர்ந்தன. இருவரும் யாருமில்லா உலகத்தில் பயணம் செய்தார்கள் என்று கூறலாம்.
அதர்வன் அவளது முகத்தையே வெறித்துப் பார்த்தான். அந்த எளிய சுடிதாரில், காற்றில் அலையும் கூந்தலோடு, எந்த ஒப்பனையுமின்றி நின்ற அவளது தோற்றம் ஆடவனைப் பித்துக்கொள்ளச் செய்தது. அவளை அள்ளி அணைத்துக் கொள்ளத் துடித்த கரங்களைத் தன் பேண்ட் பாக்கெட்டுக்குள் இறுகப் புதைத்துக் கொண்டான்.
“அகி…!” என்ற உற்சாக அலறலுடன் ரிஷி அவளது கால்களைக் கட்டிக்கொள்ள, அந்த நொடி இருவரும் சுயநினைவுக்கு வந்தார்கள்.
“ரிஷி சார்…!” என அகிம்சா எல்லாவற்றையும் மறந்து மண்டியிட்டு, அந்த மழலையை வாரி அணைத்து முத்தமிட்டாள்.
அதர்வன் தன் கரகரத்த கம்பீரக் குரலில், “இவன் ரொம்ப அடம்பிடிச்சான்… ஆர்த்திகிட்டருந்து போன் கால்… உன்கூட விளையாடணும்னு; அதான் கூட்டிட்டு வந்தேன்,” என்று முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் கூறிவிட்டுத் தன் ஜீப்பிற்குத் திரும்பிச் சென்றான்.
அதற்குக் காரணம், அகிம்சா அவனை “வா” என்று அழைக்கவில்லை. அவனும் அதை விரும்பவில்லை… அவள் கூப்பிட மாட்டாள் என அவனுக்கும் தெரியும்.
அன்று காலை முதல் மாலை வரை அங்கேயே இருந்தான். ரிஷியோடு கள்ளங்கபடமில்லாமல் சிரித்து விளையாடினாள் அகிம்சா. அவனது பொம்மை கார்களை வரிசையாக அடுக்கி வைத்து, ‘வ்ரூம்… வ்ரூம்…’ எனச் சத்தமிட்டு அவனை மகிழ்வித்தாள். தூரத்தில் ஜீப்பில் சாய்ந்து நின்றபடி, ஒரு தாகம் கொண்ட வேடனைப் போல அவளது ஒவ்வொரு அசைவையும் பார்வையில் பருகினான் அதர்வன்.
ரிஷி விளையாடிய களைப்பில் தூங்கிவிட, அந்த நேரம் அவனைத் தூக்கிக்கொண்டு வந்தவள், அவனைக் கேட்காமலேயே ஜீப்பில் பூப்போல குழந்தையை அமர வைத்துவிட்டு நகர்ந்தாள். அதர்வனிடம் எதுவும் பேசவில்லை.
அவனுக்கு ஆச்சரியமாகப் போனது; ‘இப்படி ஒரு பெண்ணா?’ என்று. இந்த அளவுக்கு அழுத்தம் உள்ளவளை அவன் பார்த்ததே இல்லை. அவளிடம் இன்னும் இன்னும் சுவாரசியம் கூடியது.
அடுத்த நாள் ரிஷியை வீட்டில் விட வந்திருந்தான் அதர்வன்.
ஆர்த்தி அவனிடம், “அகிம்சா உன்கிட்ட எப்படி நடந்துகிட்டா? ஏதாவது improvement தெரியுதா?” எனக் கேட்டாள்.
அதர்வன் புருவம் சுருக்கி, “எதுக்கு improvement தெரியணும்?” எனத் திரும்பிக் கேட்டான்.
“அது வந்து… வீட்ல நாங்க எல்லாரும் அவகிட்ட பேசினோம்,” எனக் குண்டைத் தூக்கிப் போட்டாள் ஆர்த்தி.
அதர்வனுக்கு அத்தனை கோபம்! ‘வெட்டவா, குத்தவா?’ என்னும் ரீதியில் அவளைப் பார்த்தான்.
“உனக்கு ஹெல்ப் பண்ணத்தான் முயற்சி பண்ணோம்; கண்டிப்பா அவள் மனசு மாறிடுவா,” என்றாள்.
அதர்வன் கோபத்துடன் கிளம்ப, “டேய் டேய்… நில்லுடா, என்னாச்சு?” என ஆர்த்தி ஸ்ரீமதியைத் தோளில் போட்டுக்கொண்டு பின்னாலேயே செல்ல…
“உங்களை யாரு அவகிட்ட பேசச் சொன்னது? நான் கேட்டேனா?” எனக் கத்திவிட்டுச் சென்றுவிட்டான்.
“என்னாச்சு?” என உஷாராணி, கங்கா என இருவரும் ஓடி வந்தார்கள்.
ஆர்த்தி பெருமூச்சுடன் நடந்த விஷயத்தை அவர்களிடம் கூறினாள். இதைக் கேட்டதும் என்ன சொல்வது என்று தெரியவில்லை குடும்பத்தினருக்கு. அவர்கள் நல்லதுதான் நடக்கும் என்று நினைத்துச் செய்த விஷயம், இப்படி அதர்வனுக்குக் கோபத்தைக் கொடுத்து, அவர்களுக்குப் பிரச்சினையைத் தரும் என நினைக்கவில்லை.
அதர்வனுக்குக் குடும்பத்தினர் மேல் இருந்த கோபத்தை விட, அகிம்சாவின் மேல்தான் அத்தனை கோபம் வந்தது. ‘கல்லை விழுங்கியது போல இருக்கிறாள்’ என்று தோன்ற, ‘அந்த அளவுக்கு நான் இளக்காரமாக இருக்கிறேனா?’ என்று தோன்றியது.
‘இனி இவளை விடக்கூடாது’ என்று ஒரு முடிவுடன் கிளம்பினான்.
‘அகிம்சா என்றால் அலட்சியக்காரி, அழுத்தக்காரி, அடங்காதவள் என்று பொருள்…’ இதையெல்லாம் நினைத்துக்கொண்டே இரவைக் கழித்தான்.
மறுநாள் காலை, கோத்தகிரி அஞ்சல் அலுவலகம் பரபரப்பாக மாறியது.
கவுன்டரில் அமர்ந்து அகிம்சா தீவிரமாகப் பதிவேடுகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, அவளது டேபிளுக்கு முன்னால் ஒரு பிரம்மாண்டமான நிழல் நின்றது.
நிமிர்ந்து பார்த்தவள் ஒரு நொடி அதிர்ந்து போனாள்! கருப்பு நிற ஜர்கின் அணிந்து, விறைப்பான தோரணையோடு அதர்வன் கவுன்டருக்கு எதிரே நின்று அவளையே கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கண்களில், ‘ஒரு முடிவோடுதான் வந்திருக்கிறான்’ என அவனது முகமே சொல்லாமல் சொன்னது!
அகிம்சா..?
தொடரும்..










💬 Be the first to comment